கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகல்; இலங்கையில் ஒரு புதிய தொடக்கம்
பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க 2024 செப்டெம்பர் 23ஆம் திகதி பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அது அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்களில் ஒரு திடீர் நகர்வை அடையாளப்படுத்துகிறது. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வசதிபடைத்த ஒரு சிறுபான்மைப் பிரிவினரிடம் இருந்து அதிகாரத் தளங்கள் உயர் வர்க்கத்தவர்கள் அல்லாத சமூக சக்திகளின் கூட்டணி ஒன்றுக்கு நகர்ந்திருக்கிறது.
1948ஆம் ஆண்டில் காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரமடைந்த நாளில் இருந்து இலங்கையின் ஜனநாயகம் அரசியல் அதிகாரத்தில் உயர்வர்க்கத்தவர்களின் முறிவடையாத தொடர்ச்சியை உத்தரவாதம் செய்திருந்தது என்றால், இப்போது அது கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகலை தோற்றுவித்திருக்கிறது; அது ஜனநாயகமும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்கள் அவ்வப்போது தோற்றுவிக்கக்கூடிய ஒரு வியத்தகு தருணமாகும்.
குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அமைதியான – இரத்தம் சிந்தாத அதிகார மாற்றத்தையும் குறித்து நிற்கிறது. சுமார் ஏழு தசாப்தங்களாக வசதிபடைத்த சமூக வர்க்கங்களின் பிறப்புரிமையாக நிலைத்திருந்த ஊழல்தனமானதும் நாட்பட்டுப் போனதுமான அரசாங்க முறைமை ஒன்றை முழுவதுமாய் மாற்றியமைப்பதற்கான வாக்குறுதியுடன் புதிய ஜனாதிபதி தனது மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார். ஜனநாயகத்தின் ஊடாக நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் மீதான வர்க்க ஏகபோகம் பொதுமக்களினாலேயே இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது.
நிலைமாற்றமும் அரசியல் எழுச்சியும்
இலங்கையின் புதிய ஜனாதிபதி தலைமை தாங்குகின்ற அரசியல் இயக்கமான தேசிய மக்கள் சக்தி ஒரு குறுகிய ஆனால் உருநிலைமாற்ற வரலாற்றைக் கொண்டது. ஒரு மிதவாதமானதும் மத்திய சீர்திருத்தப் போக்குடையதுமான கோட்பாட்டுடன் ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தேர்தல் முன்னணியாக தேசிய மக்கள் சக்தி 2019ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. அந்த வருடம் அதன் ஜனாதிபதி வேட்மாளராக திசாநாயக்க களமிறங்கினார்.
உலகம் பூராவும் புதிய இடதுசாரி இயக்கங்களின் காலப்பகுதியாக விளங்கிய 1960களில் ஜே.வி.பி. அமைக்கப்பட்டது. புரட்சிகர சோசலிசத்தின் தெற்காசிய வடிவம் ஒன்றை நிறுவுவதற்கான ஆயுதப்போராட்டத்தில் பற்றுறுதி கொண்ட ஒரு தலைமறைவு இடதுசாரித் தீவிரவாத இயக்கமாக ஜே.வி.பி. வெளிக்கிளம்பியது. தெற்காசியாவின் ஏனைய பாகங்களில் தோன்றிய அதே போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு சமாந்தரமாக ஜே.வி.பி.யின் ஆரம்பக் கோட்பாடும் அரசியல் நிகழ்ச்சித் திட்டமும் மார்க்சியவாதம் மற்றும் மாவோவாதத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருந்தது.
ஜே.வி.பி. முதலில் 1971ஆம் ஆண்டிலும் பிறகு 1987 – 89 காலப்பகுதியிலும் இரு ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்தியது. இறுதி ஆயுதப் போராட்டத்தில் படுபயங்கரமான இழப்புகளுடனான தோல்விக்கு பிறகு ஜே.வி.பி.யின் புதிய தலைவர்களின் தலைமுறை ஒன்று ஆயுதப் போராட்டத்தின் ஊடாக சோசலிசத்தை அடையும் இலக்கைக் கைவிட்டு அந்த இயக்கத்தை ஒரு பாராளுமன்ற அரசியல் கட்சியாக உருநிலை மாற்றம் செய்தனர். தேர்தல் மற்றும் பாராளுமன்ற அரசியலின் ஊடாக சோசலிசத்தை அடையும் குறிக்கோளில் உறுதிப்பாடு கொண்ட இந்த புதிய அணி ஜே.வி.பி.யினரைச் சேர்ந்தவரே திசாநாயக்க.
ஜே.வி.பி யின் ஜனநாயக அரசியல் உருநிலைமாற்றம் பாராளுமன்ற ஆசனங்களைப் பொறுத்தவரை பெரிய வெற்றியைக் கொண்டுவரவில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அது ஒரு சிறிய எதிர்க்கட்சியாகவே இருந்து வந்தது. இரு பிரதான அரசியல் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடனும் ஐக்கிய தேசிய கட்சியுடனும் கூட்டணிகளை அமைத்து ஜே.வி.பி. மேற்கொண்ட பரிசோதனைகள் இலங்கையின் இரு கட்சி ஆதிக்க முறைமையில் ‘ மூன்றாவது சக்தியாக ‘ மாறும் இலக்கை அடைவதற்கு அதற்கு உதவவில்லை. பரந்த சமூக சக்திகளை உள்ளடக்கியதாகவும் கோட்பாட்டுப் பிடிவாதமற்றதாகவும் ஜே.வி.பி.யை மாற்றியமைப்பதற்கு 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை திரும்பத் திரும்ப எதிர்நோக்கப்பட்ட அரசியல் முட்டுக்கட்டையை அகற்றுவதற்கான அதன் தலைமைத்துவத்தின் தந்திரோபாயமாக இருந்தது.
2019 ஜனாதிபதி தேர்தலிலும் 2020 பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி பங்கேற்ற போதிலும் அதனால் மூன்று சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளையும் மூன்று பாராளுமன்ற ஆசனங்களையும் மாத்திரமே கைப்பற்றக்கூடியதாக இருந்தது.
இரு நிகழ்வுப் போக்குகள்
இரு நிகழ்வுப் போக்குகளின் நேரடி விளைவாகவே பாரம்பரிய கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சியையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையும் பலவீனப்படுத்தி ஒரு பிரதான அரசியல் சக்தியாக தேசிய மக்கள் சக்தியினால் துரிதமாக எழுச்சி பெறக்கூடியதாகவும் 2024ஆம் ஆண்டில் வெற்றிகரமான ஆளும் கட்சியாக வரக்கூடியதாகவும் இருந்தது.
முதலாவது , 2020 கொவிட் – 19 பெருந்தொற்றின் விளைவாக தீவிரமடைந்த பொருளாதார நெருக்கடி. இரண்டாவது, 2022ஆம் ஆண்டில் அறகலய அல்லது குடிமக்கள் போராட்ட இயக்கமாக வெடித்த ஆழமான சமூக – அரசியல் நெருக்கடி.
அதேவேளை, கடன் நெருக்கடியைக் கையாளுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் வழிகாட்டலில் 2023ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகள் ரணில் விக்கிரமசிங்கவின் நிருவாகத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் பரந்தளவில் சீற்றத்தையும் சமூக அதிருப்தியையும் தோற்றுவித்தன.
புதிய வரிக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதையும் நலன்புரித் திட்டங்கள் குறைக்கப்பட்டதையும் பணக்காரர்களுக்கும் செல்வச் செழிப்புடைய வர்த்தக வர்க்கத்தினருக்கும் பயனளித்த அதேவேளை வறியவர்களினதும் மத்தியதர வர்க்கங்களினதும் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கிய கொள்கைத் திட்டங்களாக மக்கள் நோக்கினார்கள்.
அதிகரிக்கும் வறுூம, வருமான ஏற்றத்தாழ்வு, இருப்போருக்கும் இல்லாதோருக்கும் இடையிலான அதிகரித்த சமூகப் பிளவு ஆகியவை மக்களின் அரசியல் விசுவாசத்தில் தெளிவான நகர்வைத் தோற்றுவித்தன. அதாவது அவர்கள் பாரம்பரிய உயர்வர்க்க கட்சிகளில் இருந்து தூரவிலகிச் சென்றார்கள்.
இத்தகைய பின்புலத்தில், ஊழல் இல்லாததும் வறியவர்களுக்கு ஆதரவானதுமான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான தேசிய மக்கள் சக்தியின் சீர்திருத்த யோசனைகள் நகரப்புறங்களிலும் கிராமங்களிலும் மக்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன. தேசிய மக்கள் சக்தியும் திசாநாயக்கவும் இரு வருடங்களுக்குள் ஒரு முன்னணி சீர்திருத்த அரசியல் சக்தியாக துரிதமாக வெளிக் கிளம்புவதற்கான இடப்பரப்பு அறகலயவினால் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்தது.
‘முறைமை மாற்றம்’ என்ற வலிமையான சுலோகமும் ஊழலையும் கொடுங்கோன்மை அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சலுகைககள் வழங்கும் போக்கையும் இல்லாதொழிப்பதில் உறுதிப்பாடு கொண்ட புதிய தலைமுறை அரசியல்வாதிகள் வெளிக் கிளம்புவதற்கான வாய்ப்பும் இலங்கையின் அரசியல், அரசியல் கலாசாரம் மற்றும் ஆட்சி நடைமுறைகளை மறுசீரமைப்பதற்கான தேசிய மக்கள் சக்தியின் நிகழ்ச்சித் திட்டத்துடன் கச்சிதமாக பொருந்தி விட்டது. அதனால், திசாநாயக்கவின் வெற்றியை அறகலயவின் அரசியல் பயன் சற்று தாமதமாக வந்த ஒரு நிகழ்வாக பார்க்கமுடியும்.
இலங்கையின் புதிய ஆளும் கட்சியாக வந்திருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பயணமும் முன்னணி எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியின் வலுவடைவும் தற்செயலாக ஒரே சமயத்தில் பொருந்துகின்றன. இலங்கை பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஒருமித்த பிரசன்னமும் தேர்தல் அரசியலும் இலங்கையின் அரசியல் கட்சி முறைமையின் பெரிய ஒரு தோற்ற மாற்றத்துக்கு கட்டியம் கூறுகின்றன.
இலங்கையின் உயர் அரசியல் வர்க்கத்தினரால் தாபிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவை சிறிய எதிர்க்கட்சிகளாக மாத்திரம் இருக்கக் கூடியதாக பெருமளவுக்கு பலவீனப்பட்டுப் போயிருக்கின்றன.
இவ்வாறாக வெளிக்கிளம்பும் இலங்கையின் துருவமய அரசியல் கட்டமைப்பு தேசிய மக்கள் சக்திக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலானதாக தெரிகிறது.மக்கள் ஆதரவைக் கொண்ட பெரிய கட்சியாக இருந்த ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சியானால் ஏற்பட்ட வலதுசாரி கட்சி ஒன்றுக்கான வெற்றிடத்தை ஐக்கிய மக்கள் சக்தி நிரப்புகிறது.
அசாதாரண சவால்கள்
புதிய ஜனாதிபதிக்கு முன்னால் வழமைக்கு மாறான ஒரு தொகுதி சவால்களும் பணிகளும் காத்திருக்கின்றன. பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே இருந்ததால் அவர் பாராளுமன்ற தேர்தலை உரிய காலத்துக்கு முன்கூட்டியே நடத்தவேண்டியது தவிர்க்க முடியாததாகி விட்டது. அவர் காபந்து அமைச்சரவை ஒனறை அமைத்திருக்கிறார். அவரின் தலைமையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக அந்த அமைச்சரவை இருக்கிறது.
தனது அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்கு புதிய ஜனாதிபதிக்கு 113 ஆசனங்களுக்கும் அதிகமான வசதியான பாராளுமன்ற பெருப்பான்மை ஒன்று தேவை. ஜனாதிபதி தேர்தல் அவரின வாக்காளர் தளத்தில் உள்ள முக்கியமான இடைவெளியை தெளிவாக அம்பலப்படுத்தியிருக்கிறது.
தமிழ், முஸ்லிம் சிறுபானமைச் சமூகங்கள் பெருமளவில் வாழும் மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தியின் பிரசன்னம் பலவீனமானதாக இருக்கிறது. திசாநாயக்கவின் வெற்றி பிரதானமாக சிங்கள வாக்காளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பது நிலைவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு விரைவாக உகந்த நடவடிக்கையை வேண்டிநிற்கும் ஒரு பிரச்சினையாகும். தேசிய மக்கள் சக்தியை இனத்துவ அடிப்படையில் பனமுகத்தனமை கொண்டதாக மாற்றுவது அதன் அதன் அரசாங்கத்தை இலங்கையின் இன, கலாசார சமூகங்களை அரவணைக்கும் மாற்றுவதற்கு உதவும் என்கிற அதேவேளை தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மையை உறுதிப்படுத்த வசதியாகவும் இருக்கும்.
இரு பணிகள் புதிய ஜனாதிபதியினதும் அவரது அரசாங்கத்தினதும் உறுதிப்பாட்டையும் ஆற்றல்களையும் பரீட்சித்துப் பார்க்கும். வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்த வேண்டியிருக்கின்ற அதேவேளை துரித வளர்ச்சிப் பாதையில் நாட்டை மீண்டும் வழிநடத்த வேண்டியிருக்கிறது இந்த தடவை இந்த பணியை சமூகநீதியையும் சமத்துவத்தையும் உறுதிசெய்த வண்ணமே செய்ய வேண்டியிருக்கிறது.
இதற்காக முன்னைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிக்கொண்ட சிக்கனத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகும். பாதிக்கப்பட்ட மக்களில் பரந்தளவு பிரிவினரின் போராட்டங்களும் சமூக அதிருப்தியும் மீண்டும் ஏற்படுவதை தடு்க்க இதுவே ஒரே வழி.
“மெய்யான மாற்றம்” ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய புதிய தொடக்கம் ஒன்றையே புதிய ஜனாதிபதியிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள் போன்று தெரிகிறது. நாட்டை ஆளவேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தை செய்ததன் மூலம் புதிய தொடக்கத்தை நோக்கிய திசையில் முதலாவது முக்கியமான அடியை இலங்கை மக்கள் எடுத்திருக்கிறார்கள்.
உயர்சமூக வர்க்கங்களைச் சாராத பிரதிநிதிகள் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மெய்யான மாற்றத்தை வேண்டிநிற்கும் உணர்வுகளை மதித்துச் செயற்படக்கூடிய சிறந்த ஆட்சியாளர்களாகவும் எ சிறந்த ஜனநாயகவாதிகளாகவும் தங்களால் செயற்பட முடியும் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள்.