;
Athirady Tamil News

புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு இலங்கை சமூகத்தின் சகல பிரிவினரதும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் அவசியம் – தி இந்து

0

‘தி இந்து’ ஆசிரிய தலையங்கம்

ஒரு மாற்றத்தைக் காண்பதற்கே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்து இலங்கை மக்கள் தங்களது ஜனாதிபதியாக தெரிவுசெய்திருக்கிற்ர்கள். பெருமளவுக்கு சௌகரியமற்ற ஒரு சூழ்நிலையில் பதவிக்கு வந்திருக்கும் அவருக்கு இலங்கைச் சமூகத்தின் சகல பிரிவினரதும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் தேவை என்று சென்னையில் இருந்து வெளியாகும் இந்தியாவின் முக்கியமான தேசிய ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒன்றான ‘தி இந்து’ திங்கட்கிழமை (23) அதன் ஆசிரிய தலையங்கத்தில் கூறியிருக்கிறது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டு மக்கள் மாற்றத்துக்காக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கவை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள்.

ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவராகவும் இருக்கும் திசாநாயக்க இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் ஊடாக செல்லவேண்டியிருந்த போதிலும், (1978ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதற்தடவையாக அவ்வாறு இடம்பெற்றிருக்கிறது) அவருக்கு கிடைத்த ஆணையின் உள்ளுணர்வு ஒரு மாற்றத்துக்கானதாகவும் இலங்கை அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்திவந்த பாரம்பரிய அரசியல் கட்சிகள், குழுக்களில் இருந்து ஒரு நகர்வைக் குறிப்பதாகவும் இருக்கிறது.

மார்க்சியவாத வேர்களைக் கொண்ட (தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான) ஜே.வி.பி., 2019 , 2020 தேர்தல்களைப் போலன்றி, வாக்குகளில் சுமார் 42 சதவீத பங்கை பெறக்கூடியதாக இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். 2015, 2019 ஜனாதிபதி தேர்தல்களை விடவும் குறைவாக இருந்தபோதிலும், இந்த தடவை வாக்களிப்பு 79.5 சதவீதமாக இருக்கிறது.

வேட்பாளர்களுக்கு இருந்திருக்கக்கூடிய நெருக்குதல்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவர்கள் சகலரும் ஜனநாயக முறைமையின் மீதான தங்களது நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் நடந்துகொண்டுள்ளார்கள். 2022 ‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சியின் நோக்கம் தேர்தல் பிரசாரங்களிலும் மக்கள் அளித்திருக்கும் தீர்ப்பிலும் எதிரொலித்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்கு உரியதல்ல.

பொருளாதார நெருக்கடியே மக்கள் கிளர்ச்சியை மூளவைத்ததால், சகல வேட்பாளர்களுமே பொருளாதாரக் காரணியின் மீது தங்கள் கவனத்தைக் குவித்திருந்தார்கள். அண்மையில் ‘ தி இந்து ‘ வுக்கு வழங்கிய நேர்காணலில் திசாநாயக்க மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத்தை சீர்செய்து உறுதிப்படுத்துவதற்கே முன்னுரிமை கொடுக்கப்பபோவதாக கூறியிருந்தார்.

ஒரு இடதுசாரியாக இருக்கின்ற போதிலும், ஜே.வி.பி. தலைவர் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்பவராக இருக்கிறார். இலங்கை பொருளாதாரத்தை நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்காக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவியைப் பெறுவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை ரத்துச் செய்யாமல் மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் திசாநாயக்க கூறியிருந்தார்.

தனது பொருளாதாரக் கொள்கைகளையும் செயற்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை கருத்தொருமிப்புப் பாதையொன்றை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை அவர் கவனிக்கத் தவறக்கூடாது. தற்போதைய ” ஊழல்தனமான அரசியல் கலாசாரத்தை ” தொடர்ச்சியாக தாக்கிப்பேசி வந்திருப்பதால் ஆட்சிமுறையின் மற்றைய கூறுகளைப் பொறுத்தவரையிலும் ” முறைமை மாற்றம் ” ஒன்றை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதிலும் திசாநாயக்க பெரும் சவாலை எதிர்நோக்கப் போகின்றார்.

ஜே.வி. பி. ஒரு காலத்தில் எதிர்த்துநின்ற அரசாங்கத்தின் ஒரு அடுக்கான மாகாணசபைகளுக்கு தேர்தல்களை நடத்தப்போவதாக திசாநாயக்க அளித்த வாக்குறுதி தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கவேண்டும்.

“சீனச்சார்பான” ஒரு தலைவர் என்று விமர்சகர்ளினால் வர்ணிக்கப்படுகின்ற திசாநாயக்க இவ்வருட முற்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது வெளிக்காட்டிய அனுபவநோக்கை தொடர்ந்து கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா உட்பட பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு நாட்டினதும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இலங்கையின் நிலப்பரப்பு பயன்படுவதை அனுமதிக்கப் போவதில்லை என்றும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் திசாநாயக்க கூறியிருக்கிறார்.

அதேவேளை, மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக நாட்டின் அரசியல் விவாதத்தில் இருந்து தணிந்து போகாமல் இருந்துவரும் ஒரு விவகாரமான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு தொடர்பான வாக்குறுதியை புதிய ஜனாதிபதி எவ்வாறு நிறைவேற்றப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

பெருமளவுக்கு சௌகரியமானதாக இல்லாத சூழ்நிலைகளின் கீழ் ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கும் திசாநாயக்கவுக்கு இலங்கைச் சமூகத்தின் சகல பிரிவினரதும் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் தேவையாகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.