மாகாண ஆட்சிமுறையில் அதிகாரங்களை பகிரவேண்டும்

கலாநிதி ஜெகான் பெரேரா
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கும் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்யவதற்கு சட்டத் திருத்தங்களை அரசாங்கம் தயார் செய்வதாக கூறப்படுகிறது. மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பிலான சட்டத்தை திருத்துவதற்கு முன்னைய அரசாங்கம் ஒன்று தீர்மானித்ததை அடுத்து 2017 ஆம் ஆண்டில் இருந்து ஒன்பது மாகாணச பைகளுக்குமான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்த அரசாங்கம் சட்டத்தில் திருத்தம் கொண்டவரும் செயன்முறையை ஒருபோதும் நிறைவு செய்யவில்லை. தேர்தல்களை நடத்தாமல் இருப்பதற்கு அவர்களுக்கு அதுவே ஒரு சாக்குப்போக்காக மாறியது.
அதற்கு பிறகு மாகாணசபை தேர்தல்கள் சடடத்தை திருத்தும் செயன்முறையை நிறைவுசெய்து தேர்தல்களை நடத்துவதில் எந்த அரசாங்கமும் போதிய அக்கறையைக் கொண்டிக்கவில்லை. அதன் விளைவாக மாகாணசபைகள் முறைமை இன்று மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்படும் ஆளுநர்களினால் நிருவகிக்கப்படுகிறது. இதன் மூலமாக தாங்கள் அரசியலமைப்பை மீறுவதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை.
2016 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் கீழ் மாகாணசபை தேர்தல்களை கலப்பு தேர்தல் முறையில் நடத்துவதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வங்கியிருந்ததாக பொதுநிருவாக, மாகாண சபைகள் அமைச்சர் (பேராசிரியர் ) சந்தன அபேரத்ன கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. ஆனால், கலப்பு தேர்தல் முறையின் கீழ் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு எல்லைநிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையின் அங்கீகாரம் தேவைப்புகிறது. அந்த அறிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து தேர்தல்கள் தடைப்பட்டுப் போயிருக்கின்றன.
அதனால் முன்னைய தேர்தல் முறையின் (விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை) மாகாணசபை தேர்ல்களை நடத்த வேண்டும் கோரிக்கைகள் கிளம்பின. முன்னைய முறையின் கீழ் 1988 ஆம் ஆண்டின் மாகாண சபைகள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க தேர்தல்கள் நடத்தப்படும். இத்தகைய சூழ்நிலையில், தேர்தல்களை மேலும் தாமதிப்பதற்கு பதிலாக தற்போதைய சட்டத்தின் கீழ் தேர்தல்களை நடத்த முடியும்.
இது விடயம் தொடர்பிலான யோசனை விரைவில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் அபேரத்ன தெரிவித்தார். அமைச்சரவையின் அங்கீகாரத்தை தொடர்ந்து 2025 ஆகஸ்ட் மாதமளவில் மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.தேசிய தேர்தல்களில் வெற்றிபெற்ற பிறகு உள்ளூராட்சி மற்றும் மாகாண மட்ட தேர்தல்களை நடத்துவதற்கு தயக்கம் காட்டிய முன்னைய அரசாங்கங்களின் பாதையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பின்பற்றாது என்று நம்புவோமாக.
மக்களுக்கு தாங்கள் வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய காரணத்தினால் உள்ளூராட்சி மட்டத்தில் மக்கள் ஆதரவை பரீட்சித்துப் பார்ப்பதற்கு முன்னைய அரசாங்கங்கள் அஞ்சின. பொருளாதார அபிவிருத்தி, வாழ்க்கைச் செலவுக் குறைப்பு, உடனடியாக உற்பத்தியை அதிகரித்தல் ஆகிய விடயங்களில் புதியதொரு பாதையை வகுப்பது தொடர்பில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் கஷ்டத்தை எதிர்நோக்குகிறது.
பிரதான வாக்குறுதி
ஆனால், தேர்தல் பிரசாங்களின்போது வழங்கிய முதன்மையான வாக்குறுதியை காப்பாற்றுவதில் உண்மையாக நடந்துகொள்வதே தற்போதைய அரசாங்கத்தின் பலமாகும். ஊழலுக்கும் வளங்கள் விரயத்துக்கும் விரைவான முடிவைக் கொண்டுவருவது என்ற வாக்குறுதியை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக பரவலாக தெரிகிறது. தேர்தல் முடிவுகளை அடிப்படையில் நோக்கும்போது 2022 ஆண்டில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் ஊழலும் விரயமுமே என்று சனத்தொகையில் அதிகப்பெரும்பான்மையானவர்கள் நம்புகிறார்கள் என்பது தெளிவானது.
அரசாங்கம் அதன் வாக்குறுதிகளில் ஒன்றை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கும் முயற்சிகளின் விளைவாகவே முன்னாள் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் பெறுகின்ற சிறப்புரிமைகள் பயன்கள் தொடர்பில் தற்போது விவாதம் மூண்டிருக்கிறது. தேர்தலில் வெற்றிபெற்ற குறுகிய காலத்திற்குள் மக்கள் செல்வாக்கை இழந்த முன்னைய அரசாங்கங்களைப் போலன்றி தற்போதைய அரசாங்கம் அதன் பிரதான வாக்குறுதியை காப்பாற்றியதன் விளைவாக மக்கள் ஆதரவை தொடர்ந்தும் கொண்டிருக்கிறது.
இந்த வருடத்தின் முதல் அரைப்பகுதிக்குள் சாத்தியமானளவு விரைவாக உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துவதாக உறுதியளித்திருக்கிறது. சாத்தியமானளவு விரைவாக உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து அரசாங்கம் நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. மக்கள் மத்தியில் அவற்றுக்கு இருந்த ஆதரவை பரீட்சித்துப் பார்க்க முன்னைய அரசாங்கங்கள் விரும்பாத காரணத்தால் இரு வருடங்களுக்கும் அதிகமான காலமாக உள்ளூராட்சி தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கி்றன.
2022 பொருளாதார வீழ்சசி ஏற்பட்ட காலகட்டத்திலயே உள்ளூராட்சி தேர்தல்களை நடத்த வேண்டிய நாட்கள் வந்ததால் ஒத்திவைப்பு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை. படுமோசமான ஒரு தோல்வியை தழுவ வேண்டிவரும் என்று அரசாங்கம் அஞ்சியது. உட்பூசல்கள் காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ளவை உட்பட எதிரணிக் கட்சிகள் பலவீனமடைந்திருக்கும் நிலையில், தற்போதைய சந்தர்ம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் அரசாங்கம் பெருவெற்றி பெறக்கூடிய வாய்ப்பு தாராளமாக இருக்கிறது
உள்ளூராட்சி தேர்தல்களைத் தொடர்ந்து மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படுமானால், அரசாங்கம் ஏற்கெனவே பெற்ற வெற்றிகளின் விளைவான உத்வேகம் காரணமாக மீண்டும் பாரிய அனுகூலத்தை அடையக்கூடிய நிலையில் இருக்கும். மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு உண்மையில் விரும்பக்கூடிய அளவுக்கு அதிகாரப் பரவலாக்கல் இலட்சியத்தின் மீது அது போதுமானளவுக்கு பற்றுறுதி கொண்டிருக்கிறதா என்பது முக்கியமான ஒரு கேள்வியாகும்.
மாகாணசபைகள் வீண்செலவை ஏற்படுத்துபவை என்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடியவை என்றும் சகல மட்டங்களில் உள்ள மக்கள் மத்தியிலும் பரவலான அபிப்பிராயம் ஒன்று இருக்கிறது. ஆனால், மாகாண சபைகள் அரசியலமைப்பின் அங்கமாக இருப்பதாலும் அரசியலமைப்பை உறுதியாகப் பின்பற்றுவதாக உறுதி அளித்திருப்பதாலும், தேர்தல்களை நடத்தப்போவதாக அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்து வந்திருக்கிறது.
முழுமையான நடைமுறைப்டுத்தல்
ஒவ்வொரு சமூகமும் அது பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வகைசெய்வதே இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற பல்லின மற்றும் பன்முக சமுகங்கள் வாழும் நாடுகளில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்பதற்கான நியாயப்பாடாகும். ஒரு சமூகத்தின் சனத்தொகை மற்றைய சமூகங்கள் சகலவற்றினதும் கூட்டு சனத்தொகையை விடவும் மிகவும் பெரிதாக இருக்கின்ற ஒரு சூழ்நிலையில், பெரும்பான்மைச் சமூகம் அதன் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் சிறுபான்மைச் சமூகங்கள் மீது அவற்றின் நலன்களுக்கு பாதகமான முறையில் திணிப்பதையும் அதிகாரப் பரவலாக்கம் தடுக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, சுதந்திரத்தின் பின்னரான இலங்கையின் வரலாற்றில் இந்த தோற்றப்பாட்டுக்கு பல பெருவாரியான உதாரணங்கள் இருக்கின்றன. 1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்ற கையோடு மலையக தமிழ்ச் சமூகத்தின் (இந்திய வம்சாவளி தமிழ்கள்) குடியுரிமையும் அதைத் தொடர்ந்து வாக்குரிமையும் பறிக்கப்பட்டமையும் அவற்றில் அடங்கும். மிகவும் அண்மையில் 2020 ஆண்டில் கொவிட் பெருந்தொற்றின்போது மரணமடைந்த முஸ்லிம்களின் சடலங்கள் முஸ்லிம் சமூகத்தின் ஆழமான யத உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கட்டாய தகனம் செய்யப்பட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.
நாட்டின் ஆட்சிமுறையை மேம்படுத்தும் ஒரு அம்சமாக அதிகாரப் பரவலாக்கலை அரசாங்கம் நோக்கங்கூடிய சாத்தியப்பாடு இல்லை என்றே தெரிகிறது. சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதில் உறுதிப்பாட்டைக் கொணடிருப்பதாக ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இனவெறியையும் தீவிரவாதத்தையும் அவற்றின் சகல வடிவங்களிலும் உறுதியாக எதிர்க்கும் இனவெறியற்ற ஆட்சி என்று தற்போதைய அரசாங்கத்தை அதன் தலைவர்கள் கூறுகிறார்கள். அதன் விளைவாக கொள்கைகளை வகுத்து தீர்மானங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களில் இனத்துவ அல்லது பன்முகப் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும் என்பதற்கு எந்த அழுத்தத்தையும் அரசாங்கம் கொடுக்கவில்லை.
அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் நியமனங்களிலும் மிகவும் அண்மையில் ‘கிளீன் ஸ்ரீலங்கா ‘ செயற்திட்டத்துக்கு பொறூப்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர்கள் நியமனத்திலும் இதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இன, மத சிறுபானமைச் சமூகங்களினதும் பெண்களினதும் பிரதிநிதித்துவம் பூச்சியமாக அல்லது விகிதாசார அடிப்படையில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது. தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்புக்களில் இன, மத மற்றும் பால்நிலைப் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினை மத்திய மட்டத்தில் மீள்பரிசீலனைக்கு எடுக்கப்படவேண்டியது அவசியமாகும்
இத்தகைய பின்புலத்தில், ம்காணசபை தேர்தல்களை நடத்துவதன் மூலம் தீர்மானங்களை மேற்கொள்ளும் அமைப்புக்களில் காணமுடியாமல் இருக்கும் இன,மத பிரதிநிதித்துவத்தை மாகாண மட்டத்திலாவது உறுதிசெய்யக் கூடியதாக இருக்கும். இன, மத சிறுபான்மைச் சமூகங்கள் தாங்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற பகுதிகளில் ஆட்சிமுறையில் அதிகாரப்பகிர்வு செய்யப்படவேண்டும் என்று அவசியம் குறித்து நீண்டகாலமாகவே கோரிக்கையை முன்வைத்து வந்திருக்கிறார்கள்.
அவர்களின் அந்த அபிலாசைக்கு இடமளிப்பதற்காக வகுக்கப்பட்டதே மாகாணசபைகள் முறையாகும். அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் மாகாண சபைகளை ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற பொறிமுறையாக அமைப்பதற்கு வகைசெய்கிறது
மாகாணசபைகள் வெறுமனே மத்திய அரசாங்கத்தினால் நிருவகிக்கப்படுவதற்கான பன்முகப்டுத்தப்பட்ட அமைப்புக்கள் அல்ல. மாகாணசபைகளுக்கு காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் கொண்டிருக்கிறது. அரசியலமைப்பின் பிரகாரம் மாகாணசபைகள் முறைமையை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக அரசாங்கம் அரசியலமைப்பு மீது இன, மத சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையையும் தேசிய ஐக்கியத்துக்கு நிச்சயமான ஒரு உத்தரவாதமாக அமையக்கூடிய தேசிய நல்லிணக்கச் செயன்முறையையும் வலுப்படுத்துவதற்கு பெரும் பணியை ஆற்றமுடியும்.