;
Athirady Tamil News

’’புயலை தாண்டினால் தென்றல்” அப்துல் கலாம் குறித்த கட்டுரை

0

“கனவுகள் என்பது நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவை தான் நமது கனவுகளாக இருக்க வேண்டும்” என்று இளைஞர்களுக்கு எடுத்துக் கூறியவர் முன்னாள் இந்திய ஜனாதிபதியான ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள். “ ஒருவர் தன் வாழ்வில் தொடர்ந்து கனவு கண்டு கொண்டே இருக்க வேண்டும் .

பிறகு அந்தக் கனவுகளை நனவுகள் ஆக்குவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். நாம் அவ்வாறு செய்தால் வெற்றி நமது கைக்கெட்டும் தூரத்தில் வந்து விடும்” என்று வலியுறுத்தியவர்.

தாம் எண்ணிய கருமத்தில் தொடர்ச்சியாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும், அதனை அடைவதற்கு கடினமாக உழைக்க வேண்டுமெனவும், அதுவே ஒருவனது வெற்றியின் ரகசியமெனவும், வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை கூறியது மட்டுமல்லாது, அது போலவே வாழ்ந்தும் காட்டியவர்.

பார் போற்றும் கல்விமானும், விஞ்ஞானியுமான கலாம் அவர்களை எனது வாழ்வில் சந்திப்பேன் என்ற கனவு எனக்கு என்றும் இருந்ததில்லை . அவ்வாறு இருந்திருந்தால் அது மலைக்கும், மடுவுக்குமான தூரம். ஆனால், ஓர் எதிர்பார்ப்பு என்றும் இருந்திருந்தது.

அரசின் மும்மொழித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த அவருடன் இணைந்து பயணிக்கும் வாய்ப்பு கிட்டியதுடன், அவர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளிலும் பங்குபற்றும் சந்தர்ப்பமானது பணிசார் ரீதியில் பணிக்கப்பட்டிருந்தது.

அவரது வருகையின் பொழுது, யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அவருடன் ஒரே உலங்குவானூர்தியில் பயணம் செய்த அனுபவங்கள் மனதை நெருடும் தருணங்கள்.

பலாலி விமான நிலையத்தில் உலங்குவானூர்தி தரையிறங்கியதும் அவரை வரவேற்க பெருமளவானோர் காத்திருந்தமை கண்ணுக்கினிய அம்சங்களாகும்.
அவரது முதலாவது மாணவர் சந்திப்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் சென்ற வாகன அணி பல்கலைக்கழக வாயிலை அடைந்ததும் மாணவர்கள் திரள் திரளாக அவரை நோக்கி சூழத் தொடங்கினர். மாணவர்களால் வழி நெடுக அமோகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சொற்பொழிவு நடந்த இடமான கைலாசபதி மண்டபத்திற்கு கூட அவரால் செல்ல முடியாத அளவில் மாணவர் கூட்டம்.

கைலாசபதி மண்டபத்தினுள் நுழைய முடியாத நிலையில் இருந்த நான், அங்கிருந்த பாதுகாவலர்களிடம் எனக்கு உள்ளே செல்ல வழியேற்படுத்தித் தருமாறு விநயமாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்கள் அதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தந்தார்கள். மண்டபம் முழுவதும் மாணவர்களாலும், கல்வி மான்களாலும் நிறைந்து வழிந்திருந்தது.

சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலான காலப்பகுதியில் இதே மண்டபத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் வணிகமாணிப் பட்டம் பெறுவதற்காக கலந்து கொண்டேன். சுமார் இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, முதன் முறையாக, யான் கற்ற பல்கலைக்கழகத்தில், அதே மண்டபத்தில் பார் போற்றும் விஞ்ஞானியும், கல்விமானுமான அப்துல் கலாம் அவர்களுடன் கால் பதித்தது நான் செய்த பாக்கியமும், கல்விச்சாலை சாதித்த சாதனைகளும் என்றால் மிகையாகாது.

யாழ் துணைவேந்தரின் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் மத்தியில் அப்துல் கலாம் உரையாற்றினார்.
1941 ஆம் ஆண்டு தனக்கு ஐந்தாம் வகுப்பில் கணிதம் கற்பித்த ஆசிரியரான கனக சுந்தரனார் யாழ்ப்பாண மண்ணைச் சார்ந்தவரென நினைவு கூர்ந்த அவர், வாழ்க்கை நெறியையும் அவரிடமே கற்றதாகக் கூறிய பொழுது, எத்தனை காலம் கடந்தாலும் தனது ஆசான்களை மறவாத பண்பும், உளப்பாங்கும் அவரது உயரிய பண்பினை வெளிப்படுத்தியது எனலாம். இன்றைய தலைமுறையினருக்கு இதுவொரு சிறந்த எடுத்துக் காட்டாகும் .

‘புயலை தாண்டினால் தென்றல்’ என்ற தலைப்பில், மாணவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையை, உற்சாகத்தைக் கொடுக்கும் விதத்தில் ஆற்றிய அவரது உரையானது ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது எனலாம்.

“ நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன்
ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன் பறப்பேன் பறந்துகொண்டே இருப்பேன்”.

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்.

நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.
என்னுடைய கருத்து என்னவென்றால்,
உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்,
இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு,
அதை அடைய உழைப்பு முக்கியம். உழை,
உழைத்துக் கொண்டே இரு.
இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்” ,

என மாணவ சமுதாயத்திற்கு கூறிய கருத்துக்கள் காலத்தால் அழியாதவை.
“இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி , தோல்வி மனப்பான்மைக்கு தோல்வியை கொடுத்து வெற்றியடைய வேண்டும் என்றார்.

மிகவும் பழமை வாய்ந்த கல்லூரியான யாழ்ப்பாண இந்து கல்லூரியில் அவருக்கு மாணவர்களாலும், ஆசிரிய சமூகத்தாலும், பெற்றோர்களாலும் அளிக்கப்பட்ட வரவேற்பு மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தது. மண்டபம் முழுவதும் மாணவர்கள், கல்வி சமூகத்தினர் , பெற்றோர்கள் என நிரம்பிக் காணப்பட்டது.
அங்கிருந்த மாணவர்களுக்கு, “நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன் நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்” என்ற கவிதையைக் கூறி அதனையே மீள உரக்கக் கூறுமாறு பணித்தார். அவர்களும் உற்சாகமாக திரும்பக் கூறியது மண்டபத்தை அதிர வைத்தது. இலட்சியத் தாகம் பற்றி குறிப்பிடும் பொழுது,

“ நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா
நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா”
இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,
அறிவுப்புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.

தனது கருத்தானது நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணங்கள் வரும். எண்ணங்கள் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும் என்பதாகும்.

மாணவர்களுடனான சந்திப்பின் பொழுது , மாணவி ஒருவர், ‘பொறுப்புள்ள பிரஜையாக வாழ என்ன செய்ய வேண்டும்’ என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கலாம் அவர்கள் “ உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும். உன் நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி நிலைக்கும். நாட்டில் அமைதியிருந்தால், உலகில் சமாதானம் பிறக்கும் “ என ஆங்கிலத்தில் கூற அதனை அப்படியே எந்தப் பிழையும் இல்லாமல், அம்மாணவி திரும்ப ஒப்புவித்ததானது பலரது வரவேற்பையும் பெற்றது.

“ நாம் சொற்களைப் பயன்படுத்தும் பொழுது எப்பொழுதும் பயனுடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும். பயன் இல்லாத சொற்களைச் சொல்லவே கூடாது” என திருவள்ளுவரின் திருக்குறளில் வரும் வரிகளான “சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்” என மேற்கோள் காட்டி விவரித்தார்.
கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில், அறிவியல் துறையில் சாதித்தவர்களின் சாதனைகளை குறிப்பிட்டு அவர்களது தனித்துவத்தை, ஆக்கபூர்வமான சிந்தனைகளை வலியுறுத்தி இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

“நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்கள். ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப் போல் ஆக்குவதற்காக“ என்று கூறினார்.

21ம் நூற்றாண்டின் அறிவு சார்ந்த சமூகம், வீடு, நிறுவனங்கள், கல்விக் கூடங்கள் ஆகியன கற்றலுக்கான இடங்கள் எனவும், நிலையான வளங்களுக்கு தேசிய நெறிமுறைகள் அவசியம் எனவும் வலியுறுத்தி பேசினார்.

இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, படிப்படியாக தனது வாழ்வில் முன்னேறி, ஆசிரியராக,
விஞ்ஞானியாக, ஜனாதிபதியாக, ஓர் உயர் நிலையினை அடைந்தவர்.

அரசியலுக்கு அப்பால் அவரை ஒரு நல்லாசிரியராக , அவரது எளிமையான தன்மை, இனிமையாகப் பழகும் சுபாவம், பிரச்சினைகளை நிதானமாக செவிமடுக்கும் ஆற்றல், அவற்றை அணுகிய விதம், அமைதியான தன்மை, சகஜமாக பழகுதல், ஒரு தலைவனுக்கேற்ற தலைமைத்துவ ஆற்றல், அதற்கேற்ற பக்குவம், தன்னம்பிக்கை, என்பன என்னைப் பெரிதாக கவர்ந்ததோடு மட்டுமல்லாது, அவரிடமிருந்து நான் அனுபவரீதியாக மிகக் குறுகிய காலப்பகுதியில் கற்றுக் கொண்டது ஏராளம்.
அவரின் பேச்சை கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே எம்மை அறியாமல் ஒரு நேர்மறை சக்தி உருவாவதினை
உணரக்கூடியதாக இருந்தது.

“இளைஞர்களே கனவு காணுங்கள்” என்று அவர் கூறியது இளைஞர்களின் வாழ்க்கையில் சாதிப்பதனை நோக்கிய ஒரு அடித்தளமாக தென்பட்டது.
கனவு கனவாகவே இல்லாமல் அது நனவாக மாறவேண்டும் என்ற மன வைராக்கியம் இருந்தால், அதனை நிறைவேற்ற முடியும் என்பதனை தன் வாழ்நாளிலேயே சாதித்துக் காட்டிய உத்தமர் அவர்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரியினை ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தில் கூறி, தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்து காட்டியதோடு மட்டுமல்லாது, மனிதர்கள் யாவரும் எங்கு வாழ்ந்தாலும் சமமானவர்கள் என்பதனை இதனூடாக கோடிட்டுக் காட்டிய ஒரு பெருந்தகை.

26 ஆம் திகதி மே மாதம் 2015 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அவர் சென்றிருந்த பொழுது அவர் விஞ்ஞானத்திற்கும், தொழில்நுட்பத்திற்கும், ஆற்றிய பங்கினை நினைவு கூர்ந்து அவர் விஜயம் செய்த நாளை அந்நாடு “அறிவியல் தினமாகப்” பிரகடனப்படுத்தியது.

வாழ்க்கையில் நமக்கு பிடித்ததை செய்யும் போதே நிம்மதி கிடைக்கும். அப்படியில்லை என்றால் பிடித்ததை செய்து விட்டு இறந்தால் நிம்மதி கிடைக்கும்.
தன் வாழ்நாள் முழுவதும் தன் மனதிற்கு பிடித்த விடயங்களை செய்து, தனக்கு பிடித்ததை செய்து கொண்டிருக்கும் போதே நிம்மதியாக மறைந்தார் மாமேதை அப்துல் கலாம்.

27 ஆம் திகதி ஜூலை மாதம் 2015 ஆம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங் நகரில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து , பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பொழுது அவர் இறந்துவிட்டார் எனும் சோக செய்திதான் கிடைத்தது.
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மறைந்த அப்துல் கலாம் அவர்கள்
பல்வேறுபட்ட சிறப்பு அம்சங்களைக் கொண்ட இவரது நினைவு தினம் இன்றாகும்.

இவர் எமக்கு எடுத்துக் கூறிய கருத்துக்கள், குறிப்பாக இளைய சமூகத்தினருக்கு எடுத்துரைத்த நற்கருத்துக்கள் என்றுமே இவரின் உன்னதக் கொள்கைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்குமென்றால் அது மிகையாகாது. அவர் கண்ட கனவினை நனவாக்குவது இன்றைய இளைஞர்களின் கரங்களில் தங்கியுள்ளது. “நல்லவர்களின் சொல் நன்மை மிகுந்திருக்கும்”.

You might also like

Leave A Reply

Your email address will not be published.