புதிதாய் மலர்ந்துள்ள சீன – இந்திய உறவு
லோகன் பரமசாமி
மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டான பிறிக்ஸ் நாடுகள் சர்வதேச அரசியலில் தம்மை பலம் கொண்ட ஒருதரப்பாக காட்டிக்கொள்வதில் நடிக்கின்றனவா? அல்லது உண்மையாகவே தமக்குள்ளே காணப்படும் அனைத்து வேற்றுமைகளையும் மறந்து மேலை நாடுகளின் பலத்தை முறியடிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு செயற்படுகின்றனவா என்பதை அறிவதில் சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் மிகவும் அதிகமான கரிசனையைக் காண்பித்து வருகின்றனர்.
பிரேசில் ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள், மேலும் சில வலிமை வாய்ந்த, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து கொண்டு சர்வதேச அரங்கை தம் கைவசம் வைத்து கொள்வதில் மிகவேகமாக நகர்ந்து வருகின்றன.
அதேவேளை இந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நான்கு வருடகால பதற்ற நிலையை தணித்துக் கொள்வதற்கு ஏற்ற வகையிலானதொரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக இரு தரப்பும் அறிவித்துள்ளன.
இவ்வொப்பந்தம் குறித்த அறிக்கை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இவ்வாரம் இடம்பெறவிருக்கும் பிறிக்ஸ் மாநாட்டிற்கு செல்வதற்கு சற்று முன்பாக வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது ரஷ்யாவில் வோல்கா நதிக்கரையில் இருக்கும் கஸான் நகரில் இடம் பெறும் பிறிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஷி ஜிங்பிங்னும் கடந்த புதன்கிழமை சந்தித்தார்கள்.
இவ்விரு நாடுகளின் தலைவர்களும் அருகருகே புதிய அங்கத்தவர்களுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். தமக்குள்ளே இருக்கும் பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வு கண்டு விட்ட நிலையை சர்வதேச நாடுகளுக்கு எடுத்து சொல்லும் வகையில் இந்த அறிக்கை வெளியிடபட்டதா என்றொரு கேள்வி எழுகின்றது.
ஆசியாவின் இரண்டு மிகப்பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் 2020ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் லடாக்; இடம்பெற்ற கைகலப்பு யுத்தத்தில் இருபது இந்திய இராணுவ வீரர்களும் நான்கு சீன இராணுவத்தினரும் கொல்லபட்டதாக அறிவிக்கபட்டது. அன்றிலிருந்து இருதரப்பு இராணுவமும் முறுகல் நிலையிலேயே இருந்தன.
இருந்தபோதிலும் பதற்ற நிலையை தணித்துக் கொள்ளும் வகையில் இருதரப்பிலும் இராஜதந்திர மட்டத்திலும் இராணுவ மட்டத்திலும் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வந்தன. கடந்த வாரம் நிலையெடுத்திருக்கும் இருதரப்பு இராணுவத்தினரையும் மீளப்பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தம் நிறைவடைந்து விட்டதாக தொலைகாட்சிக்கு பேட்டி அளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து இந்தியத்தரப்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிசிறியின் அறிக்கையால் இது உறுதி செய்யபட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு எழுந்த பதற்றநிலைக்கான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதுடன் நிலைமைகள் நடைமுறைக்கு சாதகமான வகையில் நகர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடியும், ஜனாதிபதி ஷியும் தமது சந்திப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர். மேலதிக திட்டங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நகர்வுகள் குறித்து சரியான தகவல்கள் எதுவும் இன்னமும் வெளியிடப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான துருப்புகளும், தாக்குதல் கலன்களும் விமானங்களும் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளதாக்கு கைகலப்பு யுத்தத்தை தொடர்ந்து நிறுத்தி வைக்கபட்டிருந்தன. இவற்றை மீளப்பெற்றுக்கொள்வதில் இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞையைக் காண்பித்துள்ளது.
இந்தியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான சிந்தனையாளர்களும் இதனையொரு வரவேற்கத்தக்க விவகாரமாகவே காண்கின்றனர்.
அதேவேளை சீனத் தரப்பில், இவ்வொப்பந்தம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் குறிப்பிடுகையில், ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறை படுத்தப்பட வேண்டும் என்றார்.
இதனையே படைகளைப் பின் வாங்கிக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான நிபுணர்கள் குழு புதுடில்லியை கேட்டுக் கொள்வதாகவும் கூறபட்டது. இது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் சாதகமாக்குவதற்கும் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்வதற்குமான முன்னேற்றகரமானதொரு நகர்வாகக் கூறப்பட்டுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தனது ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அண்மைய காலங்களில் இந்தியாவும் சீனாவும் எல்லை விவகாரங்கள் குறித்து இராஜதந்திர ரீதியாகவும் இராணுவ தொடர்புகள் ஊடாகவும் நாடாத்திய பேச்ச வார்த்தைகளின் பயனாக ஒரு தீர்வை கண்டுள்ளன என்றார்.
அத்துடன், இந்தியாவுடன் தீர்க்கமான மேலதிக வளர்ச்சியைக் காண்பதிலும் தீர்வை முழு மனதுடன் நடைமுறைப் படுத்தவதிலும் சீனத் தரப்பு உறுதியுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
சீனச் சிந்தனைத் தரப்புக்களும் இது நிச்சயமாக சீன இந்திய உறவை மேம்படுத்தி கொள்வதற்கான பாரியதொரு முன்னேற்றமே எனக் கூறியுள்ளனர்.
அதேவேளை சீனத்தரப்பில் கூறபட்டு வரும் பத்திரிகை தகவல்களின் படி கடந்த காலங்களில் இடம்பெற்ற சீன இந்திய உறவில் எற்பட்ட முறிவு ஒரு பொருளாதார நலன்களுக்கான பின்னடைவாகவே பார்க்கபடுகிறது. இது இந்தியாவில் சீன எதிர்ப்புவாதத்தையும் தேசியவாத வசைப்பேச்சுக்களையும் ஊக்குவித்தாகவும் இந்தியாவில் இயங்கும் சீன நிறுவனங்களுக்கு எதிரான விரோத நடவடிக்கைகளையும் சீன கம்பனிகளை கடுமையான விசாரணைகளுக்கு உட்படுத்தம் நிலையையும் ஏற்படுத்தியது.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பையும் நிறுத்தி வைத்திருந்ததாக சீனத் தரப்பால் கருதப்படுகிறது. இந்தியாவின் முதன்மை இறக்குமதி பொருட்களைக் கொண்ட நாடுகளில் சீனா உள்ளது.
சுமார் 56.29பில்லியன் டொலர்கள் பெறுமதியான பொருட்கள் இவ்வருடம் ஏப்பிரல் மாத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை சீனாவிடமிருந்து இறக்குமதியாகி உள்ளது. இது சீனாவுக்கு இந்திய மிகப்பெரும் சந்தைப்படுத்தல் தளம் என்பதையே காட்டிநிற்கின்றது.
சர்வதேச வர்த்தகத்தில் இந்தியா சீனாவை பதிலீடு செய்வதற்கான முதன்மை உற்பத்தி நாடாக தன்னை ஆக்கி கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆனால் இதற்கு இந்தியா தன்னையொரு சீனாவுடனான நட்பு நாடாக வைத்திருப்பதன் ஊடாகவே முடியும் என்பது சீனாவின் பார்வையாக உள்ளது.
ஆனால் அமெரிக்க ஆய்வாளர்களின் பார்வை சீன, இந்திய தரப்புகளின் பார்வையில் இருந்த முற்றிலும் வேறுபட்டதொரு விடயமாக உள்ளது. நாடுகளின் வெளியுறவுத்துறை குறித்த ஆய்வுகளை வெளியிடும் புகழ் பெற்ற அமெரிக்க சஞ்சிகையான ‘பொரின்பொலிசியில்’ செல்வாக்கு மிக்க ஆய்வாளர் மைக்கல் கூகெல்மன் என்பவர், “ஒரு பாதுகாப்பு ரோந்துகளை தவிர்த்துக் கொள்ளும் ஒப்பந்தம் வர்த்தக நலன்களை கொண்டு வரலாம். ஆனால் அதற்காக ஒட்டுமொத்த சீன, இந்திய உறவின் நெகிழ்ச்சித் தன்மையாக அதனைக் கண்டு விட முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கும் மேலாக சீன, இந்திய எல்லைகளில் இராணுவத்தினர் மத்தியில் நம்பிக்கையீனம் மிகவும் வலுப்பெற்றதாகவே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சீனா தெற்காசிய நாடுகள் மத்தியல் தனது செல்வாக்கை முன்நகர்த்தி வருகிறது. அத்துடன் இந்துசமுத்திரத்திலும் மிகவும் கசப்பான போட்டிநிலை உள்ளது. இவை அனைத்தம் தொடர்ச்சியாக இருந்த வண்ணமே உள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக அமெரிக்கத் தரப்பு ஆசியப்பிராந்தியத்தில் சமாதான சூழல் ஏற்படும் என்பதில் அதிக நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் பிறிக்ஸ் நாடுகளின் கூட்டு மேலை நாடுகளுக்கு சாவாலாக உண்மையுடனும் வெளிப்படைத் தன்மையுடனும் மேலும் இறுக்கமான சமாதான முன்னகர்வுகளை எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருப்பதையே இருப்பதையே வெளிப்படுத்தி நிற்கிறது.