சுதந்திர இலங்கையின் வர்க்கக் குணாம்சங்கள்

இலங்கைகுச் சுதந்திரம் கிடைத்தாலும், சமூகக் கட்டமைப்பில், இனம் மற்றும் சாதியின் பழைய வேறுபாடுகள் தொடர்ந்து அடிப்படையாக இருந்தன. ஆனால், கொலனித்துவ காலத்தில் ஏற்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார செயல்முறைகளின் விளைவாகத் தோன்றிய புதிய வர்க்கப் பிளவுகள் சமூகத்தை மறுசீரமைப்பதிலும் தேசிய விவகாரங்களின் இயக்கத்தை நிர்ணயிப்பதிலும் நேரடியாகச் செயல்பட்டன.
மேற்கத்திய சிந்தனையின் விளைவிலான, முதலாளி வர்க்கம், நடுத்தர வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற மூன்று படித்தான வர்க்க அமைப்பு இலங்கைக்கு நேரடியாகப் பொருந்தாது, ஏனெனில், ஒருநடுத்தரவர்க்கமும் தொழிலாளி வர்க்கமும் (தொழில்துறை பாட்டாளி வர்க்கம் அல்ல) இருந்த போதும், சர்வதேச அளவில் தனது நலன்களைப் பாதுகாக்கும் வழிவகைகளுடன் தேசிய (அதாவது, சுதந்திரமான) முதலாளித்துவம் நடைமுறையில் இல்லை. இலங்கையின் மத்தியதர வர்க்கம், கருவுற்ற முதலாளித்துவ வர்க்கமாக இருந்த உயர், நடுத்தர வர்க்கமாகவும், கீழ் நடுத்தரவர்க்கமாகவும் கடுமையாகப் பிளவுபட்டது.
உயர் நடுத்தர வர்க்கம், எண்ணிக்கையில் மிகச் சிறியதாக, முக்கியமாக தொடர்புடைய குடும்பங்களைக் கொண்டது. இது புதிய சமூகக் கட்டமைப்பின் உச்சத்தில் நின்றது. அது கொலனித்துவத்தில் இருந்து பயனடைந்து இப்போது ஏகாதிபத்தியத்தின் கூட்டாளிகளாக இருக்கும் குழுக்களைக் கொண்டிருந்தது. இது இரண்டு பிரிவுகளைக் கொண்டிருந்தது, ஒன்று தோட்டங்களில் இருந்தும் மற்றொன்று கொலனித்து வநிர்வாக அமைப்பிலிருந்தும் எழுந்தது.
தோட்டங்களை அமைத்தமையானது பல புதிய வழிகளைத் திறந்தது, மேலும் சில சிங்களவர்கள் தோட்டங்களுக்கு வேலை செய்யச் சென்றனர். காடுகளை வெட்டுதல், கட்டிடம் மற்றும் போக்குவரத்து ஒப்பந்தக்காரர்கள், சில்லறை வணிகர்கள், உணவு வழங்குபவர்கள் போன்றவற்றில் இவர்கள் ஈடுபட்டனர். தொடக்க நாட்களில் இந்த நடவடிக்கைகள் மிகவும் இலாபகரமானவை, மேலும் இந்த நபர்கள் பின்னர் கணிசமான நிலங்களைக் குவித்துச் செல்வந்தர்களாயினர். காலப்போக்கில் அவர்கள் தோட்ட மற்றும் சுரங்க உரிமையாளர்களாக வெளிப்பட்டனர். இருப்பினும், அவர்கள் உண்மையான தொழில்முனைவோர் குழுவாக மாறத் தவறி விட்டனர். உற்பத்தியில் நேரடியாகப் பங்கேற்பதற்குப் பதிலாக, அவர்களில் பலர் தோட்டக்காரராக இல்லாத ‘ராஜாக்கள்’ ஆனார்கள். அவர்களின் முயற்சிகள் திறமையற்ற முறைகள் மற்றும் வீழ்ச்சியால் குறிக்கப்பட்டன. நிலத்தின் மீதான நிலப்பிரபுத்துவ நாட்டம் காரணமாகவும், தோட்டங்களின் உரிமையானது அவர்களுக்குத் தேவையான அந்தஸ்தையும் கௌரவத்தையும் பிரிட்டிஷ் தோட்டக்காரர் இராஜ்ஜியத்துடன் கிட்டத்தட்டச் சமத்துவத்தின் அடிப்படையில் தொடர்புப்படுத்துவதன் காரணமாகவும் அவர்கள் தோட்டங்களை வாங்கினார்கள். 1900களில், இந்த அடுக்கு குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சியடைந்தது.
மேல் நடுத்தர வர்க்கத்தின் மற்ற பிரிவினர் கொலனி நிர்வாகத்தின் சேவையில், ஆரம்பத்தில் இடைத்தரகர்களாகவும், கொலனியின் அரசாங்கத்தில் ‘விசுவாசமான பூர்வீக மக்களுக்கு’ ஒதுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை நிறைவேற்றுவதில் பங்களித்து மேநிலையாக்கம் அடைந்தனர். படிப்படியாக அந்த ‘ஆங்கிலத்தின் மாயாஜால அறிவைப்’ பெறுவதன் மூலம் அவர்கள் அதிக பங்குகளுக்குத் தகுதி பெற்றனர் மற்றும் உள்ளூர் மக்களின் மீது அதிகாரம் மற்றும் சலுகைகளைப் பெற்றனர். பிந்தைய கட்டத்தில், இந்த இரண்டு பிரிவுகளிலிருந்தும் சில தனிநபர்கள் கட்டத் தொழில், ஏற்றுமதி வணிகம், கப்பல் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்குச் சென்றனர்.
இந்த பல்வேறு கூறுகள் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் ஒரே மாதிரியான உயர் நடுத்தர வர்க்கத்தை உருவாக்கியது. ஆளும் பிரிட்டிஷ் கொலனியாதிக்கத்திற்கு மட்டுமே கீழ்ப்பட்ட ஒரு மேலாதிக்க உயரடுக்கு நிலைபெற ஆரம்பித்தது. அவர்கள் நாட்டின் சாதாரண மக்களுடன் பொதுவான எதையும் கொண்டிருக்கவில்லை, அவர்கள் ஒரு வர்க்கமாகப் பிரிந்தனர். உண்மையில், சாதாரண இலங்கை மக்களுக்கு அவர்கள் அந்நியர்கள். உணர்வு, சித்தாந்தங்கள், ஆர்வங்கள், உடை, நுகர்வு முறைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், அவர்கள் எல்லா வகையிலும் ஆங்கிலேயர்களாக இருந்தனர், அவர்கள் அவ்வாறு இருக்க விரும்பினர். அவர்கள் ஆங்கிலத்தில் கல்வி கற்று, ஆரம்பகால கிறிஸ்தவர்களாக மாறி, ஓரளவு தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்த்து, மேற்கத்திய எஜமானர்களின் திறமைகளைப் பெற்றனர், பாரம்பரிய மதிப்புகள் மற்றும் பழக்கவழக்கங்களை நிராகரித்து, 1931 இல் உள் ‘சுய-அரசு’ நிறுவப்பட்டதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் உள்ளூர் அங்கமாக ஆனார்கள். அவர்களின் பொருளாதார நலன்களைக் கட்டியெழுப்பவும், வர்க்க ஒற்றுமையை நிலைநாட்டவும், அவர்கள் 1908 இல் நிறுவப்பட்ட கீழ் நாட்டு உற்பத்தியாளர்கள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இவர்களில் சிலர், ஆங்கிலேயர்களின் பதவிகளையும் சலுகைகளையும் தாங்களாகவே எடுத்துக் கொண்டு புதிய ஆட்சியாளர்களாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால் உந்தப்பட்டார்கள். ஆனால் இன்றைய இலங்கையின் வரலாறு இவர்களது நடவடிக்கையைக் காலனித்துவத்தின் குறிப்பிடத்தக்க விமர்சனத்தின் காரணமாகவும், மக்களுக்குச் சேவை செய்வதில் உள்ள ஈடுபாட்டின் காரணமாகவும் அவர்கள் உந்தப்பட்டதாகப் பொய்யான வியாக்கியானங்கள் வழங்கப்படுகின்றன. டொனமோர் அரசியலமைப்பு வயது வந்தோருக்கான உரிமையை வழங்கிய போதும், ‘ஆங்கில மொழியைப் பேசவும், படிக்கவும் மற்றும் எழுதவும் தெரியாத’ எவரையும் சட்டவாக்க சபைக்குத் தேர்ந்தெடுப்பதைத் தடை செய்தபோது இந்த வர்க்கம் தனது அரசியல் உயர்வை உறுதி செய்தது. இது இந்த வர்க்கத்தின் முக்கியஸ்தர்களை மந்திரிகளாக ஆவதற்கும் 1931 முதல் 1947 வரை உள்ளக ‘சுய-அரசு’ இயந்திரத்தை இயக்குவதற்கும் உதவியது.
1940களின் பிற்பகுதியில் 200,000 என்று மதிப்பிடப்பட்ட கீழ் நடுத்தர வர்க்கம், பொது, வணிக மற்றும் வங்கி சேவைகளில் சம்பளம் பெறும் ஊழியர்களின் நடுத்தர அடுக்குகளை உள்ளடக்கியது, அத்துடன் ஆசிரியர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு நில உரிமையாளர் விவசாயிகள், வணிகர்கள், கடைக்காரர்கள் மற்றும் பலர் இதற்குள் அடங்குகின்றனர். அவர்களில் நியாயமான எண்ணிக்கையிலானோர், தங்கள்நிலத்தை வாழ்வாதாரத்திற்காகப் பயிரிட்டனர் அல்லது குத்தகைக்கு எடுத்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டனர். பொது மற்றும் வணிகப் பணிகளில் இருப்பவர்கள், இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து மிகவும் போர்க் குணமிக்க தொழிற்சங்கங்களில் தங்களைத் தாங்களே ஒழுங்கமைத்துக்கொண்டு, அவ்வப்போது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களுக்கு சிறந்த சம்பளம் மற்றும் மேம்பட்ட சேவை நிலைமைகளை வென்றெடுத்தாலும், கீழ் நடுத்தர வர்க்கத்தினர், பொதுவான வர்க்க உணர்வைப் பகிர்ந்து கொள்ளாமல், பழமைவாதமாக இருந்தனர். இந்த வகுப்பைச் சேர்ந்தவர்களின் சேமிப்பு முதன்மையாக நிலம் மற்றும் தங்க நகைகள் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்கும், அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி கற்பதற்கும், அவர்கள் பாதுகாப்பான அரசு வேலைகளைப் பெறுவதற்கும், தங்கள் குழந்தைகளுக்குச் சீதனம் வழங்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது. இந்த வர்க்கம் ஒருமையில் லட்சியம் இல்லாதது, அதன் நிலையை மேம்படுத்துவதற்கான போராட்டத்தில் காலம் கடந்த பாதைகளைப் பின்பற்ற விரும்பியது.
தொழிலாள வர்க்கம் நகர்ப்புற, கிராமப்புற மற்றும் தோட்டத் தொழிலாளர்களை உள்ளடக்கியது. இந்த மூன்று பிரிவுகளும் ஒருவருக்கொருவர் தனிமைப்படுத்தப்பட்டனவாகவே இருந்தன. நகர்ப்புற தொழிலாளர்கள் முக்கியமாக கொழும்பு துறைமுகத்தில் வாழ்கின்றனர்,
மேலும், வீதி மற்றும் ரயில் போக்குவரத்து, ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஆரம்ப காலத்திலிருந்தே, இடதுசாரிக் கட்சிகளின் கீழ் தொழிற்சங்கங்களாக தங்களை ஒழுங்கமைத்து, ஒற்றுமை மற்றும் போர்க் குணத்தின் குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டின் மூலம் ஊதிய உயர்வு மற்றும் பிற நன்மைகளைப் பெற்றனர். கிராமப்புறத் தொழிலாளர்கள் முக்கியமாக நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களாக
இருந்தனர். அவர்கள் பருவகால
வேலைகளை மட்டுமே தேடினார்கள். சுதந்திரமடைந்த இலங்கையில் அவர்கள் சுமார் 300,000 பேராக இருந்தனர். முக்கியமாக அவர்கள் முற்றிலும் ஒழுங்கமைக்கப்படாதவர்கள். இந்த வர்க்கத்தில் இறுதியாக, தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணிபுரியும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சுமார் 800,000 பேர் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் மிகப்பெரிய அங்கத்தினராவர். அவர்கள் இலங்கை சமூகத்தில் மிகவும் பின்தங்கிய அடுக்குகளாகும். பாதிக்கும் மேற்பட்டவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் மற்றும் தோட்டங்களுக்கு வெளியே வேலை வாய்ப்பு அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. 1948 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் அவர்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டு, நாடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். 1947 தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களித்த தோட்டத் தொழிலாளர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தச் சட்டம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஒரு மில்லியன் தோட்டத் தொழிலாளர்கள் குடிமக்கள் அல்ல
என்று 1953 மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டியது.