பெருந்தோட்ட அமைச்சின் உத்தரவின்படியே தொழிலாளர்கள் பல காரணங்களுக்காக வெளியேற்றப்படுகின்றனர்…! தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலமான உண்மைகள்

சிவலிங்கம் சிவகுமாரன்
தோட்டத்தொழிலாளி ஒருவர் தனதிஷ்டப்படி தனது குடியிருப்பை திருத்தவோ தரிசு நிலம் ஒன்றில் காய்கறி செய்கையில் ஈடுபடவோ அல்லது கால்நடை புற்றரைகளை பயன்படுத்தவோ தடையாக இருப்பதற்குக் காரணம் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் தேயிலை நிலத்துக்கு மாத்திரமின்றி மேற்கூறிய அனைத்துக்கும் சேர்த்து அரசாங்கத்துக்கு குத்தகையை செலுத்துகின்றன.
தொழிலாளர்களின் குடியிருப்புகள், புற்றரைகள் மற்றும் அவர்கள் விவசாயம் செய்வதற்கான நிலப்பகுதிக்கு கம்பனிகள் குத்தகை பணத்தை செலுத்த வேண்டிய அவசியமில்லை. அந்த விடயத்தை அரசாங்கம் கம்பனிகளுக்கிடையில் செய்து கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்திலிருந்து நீக்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
மேலும் தொழிலாளர்களை பல்வேறு காரணங்களுக்காக குடியிருப்புகளிலிருந்தோ அல்லது தோட்டங்களிலிருதோ முன்னறிவித்தல் கடிதங்களை கொடுத்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தோட்ட நிர்வாகங்கள் முன்னெடுப்பதாக பலரும் நினைக்கக் கூடும்.
ஆனால் அதை முன்னெடுப்பது பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சாகும். ஏனெனில் கம்பனிகளிடம் தோட்டங்கள் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தாலும் அவை அனைத்துமே அரசாங்கத்துக்கு சொந்தமான நிலங்கள். எனவே அதை சொந்தம் கொண்டாட எவருக்கும் உரிமையில்லை என்பதை வெளிப்படுத்தவே தோட்டத் தொழிலாளர்களுக்கு இப்படியான சட்டங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. இதை நான் தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக அறிந்து கொண்டேன் என்று அவர் குறிப்பிடுகிறார்.
இது குறித்து அவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு பகிர்ந்து கொண்ட விடயங்கள் இங்கு தரப்படுகின்றன.
முன்னறிவித்தல் கடிதம் எதற்காக?
கடந்த சில வருடங்களாக கம்பனி நிர்வாகங்களின் கீழ் உள்ள தோட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக முன்னறிவித்தல் கடிதங்கள் மூலம் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர். அவர்கள் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இது குறித்து ஆராய்ந்து பார்த்த போது தோட்ட முகாமையாளர்களே அவர்களை வெளியேற்றி வருவதாக கூறப்பட்டது.
நாம் சில தோட்ட நிர்வாகங்களை அணுகி என்ன காரணத்துக்காக இப்படி செய்கின்றீர்கள் எனக் கேட்டபோது பெருந்தோட்ட அமைச்சே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்னது என்ற பதில் வந்தது. இதையடுத்து இதில் உள்ள உண்மைத் தன்மைகளை ஆராய்ந்து பார்க்க நான் தகவல் அறியும் சட்டமூலம் ஊடாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கு சில கேள்விகளை முன்வைத்திருந்தேன். இச்சட்டத்தை பயன்படுத்தி தகவல்களைப் பெற்ற ஊடகவியலாளர்களின் ஆலோசனைகளும் இதற்கு பெறப்பட்டிருந்தன.
ஆனால் எனக்கு இலகுவில் பதில்கள் கிடைக்கவில்லை. அதையடுத்து நான் தகவல் வழங்கும் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்தேன். விண்ணப்பங்களை நான் அனுப்பிய காலம் 2022 ஒன்பதாம் மாதமாகும். எனினும் ஆணைக்குழுவின் உத்தரவுகள், விசாரணைகளின் பின்னர் சுமார் ஒரு வருட காலத்தின் பின்னர் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பெருந்தோட்ட அமைச்சினால் எனது சில கேள்விகளுக்கு மாத்திரம் பதில் வழங்கப்பட்டிருந்தன.
நான் முன்வைத்திருந்த பிரதான கேள்வி எந்த சட்டத்தின் பிரகாரம் தோட்டத்தொழிலாளர்களுக்கு அவசர முன்னறிவித்தல் கடிதம் (Quit Notice) பெருந்தோட்ட அமைச்சினால் வழங்கப்படுகின்றது என்பதாகும். அதற்கு அவர்கள் வழங்கிய பதில் பின்வருமாறு இருந்தது,
1997 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தினாலும் 1992 இன் 45 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தினாலும் ,1987 இன் 50 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தினாலும், 1983 இன் 29 ஆம் இலக்க மற்றும் 1981 இன் 58 ஆம் இலக்க அதிகாரச் சட்டத்தினாலும் திருத்தப்பட்ட 1979 இன் 7 ஆம் இலக்க அரசாங்கக் காணி (உரிமை மீட்பு) அதிகாரச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் பிரகாரம் ( அவ் அதிகாரச் சட்டத்தின் பட்டோலையின்) ‘ அ ‘ மாதிரியின் விளக்கத்தின் பிரகாரம் முன்னறிவித்தல் கடிதம் அனுப்பப்படுகின்றது.
தொழிலாளர்களுக்கு முன்னறிவித்தல் கடிதம் வழங்க இத்தனை சட்டங்கள் நாட்டில் அமுலில் இருக்கின்றனவா என்ற ஆச்சரியம் எமக்கு ஏற்பட்டது. யாருடைய தகவலின் அடிப்படையில் இந்த கடிதம் குடியிருப்பாளர்களுக்கு அனுப்பப்படுகின்றது என்ற கேள்விக்கு தோட்ட அதிகாரி அல்லது தோட்ட முகாமையாளரின் தகவலின் அடிப்படையில் கடிதங்கள் அனுப்பப்படுவதாக பதில் வழங்கப்பட்டிருந்தது.
இங்கு ஒரு விடயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது எல்லா தோட்ட அதிகாரிகளும் அல்லது முகாமையாளர்களும் தொழிலாளர்களோடு முரண்படுவதில்லை. அவரோடு ஒத்துழைத்தால் தொழிலாளர்கள் குடியிருப்பை திருத்திக்கொள்ளலாம், கால்நடை பட்டிகளை அமைக்கலாம்.
ஆனால் அவர்கள் விரும்பாவிட்டால் தொழிலாளர்கள் மீது எந்த சந்தர்ப்பத்திலும் அவர்கள் மேற்கூறிய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டர். இது ஒரு வகை அடிமைத்தனமாகவே உள்ளது.
என்ன காரணத்துக்காக இந்த முன்னறிவித்தல் கடிதம் குடியிருப்பாளர்களுக்கு அனுப்பப்படுகின்றது என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கப்பட்டிருந்தது,
அரசாங்கத்துக்கு சொந்தமான காணிகளை அனுமதியின்றி பயன்படுத்துவதால் இக்கடிதம் குடியிருப்பாளர்களுக்கு அனுப்பப்படுகின்றது.
என்ன அடிப்படையில் குடியிருப்பாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பப்படுகின்றன என்பது அடுத்த கேள்வி. அதாவது தோட்ட அதிகாரியினால் ஒரு தொழிலாளிக்கு எதிராக அனுப்பப்படும் கடிதம் குறித்து விசாரணை செய்யப்படுகின்றதா என்ற கேள்விக்கான பதில் மிகவும் பாரதூரமானதாக இருந்தது.
கடிதம் பற்றி விசாரணைகள் செய்யப்படுவது இல்லை. ஆதாரங்கள் தேவையானால் நேரில் சென்று விசாரித்து பின்னர் முன்னறிவித்தல் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன என பதில் வழங்கப்பட்டிருந்தது.
ஆகவே கம்பனிகள் முகாமைத்துவம் செய்யும் தோட்டங்கள் அனைத்துமே அரசாங்கத்துக்கு உரித்தானவை என்பது முக்கிய விடயம். இவற்றை பெருந்தோட்ட அமைச்சின் முகாமைத்துவ கண்காணிப்புப் பிரிவு மேற்பார்வை செய்கின்றது. கடிதங்களும் இப்பிரிவின் ஊடாகவே அனுப்பி வைக்கப்படுகின்றன.
குத்தகை காணிக்கா குடியிருப்புக்கா?
அரசாங்கம் முகாமைத்துவம் செய்த பெருந்தோட்டங்களை கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கும் போது அவ் ஒப்பந்தத்தில் ஒரு தோட்டத்தின் உள்ள சகல அம்சங்களுக்கும் குத்தகை செலுத்துவதாக சரத்துகள் உள்ளன. அதாவது தேயிலைத் தோட்டமொன்றில் தேயிலை பயிரிடப்பட்ட நிலப்பகுதி மாத்திரமில்லாது , தொழிலாளர்களின் லயன் குடியிருப்புகள், புற்றரைகள், விவசாய காணிகள் என சகலதுக்கும் சேர்த்து கம்பனிகள் அரசாங்கத்துக்கு குத்தகை செலுத்துவதால் அவை அனைத்துக்கும் கம்பனி நிர்வாகம் சொந்தம் கொண்டாடுகின்றது.
இதன் காரணமாகவே நான் கடந்த பல வருடங்களாக கம்பனிகள் தேயிலை நிலத்துக்கு மாத்திரம் குத்தகை செலுத்தினால் போதும் என்ற வகையில் குத்தகை ஒப்பந்தத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றேன்.
தொழிலாளர்களின் காணி உரிமை குறித்து அதிகமாக பேசப்பட்டு வரும் இக்காலத்தில் இவ்வாறான சில நடவடிக்கைகளை எடுக்க புதிய அரசாங்கம் முன்வர வேண்டும்.