;
Athirady Tamil News

தொந்தரவு தரும் மீனவர் தகராறுக்கு தீர்வு காணுதல்

0

ரி. இராமகிருஷ்ணன்

கடந்த வாரம் இலங்கை பாராளுமன்றத்தில் சபை முதல்வரான பிமால் இரத்நாயக்க இலங்கை கடற்பரப்பில் இடம்பெறும் “சட்டவிரோத மீன்பிடித்தலுக்கு “எதிராக” தீர்க்கமான நடவடிக்கை” எடுக்குமாறு இந்திய மத்திய அரசாங்கத்தையும் தமிழ்நாடு மாநில அரசாங்கத்தையும் கேட்டுக்கொண்டார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான இரத்நாயக்க ஆளும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கியமான ஒரு தலைவர்.

உள்நாட்டுப்போர், பொருளாதார நெருக்கடி மற்றும் வெள்ளப்பெருக்கு காலப்பகுதிகளில் பொதுவில் இந்திய மத்திய அரசாங்கமும் குறிப்பாக தமிழ்நாடு மாநில அரசாங்கமும் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை நன்றியோடு நினைவுபடுத்திய இரத்நாயக்க, சட்டவிரோத மீன்பிடியினால் பாதிக்கப்பட்டிருக்கும் வடமகாண தமிழ்பேசும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கு உதவுவதே ” உண்மையான உதவி” என்று தெளிவாகக் கூறினார்.

நீண்டகாலத்துக்கு முன்னரே தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டிய பாக்குநீரிணை மீன்பிடிப் பிரச்சினை குறித்து அண்மைய வருடங்களில் இலங்கையின் உயர்மட்ட தலைவர் ஒருவர் மிகவும் வலிமையான முறையில் கருத்து தெரிவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.

2015 மார்ச்சில் அன்றைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கையின் கடற்படை எடுத்த நடவடிக்கையை நியாயப்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் மீனவர்களை சுடுவது சட்டபூர்வமானதே என்று கூறியிருந்தார்.

கெடுதியான நடைமுறை

இந்திய வெளியுறவு அமைச்சோ அல்லது தமிழ்நாடு அரசாங்கத்தின் பிரதிநிதியோ இதுவரையில் இரத்நாயக்கவின் கருத்துக்கு பிரதிபலிப்பை வெளிக்காட்டவில்லை. இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களையும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தையும் சேர்ந்த மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை தேடி சர்வதேச கடல் எல்லை கடந்து செல்வது எல்லோருக்கும் தெரிந்த இரகசியம்.

சட்டவிரோத மீன்பிடிக்கு அப்பால் இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது குறித்து வடமாகாண மீனவர்கள் முறையிட்டு வருக்கிறார்கள். கடல்சார் சூழல்தொகுதிக்கு அழிவை ஏற்படுத்துகின்றமைக்காக பரவலாக கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கும் இந்த இழுவைப்படகு மீன்பிடி கடல்வாழ் உயிரினங்களின் அழிவுக்கும் மீன் இனப்பெருக்க வட்டம் தகர்க்கப்படுவதற்கும் காரணமாக இருந்து வருகிறது.

சமச்சீரற்ற பொருளாதார உறவுமுறையும் நிலைவரத்தை சிக்கலாக்குகிறது. அதாவது தமிழ்நாடு மீனவர் சமூகம் வசதிபடைத்ததாக இருக்கின்ற அதேவேளை இலங்கையின் வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவர்கள் உள்நாட்டுப்போரின் முடிவுக்கு பிறகு தற்போதுதான் நெருக்கடியில் இருந்து மீண்டுவருகிறார்கள்.

பாரம்பரியமான மீன்பிடி முறைகளில் தங்கியிருக்கும் வட இலங்கை மீனவர்கள் மிகையான சுரண்டலில் இருந்து தங்களது கடற்பரப்பை பாதுகாப்பதற்கு நிலைபேறான தீர்வை நாடிநிற்கிறார்கள். அதேவேளை, இந்திய மீனவர்கள் பல காரணிகளினால் நெருக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

பாறைகளும் முருகைக் கற்களும் நிறைந்ததாக இருக்கும் இந்திய கடற்பரப்பில் ஒரு சிறிய பிரதேசத்திலேயே மீன்பிடிக்கக்கடியதாக இருக்கிறது.

1983 ஆம் ஆண்டின் தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்கமைப்பு சட்டம் தமிழ்நாடு கரையோரத்தில் மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகிறது. பாக்கு நீரிணைப் பிராந்தியத்தில் தற்போதைய 24 மணி நேர கடற்பயணங்களை போலன்றி, மீறவர்களுக்கான ஒரு மாற்று வழிமுறையாக நீண்டகாலமாகக் கூறப்மட்டுவந்திருக்கும் ஆழ்கடல் மீன்பிடி சுமார் மூன்று வாரங்களை எடுக்கும் என்பதுடன் இயல்பாகவே அது பெரும் செலவும் கடும் உழைப்பும் சம்பந்தப்பட்டதாகும். மேலும், மீன்பிடிக்கு வேறு முறைகளை கையாளுவதென்றால் மீனவர்கள் தங்களது நடத்தைப் போக்கை மாற்றவேண்டியது அவசியமாகும். பாரமாபரியமான ஒரு

வாழ்க்கைத் தொழிலில் இது படிப்படியான முறையிலேயே இடம்பெறமுடியும்.

இந்த காரணங்களினாலும் வேறு காரணங்களினாலும் 2017 ஜூலை முதல் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்காக மத்திய அரசாங்கத்தினாலும் மாநில அரசாங்கங்களினாலும் கூட்டாக செயற்படுத்தப்பட்ட திட்டம் தோல்வியடைந்தது. கடல்பாசி வளர்ப்பு, கடல் பண்ணை முறைகளை ஊக்குவிப்பதன் மூலமாக கெடுதியான இழுவைப்படகு நடைமுறையில் இருந்து மீனவர்களை விலகச் செய்வதற்கு இந்திய அரசாங்கமும் தமிழ்நாடு அரசாங்கமும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பாக்கு நீரிணையில் 1600 கோடி ரூபா ஆழ்கடல் மீன்பிடித் திட்டத்தையும் 20,050 கோடி ரூபா பிரதான் மந்ரி மற்சியா சம்பத ஜோயனா திட்டத்தையும் இணைப்பதே மத்திய அரசாங்கம் குறைந்தபட்சம் செய்யக்கூடிய காரியமாகும். இது கூடுதலான அளவுக்கு ஆழ்கடல் மீன்பிடியில் மீனவர்கள் ஈடுபடுவதற்கு உதவும்.

முக்கியமான பேச்சுவார்த்தைகள்

இந்த பிரச்சினையின் சிக்கலான தன்மையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது திடீரென்று மீனவர்களின் மீன்பிடி முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவது எந்த அரசாங்கத்துக்கும் சுலபமான வேலையாக இருக்கப்போவதில்லை என்பதை இரத்நாயக்க தெரிந்திருக்க வேண்டும். இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு பேச்சுக்களுக்கு ஏற்பாடு செய்யும் விடயத்தைப் பொறுத்தவரை, தனது அரசாங்கத்தின் மனோபாவம் பற்றி அவர் எதையும் கூறவில்லை.

மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதை இந்திய மத்திய அரசாங்கமும் தமிழ்நாடு அரசாங்கமும் விரும்பியிருந்தன. இந்த பேச்சுக்கள் இறுதியாக 2016 நவம்பரில் புதுடில்லியில் இடம்பெற்றன.

கடந்த வருடம் அக்டோபரில் கொழும்பில் நடைபெற்ற கூட்டுச் செயற்பாட்டு குழுவின் கூட்டத்தில் இந்தியா இரு நாடுகளினதும் மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதுவரைச் சந்தித்திருந்த வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவர் தூதுக்குழு ஒன்றும் கூட இந்திய மீனவர்களுடன் பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியது.

ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனம் சாதித்து வருவது ஆச்சரியத்தை தருகிறது. அந்த அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் கூட கடந்துவிடாத நிலையில் அதன் மனோபாவம் குறித்து பெரிதாக எதுவும் குறிப்பிடுவதற்கில்லை.

இந்தியாவின் கிழக்கு கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு வருடாந்தம் விதிக்கப்படும் இரு மாதகாலத் தடை ஏப்ரில் நடுப்பகுதியில் வழமைபோன்று தொடங்கவிருக்கும் நிலையில், அடுத்த சில மாதங்கள் பேச்சுக்களை நடத்துவதற்கு வாய்ப்பான காலப்குதியாக இருக்கும்.

ஜே.வி.பி.யின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரத்நாயக்க இழுவைப்படகு மீன்பிடி நடைமுறைக்கு முடிவொன்றைக் கட்டுவதற்கு இரு தரப்புகளுக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய பேச்சுக்களுக்கான அவசியம் குறித்து அரசாங்கத்திலும் அதற்கு வெளியிலும் இருக்கும் தனது சகாக்களை நம்பவைத்தால் பயனுடையதாக இருக்கும்.

ஏப்ரிலில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மீனவர் தகராறு குறித்து கொழும்பு பேச வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான மனோ கணேசன் கூறியிருக்கிறார். அப்போது மீனவர்களுக்கு இடையிலான பேச்சுக்களை மீண்டும் தொடங்குவதை ஆதரிப்பதற்கு மாத்திரமல்ல அந்த பேச்சுக்களை இலங்கையிலேயே நடத்த முன்வருவதற்கும் உன்னதமான சந்தர்ப்பம் ஒன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு கிடைக்கும்.

(தி இந்து)

You might also like

Leave A Reply

Your email address will not be published.