சமூகத்துக்குள் ஊடுருவும் சீனா
ஹரிகரன்
இலங்கையில் ஏற்பட்டுள்ள, ஆட்சி மாற்றத்தை அடுத்து, சீனா தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தவும், விரைவுபடுத்தவும் ஆரம்பித்திருக்கிறது.
மார்க்சிஸ்ட் ஜனாதிபதி என மேற்குலக ஊடகங்களால் வர்ணிக்கப்பட்ட அநுரகுமார திசாநாயக்க, பதவிக்கு வந்த பின்னர், இலங்கை அரசாங்கத்துடன் சீனாவின் ஈடுபாடு அதிகரித்திருக்கிறது.
அது வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2025 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான சீருடைத் துணி முழுவதையும் சீனாவே கொடையாக வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்னர், இலங்கை மாணவர்களுக்கு சீருடைத் துணிகளை வழங்குவதற்கு சீனா முன்வந்தது.
2023ஆம் ஆண்டு, 70 சதவீதமான சீருடைத் துணியை சீனா கொடையாக வழங்கியது. எஞ்சிய 30 சதவீதத்திற்கு இலங்கை அரசாங்கம் பணத்தை செலுத்தியது.
2024 ஆம் ஆண்டு 80 சதவீத சீருடை துணி சீனாவினால் கொடையாக வழங்கப்பட்டது. எஞ்சிய 20 சதவீதமும் இலங்கை அரசாங்கத்தினால் பணம் கொடுத்து தீர்க்கப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் இருந்தபோது- இலங்கை பொருளாதார நெருக்கடியின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது கூட, சீனா 100 சதவீத சீருடை துணியை மாணவர்களுக்கு கொடையாக வழங்குவதற்கு முன் வந்திருக்கவில்லை.
கொடுத்ததாகவும் இருக்க வேண்டும், அதே வேளை- முழுமையாக கொடுக்காமலும் இருக்க வேண்டும் என்ற தொனியில் சீனா நடந்து கொண்டது.
70 சதவீத சீருடைத் துணியை கொடையாக வழங்கிய சீனாவுக்கு எஞ்சிய 30 சதவீதத்தையோ அடுத்தமுறை 20 சதவீதத்தையோ கொடையாக வழங்குவது ஒன்றும் சிக்கலானதாக இருந்திருக்காது.
ஆனாலும் அப்போது சீனா ஒரு பகுதிக்கான கொடுப்பனவை இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டது.
அநுரகுமார திசாநாயக்க பதவிக்கு வந்த பின்னர், சீன அரசாங்கம் 100 சதவீத சீருடை துணியையும் கொடையாகவே வழங்குவதற்கு தீர்மானித்திருக்கிறது.
இது இலங்கைக்கு உதவ வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவா அல்லது அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவா என்பது கேள்வி.
ஏனென்றால், இலங்கையில் அடுத்தடுத்து சமூக நலத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, சீனா விரைவாக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது.
அவற்றில் ஒன்று சீருடை துணி வழங்குதல்.
இன்னொன்று வீடமைப்பு திட்டம்.
குறைந்த, வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சீனா 1996 வீடுகளை அமைத்துக் கொடுக்கப் போகிறது.
இந்த திட்டத்திற்கு கடந்த வாரம் அமைச்சரவை அனுமதி அளித்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த வீடமைப்பு திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அப்போது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியில் இருந்தார்.அவரும் சீனாவுக்கு சார்பான ஒருவர். சீனா விரும்பிய ஒருவர்.
அவரை பலப்படுத்தும் வகையில் அரசாங்கத்திற்கு உதவும் வகையில் தான் சீனா இந்த வீடுகளை அமைத்துக் கொடுக்க முன்வந்தது.
ஆரம்பத்தில் சீனா 2500 வீடுகளை அமைத்துக் கொடுக்கும் என பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த அருந்திக்க பெர்னான்டோ அறிவித்திருந்தார். ஆனால் பின்னர் அந்த எண்ணிக்கை 1996 ஆக குறைந்து போனது.
முதலில் இந்த வீடுகளை அமைப்பதற்காக 200 மில்லியன் டொலர் நிதியை இலங்கை அரசாங்கத்திடம் சீனா வழங்கும் என்று கூறப்பட்டது.
ஆனால் சீனா அதனை இலங்கைக்கு கொடுப்பதற்கு முன்னரே கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமாகி அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
அதற்குப் பிறகு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்த முற்பட்டாலும் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டதே தவிர, விரைவுபடுத்தப்படவில்லை.
ஆனால் அநுரகுமார திசாநாயக்க பதவிக்கு வந்த சில வாரங்களிலேயே இந்த வீடமைப்பு திட்டத்தை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சீனா முன்னெடுத்திருக்கிறது.
இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் இந்த திட்டத்தை முன்னெடுக்கப் போவது இலங்கை அரசாங்கம் அல்ல.
இதில் இலங்கை அரசாங்கத்துக்கு இருக்கின்ற ஒரே பங்கு வீடமைப்பு திட்டத்திற்கு தேவையான நிலத்தை வழங்குவது மாத்திரமே.
சீன அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட எட்டு சீன ஒப்பந்தக்காரர்களிடமிருந்து ஏலங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் திட்டத்திற்கு முழு நிதியுதவி மற்றும் கட்டுமானத்தை மேற்பார்வையிடும்,என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.
மொரட்டுவவில் 575 வீடுகளையும், கொட்டாவவில் 108 வீடுகளையும் நிர்மாணிக்கும் பொறுப்பு, ரயில்வே 25ஆவது பிரிவு குரூப் நிறுவனத்திடமும், தெமட்டகொடவில் 586 வீடுகளையும் மகரகமவில் 112 வீடுகளையும் கட்டும் பணியை சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்திடமும், பேலியகொடவில் 615 வீடுகளை அமைக்கும் பணி சான்ஷி கொன்ஸ்ட்ரக்சன் இன்வெஸ்ட்மெண்ட் குரூப் நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்திடம் இருந்து நிதியை பெற்று இந்த நிறுவனங்களை வீடுகளை அமைத்து கொடுக்கும்.
இந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் சீனாவில் இருந்து கொண்டு வரப்படுவார்கள். பெரும்பாலான மூலப் பொருட்களும் அங்கிருந்தே கொண்டு வரப்படும்.
ஆக இந்தக் கொடை 1996 குடும்பங்களுக்கு வீடுகளை பெற்றுக் கொடுக்குமே தவிர அதனை சார்ந்து உருவாகக் கூடிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவோ வேறு வர்த்தக சாத்தியப்பாடுகளை ஏற்படுத்தவோ மாட்டாது.
உள்நாட்டு தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் உள்ள நிலையில் அவர்கள் வெளிநாடுகளை நோக்கி புலம்பெயர்ந்து வருகின்ற சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சீனாவின் இந்த திட்டத்திற்கு இணங்கி இருக்கிறது.
இவை மாத்திரமன்றி சீனா அடுத்தடுத்து இன்னும் பல உதவித் திட்டங்களை செயற்படுத்துவதற்கு தயாராக கொண்டிருக்கிறது.
அது வடக்கிலும் கூட முன்னெடுக்கப்பட உள்ளது. அதற்காக சீன தூதுவர், விரைவில் வடக்குக்கு பயணம் மேற்கொள்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் கெப்பிட்டிபொல பாடசாலையில் நடந்த மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய சீன தூதுவர் கீ சென்ஹொங், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வலுவான தலைமையின் கீழ், இலங்கை அரசாங்கமும் மக்களும் நிச்சயமாக தன்னம்பிக்கையுடன், பல்வேறு இடர்களையும் சவால்களையும் கடந்து, விரைவாக மீண்டு, பொருளாதாரத்தை புத்துயிர் பெற வைக்க முடியும் என தெரிவித்திருந்தார்.
சர்வதேச நிலைமைகள் எப்படி மாறினாலும், சீனா எப்போதும் இலங்கை மக்களுடன் நிற்கும். இலங்கையின் நம்பகமான நண்பனானவும் நல்ல பங்காளியாகவும் உள்ளது.
இலங்கை தற்போது புதிய சகாப்தத்தில் பிரவேசித்துள்ளதுடன், சீன அரசாங்கமும் மக்களும் தங்களால் இயன்ற வகையில் இலங்கைக்கு பல்வேறு வகையான உதவிகளை தொடர்ந்தும் வழங்குவார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வலுவான தலைமையின் கீழ், வீர உணர்வை முன்னெடுத்துச் செல்வதன் மூலம், இலங்கை அரசாங்கமும் மக்களும் நிச்சயமாக புத்துயிர் பெற முடியும் என்றும் என்றும் அவர் கூறியிருந்தார்.
அதாவது அநுரகுமார திநாசாயக்கவின் அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது தற்போதைய நிலையில் இருந்து மேலே கொண்டு வருவது என்ற இலக்கில் சீனா உறுதியாக இருக்கிறது.
அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கின்ற ஆட்சி மாற்றம்,சீனா இலங்கையில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு கை கொடுக்கும் அன்றே தெரிகிறது.
இந்த நிலையில் இலங்கையில் தனது செல்வாக்கை இந்தியா எப்படி நிலைநிறுத்த போகிறது?