;
Refresh

This website www.athirady.com/tamil-news/essays/1740438.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

மக்கள் ஆணையும் அனுரவின் வெற்றியும்

0

மொஹமட் பாதுஷா

இலங்கையின் அரசியலில் முன்னொருபோதும் இல்லாத அபூர்வம் ஒன்று நடந்திருக்கின்றது. எந்தவிதமான குடும்ப அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசியலுக்கு வந்த அனுரகுமாரதி சாநாயக்க, இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார்.

வட மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் பிரதேசத்தில் வறிய குடும்பத்தில் 24.11.1968இல் கூலித் தொழிலாளியின் மகனாக அனுரகுமார திசாநாயக்க பிறந்தார்.

1997ஆம் ஆண்டு ஜே.வி.பி. ஊடாக செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைந்து 2000ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகவும் இடையில் சில காலம் அமைச்சராகவும் பதவி வகித்த திசாநாயக்க முதியன்ஸசலாகே அனுரகுமார திசாநாயக்க இந்தத் தேர்தலில் ஒரு ஜனாதிபதியையும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரையும் தோற்கடித்திருக்கின்றார்.

இந்த வெற்றியை உலகமே வியந்து பார்க்கின்றது. பலரும் கொண்டாடுகின்றனர். இலங்கையில் பல்வேறு விடயப் பரப்புகளில் நல்ல மாற்றத்தை வேண்டி நின்ற மக்களுக்கு இது நல்லதொரு அறிகுறியாகத் தெரிகின்றது.

அனுர ஜனாதிபதியாகி விட்டார் என்பதற்காக, எல்லாம் மாறி விடும், பிரச்சினைகள் உடனே தீர்ந்துவிடும் என்று கூற முடியாது எனினும், இது ஒரு மாற்றத்தின் ஆரம்பமாக அமையும் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

தபால்மூல வாக்குகள் வெளியாகிய வேளையிலேயே அனுரவின் வெற்றியை ஊகிக்கக் கூடியதாக இருந்த போதிலும், பிறகு ஒரு கட்டத்தில் அனுரவை சஜித் எட்டிப் பிடிப்பாரோ என்று எண்ணுமளவுக்கு பெறுபேறுகள் வெளியாகின.

ஆனால், 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாமையால் ஏனைய 36 பேரின் விருப்பு வாக்குகளும் எண்ணப்பட்டன.

அதன்படி, இதுவரை தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிகளுள் மிகக் குறைந்த சதவீத (43) வாக்குகளுடன், தன்னோடு போட்டியிட்டு 34 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்த சஜித் பிரேமதாசவை விட 12 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார். இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்ட ரணில் விக்ரமசிங்க 23. இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில், மிக நாகரிகமான முறையில் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறியிருக்கின்றார்.

யார் என்ன கூறினாலும் ஜே.வி.பிக்கு ஒரு கறை படிந்த வரலாறு இருக்கின்றது. இப்படியான கசப்பான கடந்த கால நிகழ்வுகள் இலங்கையின் எல்லா பெருந் தேசிய அரசியல் கட்சிகளுக்கும் இருக்கின்றன.

ஆனால், பழைய புராணங்களை எல்லாம் ஒருபுறம் வைத்து விட்டே மக்கள் இந்த மாற்றத்திற்காக தம்மைத் தயார்ப் படுத்திக் கொண்டனர் எனலாம்.
ஒரு காலத்தில் மூன்றாவது பெரிய அரசியல் கட்சியாகக் கோலோச்சிய
ஜே.வி.பி. பின்னர் சரிவைச் சந்தித்தது.

எம்.பிக்கள் குறைந்தனர். ஆனால், அனுரகுமார திசாநாயக்க தலைவரான பிறகு அது ஒரு புது வழியில் பயணிக்க ஆரம்பித்தது.

அதுதான் இன்று இந்த இடத்திற்கு அழைத்து வந்திருக்கின்றது.
அனுரகுமார திசாநாயக்க ஓர் அமைச்சராக இருந்ததுதான் அவர் இது வரை வகித்த உயர் பதவி. அரசியல் பின்புலமும் இல்லை. பணக்காரரும் இல்லை.

ஆனாலும், மக்கள் அதிலும் குறிப்பாகப் பெரும்பான்மையான சிங்கள மக்களும் கணிசமான முஸ்லிம், தமிழ் மக்களும் அவரை நம்பி வாக்களித்திருக்கிறார்கள்.

இந்த நாட்டைப் பொருளாதார வீழ்ச்சி, அரசியல் நெருக்கடியில் இருந்து மீட்டவர் ரணில் விக்ரமசிங்க என்பதை யாரும் மறக்கமுடியாது. அனுர, சஜித் உட்பட பலரும் தயங்கிய நேரத்தில் நாட்டை பொறுப்பேற்று, மீட்டவர் என்றவகையில் இலங்கைச் சரித்திரத்தில் ரணில் நன்றிக்குரியவராக இருப்பார்.

அப்பேர்ப்பட்ட முதுபெரும் அரசியல் அனுபவம் கொண்ட ரணில் விக்ரமசிங்கவையும் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித்தையும் விட அதிக வாக்குகள் பெறுவது என்பது சாதாரணமாக நடந்து விடக் கூடிய மாற்றமல்ல என்பது தெளிவு.

இதற்காக திட்டமிட்ட ஒரு பணியை அனுரகுமார தலைமையிலான அணி செய்தது. அனுரகுமார என்ற சாதாரண மக்களாலும் கவரப்படக் கூடிய மனிதர் ஒருவர் இல்லாமல் போயிருந்தால் ஜே.வி.பிக்கு இந்த வெற்றி ஒரு போதும் கிடைத்திருக்காது.

அரகலயவை தோற்றுவித்ததும், அதனால் பயனடைந்ததும் யாராக இருந்தாலும் கூட,பின்னர் ஜே.வி.பி. அதனை நன்கு பயன்படுத்திக் கொண்டது.

ஜே.வி.பி. என்ற கட்சியை என்.பி.பி. என்று மாற்றியது மட்டுமன்றி, ஒரு திட்டமிட்ட அரசியல் நகர்வையும் மேற்கொண்டது. இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தூதுவர்கள் அனுரவை சந்திக்கத் தொடங்கியது முக்கியத்திருப்பங்களாகும்.

ஓர் அரசியல்வாதி செய்து காட்டியிருக்க வேண்டும். அவருக்கு அனுபவம் இல்லாமல் எப்படிப் பொறுப்பைக் கொடுக்கலாம் என்ற கேள்விகள் எழுந்தது இயல்பானதே.

ஆனால், ஒரு மக்கள் பிரதிநிதி தொடராகப் பாராளுமன்றத்தில் கச்சிதமான முறையில் உரையாற்றுவதும், மேடைகளில் கூப்பாடு போடாமல் பேச வேண்டிய விடயத்தை மட்டும் தெளிவாகப் பேசுவதும் எந்தளவுக்கு மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதற்கு புதிய ஜனாதிபதி அனுரவே நல்ல உதாரணமாகும்.

அவர் வெற்றிகரமான ஜனாதிபதியாக இருப்பாரா என்பது ஒரு புறமிருக்க, ஒரு சாதாரண அயல் வீட்டுக்காரரைப் போன்ற தோற்றமும், நேர்த்தியான பேச்சும், வித்தியாசமான அணுகுமுறையும் மக்களைக் கவர்ந்தன. கட்டமைக்கப்பட்ட இயக்கச் செயற்பாடுகளும் நவீன ஊடகப் பிரசாரங்களும்; ‘ரட்ட அனுரட்ட’ என்ற பாடலும் இந்த வெற்றியில் கணிசமான
பங்கை வகிக்கின்றன.

ரணிலுக்குப் பின்னால் அமெரிக்காவும். சுஜித்திற்கு பின்னால் இந்தியாவும் இருந்தன. இதேவேளை, அனுரகுமராவின் பின்னால் சீனா இருந்ததாகக் கூறப்பட்டது. இப்போது இந்தியத் தூதுவர் ஓடோடி வந்து வாழ்த்துக் கூறி ‘நாமும் உங்களோடுதான்’ என குறிப்புணர்த்தியதைப் போல இனி மற்ற நாடுகளும் உறவு கொண்டாடும்.

ஆனால், இந்த வெற்றி என்பது வெளிச் சக்திகளால் உருவானதாகக் குறிப்பிடமுடியாது. மாறாக, நமது பாரம்பரிய ஆட்சியாளர்களால் மக்களுக்கு ஏற்பட்டிருந்த மனவெறுப்பு, அனுரவின் தொடரான பேச்சுக்கள் மக்களுக்கு இவருக்கும் ஒருமுறை கொடுத்துப் பார்த்தால் என்ன என்ற கேள்வியை எழுப்பியது.

அனுர ஜனாதிபதியானதற்கு இப்படிப் பல காரணங்களைக் கூறலாம்.
அதேநேரம் இத்தனை அனுபவங்களைக் கொண்டிருந்தது மட்டுமன்றி, நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டவருமான ரணில் விக்ரமசிங்க ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை நம்பிக்கையை கொண்டிருந்தார். 2022ஆம் ஆண்டு பட்ட கஷ்டங்களை நினைத்து மக்கள் கடைசித் தருணத்தில் தமக்கு வாக்களிப்பார்கள் என்று அவர் நினைத்தது நடக்கவில்லை.

ரணில் விக்ரமசிங்க இதற்கு முன்னரான ஜனாதிபதித் தேர்தல்களில் குறைந்தளவான மக்கள் ஆதரவையே பெற்றிருந்தார். இந்தமுறை அந்த ஆதரவு அதிகரிப்பதற்கு அவரது கடந்த இரு வருட ஆளுகையே காரணமெனலாம்.

இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சி என்ற கட்சி அப்படியே தூர்ந்து போய் விட்டது. மொட்டு அரசாங்கத்தின் பல ஊழல் வாதிகள், மக்களால் விமர்சிக்கப்பட்ட அரசியல்வாதிகள் ரணிலின் ஆட்சியில் இருந்தனர். இவர்களை வைத்துக் கொண்டு எப்படி மாற்றத்தைக் கொண்டு வருவது என்ற எண்ணம் மக்கள் ஏற்பட்டிருக்கும்.

அதேபோல்,கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தபோதும், இந்த முறை அது குறைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு நாட்டை அவர் பொறுப்பேற்கவில்லை என்பதும் அவருடனும் ஊழல்வாதிகள் இனவாதிகள் இருக்கின்றமையும் இதில் செல்வாக்குச் செலுத்தியிருக்கும். இவரது வாக்கு வங்கியில் ஒரு பகுதியையே ரணில் தன்வசப்படுத்திக் கொண்டார் எனலாம்.

அத்துடன். இரு முஸ்லிம் கட்சிகளும் சுமந்திரன் அணியும் ஆதரவளித்தமை கணிசமான வாக்குகளை சஜித்திற்கு பெற்றுக் கொடுத்ததை மறுக்க முடியாது. இல்லாவிட்டால் இதைவிட அவர் தோல்வி கண்டிருப்பார். ஆனால், மறுபக்கத்தில் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு சிங்கள மக்களிடையே பாதகமான கண்ணோட்டத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.

இத்தேர்தலில், தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் பல கூறுகளாகத் துண்டாடப்பட்ட சூழலில், அனுர அணியின் திட்டமிட்ட நடவடிக்கை, பிரசாரங்களால் சிங்கள மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் கொத்தாகத் திசைக்காட்டிக்குக் கிடைத்ததால் அனுரகுமார ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடியிருக்கின்றார். ‘நாடு அனுரவுக்கு’ என்ற கோஷம் நிரூபணமாகி விட்டது.

ஆகவே, அவருக்கு வாக்களிக்காமல் விட்ட 56 சதவீத மக்களுக்கும் கூட அவரே ஜனாதிபதி. எனவே, இனி ஜனாதிபதி அனுர நாட்டுக்கு என்ன செய்யப் போகின்றார் என்பதையே குறிப்பாக மூவின மக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.