தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளின் அதிர்ச்சியின் விளைவான தாக்கங்கள்; இந்தியாவுக்கான படிப்பினைகள்
இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு அதன் அயல்நாடுகளில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக அதிர்ச்சியை கொடுத்துவருகின்றன.
2021 ஆம் ஆண்டில் மியன்மாரில் சதிப்புரட்சியும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சியும். 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் பதவி கவிழ்க்கப்பட்டார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டார்.
அதற்கு பிறகு மாலைதீவு தேர்தலில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்த ஜனாதிபதி சோலீ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட அதேவேளை, நேபாளத்திலும் கூட்டரசாங்கங்களின் வீழ்ச்சி அதே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவுடன் குறைந்தளவு நட்புறவைக் கொண்ட பிரதமர் ஒலீயின் அரசாங்கம் பதவிக்கு வந்தது.
அடுத்து இப்போது பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவை திடீரென்று பதவியில் இருந்து விரட்டியிருக்கிறது. அவர் இந்தியாவுக்கு தப்பி வந்திருக்கிறார். ஹசீனா அரசாங்கத்தின் மீது இந்தியா எவ்வாறு பெருமளவுக்கு நம்பிக்கை வைத்துச் செயற்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிர்ச்சியை உணர்ந்து கொள்ளமுடியும்.
ஹசீனாவுக்கு பிறகு பதவிக்கு வருபவர்களுடன் எவ்வாறு உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது என்பதில் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது.
கடந்த சில வருடங்களின் நிகழ்வுப்போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தெற்காசியாவில் ஏற்பட்டிருக்கும் சடுதியான மாற்றங்களின் விளைவுகளினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அது போன்ற விளைவுகளில் இருந்து தான் தப்பித்துக் கொள்வதற்கும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கக்கூடிய பாடங்கள் எவை?
இந்திய அரசாங்கம் அதன் சொந்த அயலகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாரில்லாத ஒரு நிலையில் இருந்திருக்கக்கூடாது என்பது முதல் பாடம்.
பங்களாதேஷில் இந்தியாவின் பிரசன்னத்தை பொறுத்தவரை, தலைநகர் டாக்காவில் உள்ள உயர்ஸ்தானிகரகத்துக்கு புறம்பாக, சிட்டாகொங், ராய்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெற் ஆகிய நகரங்களில் துணைத் தூதரகங்களைக் கொண்டிருக்கிறது. அத்துடன் பல இந்திய அமைப்புக்கள் அந்த நாட்டில் பல்வேறு செயற்திட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன.
இவை எல்லாம் கடந்த ஒரு சில மாதங்களாக மாத்திரமல்ல, கடந்த சில வருடங்களாக ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக வளர்ந்துகொண்டிருந்த எதிர்ப்பை பற்றிய விபரங்கள் முழுமையாக திரட்டப்பட்டு புதுடில்லிக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்திருக்க வேண்டும்.
அவாமி லீக் அரசாங்கம் ஒரு எதேச்சாதிகார, தனிக்கட்சி ஆட்சியாக மாறிக்கொண்டுவந்தது. எதிரணி அரசியல்வாதிகள் பலர் சிறையில் அடைக்கப்பட்டதுடன் மேலும் பலர் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்கள்.
சிவில் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் உணர்ந்தார்கள். நிலைமை இவ்வாறாக இருந்தபோதிலும், அதைப் புரிந்துகொள்வதற்கோ அல்லது தனது அக்கறைகளை ஹசீனா அரசாங்கம் விளங்கக்கூடிய முறையில் கூறுவதற்கோ இந்திய அரசாங்கம் எதையும் செய்யவில்லை.
மேலும், பங்களாதேஷ் எதிரணியுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு இந்திய இராஜதந்திரிகள் தவறினார்கள். முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஸியாவின் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அது மாத்திரமல்ல, ஒரு சந்தர்ப்பத்தில், ஹசீனா அரசாங்கத்தின் வேண்டுகோளையடுத்து பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஒருவரை இந்திய அரசாங்கம் நாடுகடத்தியது.
இவையெல்லாம் அரசியல் மதிலின் ஒரு பக்கத்தில் மாத்திரம் நின்றுகொள்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானத்தை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அத்தகைய ஒரு பக்கச்சார்பான ஊடாட்டத்தை வரலாறு பல தடவைகள் வேண்டிநிற்கிறது.
பேகம் காலிதா ஸியாவின் கீழான பங்களாதேஷ் தேசியவாத கட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் எல்லையோரக் கொலைகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் பாரதூரமானதாக இருந்த அதேவேளை, ஒரு நீண்டகாலத்துக்கு அயல்நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சியை அலட்சியம் செய்வதற்கு இந்தியா முடிவெடுத்திருக்க முடியாது.
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட படுமோசமான தாக்குதல்களில் தலிபான் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும்கூட, அந்த இயக்கத்துடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா தீர்மானித்தது.
இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அடிக்கடி இந்திய விரோத நிலைப்பாடுகளை எடுத்த வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும், அதன் தலைவர்களை இந்திய அரசாங்கம் வரவேற்றது. கே.பி. சர்மா ஒலீ தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் இந்தியா கடுமையாகாஆட்சேபித்த வரைபடங்கள் தொடர்பிலான அரசியலமைப்பு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கூட அந்த கட்சியுடன் புதுடில்லி விவகாரங்களை கையாண்டது.
இந்த செயற்பாடுகள் எல்லாம் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை அயல்நாடுகளில் உள்ள தரப்புகளுடன் ஊடாட்டங்களை வேண்டிநிற்கிறது என்பதைக் காட்டுகிறது.
மாலைதீவில் அன்றைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலீக்கு இந்தியா அளித்த முழுமையான ஆதரவும் முஹமட் முய்சுவை இந்திய விரோத தலைவர் என்று காண்பித்துக் கொண்டதும் தேர்தல் அலை மறுபக்கம் மாறியபோது பயனில்லாமல் போய்விட்டது. கசப்பான ஒரு உண்மையை இந்தியா ஜீரணித்துக்கொள்ள வேண்டியிருந்ததுடன் மாலைதீவில் இருந்து படைகளை விலக்கிக்கொண்ட போதிலும், கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி முய்சுவின் அரசாங்கத்துடன் நெருக்கமான ஊடாட்டங்களை நாடினார்.
புதுடில்லி அதன் வீறுகாட்டும் மனோபாவத்தைக் கைவிட்டு அயல்நாடுகளுடனான ஊடாட்டங்களை பரந்தளவில் பேணினால் இத்தகைய கடுமையான பாடங்களை தவிர்த்திருக்க முடியும். ஒரு கட்சி ஆட்சியின் உறுதிப்பாட்டை விடவும் நாட்டுக்குள்ளும் எல்லைகளுக்கு வெளியேயும் பன்முகத்தன்மை கொண்ட அரசியல் கருத்துக்களை புதுடில்லி விரும்பி ஆதரிக்கவேண்டும்.
இழந்த நற்பெயரும் இனவாதப் பார்வையும்
இந்தியா அதன் நண்பர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பது பங்களாதேஷ் மற்றும் ஷேய்க் ஹசீனா விவகாரத்தில் நாம் பெற்றுக்கொண்ட இன்னொரு படிப்பினையாகும்.
காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு தலிபான்களிடம் இருந்து தப்பியோடிவந்த நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களுக்கு விசா வழங்குவதற்கு மறுத்தபோது நம்பிக்கைக்குரிய பங்காளி என்ற நற்பெயரை புதுடில்லி இழந்துவிட்டது. அந்த ஆப்கானியர்களில் முன்னைய ஆப்கான் அரசாங்கத்தில் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.
அவர்கள் தங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் இந்திய இராஜதந்திரிகளை பாதுகாத்தவர்கள். அவர்களுக்கு கதவை மூடுவதற்கு இந்தியா எடுத்த தீர்மானம் தொடர்ந்தும் ஒரு கசப்பான விவகாரமாகவே நீடிக்கிறது. கோட்பாட்டுக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.
தெற்காசியாவில் அதிகாரத்தை அடிக்கடி இழக்கும் தலைவர்கள் சில காலத்துக்கு பிறகு திரும்பவும் பதவிக்கு வருகிறார்கள். ஷேய்க் ஹசீனா இன்னொரு பாதுகாப்பான நாட்டைத் தேடிக்கண்டு பிடிக்கும்வரை தங்கியிருப்பதற்கு அனுமதித்ததன் மூலம் நல்ல காரியம் ஒன்றை இந்தியா செய்திருக்கிறது. அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தால் அது ஒரு துரோகச் செயலாக அமைந்திருக்கும். எதிர்காலத்திலும் அவரை கையாளும் விடயத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறை கடைப்பிக்கப்பட வேண்டும்
ஹசீனா தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது புதிய அரசாங்கத்துடனான உறவுகளைச் சிக்கலாக்கும். குறிப்பாக அவரை நாடுகடத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தால் அல்லது அவாமி லீக் கட்சியினர் தங்களை மீள அணிதிரட்டுவதற்கு இந்தியாவைப் பயன்படுத்துவதாக கருதப்பட்டால் பிரச்சினை தோன்ற சாத்தியம் இருக்கிறது.
அயல்நாடுகளில் உறவுகளை இனவாத நோக்கின் அடிப்படையில் அணுகுவது ஒரு தவறு என்பது காலந்தாழ்த்தாமல் இந்தியா படிக்கவேண்டிய மூன்றாவது பாடமாகும். தெற்காசியா மதரீதியான பெரும்பான்மைச் சமூகங்களைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். வெவ்வேறு நாடுகளில் சனத்தொகையின் அதிகப்பெரும்பான்மையான பிரிவினராக இந்துக்களும் முஸ்லிம்களும் பௌத்தர்களும் வாழ்கிறார்கள். நல்லுறவுகள் ஏதோ ஒரு வகையில் மதத்துடன் பிணைக்கப்பட்டவையாக இருக்கின்றன என்று எண்ணுவது தவறானதாகும்.
இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நேபாளத்துடன் இந்தியா மிகவும் சிக்கலான உறவைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பௌத்தர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பூட்டானும் முஸ்லிம்களை பெரும்பானமையினராகக் காண்ட மாலைதீவும் பெரும்பாலும் இந்தியாவுடன் சிறந்த உறவுகளைக் கொண்டிருந்தன.
முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளில் ( ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பஙகளாதேஷ் ) இருந்துவந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மாத்திரம் குடியுரிமையை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை அயல்நாடுகளில் ( மேலே குறிப்பிட்ட நாடுகளில் மாத்திரமல்ல) எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது.
ஹசீனாவின் பதவி விலகலை தொடர்ந்து பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பில் மோடி அரசாங்கத்தின் காட்டும் அக்கறை சரியானதே. ஆனால், இந்திய உள்துறை அமைச்சின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு போன்ற கருவிகளின் ஊாடாக அல்லாமல் மிகவும் சாதுரியமாக அந்த அக்கறை வெளிக்காட்டப்பட வேண்டும்.
தனது எல்லகைளுக்குள் வாழ்கின்ற சிறுபான்மை இனத்தவர்களையும் பாதுகாப்பதில் பற்றுறுதி கொண்டிருப்பதாக, சொல்லால் அன்றி செயலால், இந்திய அரசாங்கம் காண்பிப்பதன் மூலமாக பங்களாதேஷ் சிறுபான்மை இனத்தவர்கள் மீதான இந்தியாவின் அக்கறை கரிசனையுடன் நோக்கபடுவதை உறுதிசெய்யலாம்.
தெற்காசிய தனித்துவ பொறிமுறை
இந்தியா முதன்மையான வல்லரசு என்ற அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும் என்பது நான்காவது பாடம். பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவல்களை எதிர்க்கவேண்டியது அவசியம் என்கின்ற அதேவேளை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டாபோட்டிக்கான களமாக பிராந்தியம் மாறிவிடக்கூடாது.
வர்த்தகம், இணைப்பு , முதலீடு மற்றும் மூலோபாய உறவுகளில் இந்தியாவை ஓரங்கட்டுவதற்கு சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் நன்கு தெரிந்தவையே. பங்களாதேஷில் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிரான அமெரிககாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் நலன்களை நசுக்கிவிட்டன.
பாகிஸ்தான் தேர்தல்கள் குறித்து எந்த கருத்தையும் அமெரிக்கா கூறாமல் இருந்த பின்புலத்தில் நோக்கும்போது வாஷிங்டன் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்ட கடுமையான அறிக்கைகளும் பங்களாதேஷில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளுடன் விசேட விசேட விசா கொள்கையை பிணைக்கும் அமெராக்கத் தீர்மானமும் பாசாங்குத்தனமானவை என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க் ) போன்ற தனித்துவமான தெற்காசிய பொறிமுறைகளை மீட்டெடுத்து இந்தியா வெளித்தலையீடுகள் இன்றி அயல்நாடுகளுடன் ஊடாட்ங்களைச் செய்வதற்கு வழிவகைகளை கண்டறியவேண்டும். பாகிஸ்தானுடனான இரு தரப்பு பிரச்சினைகள் இந்தியா ஒரு தசாப்த காலமாக சார்க் அமைப்பை பகிஷ்கரிக்க வழிவகுத்தன.
பங்களாதேஷுடனான உறவுகள் மோசமடையுமேயானால் ( சார்க்கை கைவிட்டதைப் போன்று ) பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா செயற்திட்டம் ( Bay of Bengal Initiative for Multi – Sectoral Technical and Economic Cooperation ) or BIMSTEC ) போன்ற மற்றைய பொறி முறைகளையும் கைவிடவேண்டுமா அல்லது அவ்வாறு செய்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும் இந்தியா பரிசீலனை செய்யவேண்டும்.
இறுதியாக, கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் கொந்தளிப்புகளில் இருந்தும் தேர்தல் முடிவுகளில் இருந்தும் பெறக்கூடியதாக இருக்கும் குறிப்பிட்ட சில பொதுவான பாடங்கள் மீது புதுடில்லி மாத்திரமல்ல, சகல தெற்காசிய தலைநகரங்களும் கவனம் செலுத்தியாக வேண்டும். தொழில் வாய்பின்மையும் சமத்துவமற்ற வளர்ச்சியும் வீதிகளுக்கு மக்களை இறக்குகின்றன. ஆனால், எந்தளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஜனநாயக பின்னடைவை மூடிமறைக்க முடியாது.
நவீன ஜனநாயகங்களில் எதிர்ப்பை நசுக்கும் செயற்பாடுகளை நீண்டகாலத்துக்கு தொடரமுடியாது.” நீங்கள் ஒரு வருட காலத்துக்கு பயிரை வளர்க்க விரும்பினால் சோளத்தை பயிருடுங்கள்….. காலாதிகாலத்துக்கு பயிர் செய்ய விரும்பினால் ஜனநாயகத்தை வளருங்கள்” என்ற ஒரு பழைய கூற்று இருக்கிறது. இது இந்தியாவையும் அயல்நாடுகளுடனான அதன் உறவுகறையும் பொறுத்தவரை உண்மையாகும்.