;
Athirady Tamil News

மனதை ஒருநிலைப்படுத்தினால் எதையும் சாதிக்கலாம் – இஸ்ரேலிய உளநல ஆலோசகர் கையி

0

இவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோவொரு திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். என்றாலும் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமும் செயற்பாடுகளுமே காரணமாக அமைகின்றன. குறிப்பாக, மனதை ஒருநிலைப்படுத்தி செயற்படுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியும் என இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல உளநல ஆலோசகரான கையி ரெகேவ் ரோசன்பெர்க் (Guy Regev Rosenberg) தெரிவித்தார்.

அண்மையில் இலங்கை வந்த அவரை கொழும்பில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இஸ்ரேலில் பிறந்த கத்தோலிக்கரான கையி ரெகேவ் ரோசன்பெர்க்கிற்கும் இலங்கைக்கும் இடையில் பல தலைமுறைகளாக தொடர்புகள் காணப்படுவதாகவும், அந்த வகையில் இலங்கையையும் இலங்கை மக்களையும் தான் மிகவும் விரும்புவதாகவும் விசேடமாக இந்து மற்றும் பௌத்த மதங்களின் தியான வழிமுறைகளை தான் பின்பற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன்போது அவர் எம்மோடு பகிர்ந்து கொண்ட விடயங்கள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்தன.

“தியானமும் தியான பயிற்சிகளும் உடற்பயிற்சியும் மனிதனின் பழக்கவழக்கங்களை சிறந்தனவாக மாற்றுகின்றன. தியானங்களில் ஈடுபடும் யோகிகளிடமிருந்தும் சித்தர்களிடமிருந்தும் அதேபோன்று பௌத்த துறவிகளிடமிருந்தும் தியானம் மற்றும் தியானங்களை செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டேன். நான் இதில் பட்டம் பெற்றவன் அல்ல” என்கிறார்.

“கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தியானத்தில் ஈடுபடுவதற்கான நுணுக்கங்களை அறிந்துகொண்டுள்ளேன்.

பரபரப்பான இந்த உலகில் பொதுவாக மக்கள் மிகுந்த வேலைப்பளுவுடன் நேரத்தைப் போக்குகின்றனர். அதனால் அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்கள் மிகுந்த பதற்றத்துடன் இருப்பதனால் மன அழுத்தத்துக்கும் உள்ளாகின்றனர்.

இதுபோன்ற சமயங்களில் தியானம் போன்ற செயன்முறைகளை நாம் அன்றாட வாழ்வில் முன்னெடுப்பதன் மூலம் பதற்றத்திலிருந்து விடுதலையை பெற முடியும்” என்கிறார் கையி.

“நமது எல்லா செயற்பாடுகளுக்கும் மனம்தான் காரணம். அதனால்தான் மனதை ஒருநிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்கின்றனர். இதற்கு தனியான பயிற்சிகள் உள்ளன. அவற்றை நாம் சரியாக பின்பற்றினால் பதற்றமில்லாமல் அமைதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது எனது கருத்து. இது எந்த துறையில் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு மன அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் இருப்பவர்களுக்கு ஆலேசனைகளையும் பயிற்சிகளையும் கொடுக்கும் பணியினைதான் நான் செய்து வருகின்றேன்.

மன அழுத்தத்துடன் இருக்கும் விளையாட்டு வீரர்கள், இராணுவ வீரர்கள், வர்த்தகர்கள் மற்றும் சாதாரண மக்கள் என பல்வேறு தரப்பினருக்கும் நான் ஆலோசனைகளை வழங்கி வருகின்றேன்.

எனது நாட்டில் மாத்திரம் அல்லாது ஏனைய பல நாடுகளுக்கும் சென்று, இதனை நான் செய்து வருகின்றேன். அதன் அடிப்படையிலேயே இலங்கை பயணமும் அமைந்துள்ளது. இலங்கையுடன் எனக்கு நீண்டகால தொடர்பு இருக்கிறது. பல தடவைகள் இலங்கை வந்துள்ளேன். இலங்கை எனக்கு மிகவும் பிடித்த நாடு” என்றார் கையி.

“இந்து மதமும் பௌத்த தர்மமும் மிகவும் பிடித்தமானது. பல தடவைகள் சித்தர்கள் மற்றும் யோகிகளை சந்தித்துள்ளதுடன் அவர்களிடமிருந்து தியானம் குறித்த பல்வேறு நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்” எனவும் கூறுகிறார் கையி.

“மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றை தீர்ப்பதற்கு இந்து மதத்தில் தியானம் உட்பட பல்‍வேறு விடயங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்வதில்லை.

இலங்கையில் எப்போதும் இல்லாதவாறு தற்போது பல சோதனைகள் காணப்படுகின்றன. இந்த நேரத்தில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ள அனைவரும் மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நான் இஸ்ரேலில் பிறந்தாலும் இலங்கையையே எனது வீடாக உணர்கின்றேன். சிரிப்பு என்பது இலங்கையர்களுடன் ஒட்டிப் பிறந்ததொரு கொடையாகும். அதை சிறந்ததாக மாற்றியமைக்க வேண்டும்” என்றார் கையி.

“ஒவ்வொரு 10 விநாடிகளுக்கும் ஒரு முறை எமது கைத்தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் பல்வேறு புதிய தகவல்கள் வருகின்றன. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக்கில் யார் தகவல்களை பகிர்கிறார்கள் என பார்க்கின்றோம்.

தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஏற்கனவே நம் வாழ்க்கையைப் பாதித்துவிட்டன. அவை நம்மை அடிமையாக்குவதற்காக காத்திருக்கின்றன. ஆனால், நாம் அவற்றுக்கு அடிமையாக வேண்டுமா, இல்லையா என்பதை நம் மனம்தான் தீர்மானிக்கும்.

புத்த பகவான் கூறியது போன்று எமக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன. முதலாவது, உங்கள் மனதைக் கட்டுப்படுத்துவது… மற்றையது, உங்கள் மனது உங்களை கட்டுப்படுத்த அனுமதிப்பது…

எந்த வகையான தொழில்நுட்ப சாதனங்களால் நாம் திசைதிருப்பப்பட்டாலும், நம் மனதை ஒருநிலைப்படுத்துவதற்கு பயிற்றுவிக்க முடியும். நமக்குத் தேவையானதை வடிகட்டவும், மீதமுள்ளவற்றை நிராகரிக்கவும் மனதின் மூலம் தான் முடியும்” என்கிறார் கையி.

நம்மில் பலரை தொழில்நுட்ப யுகம் ஆக்கிரமித்து முற்றுகையிட்டுள்ளது. நமக்கான வரம்புகளையும் வரையறைகளையும் முடிவுகளையும் நாம் எடுக்காத வரை, தொழில்நுட்ப சாதனங்கள் நம்மை ஆக்கிரமித்துவிடும்” என எச்சரிக்கிறார் கையி.

“உங்களுக்கு சிறிது காலம்தான் உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கும் வரை மக்கள் தங்களை பாதிக்கும் விடயங்களை புறக்கணிக்கின்றனர். இது உங்கள் மனதுக்கும் பொருந்தும். நீங்கள் இதுபோன்ற கட்டுப்பாடுகளை உங்கள் மனதுக்கும் விதிக்க வேண்டும்” என்றும் கூறுகிறார் கையி.

“நான் காலையில் எழுந்தவுடன் எனது தொலைபேசியை பார்க்கப் போவதில்லை அல்லது ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எனது குறுஞ்செய்திகளையோ, சட்களையோ அல்லது செய்திகளையோ பார்க்கப் போவதில்லை போன்ற கட்டுப்பாடுகளை நீங்கள் உங்கள் மனதுக்கு விதிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் மனம் மென்பொருளை பதிவேற்றம் செய்ய முடியாத பழைய கணினியைப் போலாகிவிடும்” என்றார் கையி.

முக்கியமாக, “இந்து மற்றும் பௌத்த மத போதனைகளை நடைமுறைப்படுத்த இலங்கையர்களுக்கு இந்த சவாலான காலகட்டம் மிகவும் பொருத்தமானது” என்றும் சுட்டிக்காட்டினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.