;
Athirady Tamil News

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு (AI)

0

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில், வாக்காளர்களின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஏமாற்றும் வகையில் தவறான தகவல்களையும் போலிச் செய்திகளையும் பரப்பும் வகையில் பல செயற்பாடுகள் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

குறிப்பாக இம்முறை தேர்தல்களில் தவறான தகவல்களை பரப்பவும் போலிச் செய்திகள், காணொளிகளை உருவாக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மிகவும் உயர்ந்ததாகவே காணப்படுகின்றது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டில் பல நாடுகளில் தேர்தல் இடம்பெறும் முக்கியமான ஆண்டாக கருதப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் சுமார் 64 நாடுகளில் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், உலகளாவிய ரீதியில், வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு 2024இல் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளார்கள். உலகளாவிய மக்கள் தொகையில் சுமார் 49 வீதமானவர்கள் இவ்வாண்டு இடம்பெறவுள்ள தேர்தல்களில் வாக்களிக்க உள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் தற்போது வரையான காலப்பகுதியில் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள பல நாடுகள் தேசியத் தேர்தல்களை நடத்திவிட்டன. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான காலம் கனிந்துள்ளது. இன்னும் இரு மாதங்களில் தேர்தல் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தல்காலங்களில் போலிச்செய்திகளுக்கும் தவறான உள்நோக்கங்களைக் கொண்ட செய்திகளுக்கும் காணொளிகளுகம் எவ்வித பஞ்சமும் இராது. துரிதமாக வளர்ந்துள்ள தொழில்நுட்ப வளர்ச்சியின் மத்தியிலும் சமூக ஊடகங்களின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சியின் தாக்கம் இம்முறை தேர்தலில் கடுமையான விளைவுகளையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும்.

மக்களின் கருத்துக்களில் ஏமாற்றும் வகையில் செல்வாக்கு செலுத்தவும் தவறான தகவல்களைப் பரப்பவும் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படும் என்ற உண்மை கடந்த இந்தியத் தேர்தலில் நிரூபணமாகியிருந்தது.

இந்நிலையில், இலங்கையில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தற்போது தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்திருக்கின்றது. அரசியலமைப்பின் பிரகாரம் தற்போது தேர்தல் நடைபெறும் திகதி மற்றும் வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான திகதிகள் போன்றவற்றை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைத்திருக்கின்றது.

தேர்தல் ஆணைக்குழு கூறுவதைப் போன்று சட்டரீதியான தடைகள் எதுவும் தேர்தலை நடத்துவதற்கு இல்லை. அதேபோன்று அரசியல் ரீதியான தலையீடுகளும் இல்லை. நீதிமன்ற சிக்கல்கள் எதுவும் இடம்பெறாவிடின் ஜனாதிபதி தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் அதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது.

இந்நிலையில், கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தூதரகத்தினால் மக்கள் மத்தியில் தேர்தல் கருத்துக்கணிப்பொன்று நடாத்தப்பட்டதாகவும், அம்முடிவுகளின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இருக்கும் அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகப்பின்னடைவான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இருப்பினும் அத்தகைய கருத்துக்கணிப்பு எதனையும் ஐரோப்பிய ஒன்றியத் தூதரகம் நடாத்தவில்லை எனவும், மேற்குறிப்பிட்டவாறு வெளியான செய்திகள் முற்றிலும் போலியானவை எனவும் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் Fact Seeker உறுதிப்படுத்தியுள்ளது.

இவ்வாறு தற்போதிருந்தே பல செய்திகளும் கருத்துக் கணிப்புக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. எதிர்வரும் காலங்களில் இவ்வாறான போலிச் செய்திகளும் போலிப் பிரச்சாரங்களும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திய காணொளிகளும் சமூக ஊடகங்களில் வலம் வந்து மக்களின் கருத்துக்களையும் அவர்களின் சிந்திக்கும் செயற்பாடுகளையும் கடும் சவாலுக்கு உட்படுத்தப்போகின்றன.

இணையத்தில் தவறான தகவல் மற்றும் பொய்யான தகவல்களின் தாக்கத்தை மக்கள் உணர்ந்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கையில் வெறுப்புப் பேச்சு, போலிச் செய்திகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் மக்களுக்கு சிறந்ததொரு பாடமாகும்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஜனநாயகத்தின் முக்கியமான அடித்தளமாகும். சமூக ஊடகங்கள் தகவல்களை பெறவும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்குமான தளமாக மாறி வரும் நிலையில், குறிப்பாக இந்த 2024 தேர்தல் ஆண்டில், தவறான தகவல்களை உருவாக்கவும் பரப்பவும் AI செயற்க்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக தவறான தகவல்கள் பரப்பப்படும் அளவு அதிகரிக்கும் என்பதுடன் மக்கள் அவற்றை இலகுவில் அடையாளம் காண முடியாதளவில் அவை மிகவும் நுட்பமாக காணப்படும். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலியான படங்கள், ஒலிப்பதிவு, காணொளிகள் மக்கள் சரியான தகவலா என புரிவதற்கு முன்னர் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தையும் தேர்தலில் கடும் சவாலையும் ஏற்படுத்தும்.

இலங்கைத் தேர்தலில் இதனால் ஏற்படும் தாக்கத்தை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தகவல் ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழு ஆகியன இது தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எவ்வாறு இருப்பினும் தேர்தல் காலங்களில் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்திகள், போலிச் செய்திகள் தொடர்பில் மக்கள் அடையாளங்காணுவதில் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் அவை தொடர்பில் மக்கள் பல முறை சிந்தித்து கேள்விகளுக்குட்படுத்தி அதற்கான தீர்வுகளை காண்பதுடன் அவற்றை அவதானத்துடன் கையாள வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.