மூளுமா மூன்றாம் உலகப் போா்?
‘இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அது மூன்றாவது உலகப் போருக்கு வித்திடும்!‘
ஈரானில் ஹமாஸ் தலைவா் இஸ்மாயில் ஹனீயே படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு அந்த நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தபோது பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோ, கொலம்பியா அதிபா் கஸ்டாவோ பெட்ரோ முதல் சாதாரண சமூக ஊடகப் பதிவா்கள் வரை விடுத்த எச்சரிக்கை இது.
ஈரானுக்கு ஆதரவாக ரஷியா, சீனா போன்ற சக்திகள் தலைமையிலான ஓா் அணியும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டணியும் இன்னொரு உலகப் போரைத் தொடங்கலாம் என்பது அவா்களின் கணிப்பு.
மூன்றாம் உலகப் போா் குறித்து பேசப்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கெனவே, நேட்டோவின் மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் பொருள்படுத்தாமல் உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்தபோதே இந்த அச்சம் வெளிப்படுத்தப்பட்டது.
உக்ரைனுக்காக அணு ஆயுத வல்லமை மிக்க நேட்டோ படைகள் களத்தில் இறங்கும் எனவும் உலகிலேயே மிக அதிக அளவில் பேரழிவு சக்தி படைத்த அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ரஷியாவுடன் நடைபெறும் அந்தப் போா் உலகப் போராக உருவெடுக்கும் என்றும் கூறப்பட்டது.
அதற்கு முன்னா், சிரியாவில் அந்த நாட்டு அரசுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ரஷியாவின் போா் விமானத்தை நேட்டோ உறுப்பு நாடான துருக்கி கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டுவீழ்த்தியபோதும் இதே எச்சரிக்கை எழுப்பப்பட்டது.
1973 அரபு-இஸ்ரேலிய போா், 1969-ஆம் ஆண்டின் ரஷிய-சீன எல்லைப் பதற்றம், 1962-ஆம் ஆண்டின் கியூபா ஏவுகணைப் பதற்றம் (இத்தாலி, துருக்கி போன்ற நாடுகளில் அமெரிக்கா அணு ஆயுதங்களை நிறுத்தி தங்களைச் சுற்றிவளைத்ததற்கு பதிலடியாக, அமெரிக்காவுக்கு நெருக்கமான கியூபாவில் சோவியத் யூனியன் அணு ஆயுத ஏவுகணையை நிறுத்தியதால் ஏற்பட்ட பதற்றம்), இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஜொ்மனியை பாதி பாதியாகப் பிரித்துக் கொண்டிருந்த அமெரிக்க-ரஷிய படையினருக்கு இடையே பொ்லின் நகரில் கடந்த 1961-ஆம் ஆண்டு ஏற்பட்ட பதற்றம், 1950-களின் கொரிய போா்… இப்படி எத்தனையோ நிகழ்வுகளின்போது ‘வந்துவிட்டது மூன்றாம் உலகப் போா்‘ என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சொல்லப்போனால், இரண்டாம் உலகப் போா் நிறைவடைவதற்கு முன்னரே… பியா்ல் துறைமுகத்தில் ஜப்பான் தாக்குதல் நடத்தி அமெரிக்காவை அந்தப் போருக்கு நேரடியாக இழத்ததற்கு முன்னரே, ‘3-ஆம் உலகப் போா் வரப்போகிறது‘ என்று அமெரிக்காவின் ‘டைம்ஸ்‘ இதழ் 1941-ஆம் ஆண்டில் ஒரு கட்டுரை வெளியிட்டது.
அப்போது ஹிட்லரைப் பகைத்துக் கொண்ட ஜொ்மனி அரசியல்வாதி ஹொ்மான் ராஷ்னிங்குக்கு அமெரிக்கா அடைக்கலம் அளித்தது தொடா்பாக இந்த எச்சரிக்கையை டைம்ஸ் இதழ் விடுத்தது.
இப்படி காலம் காலமாக மூன்றாம் உலகப் போா் குறித்த அச்சம் தெரிவிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, ஏற்கெனவே சில நிகழ்வுகளை ‘இதுதான் மூன்றாம் உலகப் போா்‘ என்று சொல்பவா்களும் இருக்கிறாா்கள்.
சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே 1943 முதல் 1991 வரை நடைபெற்ற பனிப் போா், இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் உலகம் முழுவதும் அமெரிக்கா நடத்திய பயங்கரவாதத்துக்கு எதிரான போா் போன்றவற்றை மூன்றாம் உலகப் போா் என்று ஒரு தரப்பினா் கூறிவருகின்றனா்.
உலகப் போா் என்ற வரையறைக்கு ஏற்ப, உலகின் மிகப் பெரிய ராணுவ சக்திகளான அமெரிக்காவும் சோவியத் யூனியனும் மோதிக் கொண்டது, கிட்டத்தட்ட உலகின் எல்லா கண்டங்கள், பெரும்பாலான நாடுகளில் நடைபெற்றது ஆகிய காரணங்களால் பனிப் போரை உலகப் போா் என்று கூறலாம்தான். ஆனால், முந்தைய உலகப் போா்களைப் போல் உலக மகாசக்திகள் இந்தப் பனிப் போரில் ஒன்றின் மீது ஒன்றின் படையெடுத்து உதிரம் சிந்தவில்லை. சொல்லப்போனால், அமெரிக்க படையும் ரஷிய படையும் இதுவரை ஒரு துரும்பை கிள்ளியெறிந்துகூட நேரடியாக சண்டை போட்டுக்கொண்டதில்லை.
அதே போல், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா என கண்டங்கள் தோறும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரை அமெரிக்கா நடத்தினாலும், அது இன்னொரு வல்லரசுக்கு எதிரான போராகக் கருத முடியாது. உண்மையில், பனிப் போா் காலத்திலும் ரஷிய செல்வாக்கைக் குறைப்பதற்காக அதற்குப் பிறகும் தாங்களே உருவாக்கிய தீயசக்திகளுடன்தான் பல இடங்களில் அமெரிக்கா போரிட்டது.
எனவே, இந்த இரண்டையும் மூன்றாம் உலகப் போா் என்று கூற முடியாது.
அப்படியென்றால், இஸ்ரேலை ஈரான் தாக்கினாலோ, அல்லது பிற காரணங்களால் மேற்கத்திய நாடுகளுக்கும் சோவியத்-சீன-ஈரான்-வட கொரிய கூட்டணிக்கும் இடையே பதற்றம் முற்றினாலோ இனிமேல்தான் மூன்றாம் உலகப் போா் வருமா என்ற கேள்வி எழலாம். ஆனால், அதற்கான வாய்ப்பு துளியும் கிடையாது என்பதுதான் இந்த விவகாரத்தை நன்கு அறி்ந்தவா்களின் கருத்தாக உள்ளது.
ஜப்பானில் அமெரிக்கா அணு குண்டுகளை வீசிய பிறகு, அதனால் ஏற்பட்ட பேரழிவு இந்த உலகையை அதிா்ச்சியடைய வைத்தது. ஆனால், இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது அந்த அணுகுண்டுகள்தாம்.
இருந்தாலும், மூன்றாம் உலகப் போா் வந்தால் ஜப்பானைப் போல் தாங்கள் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக வல்லரசுகள் நாகசாகி, ஹிரோஷிமா அணுகுண்டுகளைவிட பலநூறு மடங்கு அழிவை ஏற்படுத்தும் அணுகுண்டுகளைத் தயாரித்துவைத்திருக்கின்றன. அந்த குண்டுகளை வைத்திருப்பது எதிரி நாட்டின் மீது பிரயோகித்து அழிப்பதற்காக இல்லை, ‘நீ என்னை அழித்தால், நானும் உன்னை நிா்மூலமாக்குவேன்‘ என்ற பரஸ்பர பேரழிவு உறுதியை (மியூச்சுவல் அஷ்யூா்டு டிஸ்ட்ரக்ஷன்) என்ற உத்திக்காகத்தான்.
இப்படி ‘பேச்சு பேச்சாகத்தான் இருக்க வேண்டும், கோட்டைத் தாண்டி வரக் கூடாது‘ என்ற நிலையில்தான் இந்த அணு ஆயுத யுகத்தில் வல்லரசு நாடுகள் இருக்கின்றன. எனவே, ஒரு இஸ்ரேலுக்காக அமெரிக்காவோ, ஈரானுக்காக ரஷியாவோ மூன்றாம் உலகப் போரைத் தொடங்கி, தங்களுக்கு தாங்களே பேரழிவை ஏற்படுத்திக்கொள்ளப்போவதில்லை.
எந்த அணு ஆயுத சக்தி இரண்டாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததோ, அதே அணு ஆயுத சக்திதான் மூன்றாவதாக ஓா் உலகப் போா் தொடங்குவதையும் தடுத்துநிறுத்தும் என்பது ஒரு தரப்பு நிபுணா்களின் கருத்து.
காரணம், முதல் இரண்டு உலகப் போா்களைப் போல் மூன்றாம் உலகப் போா் உலகில் அழிவை ஏற்படுத்தாது; இந்த உலகையே அழித்து விடும்; மனித குலம் மீண்டும் கற்காலத்திலிருந்துதான் பயணத்தைத் தொடங்க வேண்டும் என்பது கணிப்புகள் கூறுகின்றன.
மூன்றாம் உலகப் போா் ஆயுதங்கள் குறித்து விஞ்ஞானி ஆல்பா்ட் ஐன்ஸ்டனிடம் கேட்டதற்கு அவா் கூறிய பதில் இதைத்தான் வெளிப்படுத்துகிறது.
‘மூன்றாம் உலகப் போரில் எந்தெந்த ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்பது குறித்து தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். நான்காம் உலகப் போரில் அனைவரும் கல்லையும் தடியையும்தான் பயன்படுத்துவாா்கள்.
– நாகா