ஆற்றலுள்ள பெண்களை அதிகாரமுள்ளவர்களாக்க பெண்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அனுசியா ஜெயகாந்த்

சமூக அக்கறையுடன் முன்நிற்கும் ஆற்றலுள்ள பெண்களை அதிகாரமுள்ளவர்களாக்க பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மறுக்கப்படும் உரிமைகள் அனைத்தும் எமக்கானதாக மாற்றப்படும் என்று யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண்கள் சம்மேளனத்தின் தலைவரும் வடக்கு மாகாண சமூக ஆளுகைத்தளத்தின தலைவியுமான திருமதி அனுசியா ஜெயகாந்த் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட பெண்களின் நிலைமைகள் உட்பட சமகாலத்தில் பெண்கள் முகங்கொடுக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கான யோசனைகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கேள்வி: பல பெண்கள் அமைப்புக்களை தலைமையேற்று வழிநடத்துவதுடன், தீவிரமான பெண்ணிய செயற்பாட்டாளராகவும் இருந்து வருகின்றீர்கள். அந்தவகையில் யாழ் மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அவர்களது செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன?
பதில்: பல்வேறு சமூக அமைப்புக்களின் ஊடாக எமது மக்கள் மத்தியில் செயற்பட்டு வருகின்றமையினால், பல்வேறு மட்டங்களில் வாழ்ந்து வருகின்ற பெண்களுடனும் நெருக்கமாக செயற்படுகின்ற சந்தர்ப்பம் எனக்கு அதிகமாகவே காணப்படுகின்றது.
அந்தவகையில் என்னுடைய அவதானத்தின் அடிப்படையில். அண்மைக்காலமாக எமது பெண்கள் மத்தியில் ஒரு வகையான புத்துணர்வு ஏற்பட்டு வருவதையும், தங்களினால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இது உண்மையிலேயே மகிழ்;ச்சியானது.
ஆனால், ஆண்களை முன்னுமைப்படுத்திய இறுக்கமான சமூகக் கட்டமைப்புக்களினுள் காலம் காலமாக வாழ்;ந்து வந்த ஒரு சமூகத்தின் சந்ததியினர் என்ற வகையில், இன்னும் சில மூட நம்பிக்ககைகளும், மேலாதிக்க சிந்தனைகளும் இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை.
அவ்வாறான பிற்போக்குத்தனங்களில் இருந்து எமது பெண்களை முழுமையாக விடுவித்து அவ்வாறானவர்களுக்கு தன்னம்பிக்கை அளிப்பதே எமது செயற்பாடுகளின் அடிப்படையாக இருந்து வருகின்றது
அதனடிப்படையில் நாள்தோறும் ஏதோ ஒரு விடயத்தை வைத்து அல்லது அடையாளம் கண்டு சமூகப் பெண்கள் சார்ந்தும் அவர்களது உரிமைகள் சார்ந்தும் தொடர்ச்சியாக உரையாடவேண்டிய தேவை இருக்கிறது. ஆனாலும் பிரச்சினைகளின் வடிவங்கள் காலத்துக்கு காலம் உருமாறி வருகின்றன.
பெண்களுக்கான உரிமை என்பது ஏற்கனவே இருந்துகொண்டே இருக்கின்றது. அதை பெண்கள் எவ்வாறு கையாண்ட தம்மை வளப்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதிலேயே அதன் வெற்றியும் தோல்வியும் தங்கியுள்ளது.
அண்மைக்கால தரவுகளைப் பார்க்கின்றபோது, பெண்கள் தான் இந்த நாட்டில் அரச இயந்திரத்தை இயக்கும் பல்வேறுபட்ட பொறுப்புகளில் இருக்கின்றார்கள். அதேபோல நாட்டின் குடிப்பரம்பலிலும் நாம்தான் முன்னிலை பெற்றிருக்கின்றோம்.
இதனூடாக எம்மிடமே அதிக உரிமைகளும் அதிகாரங்களும் இருக்கின்றன. இதை பெண்கள் தான் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்நிலையில் எப்படி நாம் எமக்கான உரிமைகள் கிடைகக்கப் பெறவில்லை மறுக்கப்படுகின்றது என கூறமுடியும்?
கேள்வி : எமது நாட்டில் இன்றைய சூழலில் அரசியலில் பெண்களின் சமத்துவம் எவ்வாறானதாக இருக்கின்றது?
பதில் : எமது நாட்டில், அரசியலிலும் அதுசார் பொறுப்புகளிலும் பெண்களின் வகிபாகம் குறைவாக இருக்கின்றதென்பது உண்மைதான். ஆனால் அதை மட்டும் வைதத்துக்கொண்டு எமக்கு சம உரிமை கிடைக்கவில்லை அல்லது வழங்கப்படவில்லை என்ற முடிவுக்கு வருவதை நான் நிராகரிக்கின்றேன்.
எமது நாட்டின் கடந்தகால சூழ்நிலையே பெண்கள் மத்தியில் அரசியல் வகிபாகத்தில் விருப்பின்மையை உருவாக்கியது. அத்துடன் குடும்ப வரையறைகள், கலாசார விழுமியங்கள், கட்டமைப்புகள் என்பன அதை நிர்ணயிக்கும் ஏதுநிலைகளாகவும் அமைந்துவிட்டன.
குறிப்பாக ஆண்கள் மீது சேறுபூசப்பட்டால் அது சில நாட்களில் கழுவப்பட்டுவிடும் அல்லது அது தவறில்லை என்ற நிலை உள்ளது. ஆனால் பெண்கள் மீது அவ்வாறான ஒரு தாக்கம் ஏற்பட்டால் அது கழுவப்படமுடியாத வகையில் சமூகத்தின் மத்தியில் இருக்கின்றது. இதுவே இந்த பின்னடிப்புக்கு வலுச்சேர்த்து வருகின்றது. ஆனால் இன்று அந்த நிலை சற்று மாற்றங்கண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதேநேரம் தேர்தல்களில் பெண்கள் பெண்களுக்கு வாக்களிப்பது குறைவு என்பதும் எமது நாட்டில் ஒரு சாபக்கேடாக உள்ளது. இதற்கு விழிப்புணர்வு இல்லை என்ற கருத்தை நான் மறுக்கின்றேன். ஏனெனில் வாக்களிப்பதென்பது அவரவர் உரிமை. இந்த இடத்தில் பெண்கள் ஏதோ ஒரு வகையில் அல்லது அவர்களது இயலாமையால் ஆண்களை நோக்கி தமது வாக்குரிமையை அடையாளப்படுத்தும் சூழல் உருவாக்கப்படகின்றது.
இந்த நிலையில் மாற்றம் வேண்டும். அவ்வாறான ஒரு களநிலை ஏற்பட்டால், நிச்சயம் இலங்கைத் தீவின் அரசியலில் ஆண்களை விட பெண்களே பெரும்பான்மையாக இருப்பர்.
இதேநேரம் இலங்கைதான் ஒரு நாட்டை ஆளும் தகுதி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் உண்டு என்ற விதையை ஶ்ரீமாவோ பண்டாரநாயகா என்ற எமது தேச புதல்வி மூலம் உலகிற்கு விதைத்துக் காட்டியது. அதன் தொடராகவே இன்று பல நாடுகளிலும் பெண்கள் அரச தலைவர்களாக வலம்வருகின்றனர். இது வரலாறு.
அதேபோன்று 2018 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை பெண்கள் மத்தியில் அரசியல் பிரவேசம் 25 வீதம் என்ற அடைவு மட்டத்தை கண்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தேர்தல் காலங்களில் இவ்வாறான சொற்பதங்கள் வருவதெல்லாம் தேர்தல் வேட்புமனு விண்ணப்பங்களை நிரப்புவதற்கான ஒன்றாகவும் பார்கப்படுகின்றது. அதனால் இந்த நிர்ணய முறைமூலமான அடைவு மட்டத்தை நான் ஏற்கவில்லை.
எமது சமூகத்தில் எமது பெண்கள் ஆண்களுக்கு நிகரான அடைவு மட்டத்தை சமூகத்தினாலேயே அதாவது வரையறைகளூடாக அல்லாது நேரடியாகவே பெற்றுக்கொள்ளும் நிலை உருவாக வேண்டும் என்பதே எனது விருப்பம்.
கேள்வி : பொது விடயங்கள் மற்றும் அரசியலில் பெண்களின் வளரச்சிப் போக்கில் சமூக ஊடகங்கள் மற்றும் அவதூறுகiளின் தாக்கம் தடையை ஏற்படுத்தவதாக உள்ளதாக எண்ணுகின்றீர்களா?
பதில் : சமூகத்தில் பெண்களின் வளர்சியில் ஆண்களால் மட்டுமல்ல பெண்களாலும் பல தடைகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றது.அத்தகையவர்களது செயற்பாடுகளையோ அல்லது அவர்களது கதைகளையே கேட்டுக் கொண்டிருந்தால் அவரவர் குடும்பத்தைகூட நிர்வகிக்கும் தகுதி பெண்களுக்கு இல்லாது போய்விடும்.
அத்தகையவர்கள் தம்மீது ஆற்றலும் அக்கறையும் இல்லாதிருப்பதை திருத்திக்கொள்ளாது இன்னொரு பெண்ணின் திறமைகளை தடுப்பதிலும் சிந்தனைகளை சிதறடிப்பதிலும் செல்லும் பாதையில் தடையை ஏற்படுத்துவதிலும் ஒற்றுமைப்பட்டு செயல்படும் நிலை இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் மட்டும் தான் காணப்படுகின்றது.
இதை பார்க்கும்போது பெண்களின் ஆளுமைக்கும் அவர்களது வளர்சிப் போக்கிற்கும் அவர்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதிலும் ஏனைய தரப்பினரது தடைகளைவிட பெண்கள் மட்டத்திலும் அதிகளவு இருக்கின்றது. இதை நானும் எதிர் கொண்டுள்ளேன்.
இதேநேரம் அண்மைய காலங்களில் சமூக ஊடகங்களின் தாக்கம் அனைத்து இடங்களிலும் வலுப்பெற்றுள்ளது. இது சரியான வகையில் கையாளப்படாத நிலையும் இருக்கின்றது. இந்த சமூக ஊடகங்கள் அதிகளவில் பெண்களை அச்சுறுத்தும் அல்லது ஒதுங்கிச் செல்லும் பொறிமுறைகளுடனேயே தமது இடுகைகளை வெளிக்கொணர்கின்றன. இவற்றின் தாக்கமும் பெண்களை முடக்குவதாக எண்ணுகின்றேன்.
கேள்வி : அடுத்த தலைமுறையான இன்றைய சிறுமிகள் மற்றும் சிறுவர்களை வளர்க்கும் முறைமை எவ்வாறானதாக இருக்க வேண்டும்? குறிப்பாக தற்போதைய கலாசார மற்றும் சமூக கட்டமைப்பின் அடிப்படையில் இதுதொடர்பில் உங்களின் கருத்து என்ன?
பதில் : எமது முன்னோரின் காலத்தில் இருந்த வரையறைகள் கட்டுப்பாடுகள் இன்று முற்று முழுமையாக மாறிவிட்டது. பெரும்பாலான பெண்கள் தமது பாரம்பரிய கலாசார விடயங்களையே மாற்றியமைத்து நவீன உலகிற்கேற்ப தங்களை தயார்ப்படுத்தி விட்டனர் என்றே எண்ணுகின்றேன். அதேநேரம் பாரம்பரியங்கள் சிதைவடையாத வகையிலான மற்றங்களாக அவை இருப்பதும் அவசியமென்றும் வலுயுறுத்துகின்றேன்.
குறிப்பாக மாறியுள்ள கலாசார போக்குக்கு ஏற்ப எமது பிள்ளைகளை விட்டுவிட முடியாது. கலாசாரங்களை கட்டி வளர்ப்பதனூடாகத்தான் எமது இனத்தின் இருப்பையும் தனித்துவங்களையும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
அதனால் எமது கடந்தகால வரலாறுகளுடன் சிறுவர்களை அன்பு பாசம் மனிதநேயத்தை ஊட்டி வளர்ப்பது அவசியமாகும். இதேவேளை தொடர்ந்தும் நாம் பெண்களுக்கு உரிமை வேண்டும் அது தடுக்கப்பட்டு வருகின்றது அல்லது வழங்க மறுக்கப்படுகின்றது என்ற எண்ணத்தை எமது பெண்கள் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும்.
இதேநேரம் பெண்களாகிய எம்மை நோக்கிய வரும் தடைகள் போன்று ஆண்கள் மத்தியிலும் இன்று உருவாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. அந்தவகையில் பெண்களாகிய நாம் தான் இந்த தேசத்தை நிர்ணயிக்கும் ஆற்றலுள்ளவர்கள் என்ற எண்ணத்தை வலுவாக எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இதேநேரம் இன்றைய உலகில் திறமையுடனும் ஆற்றலுடனும் யார் முந்துகின்றார்களோ அவர்களே ஆளுகின்றனர். ஏனையவர்கள் ஆளப்படுகின்றனர். இதுவே யதார்த்தம். இதில் ஆண்கள் அதிகளவில் வெற்றிபெற்றுவரும் நிலையே எமது மாவட்டத்திலும் சரி நாட்டிலும் சரி இருக்கின்றது.
இதை பெண்கள் உணர்ந்தவர்களாக அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திப்பவர்களாக இருந்தால் நடக்கும் பந்தையத்தில் நாம் முந்திக்கொக்கொண்டு அந்த அரியாசனத்தை ஆளுகை செய்யலாம்.
கேள்வி : ஒரு பெண்ணியவாதியாக – அதுசார் செயற்பாட்டாளர்களாக இருப்பதோடு அரசியல் வாதியாகவும் இருக்கின்றீர்கள். அந்தவகையில் அரசியல் செயற்பாடுகளில் தேர்தல்களில் உங்கள் வகிபாகம் எவ்வாறிருக்கின்றது.
பதில் : நான். ஆரம்பகாலத்தில் பிரதேச மட்ட பொது அமைப்புகள் பெண்கள் அமைப்புகளில் பதவிநிலை பொறுப்புகளில் இருந்து வ்ந்தேன். அதன் பின்னர் மாவ்ட்ட ரீதியான பதவிநிலை பொறுப்புகளிலும் இடம்பிடித்து அந்த அமைப்புகளை சிறப்பாக முன்னெடுத்தும் வந்திருக்கின்றேன்.
இந்நிலையில் மக்கள் பணியை வலுவூட்டும் வகையில் ஓர் அரசியல் பின்னணியின் அவசியத்தின் தேவையையும் உணர்ந்தேன். எனது அரசியல் பயணத்தில் 2014 ஆம் ஆண்டுகளில் முழுமையாக காலடி எடுத்து வைத்தேன். இதேவேளை எனது கணவரின் அரசியல் மற்றும் ஊடகம் சார் பின்னணியும் எனக்கு உந்துதலைக் கொடுத்து வருகின்றது.
கேள்வி : யுத்தத்தின் பின்னரான இன்றைய வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பெண்களது வாழ்வியல் நிலை குறித்து?
பதில்: நாட்டில் யுத்தம் நிறைவுற்று தற்போது ஏறத்தாள 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும் மக்களின் வாழ்வியலில் குறிப்பாக பெண்களில் வாழ்வியலில் இன்னும் காத்திரமான மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து
குடும்பத்தை தாங்கும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள். அவயவங்களை இழந்த பெண்கள் தொழில் வாய்ப்பின்றி வறுமையில் இடர்படும் பெண்கள் என்ற போர்வையில் இலட்சக்கணக்கான பெண்கள் எம்மத்தியில் இன்றும் வாழ்க்கைக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களது மீட்சிக்கு இன்னமும் முழுமையான விடை கிடைக்கவில்லை என்பது உண்மை.
இதேநேரம் பெண்களை வளப்படுத்தும் திட்டங்கள் என்ற போர்வையில் ஐசிங் கேக் பயிற்சி தையல் பயிற்சி, பேசியல் பயிற்சி என்று காலச் சூழலுக்கு ஒவ்வாத திட்டங்களை கொண்டுவந்து திணிப்பதையும் ஏற்க முடியாது. குறிப்பாக இந்த பெண்களின் மீட்சிக்கு பெண்களுக்கு குறிப்பாக பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களுக்கு நிலையான பொருளாதார கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
அத்துடன் அரசாங்கத்தாலோ அன்றி அரச சார்பற்ற நிறுவனங்களாலோ வழங்கப்படும் வாழ்வாதார உதவிகள் ஒவ்வென்றும் நிலையான பொருளாதார ஈட்டலுக்கானதாக இருக்க வேண்டும். குறித்த உதவியை வழங்கும் போது தொழில் முயற்சியை அவர்கள் முன்னெடுப்பதற்கான பயிற்சிகளும் முறையாக வழங்கப்பட்டு அத்துறையை தொடர்ச்சியாக கண்காணித்து அதனை மேலும் வலுவூட்டவும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
போர் கொடுத்த வலியுடன் வேறுபல துன்ப துயரங்களுடனும் இன்று பல பெண்கள் நாளாந்தம் கண்ணீர் சிந்தியவாறு தமக்கான எதிர்காலத்தை தேடியபடி நிலையான ஒரு வாழ்வுக்காக ஏங்கி நிற்கின்றார்கள். இதைவிட சமூகத்தில் தற்போது புரையோடியுள்ள போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனை அதிகரிப்புகளால் அதை அதிகளவில் பாவிக்கும் ஆண்களைவிட பெண்களே பல வழிகளிலும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக சட்டத்தினூடாக கணவர் ஒரு குற்றத்துக்கான தண்டனை பெறும் நிலைக்கு சென்றால் அந்த குடும்பத்தின் நாளாந்த உணவுக்கான உத்தரவாதமே இல்லாது போகின்றது. இதனாலும் பெண்களே பாதிக்கின்ற நிலையும் உருவாகின்றது.
கேள்வி : இறுதியாக பெண்களுக்கு நீங்கள் கூறு நினைப்பது என்ன?
பதில்: பெண்களாகிய நாம்;, ஆற்றலும் ஆளுமையும் ஆர்வமம் கொண்டுள்ள பெண்களை தூக்கிவிடும் ஏணிகளாக இருப்ப்பது அவசியம்.
தான் பெற்றுக்கொண்ட தெளிவூட்டலை தான் சார்ந்து வாழும் சமூகத்துக்கு கடத்த வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு பெண்களுக்கும் இருக்கிறது. இதனைப் பெண்கள் தனித்தும் கூட்டாகவும் முன்னெடுக்க வேண்டும்
தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிந்த ஒரு பெண், சாதித்தவளாகவும் சமூகத்தைப் பாதுகாப்பதற்கான அடிப்படைத் தகைமையைப் பெற்றுக் கொண்டவளாகவும் விளங்குகின்றாள்.
குடும்ப வன்முறையினாலோ, பொருளாதார வன்முறையினாலோ, பாலியல் ரீதியான வன்முறைகளினாலோ தான் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்து கொள்கிற பெண், மற்றும் பாதிக்கப்படுகின்ற சூழ்நிலைகள் துரதிஷ்டவசமாக ஏற்படுகின்றபோது அதிலிருந்து தன்னை மீட்டெடுக்கத் தெரிந்த பெண் மக்களின் தலைவியாக வருவதற்கான தகுதியைப் பெறுகிறாள். அந்த நம்பிக்கை என்னிடம் உண்டு.
அத்துடன் வீழ்ந்து கிடக்கும் எமது பெண்களை பெண்கள்தான் தூக்கி நிறுத்த வேண்டும். யுத்தம் தந்த அழிவுகளால் இன்று ஆயிரமாயிம் பெண்கள் கணவரை இழந்த நிலையிலும் குடும்ப பாரங்களை சுமந்த நிலையிலும் நிரந்தர பொருளாதார ஈட்டல்கள் இன்றிய நிலையிலும் ஏன் ஒரு நேர உணவுக்கே அடுத்தவர் கைகளை எதிர்பார்த்திருக்கும் நிலையிலும் இருக்கின்றனர்.
இந்த அவலங்களை போக்க ஏன் நாம் அடுத்தவரை நாட வேண்டும்? இலங்கை மக்கள் பரம்பலில் அதிக வகிபாகத்தை கொண்டுள்ள பெண்களாகிய நாம் எமக்கான வலுவினை உருவாக்க பொது அமைப்புகளிலும் சரி பிரதேச கட்டமைப்பகளிலும் சரி அரசியல் கட்டமைப்பிலும் சரி, சரியான தூர நோக்கோடு மாற்றத்தை உருவாக்கினால் அதை சாதித்துக் காட்டுவது சாத்தியமாகும் என நினைக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் எமது நாட்டில் பெண்களாகிய எமக்கு முழுமையான அதிகாரங்கள் இருக்கின்றபோதிலும் அதைவிட மேலதிகமாக சட்டத்தினூடாக கிடைக்கப்பெற்றுள்ளதாகவே கருதுகிறேன்.
அந்தவகையில் தத்தமது பிரதேசங்களில் சமூக அக்கறையுடன் முன்நிற்கும் ஆற்றலுள்ள பெண்களை அதிகாரமுள்ளவர்களாக்க பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் மறுக்கப்படும் உரிமைகள் அனைத்தும் எமக்கானதாக மாற்றப்படும் என்பதுடன் பெண்களின் எதிர்காலமும் மாற்றமடையும் சாத்தியம் உருவாகும்.