விமர்சனங்களை சமாளிக்கக் கூடிய பட்ஜெட்

முன்னொருபோதும் இல்லாத எதிர்பார்ப்புடன் கொண்டு வரப்பட்ட முன் அனுபவம் இல்லாத தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டு நிலைமைகளைச் சீர்செய்வதிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதிலும் நடைமுறைச் சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்தப் போக்கும், இதற்கு சில அரச தரப்பு எம்.பிக்கள் அளிக்கின்ற நகைப்பூட்டும் விளக்கங்களும் அரசாங்கத்தை மக்கள் விமர்சிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்தப் பின்னணியிலேயே, 2025ஆம் ஆண்டுக்கான, இந்த அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவத் திட்டம் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் நிதி அமைச்சரான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நோக்கினால், பல முக்கியமான நல்ல முன்மொழிவுகளை உள்ளடக்கிய ஒரு வரவு செலவுத் திட்டமாக இதனைக் குறிப்பிடலாம். குறிப்பாக, இலங்கையில் அண்மைக்காலங்களில் முன்வைக்கப்பட்ட பட்ஜெட்களில் ‘பெரிதாகக் கவனிப்பைப் பெறாத’ பல விடயங்களில் இந்த பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளமை முக்கியமானது.
இலங்கை வரலாற்றில் ஒரு கறைபடிந்த வரலாறான, எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை மேம்படுத்துவதற்காகப் பெருமளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறைச்சாலைக் கூடங்களில் இருக்கின்ற சிறுவர்கள் கைதிகளுடன் பேருந்துகளில் செல்லக் கூடாது என்பதற்காகத் தனியான வாகனங்கள் கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு செய்தமை, அநாதைப் பிள்ளைகளுக்கான உதவிக் கொடுப்பனவு, வீடு வசதியில்லாத அனாதைகள் திருமணம் முடிக்கின்ற காலத்தில் வீடொன்றைக் கட்டுவதற்கு நிதி வசதி போன்ற முன்மொழிவுகள் இவ்வகைக்குள் உள்ளடக்கப்படலாம்.
இதற்கு மேலதிகமாக, அரச துறைக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதுடன் தனியார்த் துறையினருக்கும் சம்பள அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ளது.
ஆரம்ப பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பல்வேறு விதமான கொடுப்பனவுகள் அதிகரிப்பு, முதியோர், ஊனமுற்றோருக்கான கொடுப்பனவு, சுகாதார, கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் மலையக மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கான பல முன்மொழிவுகள் என இன்னும் பல விடயங்களும் இந்த பட்ஜெட்டில் உள்ளன.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமன்றி, பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றதற்கு முழு முதற்காரணம் அனுரகுமார திசாநாயக்க என்ற தனியொரு அரசியல்வாதியாவார். அவரது தெளிவான உரைகளும், மக்களை ஆகர்ஷிக்கும் இயல்பான ஆற்றலுமே இந்த பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது.
காலகாலமாக கோலோச்சிய
ஜே.வி.பியினர், என்.பி.பியில் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதுமுகங்களும் இந்த வெற்றியில் ஆற்றிய பங்கு மிகச் சிறியதாகும். அந்த வகையில், ஜனாதிபதி அனுரவின் தலைமைத்துவத்தில்தான் மக்கள் அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள். இதற்கு முன்னைய ஆட்சியாளர்கள் மீது வைத்த எதிர்பார்ப்பை விட அதிகமாகும்.
ஏனென்றால், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதனைச் செய்வோம், அதனை மாற்றுவோம்’ என்று கூறியதும், முன்னைய ஆட்சியாளர்களை விமர்சித்து அதற்கு எதிராக மக்கள் ஆணையைக் கோரியதும் அனுரகுமாரவும் என்.பி.பியின் முக்கிய ஓரிரு அரசியல்வாதிகளும்தான். எனவே, அந்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
ஆனால், அரிசி, தேங்காய், முட்டை, உப்பு என பல அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்த்து வைப்பதில் கூட அரசாங்கம் தடுமாறுவதைக் காண முடிகின்றது. அறுதிப் பெரும்பான்மையுடனும், பட்டம்
பெற்ற எம்.பிக்களுடனும் ஆட்சியமைத்த கட்சி முன் அனுபவம் இல்லாமல் தடுமாறுகின்றதா? அல்லது புதுமுகங்களுக்கு நடைமுறைச் சிக்கல்களுடன் பரீட்சயமில்லையா? எனப் பல கேள்விகள் மக்கள் மனதில் எழுந்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக சமூக மட்டத்தில் எழுந்த கேள்விகளுக்கு ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் அளித்த பதில்கள் பொறுப்பு வாய்ந்தவையாக, கனதியானவையாக, மக்கள் நம்பக் கூடியவையாக இருக்கவில்லை என்பது கண்கூடு. இவ்வாறான நகைப்பூட்டும் அறிக்கைகள் மக்களிடையே மேலும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தன.
“செல்லப் பிராணிகளுக்கு அரிசி வழங்கப்படுவதும் அரிசி தட்டுப்பாட்டுக்குக் காரணம்” என்று ஒரு வியாக்கியானம் அளிக்கப்பட்டது. “குரங்குகள் குரும்பைகளை நாசமாக்குவதாலேயே தேங்காய்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக” ஒரு அரசியல்வாதி சொன்னார். “வீடுகளில் தேங்காய்ச் சம்பல் சாப்பிடுவதும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு காரணம்” என இன்னுமொருவர் விளக்கமளித்தார்.
“சீன மக்கள் பாம்புகளையும் மரப் பட்டைகளையும் சாப்பிட்டு முன்னேறியதாக” ஒரு கதையை ஆளும் தரப்பு அரசியல்வாதி கூறினார். “கிராமத்தில் வாழும் அணில்கள் மற்றும் விலங்களின் காதல்” பற்றி ஒரு அரசியல்வாதி பேசியதாகக் கூறப்பட்டது. இப்படி இன்னும் எத்தனையோ கதைகள் சமூக வலைத்தளங்களில் மட்டுமல்ல தேநீர்க் கடைகளிலும் பேசுபொருளாகியிருந்ததை மறுக்க முடியாது.
இந்த அரசாங்கத்தில் படித்தவர்கள் எம்.பிக்களாக இருக்கின்றார்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். பக்குவமான, ஆகவே, கனதியான பதில்களை மக்களுக்கு அளிக்க வேண்டிய இவர்கள் பத்தாம்பசலித்தனமான, சிறுபிள்ளைத்தனமான விளக்கங்களை கூறுவார்கள் என்பதை மக்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.
இது போதாது என்று, நாடு முழுக்க ஏற்பட்ட மின்சார தடைக்கு “மின்சாரக் கட்டமைப்பில் குரங்கு பாய்ந்ததுதான் காரணம்” என்ற தோரணையில் ஒரு விளக்கம் கூறப்பட்டது. இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் பெரும் தலை குனிவையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியது என்றுதான் கூற வேண்டும்.
ஏனென்றால், அரசியல்வாதிகள் ஒரு கருத்தைத் தெரிவிக்க முன்னர் அதனை யாருக்குக் கூறப் போகின்றோம்? அதனைச் செவிமடுப்பவர்கள் யார்? என்பதை முன்னறிந்து கவனமாகப் பேச வேண்டும். அந்த விடயத்தில் இவர்களுக்கு முன்னனுபவமும் கேள்வி ஞானமும்
இல்லை என்பதையே மேற்படி
அறிக்கைகள் உணர்த்தின.
ஒரு மூடிய அறையில் அல்லது ஆய்வு மாநாட்டில் கூறக் கூடிய காரணங்களை மக்கள் மத்தியில் கூறியதால் என்.பி.பியின் எம்.பிக்கள் பலர் பொதுவெளியில்
வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்டனர். இதனையடுத்து, இவ்விதம் கருத்துத் தெரிவிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கடுந்தொனியில் கூறியிருப்பதாக அறிய வருகின்றது.
இப்படியாக, பொருளாதார நெருக்கடிகளை சரிப்படுத்துவதில் நடைமுறைசார் தாமதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், சில எம்.பிக்கள் மக்களது விமர்சனங்களுக்குத் தீனி போட்டு வருகின்ற காலத்திலேயே அரசாங்கம் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இருக்கின்றது. மாகாண சபைத் தேர்தல் பற்றியும் பேசுகின்றது.
எனவே, பெரும் எதிர்பார்ப்புடன் நிறுவப்பட்ட அரசாங்கம் சாதாரண மக்கள் உணரும் விதத்தில் இமாலய மாற்றங்கள், முன்னேற்றங்களைக் கொண்டு வராதிருக்கின்ற குறுகிய காலப் பகுதிக்குள் உள்ளூராட்சித் தேர்தல் வரப் போகின்றது என்பது ஒரு சவாலான கள நிலைமை என்பதை அரசியல் அறிந்தவர்கள் புரிவார்கள்.
புதிய அரசாங்கம் எதுவுமே செய்யவில்லை என்று கூற முடியாது. நீதித்துறை, சட்டம் ஒழுங்கு, அரச வீண் செலவுகள், அரசியல் அழுத்தங்கள், ஊழல் என பல விடயப் பரப்புக்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சில விடயங்களில் வழக்கமான ஆட்சியாளர்களைப் போலவே செயற்படுகின்றது.
ஆயினும், நாங்கள் உடனடியாக விலைகளைக் குறைப்போம், பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவோம், நீங்கள் நினைப்பதைச் சாத்தியப்படுத்துவோம் என்று ஏற்கனவே கண்டபடி வாக்குறுதி அளித்துவிட்டதால், அதனை நம்பியிருந்த மக்கள் இன்னும் முழுமையாகத் திருப்தியடையவில்லை. அதற்குக் காலம் எடுக்கலாம்.
இப்படியான சூழலில் தேர்தல்
ஒன்றை எதிர்கொள்வதாயின், அரசாங்கம் ஏதாவது வெளிப்படையான நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்தாக வேண்டிய ஒரு மறைமுக நிர்ப்பந்தம் இருக்கின்றது. பட்ஜெட் என்பது அரசியல் அல்ல என்றாலும், அரசாங்கங்கள் தமது
அரசியல் ஆளுகையின் சிறப்பை காண்பிப்பதற்கான கருவியாக
பட்ஜெட்டை பயன்படுத்துவது வழக்கமானதே.
அந்த வகையில், தற்போது எழுந்துள்ள விமர்சனங்களை எதிர்த்து ஆடுவதற்கும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலை நோக்கி நகர்வதற்கு முன்னர் மக்களுக்கு சில சலுகைகளை வழங்குவதற்கும் 2025ஆம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கின்றார் என்றும் கூறலாம். ஆனால் ஒன்று, கடந்த காலங்களிலும் அரசாங்கங்கள் இப்படி எத்தனையோ முன்மொழிவுகளைச் செய்தன,
திட்டங்களை அறிவித்தன. ஆனால் கணிசமான திட்டங்கள் வெற்றிகரமாக
உரிய மக்களைச் சென்றடையவில்லை.
எனவே, 2025ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட நல்ல திட்டங்களுக்கான நிதியைப் பெற்று, உரிய காலத்தில் ஒதுக்கீடு செய்து, வினைத்திறனான முறையில் மக்களுக்கு அவற்றின் நன்மைகள் சென்று சேர்வதை உறுதிப்படுத்துவது ஒட்டுமொத்த அரச இயந்திரத்தின் கடமையாகும்.
அதேபோல், வரவு – செலவுத் திட்ட விடயதானங்களுக்கு அப்பால், அரசாங்கம் வேறு விவகாரங்கள் தொடர்பில் சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மையினருக்கும் வழங்கிய வாக்குறுதிகளையும் சமகாலத்தில் நிறைவேற்றியாக வேண்டும்.