‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

அனுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் நாட்டைப் பொறுப்பேற்றது முதல், தற்போது வரை முன்னெடுத்து வரும் அரசியல், வெளிவிடும் கருத்துக்கள், நடந்து கொள்ளும் முறைகள் எல்லாம் வேடிக்கையானதாகவும் விநோதமானதாகவும் வில்லங்கமானதாகவுமே காணப்படுவதனால் மக்கள் மத்தியில் அவர்களின் ‘திசைக்காட்டி’ வலுவிழக்கத் தொடங்கியுள்ளதுடன், மக்களின் விசனத்திற்கும் கிண்டலுக்கும் ‘அனுரகுமார சகோதரர்கள்’ ஆளாகி வருகின்றார்கள்.
‘மாற்றம்’ என்ற கோஷத்தினால் மக்களைச் சூடாக்கி, மூளைச்சலவை செய்து, நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றிய திசைக்காட்டியினர், இன்று செய்து வரும் அரசியல் உண்மையில் ‘மாற்றம்’ நிறைந்ததுதான். ஆனால், அது என்ன மாற்றம்?,எதில் மாற்றம்? எப்படிப்பட்ட மாற்றம்? என்று சற்று அலசி ஆராய்ந்தால் திசைக்காட்டியினரின் மூளையில் தான் ‘’மாற்றம்’’ஏற்பட்டுள்ளது என்பதனை நாட்டு மக்கள் நன்கறிய முடியும்.
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பினாமியான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.) யின் பலமே அவர்களின் பேச்சாற்றால் தான். தமது ஆவேச உரைகள் மூலம் மக்களை உசுப்பேற்றுவதில் இவர்களை விஞ்ச ஆள் கிடையாது. இதனால்தான் இவர்களிடம் பேச்சு மட்டுமே இருக்கும் செயல் இருக்காது என அரசியலில், “பழம் தின்று கொட்டை போட்டவர்கள்” பலர் கூறியபோதும், ஜே.வி.பி-என்.பி.பி. காரர்களின் ஆவேச பிரசார உரைகள், நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளில் மூழ்கிப்போன மக்கள் நாட்டில் பெரும் மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில் இவர்களுக்கு வாக்களித்து ஆட்சி பீடம் ஏற்றினார்கள்.
இவ்வாறு மக்களின் ‘நம்பிக்கை’யினால் ஆட்சி பீடம் ஏறியவர்கள், இன்று செய்து வரும் அனுபவமற்ற அரசியலாலும் ‘அனுர அலை’யினால் எம்.பியானவர்களும் அமைச்சர்களானவர்களும் வெளியிட்டு வரும் கோமாளிக் கருத்துக்களினாலும் நடவடிக்கைகளினாலும், முழு நாடும் சிரிப்பாய் சிரிப்பதுடன், “பஞ்சு மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்” என்ற கருத்துபோல, இவர்கள் எதிர்க்கட்சியாகவே இருந்திருக்கலாம் என்ற கருத்துக்களும் வலுப்பெற்று வருகின்றன. இதனால்தான் ‘திசைகாட்டி’ செயலிழக்க முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்தி ஓரளவுக்கேனும் வெறியைத் தக்க வைக்க வேண்டுமென்பதில் ‘அனுரகுமார சகோதரர்கள்’ தீவிரமாக இறங்கியுள்ளார்கள்.
‘திசைகாட்டி’ மூலம் ‘மாற்றம்’ செய்கின்றோம் என நினைத்து, இவர்கள் செய்யும் ஒவ்வொரு மாற்றமும் “பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை’’யாகவே முடிந்து வருகின்றது. அந்த வகையில், இவர்கள் நாட்டில் இதுவரையில் என்ன மாற்றம் செய்துள்ளார்கள் என்பதனை சற்று ஆராய்வோம்.
உண்மை, நேர்மை என முழங்கியதுடன், ஊழல், மோசடிகள், போலி. பித்தலாட்டங்களை ஒழிப்போம் என முழங்கியவர், தமது அரசின் முதல் தெரிவாகத் தெரிவு செய்த சபாநாயகரே ‘போலி கலாநிதி’பட்ட சான்றிதழ் சர்ச்சையில் சிக்கி உண்மையை நிரூபிக்க முடியாது, பதவியேற்ற சில தினங்களிலேயே சபாநாயகர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இதனை ‘குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டவுடனேயே பதவி விலகி முன்மாதிரியாகச் செயற்பட்ட சபாநாயகர்.இதுதான் எமது ஆட்சியின் மாற்றம்’’என விழுந்தும் மீசையில் மண்படாத கதையை திசைக்காட்டியினர் கூறி மக்களைத் திசை திருப்பினர்.
இந்நிலையில், நாட்டில் அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு அது தொடர்பிலான சர்ச்சைகள் வெளிக் கிளம்பிய நிலையில், ‘கடந்த அரசு 20 கிலோ சிவப்பு அரிசியை எடுத்து, வெள்ளை அரிசியைச் சாப்பிடுபவர்களுக்குக் கொடுத்து, அதையும் சாப்பிடச் சொன்னதாலும் அரிசியைக் கோழிகள் அதிகமாக உண்பதனாலும்தான் தற்போது நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் அரிசித் தட்டுப்பாட்டுக்கு ஒரு கையொப்பத்தில் தீர்வு காண முடியும் என முன்னர் ஒரு பேச்சுக்கே கூறியிருந்தேன். எனினும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சவால் மிக்கது’ என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியும் முன்னெப்போதும் ஒருவரும் கூறாத மாற்றான காரணத்தைக்கூறி மக்களைச் சிரிக்க வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக நாட்டில் தேங்காய்க்கான தட்டுப்பாடு ஏற்பட்டு அது தொடர்பிலான சர்ச்சைகள் வெளிக்கிளம்பிய நிலையில், மக்கள் “வீடுகளில் தேங்காய்ப் பால் பிழிவதும் பால் சொதி வைப்பதும், தேங்காய் சம்பல் செய்வதும் தான் தேங்காய் தட்டுப்பாட்டுக்குக் காரணம்” என கைத்தொழில் பிரதி அமைச்ச சதுரங்க அபேசிங்கவும் “தேங்காய்களைக் குரங்குகள் களவாடுவதனாலும் சேதப்படுத்துவதனாலுமே தேங்காய்களுக்குத் தட்டுப்பாடு” என கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால் காந்தவும் கூறி மக்களை விசனப்பட வைத்தனர்.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் ஒன்றரை மணிநேர மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த மின்வெட்டு சில தினங்கள் அமுல்படுத்தப்பட்ட நிலையில் மின் நெருக்கடி தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தபோது பாணந்துறை உப மின்நிலையத்தில் உள்ள மின் கட்டமைப்பில் குரங்கு ஒன்று மோதியதன் காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மின்வெட்டுக்கான பழியைக் குரங்கு மீது சுமத்தினார். இவ்வாறு, நாடு தழுவிய மின்தடையை ஏற்படுத்தி எதிர்பாராத ‘மாற்றமாக’ குற்றவாளியான குரங்கு சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருந்தது.
நாட்டில் ஏதாவது நெருக்கடிகள், பொருள் தட்டுப்பாடுகள் ஏற்பட்டால், குற்றங்கள், ஊழல் மோசடிகள் இடம்பெற்றால் முன்னைய அரசுகளின் காலத்தில் எதிர்க்கட்சிகள் அரசு மீதும் அரசுகள் எதிர்க்கட்சிகள் மீதும் பழி போடுவதுதான் அரசியல் கலாசாரம். ஆனால், இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம் என உறுதியளித்து ஆட்சிக்கு வந்த ‘அனுரகுமார சகோதரர்கள்’ சொன்னது போலவே ஒரு ‘மாற்றம்’ ஏற்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது பழி போடாமல்,குற்றம்சாட்டாமல் தேங்காய் தட்டுப்பாடு, மின் வெட்டுகளுக்கான பழியை, குற்றச்சாட்டை மறுக்க முடியாத, எதிர்த்துப்பேச முடியாத குரங்குகள் மீது போட்டு நாட்டில் முன்னெப்போதுமில்லாத ‘மாற்றம்’ ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
அதுமட்டுமன்றி, தேங்காய்களுக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலைமையை அரசுக்கு ஏற்படுத்திய குற்றத்திற்காகவும் குரங்குகளுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்யவும் இலங்கையில் குரங்குகளைப் பிடித்து ஒரு தனித் தீவில் விடுவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பிடிபட்ட குரங்குகளைக் கொண்டு சென்று விடுவிப்பதற்கு ஒரு தீவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், குரங்குகளைப் பிடிக்கும் பொறுப்பு ஜகத் மனுவரண எம்.பியிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவும் முன்னைய எந்தவொரு அரசும் செய்திராத ‘மாற்றம்’ஆகவே உள்ளது.
தமது அரசைப் பாதுகாத்துக்கொள்ள எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்ட முடியாத நிலையில், குரங்குகளைக் குற்றவாளிகளாக்கி, ‘மாற்றம்’ செய்த ‘அனுரகுமார சகோதரர்கள்’ திசைக்காட்டிச் செயலிழக்க முன்னர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதிலும் ‘மாற்றம்’ ஒன்றைச் செய்துள்ளனர். அதாவது கடந்த அரசுகள் பாராளுமன்றத்தைக் கூட்டி ஏதாவது சர்ச்சைகள் ஏற்பட்டு சில மணி நேரங்களில் ஒத்திவைத்தால் வீணாகப் பாராளுமன்றத்தைக்கூட்டி மக்களின் கோடிக்கணக்கான பணம் வீணடிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி நீலிக்கண்ணீர் வடித்த ‘அனுரகுமார சகோதரர்கள்’ கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூல திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை அறிவிப்பதற்காகப் பாராளுமன்றத்தை ‘25 நிமிடங்கள்’ மட்டும் கூட்டி மக்கள் பணத்தை வீணடித்தார்கள்.
அத்துடன், ஒரு வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமானவரோ அல்லது நிதி அமைச்சரோ சமர்ப்பித்து உரையாற்றுவதற்காகப் பாராளுமன்றம் கூட்டப்பட்டு அன்று வரவு-செலவுத் திட்ட உரை மட்டுமே நிகழ்த்தப்படுவதுதான் பாராளுமன்ற சம்பிரதாயம். வரலாறு. ஆனால், கடந்த 17ஆம் திகதி 2025ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை ஜனாதிபதியும் நிதியமைச்சருமான அனுரகுமார திசநாயக்க சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கான சட்டமூல திருத்தம் தொடர்பான விவாதத்தை நடத்தி பாராளுமன்ற சம்பிரதாயத்தில் வரலாற்றில் ‘அனுரகுமார சகோதரர்கள்’ ‘மாற்றம்’ செய்துள்ளனர்.
இவ்வாறாக ‘மாற்றம்’ என்ற பெயரில் ‘அனுரகுமார சகோதரர்கள்’ செய்யும் அனுபவமற்ற, கோமாளித்தன அரசியல் எதிர்க்கட்சியாக இருந்தபோது, மக்களினால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மரியாதை செலுத்தப்பட்ட ரில்வின் சில்வா, அனுரகுமார திசாநாயக்க, விஜித ஹேரத், சுனில் கந்துன் நெத்தி போன்ற அரசியல் தலைவர்களின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாகவும் மக்கள் பெரிதும் எதிர்பார்த்த தேசிய மக்கள் சக்தி அரசின் மீது நம்பிக்கை இழக்க வைப்பதுமாகவே உள்ளது. இவ்வாறான அனுபவமற்ற, கோமாளித்தனமான அரசியலை ‘அனுரகுமார சகோதரர்கள்’
தொடர்ந்தால் நாட்டில் மீண்டும் ஒரு ‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.