அநுர குமார அரசாங்கத்திடமிருந்து இலங்கை மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஜி. இராமகிருஷ்ணன்
அநுர குமார திசாநாயக்க இலங்கையின் அதிபராகப் பதவியேற்று நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. தெற்காசிய நாடுகளில் நேபாளத்துக்கு அடுத்ததாக இலங்கையில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் இடதுசாரி ஆட்சி அமைந்திருக்கிறது.
இலங்கை வரலாற்றில் இதுவரை கண்டிராத அளவுக்கு தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு நாடாளுமன்றத்தின் 225 ஆசனங்களில் 158 ஆசனங்கள் கிடைத்ததும் மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச போன்ற தலைவர்களின் கட்சிகளை மக்கள் நிராகரித்ததும் நாம் அறிந்ததே. இன்றைய சூழ்நிலையில் அதிபர் அநுர குமாரவின் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பேசவேண்டியது அவசியமாகிறது.
கடந்த சில வருடங்களில் வெளிநாட்டு கடன் தவணைகளை திருப்பிச் செலுத்தமுடியாமல் இலங்கை அரசின் நிதி நிலைமை வாங்குரோத்தானது உண்மை.மூச்சு முட்டும் வெளிநாட்டுக் கடன், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தினமும் பல மணிநேரம் மின்வெட்டு, வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுப் பொருட்கள், உரவகைகள், பெட்ரோல்,டீசல், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பாவனைப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியவில்லை. காகிதாதிகள் தட்டுப்பாட்டால் பரீட்சைகளும இரத்துச் செய்யப்பட்டன.
ராஜபக்ச அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ( அறகலய ) மூண்டது. அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் நாட்டைவிட்டே ஓடியது. இத்தகைய பின்னணியில் மூன்று வருடங்களுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் அநுரா குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடை்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. அதிலும், தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மதம், இனம், மொழி கடந்து வாக்களித்தார்கள்.
மக்களின் எதிர்பார்ப்பு
” ஒரு செழிப்பான தேசம், அழகான வாழ்க்கை” என்ற முழக்கத்தை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி தேர்தல்களைச் சந்தித்தது. முன்னைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கை தொடரும் என்றாலும், மக்களுக்கு பாதகமான வரிகளைக் குறைத்திட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் புதிய அரசியலமைப்பை விரைவாகக் கொண்டு வந்து உள்ளூராட்சி, மாவடடங்கள் மற்றும் மாகாணங்களுக்கு அரசியல், நிருவாக அதிகாரிகளை வழங்கி அரச நிருவாகத்தில் மக்களின் பங்கேற்பு உத்தரவாதப்படுத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை கூறியது.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 80 சதவீதத்தினர் கிராமங்களில் வசிக்கிறார்கள். ஒரு பகுதி மக்கள் நகரங்களில் வேலை செய்தாலும், அவர்களின் வாழ்விடம் கிராமங்களே. சனத்தொகையில் பெரும் பகுதியினர் முறைசாராத் தொழிலாளர் குடும்பங்கள்.மலையக தேயிலைத் தோட்டங்களில் உள்ள தமிழர்களின் வறுமை நிலை பெரும் துயரமானது. சனத்தொகையில் 25 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதாக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ மதிப்பீடு கூறுகிறது.
ஆனால் அரசாங்கம் போட்டது வறுமைக்கோடு அல்ல, அது பட்டினிக்கோடு. வறுமையில் உள்ளோரின் தொகை அரசாங்க மதிப்பீட்டை விடவும் அதிகம் என்ற இலங்கையின் பொருளாதார நிபுணர் ஒருவர் குறிப்பிடுகிறார். இலங்கையில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
எதிர்நோக்கும் பிரச்சினைகள்
இலங்கை பல தளங்களில் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அரசாங்கம் கடைப்பிடிக்கும் அரசியல், சமூக , பொருளாதார கொளனகைகள் உள்நாட்டு வளர்ச்சிக்கு அடிப்படையானது என்றாலும், நெருக்கடிகளுக்கு அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கைக்கும் முக்கிய பங்குள்ளது.
இலங்கை அதிபர் அநுரா குமார இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான சுமுகமான உறவுகள் நீடிக்கும் என்பதை உத்தரவாதப்படுத்தினார். பல உடன்படிக்கைகளும் கைச்சாத்தாகின.
அதே போலவே, சீனாவுக்கும் சென்ற அதிபர் அநுரா குமார அந்நாட்டு ஜனாதிபதி சி ஜின்பிங்கைச் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சீன அரசாங்கம் உதவிசெய்யும் என்கிற அடிப்படையில் இருதரப்பு உடன்படிக்கைகள் பலவும் கைச்சாத்திடப்பட்டன. சீன நிறுவனங்கள் இலங்கையில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான முதலீட்டைச் செய்யவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாங்கும் சக்தி, வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எத்தகைய கொள்கையைக் கடைப்பிடிக்கப் போகிறது என்பதை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறார்கள். வறுமையில் வாடும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கு சில மாதங்களில் எந்த அரசாங்கத்தினாலும் தீர்வைக் காணமுடியாது என்றாலும், அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசாங்கம் தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இலங்கை சுதந்திரம் பெற்றபோது பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் சுதந்திரத்துக்காக போராடிய மக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். சமூக பொருளாதாரக் கட்டமைப்பின் அதிகாரத்தை மேல்தட்டில் இருந்தவர்களிடமே காலானியாதிக்கவாத அரசு ஒப்படைத்தது. கடந்த காலத்தில் முதலாளித்துவ அரசியல் கட்சிகள் கடைப்பிடித்த நவீன தாராளமயக் கொள்கைகளில் இருந்து விலகி, மக்கள் நலன்காக்கும் மாற்றுக் கொள்கையை இடதுசாரி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
தமிழர் பிரச்சினை
இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனைத்து இனங்களைச் சார்ந்த மக்களுக்கும் அனைத்து சமூக, பொருளாதாரப் பிரிவினர்களுக்கும் உரிய அரசியல், சமூக, பொருளாதாரக் கொள்கைகளை இதுகாலவரையில் இலங்கையை ஆட்சி செய்த எந்த அரசாங்கமும் கடைப்பிடிக்கவில்லை. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் கடந்துவிட்ட பின்னரும் கூட இலங்கை தமிழர் பிரச்சினைக்கு இன்னமும் முழுமையான தீர்வு காணப்படவில்லை. அதிகாரப்பரவலாக்கல் இடம்பெறவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழர் பகுதிகளில் அதிபர் அநுரா குமார உரையாற்றியபோது வழங்கிய வாக்குறுதி முக்கியம் வாய்ந்தது.
” இதுவரை ஆட்சி செய்தவர்கள் தமிழர்களுக்கு போதுமான அளவில் உதவவில்லை. இரணுவத்தினாலும் பல்வேறு அரசுத் துறைகளினாலும் கைப்பபற்றப்பட்ட நிலங்களை விடுவிப்பேன் ” என்றும் அநுரா குமார வாக்குறுதி அளித்தார். இதன் அடிப்படையால்தான் தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி பெருவெற்றி பெற்றது.
சமீபத்தில் தமிழ்நாட்டில் விழுப்புரத்தில் நடைபெற்ற இந்திய மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மகாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நிலம் மற்றும் காவல்துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசுகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
நெருக்கடிகள் மிகுந்த பின்னணியில் இடதுசாரி கட்சியான தேசிய மக்கள் சக்தியை இலங்கை மக்கள் ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள். மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத்தரம் உயர்ந்திட இனப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். தாமதமானால் உலகில் பல நாடுகளில் ஏற்பட்டதைப் போன்று மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, கடைந்தெடுத்த வலதுசாரிப் பிற்போக்குவாதிகள் பயன்படுத்தி மீண்டும் அதிகாரத்துக்கு வரும் ஆபத்து ஏற்படலாம். இந்த சூழ்நிலையில் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் கவிஞர் சேரன் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கூறிய கருத்து பொருள் பொதிந்த ஒன்று.
” இந்த மக்களாட்சியில் நியாயமான, சமத்துவமான ஒரு தீர்வை வழங்கி எல்லோரையும் இணைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த வாய்ப்பை இன்றைய இலங்கை அரசாங்கம் தவறவிட்டால் இது போன்ற வாய்ப்பு இனிமேல் கிடைக்காது. வராது.” இந்த கவலையையும் எச்சரிக்கையையும் இலங்கையின் இடதுசாரி அரசாங்கம் கவனத்திற்கொண்டு செயற்படவேண்டும்.
( கட்டுரையாளர் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்)