;
Athirady Tamil News

பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும் சித்திரவதை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன என்பதை மிகதெளிவாக உணர்த்தும் ஆதாரங்கள் கிடைத்தன- விசாரணை ஆணைக்குழு

0

சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதை செய்வதற்கு பட்டலந்த வீடுகள் பயன்படுத்தப்பட்டமை–

நபர்களை சட்டவிரோதமான முறையில் தடுத்துவைத்திருந்து அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் கீழ்த்தரமான விதத்தில் நடத்துவதற்கு எவ்வாறானதொரு இடம்பொருத்தமாகயிருந்திருக்கும்.

அது ஒரு பாதுகாப்பான இடமாகயிருக்கவேண்டும்.பொதுமக்கள் செல்ல முடியாத இடமாகயிருக்கவேண்டும்.உரிய நபர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் இடமாகயிருக்கவேண்டும்.

அந்த பகுதியை சுற்றிஇருப்பவர்கள் அங்கு என்ன நடக்கின்றது என்பதை அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறைவாகயிருக்கவேண்டும்.அது அறியப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட இடமாகயிருக்ககூடாது.

இவ்வாறான தேவைகளின் அடிப்படையில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட பட்டலந்த வீடமைப்பு திட்டத்தின் வீடுகளை நாங்கள் ஆராய்கின்றோம்.

பட்டலந்த வீடுகள் பொலிஸார் வசிப்பதற்கான பகுதியாக உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வசிக்கின்றனர் என உறுதி செய்யும் எந்த ஆவணமும் பொலிஸ் தலைமையகத்தில் இருக்கவில்லை.

அந்த வீடமைப்பு திட்டம் நன்கு பாதுகாக்கப்பட்டிருந்தது.

பொதுமக்கள் அங்கு செல்ல முடியாது. தெரிவு செய்யப்பட்டவர்களே அங்கு வசித்தார்கள்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் அந்த வீடமைப்பு திட்டம் முழுவதற்கும் பாதுகாப்பு வழங்கினார்கள்.

அதிகாரத்திலிருந்தவர்களின் முன்கூட்டிய அனுமதியின்றி எவரும் அங்கு செல்ல முடியாது.

இந்த காரணங்களால் பட்டலந்த வீடுகள் நோக்கத்திற்கு பொருத்தமானவையாக காணப்பட்டன.

பிரதி பொலிஸ்மா அதிபர் எம்எம் ஆர் மெரில் குணரட்ண வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையில் பார்க்கும்போது களனி பொலிஸின் நாசகார வேலைகள் எதிர்ப்பு பிரிவினர் சட்டவிரோதமாக நபர்களை தடுத்து வைத்து சித்திரவதை செய்வதற்கு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட பட்டலந்த வீடுகள் நோக்கத்திற்கு ஏற்றவையாக காணப்பட்டன.

களனி பொலிஸின் நாசகார நடவடிக்கைகள் எதிர்ப்பு பிரிவினர் இந்த நோக்கத்திற்காக பட்டலந்த வீடுகளை பயன்படுத்தியிருந்தால், அதற்கான ஆதாரங்களைபெற முடியுமா?

சந்தேகநபர்கள் தாங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடத்தை அடையாளம் காணாமலிருப்பதற்கான பொதுவான முறையொன்றை பொலிஸார் பின்பற்றுவார்கள்,கண்ணை கட்டி சந்தேகநபரை அழைத்துச்செல்வதே அது.

ஆகவே சந்தேகநபர் தனக்கு என்ன நடந்தது என்பதை தெரிவிப்பதற்கு உயிருடன் இருந்தாலும் அவர் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த இடங்களை அடையாளம் காணும் நிலையில் இருக்க மாட்டார்.

களனி பொலிஸ்பிரிவில் கைதுசெய்யப்பட்டவர்களில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் அவர்கள் அறியாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்துவைத்திருந்த பின்னர் அந்த பகுதியில் உள்ள பொலிஸ்நிலையங்களிற்கு மாற்றப்பட்ட சுமார் 10 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்தன.

கைதுசெய்து தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை சந்தேகநபர் மிகமோசமாக சித்திரவதை செய்யப்பட்டார் என்றால் அந்த நபரை நீண்டநாட்கள் உயிருடன் வாழ்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.

அவ்வாறான மிகமோசமான மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சித்திரவதை செய்யப்பட்ட ஒருவர் உயிர் வாழ்ந்து பின்னர் ஒரு தருணத்தில் உண்மைகளை தெரிவிப்பதற்கு அனுமதிக்கமாட்டார்கள்.

இதன் காரணமாக பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதை செய்யவதற்கு பயன்படுத்தப்பட்டன என்பதற்கான ஆதாரங்கள் கிடைப்புத கடினம் என்பதை ஆணைக்குழு அறிந்திருந்தது.

எனினும் விசாரணை பிரிவின் தளர்ச்சியற்ற முயற்சிகள் காரணமாகவும் நடந்தவற்றை நேரில் பார்த்த சிலரின் துணிச்சல் காரணமாகவும் பட்டலந்த வீடுகள் சந்தேகநபர்களை சட்டவிரோதமாக தடுத்துவைப்பதற்கும் சித்திரவதை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன என்பதை மிகதெளிவாக உணர்த்தும் ஆதாரங்கள் கிடைத்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.