;
Athirady Tamil News

சுத்தம் செய்யப்படப்போவது நாடாளுமன்றமா? வடக்கின் தமிழ்த் தேசியமா?

0

தமக்குரிய அரசியல் அணுகுமுறை மற்றும் தமக்குரிய அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய விடயங்களில் தென்னிலங்கை மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புக்கு சளைக்காத வகையில் நாட்டின் சிறுபான்மை இன மக்களும் தமது உள்ளக் கிடக்கையை பொதுத்தேர்தல் வாக்களிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ்த் தேசியம், தமிழர் இருப்பு, தமிழர் ஒற்றுமை போன்ற உன்னதமான, உணர்வுபூர்வமான விடயங்கள் எல்லாம் காலாவதியாகிவிட்டனவோ என அச்சப்படுமளவுக்கு, தமிழ் மக்கள் இதுவரை கடைப்பிடித்து வந்த சமரச உணர்வு, பொறுமை அனைத்தையும் புறந்தள்ளி இம்முறை வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசியம் எனும் கோசத்தின் திரைமறைவில் தமது இருப்பு மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போவதாக அவர்கள் நம்புகிறார்கள். அது மொழியாகட்டும், நிலமாகட்டும், வழிபாட்டு வசதிகளாகட்டும், பண்பாட்டு உரிமைகளாகட்டும், பொருளாதார நலன்களாகட்டும், வாழ்வாதாரங்களாகட்டும் அனைத்துமே தேர்தல் அரசியலுக்கான வியாபாரப் பண்டங்களாக மட்டும் இருப்பதை எண்ணி சலித்துப் போகின்றனர்.

அதே நேரத்தில், வியாபாரிகளாக அவர்கள் கருதுகின்ற அரசியல் பிரதிநிதிகளோ, அவர்களது வாழ்க்கை முறைகளோ மேலும் மேலும் பிரகாசம் அடைந்து வருவதாக எண்ணி வெறுப்பையும் வெளிப்படுத்துகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு பின்னர், இலங்கையின் ஆட்சியதிகார வரலாற்றில் மீளவும் ஒரு அரிதான நிகழ்வாய், பெரும்பான்மையின மக்களால் தெரிவுசெய்யப்பட்ட, எளிமையான, உறுதியான கொள்கை நிலைப்பாடுடைய, சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஆட்சித்தலைவர் ஒருவர் மீது நம்பிக்கை வைத்து தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பை ஒப்படைக்க கணிசமானளவில் சிறுபான்மையின மக்கள், வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பேதமின்றி தீர்மானித்துள்ளனர்.

அதன் விளைவே வடக்கிலும் கிழக்கிலும் அதிக தேர்தல் தொகுதிகளை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருப்பதும், முகம் தெரிந்திராத புதியவர்கள், தமிழர்கள் நாடாளுமன்றப் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டிருப்பதுமாகும்.

யாழ்த் தேர்தல் மாவட்டத்தில் ஒற்றுமையின் பெயரில், தமிழரசுக் கட்சிக்கு மாற்று அமைப்பாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எனும் பெயரில் களமிறங்கிய, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஐந்து போராளிகள் அமைப்புகளும் அதன் தலைவர்களும் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியம் செத்து விட்டதாக கூறி தனது கவலையை வெளிப்படுத்தும்(?) வைத்தியர் அர்ச்சுணா குழுவினருக்கு வழங்கிய அங்கீகாரத்தைக்கூட தமிழ் மக்கள் முன்னாள் போராளிகள் அமைப்பினருக்கு வழங்கியிருக்கவில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு மேலான, மாற்றமடையாத, சமூகத்தில் மாற்றங்கள் எதனையும் கொண்டு வந்திராத தமிழ்த் தலைமைகளின் மீதான நம்பிக்கையீனம், அதிருப்தி யாவும் தமிழ் மக்களை வேறு தெரிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளன. கிளிநொச்சித் தொகுதி வாக்காளர்களை இறுக்கமாக(?) கட்டுக்குள் வைத்திருக்கத் தெரிந்த சிறீதரன் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கினால் மட்டுமே தமிழரசுக் கட்சி காப்பாற்றப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டுத் தேர்தலில் தமிழ்த் தேசியம் பெற்றுக் கொண்ட மொத்த வாக்குகள் இம்முறைத் தேர்தலில், தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுயேச்சைக்குழு-17, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என பிரிவடைந்துள்ளதாகவும், ஈ.பி.டி.பி மற்றும் அங்கஜன் குழுவினர் பெற்றுக்கொண்ட வாக்குகளும் கடந்த ஐந்து வருட காலத்தில் புதிதாக பதிவு செய்யப்பட்ட இளையோரின் வாக்குகளுமே தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்துள்ளதாகவும் ஒரு சிலரின் அவதானிப்புகள் காணப்படுகின்றன.

மிகவும் வித்தியாசமான அணுகுமுறையில், மிக மிக குறுகிய காலத்துள் சமூக வலைத் தளங்கள் மூலம் பிரபலமாகி அதனை வாக்குகளாக அறுவடை செய்து கொண்ட வைத்தியர் அர்ச்சுணாவின் தெரிவு, பாரம்பரிய அரசியல் தலைமைகளுக்கும் ஏனையோருக்கும் பல பாடங்களைச் சொல்லிக் கொடுத்துள்ளது.

அதே போல, தொடர்ந்தும் ஒரே பேச்சு, ஒரே அணுகுமுறை, ஒரே நிலைப்பாடு எனச் செயற்படுகின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தெரிவும் ஏனைய தரப்பினருக்கு பல சேதிகளை சொல்லியுள்ளது. அவர்களின் நிலையான கொள்கை, வெளிப்படைத் தன்மையுடனான அரசியல் செயற்பாடுகள் என்பன விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை மட்டும் சிந்தித்துக் கொண்டிருக்கின்ற, பேசிக்கொண்டிருக்கின்ற ஒரு பிரிவு மக்களுக்கு மீண்டும் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளது.

அனைத்துக்கும் மேலாக, நாட்டைச் சுத்தப்படுத்துவோம், அதற்கென முதலில் நாடாளுமன்றத்தைச் சுத்தப்படுத்துவோம் எனும் அரசுத் தலைவர் அனுரவின் அழைப்பை சிங்கள மக்கள் மட்டுமல்லாது ஏனைய இன மக்களும் தமது முதன்மைக் கடமையாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தத் தேவையான ஆதரவை வெளிப்படுத்தவும் தலைப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்கள் வேண்டுகின்ற ஆட்சி முறை மாற்றத்திற்கும், ஆட்சியாளர் மாற்றத்திற்குமான அடிப்படை வேறுபாட்டினை இம் மக்கள் புரிந்து கொண்டுதான் தமது ஆதரவினை வழங்குகின்றார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

அந்தளவுக்கு, பெரும்பான்மையான உறுப்பினர்களின் கூட்டுக் களவாணித்தனத்தால் நாடாளுமன்றத்தின் மாண்பும், சட்டமியற்றல் செயற்பாடுகளும், மக்களுக்கான சேவைகளும் சீரழிக்கப்பட்டிருந்தன. முன்பெல்லாம் ஒரு அரசாங்கமும் அதன் உறுப்பினர்களும் முறைகேடுகளில் ஈடுபடுவதும் அவர்களை மக்கள் நிராகரித்து அடுத்த தேர்தலில் வேறொரு அரசாங்கத்தை அமைப்பதும், பின்பு அவ் அரசாங்கமும் அதன் உறுப்பினர்களும் முன்னைய அரசாங்கம் போலவே முறைகேடுகளில் ஈடுபடுவதுமாகவே எமது நாட்டின் அரசியல் வரலாறு அமைந்திருந்தது.

ஏறக்குறைய மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் உருவான, கட்சிகளை உடைத்து உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பெரும்பான்மை பலத்தோடு அனைத்து அராஜகங்களையும் செய்யும் போக்கு, பின்னர் வந்த அனைத்து ஆட்சித் தலைவர்களின் ஆட்சியின் கீழும் நடைபெற்று வரத் தொடங்கியபோது கட்சி பேதமின்றி அனைத்துக் காலங்களிலும் அநேகம் பேர் ஆளும் கட்சி உறுப்பினர்களாகி கூட்டுக் களவினையும், ஊழல் மோசடிகளையும், அரசியல் அராஜகங்களையும் ஒப்பேற்றும் கூட்டமாகினர். அதற்கு பிரதியுபகாரமாக அளவுக்கு அதிகமான வரப்பிரசாதங்களைப் பெற்று தத்தமது வாழ்க்கையையும் வளப்படுத்திக் கொண்டனர்.

இதுவே, என்றுமில்லா அளவுக்கு, வெறுப்பின் உச்சத்திற்கு மக்களை இட்டுச் சென்றதோடு, நாடு முன்பு கண்டிராத ஒரு ‘அரகலய’ போராட்டத்தைக் காண வைத்ததோடு, ஆயுததாரிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் அரசியலில் தீண்டத்தகாதவர்களாகவும் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த ஜே.வி.பியினரிடம் வேறு வழியின்றி தமது எதிர்காலத்தை ஒப்படைக்கச் செய்தது. அதேவேளை, மக்கள் அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கக்கூடிய வகையிலேயே ஜே.வி.பி உறுப்பினர்களின் தனிப்பட்ட பண்புகள், கொள்கைகள், செயற்பாடுகள், அமைப்புக் கட்டமைப்புகள் யாவும் நீண்ட காலமாகவே மிகவும் உறுதியாக காணப்பட்டன என்பதையும் மறுப்பதற்கில்லை.

மாறும் காலத்திற்கேற்ப, எதிர்காலத் தேவைக்கேற்ப சமூகத்தின் பல்வேறு முற்போக்கு செயற்பாட்டு அணிகளையும் இணைத்து தேசிய மக்கள் சக்தி எனும் புதிய தோற்றத்தில் தம்மை சமூகத்தில் நிலைநிறுத்தக்கூடிய பக்குவமும், சகிப்புத்தன்மையும், எதிர்காலம் பற்றிய சிந்தனையும் ஜே.வி.பி எனும் ஆயுதப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களுக்கு இருந்தமையானது, நாட்டு மக்கள் அச்சமின்றி அவர்கள்மீது நம்பிக்கை வைக்க ஏதுவாக அமைந்தது.

இவையெல்லாம், ஒற்றுமையின் பெயரால் மட்டும் ஒன்றிணைந்த முன்னாள் போராளிகள் அமைப்புகளின் உறுப்பினர்கள் யாவரும் மிகவும் ஆழமாக அவதானிக்க வேண்டிய, சுயவிமர்சனத்துக்கு உட்படுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.

மக்கள் தமது சேவையாளர்களைத் தெரிவு செய்வதில், மக்களுக்காக செயற்படுவதாக கூறிக் கொள்ளும் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நடத்தைகள், மக்களின் அன்றாடப் பிரச்சினைகளில் அவர்களது பிரசன்னம் , தீர்வு கிடைப்பதில் அவர்களது பங்களிப்பு என்பவற்றைவிட வேறெந்த விடயங்களும் நிரந்தரமாக செல்வாக்குச் செலுத்துவதில்லை என்பதையே நாடாளுமன்றத் தேர்தல் 2024 உணர்த்துகிறது.

-கே.என்.ஆர்
16.11.2024.

You might also like

Leave A Reply

Your email address will not be published.