கலந்தாலோசனை செய்யும் பண்பு இன்றியமையாதது
கலாநிதி ஜெகான் பெரேரா
முக்கியமான தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் அணுகுமுறை எச்சரிக்கையுடனானதாகவும் முன்னைய அரசாங்கம் தீர்மானித்த திசையில் தொடர்வதாகவும் அமைந்திருக்கிறது. சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையையும் அதன் இறுக்கமான நிபந்தனைகளையும் பின்பற்றுவதில் இது தெளிவாகத் தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக தேசிய கடுமையாக கண்டனத்துக்குள்ளான முக்கியமான அதிகாரிகளே பொருளாதாரத்தைக் கையாளுவதற்கு பதவிகளில் தொடருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கடந்த வாரம் ஜெனீவாவில் தீர்மானத்துக்காக முடிவெடுப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தின் வடிவில் வந்த மிகவும் உடனடியான சர்வதேச சவாலை எதிர்கொண்டதிலும் முன்னைய அரசாங்கங்கள் கடைப்பிடித்த எச்சரிக்கையுடனான அதே அணுகுமுறையையே அரசாங்கம் கடைப்பிடித்தது. ஜனாதிபதிகள் கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான அரசாங்கங்கள் கடைப்பிடித்த அதே கொள்கையையே அரசாங்கமும் கடைப்பிடித்த போதிலும் தீர்மானத்தை நிராகரிப்பதில் பெருமளவுக்கு இணக்கப்போக்கான மொழியைப் பயன்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.
முன்னைய அரசாங்கம் அறிமுகப்படுத்திய கொள்கைகளின் பயன்களை இந்த அரசாங்கம் அறுவடை செய்கிறது என்று அதை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்ட முனைகிறார்கள். அதே கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவே முன்னைய அரசாங்கம் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. ஆனால் எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் வரை எச்சரிக்கை தொடரும் சாத்தியம் இருக்கிறது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும் சமூக உறுதிப்பாட்டுக்கும் பயனுடையதாக அமைந்திருக்கிறது. அது குறித்து குதர்க்கம் செய்வது முறையல்ல.
பொருளாதாரம் கத்திமுனையில் இருந்தது என்றும் அரசாங்க மாற்றம் ஒன்று பொருளாதாரத்தை ஒரு எதிர்மறையான நிலைக்குள் மூழ்கடித்து விடக்கூடும் என்றும் நாட்டின் வர்த்தகத் தலைவர்களினாலும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச சமூகத்தினாலும் கணிசமான அக்கறை வெளிப்படுத்தப்பட்டது. தேர்தலுக்கு பிறகு வன்முறை எதுவும் மூளாதிருப்பதை உறுதிசெய்வதற்கு அரசாங்கம் மிகவும் நேர்மறையான நடவடிக்கைகளை எடுத்ததற்கு அதுவே காரணம்.
பாற்சோறு சமைத்து பரிமாறி பட்டாசுகளும் கொளுத்தி பாரம்பரியமாக வெற்றியைக் கொண்டாடுவதைப் போன்று தனது வெற்றையைக் கொண்டாட வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க மக்களிடம் விடுத்த வேண்டுகோளும் அந்த நேர்மறையான நடவடிக்கைகளில் அடங்கும். கடந்த காலத்தில் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்கள் வன்முறைக்கும் அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கும் வழிவகுத்ததுடன் நாட்டின் பெயருக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியது.
ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வெற்றியையும் அதை தொடர்ந்து சம்பாதித்த நற்பெயரையும் அடிப்படையாகக் கொண்டே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றுவதற்கான தந்திரோபாயத்தை அரசாங்கம் வகுக்கிறது. அதிகாரத்தில் இருந்த முதல் இரு மாதங்களிலும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு நேர்மறையான ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பை அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலில் மக்களிடம் கோரும்.
ஜனாதிபதி தேர்தலில் அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்த 42 சதவீதமான வாக்காளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் ஒரு எதிர்ப்பு வாக்கை பதிவு செய்வதற்கே அவரை ஆதரித்தார்கள். பாரம்பரிய வழியில் வாக்களிப்பதில் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டார்கள். அபிவிருத்திக் கொள்கை அல்லது ஊழல் ஒழிப்பு தொடர்பில் புதிதாக எந்த திட்டத்தையும் முன்வைக்காதவர்கள் என்று தாங்கள் கண்டுகொண்ட மற்றைய வேட்பாளர்களை வேட்பாளர்களை மக்கள் நிராகரித்தார்கள். இந்த தடவை பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் மக்கள் நேர்மறையான வாக்கொன்றை அளிப்பார்கள் என்று அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மனங்கள் சந்தித்தல்
இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஜனாதிபதி பெரும்பான்மையான வாக்குகளைப் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜே வி.பி. ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் அபிலாசைகளை ஆதரிக்கவில்லை. சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கைகளின் விளைவாக இலங்கையின் ஐக்கியத்துக்கும் சுயாதிபத்தியத்துக்கும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்ற பெரும்பான்மைச் சமூகத்தின் பொதுவான கருத்தையே ஜே வி.பி.யும் கொண்டிருந்தது.
இந்த பழைய மனப்போக்கு செய்த பாதகத்தை ஜனாதிபதி தேர்தலின்போது ஜனாதிபதி திசாநாயக்க ஏற்றுக்கொண்டார். கடந்த காலத்தில் சிறுபான்மைச் சமூகங்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதை தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிக்காட்டும் வகையிலான உரைகளை அவர் நிகழ்த்தினார். சிறுபானமைச் சமூகங்களின் வேதனைகளைப் புரிந்துகொண்டவராக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு உண்மையான முயற்சிகளை எடுக்கப்போவதாக அவர் சூளுரைத்தார்.
புதிய அரசாங்கம் முதல் மூன்று வாரங்களிலும் முன்னெடுத்த நடவடிக்கைகள் தேசிய மக்கள் சக்தி தாங்கள் முன்னர் அறிந்திருந்த ஜே வி.பி. அல்ல என்ற என்ற ஒரு நம்பிக்கையை சிறுபான்மைச் சமூகங்களுக்கு கொடுத்திருக்கிறது போன்று தெரிகிறது. அண்மையில் கிழக்கு மாகாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது தமிழ், முஸ்லிம் சிவில் சமூகம், மதத் தலைவர்கள் மற்றும் கல்விமான்களுடன் நடத்திய சந்திப்புகள் நாடு முழுவதையும் தழுவியதாக மனங்களின் சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகிறது என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தின.
ஒரு மாற்றத்துக்கும் புதிய முகங்களுக்குமான விருப்பம் சகல பிரிவினரிடமும் காணப்படுகிறது. வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பாரம்பரிய கட்சிகள் மீது மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தாங்கள் தெரிவுசெய்த அரசியல்வாதிகள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தேவையான சேவையைச் செய்யவில்லை என்று அந்த மக்கள் பெரும் அதிருப்தியடைந்திருக்கிறார்கள்.
இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தேசிய மக்கள் சக்திக்கு நேர்நிகரான அரசியல் சக்தி தற்போது இல்லை. அதனால் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் செய்வதைப் போன்று சிறுபானமைச் சமூகங்களைச் சேர்ந்த பலரும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்க விரும்பக்கூடிய சாத்தியம் இருக்கிறது.
கடந்த மூன்று வாரங்களில் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடியதாகவோ அல்லது பிரச்சினைகளை தோற்றுவிக்கக்கூடியதாகவோ சர்ச்சைக்குரிய எதுவும் இடம்பெறவில்லை என்பது புதிய கட்சியையும் புதிய தலைவர்களையும் தெரிவுசெய்வதற்கான அவர்களின் விருப்பத்தை வலுப்படுத்தும் எனலாம். கடந்த ஏழு தசாப்தங்களாக மக்களுக்கு பயனுடைய சேவைகளைச் செய்யாதவர்களை நிராகரித்து புதியவர்களை வரவேற்கும் மனநிலை மக்களுக்கு ஏற்படிருக்கிறது.
ஆனால், வேட்பாளர்களை தெரிவு செய்வதில் தேசிய மக்கள் சக்தி பெருளவுக்கு யதார்த்தபூர்வமாக செயற்பட்டிருக்க முடியும். கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்ற அதேவேளை, வாக்காளர்களுக்கு நன்கு தெரியாதவர்கள் மக்கள் நம்பிக்கை வைக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று கருதமுடியாது.
மட்டுப்பட்டுத்தப்பட்ட கலந்தாலோசனை
கிழக்கில் வெளிப்படுத்தப்பட்ட இந்த அக்கறைகள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். தேர்தலுக்காக தேசிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் மடடுப்படுத்தப்பட்ட அளவில் கலந்தாலோசனைகள் இடம்பெற்றிருந்தன என்று தெரிகிறது. சகல தரப்பினரையும் உள்வாங்கியதாக இல்லாமல் ஒரு பிரத்தியேகமான முறையில் கட்சியின் உயர்மட்டத்தினால் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள் போன்று தோன்றுகிறது.
பாரம்பரியமாக ஜே.வி.பி. வாக்குகளைப் பெறுகின்ற – உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற பகுதிகளில் இது ஒரு பிரச்சினையாக இல்லாமல் இருக்கலாம். அந்த உறுப்பினர்கள் அந்த பகுதிகளின் மக்கள் அறிவார்கள். ஆனால் இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஜே.வி.பி. உறுப்பினர்களை பெரிதாக தெரியாது. அதனால் மக்களுக்கு நன்கு சேவை செய்து அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கு பரந்தளவில் சிவில் சமூகத்துடன் தீவிரமான கலந்தாலோசனைச் செயன்முறை தேவைப்பட்டிருக்கலாம்.
மேற்கூறப்பட்டது அரசாங்கம் அவசியமாக கையாளவேண்டிய முதலாவது பிரச்சினை என்றால், இன, மத சிறுபான்மைச் சமூகங்களினதும் சர்வதேச சமூகத்தினதும் உறுதியான நம்பிக்கையாக இருந்துவரும் அதிகாரப் பரவலாக்கம் மீதான பற்றுறுதியை வெளிக்காட்ட வேண்டியது இரண்டாவது பிரச்சினையாகும். அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும், உரைகளிலும் உறுதியளித்தார்.
எந்தவொரு ஜனநாயகத்திலும் பெரும்பான்மையே ஆட்சி செய்கிறது. இன, மத அடையாளங்கள் என்று வருகின்றபோது அங்கு தேர்தல் முறைமையினால் சமத்துவமானதாக்க முடியாத நிரந்தரமான பெரும்பான்மையினரும் நிரந்தரமான சிறுபான்மையினரும் இருப்பார்கள். உள்ளூர் பெரும்பான்மையினரால் தெரிவு செய்யப்படுகின்ற மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்களை பரவலாக்குவதன் மூலமாக மாத்திரமே தங்களது அபிலாசைகள் மதிக்கப்பட்டு அரவணைக்கப்படுவதாக சிறுபான்மையினரை உணரச்செய்யமுடியும்.
இது விடயத்தில் மூன்று கட்டச் செயற்றிட்டம் ஒன்று கிழக்கில் உள்ள சிவில் சமூகத்தினால் சிபாரிசு செய்யப்படுகிறது. முதலாவதாக, மாகாணங்களுக்கான மட்டுப்படுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் என்றாலும், மாகாண சபை தேர்தல்களை தாமதமின்றி நடத்துவதன் மூலமாக 13வது திருத்தத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவது. இரண்டாவதாக, அரசியலமைப்பில் இருக்கின்ற போதிலும் கூட இன்னமும் பரவலாக்கம் செய்யப்படாமல் இருக்கின்ற அதிகாரங்களையும் திட்டமிட்ட முறையில் அல்லது புறக்கணிப்பு மனப்பான்மையுடன் மாகாணங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களையும் மீளக்கையளிப்பது.
மூன்றாவதாக, முன்னெடுக்கப் போவதாக அரசாங்கம் உறுதியளித்திருக்கும் விரிவான அரசியலமைப்புச் சீர்திருத்த செயற்திட்டத்தில் அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை மேம்படுத்துவது.
வேறுபட்ட பிராந்தியங்கள் வேறுபட்ட பொருளாதாரத் தேவைகளையும் வாய்ப்புக்களையும் கொண்டிருக்கின்றன என்பதை அங்கீகரித்து அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு புறம்பாக அதிகாரப் பரவலாக்க கோட்பாட்டை பொறுத்தவரை நோர்வேயின் பிரபலமான சமாதான கல்விமான் பேராசிரியர் ஜோஹான் கல்ருங் கூறிய அறிவார்ந்த வார்த்தைகளை கருத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும்.
“எமக்கு சொந்தமானவர்கள் சற்று இரக்கமில்லாதவர்களாக இருந்தாலும் கூட அவர்களால் ஆளப்படுவதையே நாம் விரும்புகிறோம்” என்று அவர் விடுதலைப் புலிகளுடனான போர்க்காலத்தில் இலங்கையில் கூறினார்.