யூடியூப்பர்களும் தமிழ்ச் சமூகமும் – நிலாந்தன்.

கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த யூத எழுத்தாளர் ஆகிய ஆர்தர் கோஸ்லரிடம் எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனத்தைக் கூறுங்கள் என்று கேட்ட பொழுது, அவர் சொன்னார், மந்தர்களே-mediocres- எல்லா இடங்களிலும் முதன்மை வகிப்பார்கள் என்று. அவர் எதைக்கருதி அவ்வாறு சொன்னார் என்பது தெளிவில்லை. ஆனால் இப்போதுள்ள சமூக வலைத்தள ஊடகச் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது அது ஒரு தீர்க்கதரிசனமோ என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
சமூக வலைத்தளங்களின் பயன்பாடு என்பது இரண்டு புறமும் கூரான கத்தி போன்றது. ஒருபுறம் சமூக வலைத்தளங்கள் சாதாரண மக்களைப் பொறுத்தவரையில்அதிகம் ஜனநாயகமானவை. பாரம்பரிய ஊடகங்களுக்கு இருக்கக்கூடிய கட்டுப்பாடுகள் எவயுமின்றி யாரும் விரும்பியதைக் கூறலாம். அதை விரைவாகப் பரப்பலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நலிவுற்ற பிரிவினர் தங்கள் கருத்துக்களை உடனடியாகவும் விரைவாகவும் பரவலாகவும் பரப்பக்கூடிய வாய்ப்புகள் முன்னெப்பொழுதையும் விட அதிகரித்துள்ளன. இது முக்கியமான நன்மை. அவ்வாறு சமூக வலைத்தளங்களை உச்சமாகப் பயன்படுத்திய ஒரு மருத்துவர் தமிழ் மக்களால் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
அதேசமயம் பாரம்பரிய ஊடகங்கள் போலல்லாது சமூக வலைத்தள ஊடகச் சூழல் என்பது துறை சார்ந்த நிபுணத்துவம், துறை சார் அறம் என்பவற்றை அதிகம் மதியாத ஒன்றாகவும் மாறி வருகிறது. எப்படியென்றால் அது பொதுப் புத்தியை அதிகம் பிரதிபலிப்பது.பொதுப் புத்தி எப்பொழுதும் விஞ்ஞானபூர்வமானதாக அறிவுபூர்வமானதாக இருக்க வேண்டும் என்று இல்லை. அது பெரும்பாலும் இனம் சார்ந்து, மதம் சார்ந்து மொழி சார்ந்து, சாதி சார்ந்து, ஊர் சார்ந்து, பால் சார்ந்து… என்று பல்வேறு சார்பு நிலைகளுக்கு ஊடாகவும் வெளிப்படுவது. அது பெரும்பாலும் ஒரு குழு மனோநிலை.
அதனால், சமூக வலைத்தள சூழல் எனப்படுவது, மற்றொரு சமூகத்துக்கு அல்லது சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு அல்லது மற்றொரு நாட்டுக்கு எதிரான கருத்துக்கள் அதிகம் பரவலாக்கப்படுவதற்கா னவாய்ப்புகளை ஒப்பீட்டுளவில் அதிகமாகக் கொண்டிருக்கின்றது.
அதனால்தான் ஐநாவின் வெறுப்புப் பேச்சுகளுக்கான சிறப்புத் தூதுவர்கள் சமூகவலைத்தளச் சூழலானது இன ரீதியான, மத ரீதியான, நிற ரீதியான, வெறுப்புப் பேச்சுக்களை பரப்புகின்றன என்று விமர்சிக்கின்றார்கள். குறிப்பாக பர்மாவில் ரோகியங்கா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பில் முகநூல் ஒரு கருவியாகத் தொழில்பட்டது என்று ஐநாவின் அறிக்கை ஒன்று கூறுகிறது.
அதுபோலவே சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் கண்டி, திகன ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு,ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைகளின்போது, முகநூல் தடை செய்யப்பட்டது.
இப்போதுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் தடவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பொழுது, ருவிட்டர் தளத்தை அதிகம் பயன்படுத்தியதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதாவது சமூக வலைத்தளச் சூழல் என்பது ஒருபுறம் சமானிய மக்களின் பொதுப் புத்தியை பிரதிபலிக்கின்றது. இன்னொரு புறம் அவ்வாறு பொதுக் புத்தியை பிரதிபலிப்பது என்பதினாலே பொது புத்திக்குள் காணப்படும் இனம், மொழி,மதம், நிறம் சாதி சார்ந்த வெறுப்புகளை பரவலாக்கும் களமாகவும் மாறி வருகிறது.
அதனால்தான் சமூக வலைத்தள சூழல் என்பது நிபுணர்களை வெளித்தள்ளுகின்றது என்று பொதுவாக அவதானிக்கப்பட்டுள்ளது. துறை சார் ஞானம் இல்லாதவர்கள் கருத்துக்கூறும் ஒரு பொதுத் தளத்தில் துறை சார் நிபுணர்கள் கருத்துக் கூறி அவமதிக்கப்பட விரும்ப மாட்டார்கள். எனவே அவர்கள் விலகி நிற்பார்கள்.இதனால் ஒரு குறிப்பிட்ட கருத்து விஞ்ஞானபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் அணுகப்படும் சூழலை அங்கே முழுமையாக உத்தரவாதப்படுத்த முடிவதில்லை.
ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை குறிப்பாக, 2009க்குப் பின்னரான ஈழத் தமிழ் அரசியல் சூழலிலும் அதைக் காண முடியும். வெறுப்பர்களே அதிகம் விளைந்து விட்டார்கள். எதையும் ஆழமாக வாசிப்பதில்லை. ஒரு கைபேசியும் இணைய இணைப்பும் இருந்தால் காணும். யாரும் எதையும் சொல்லலாம் என்ற ஒரு நிலை. இதில் ஜனநாயகம் உண்டு. அதேசமயம் எனது நண்பர் ஒருவர் கூறுவதுபோல, தனக்குத் தெரியாத ஒன்றைப்பற்றிக் கருத்துக் கூறும் துணிச்சலை அது வழங்கி விட்டது. இந்தத் துணிச்சல் மனித குலம் இதுவரை கண்டடைந்த அறிவியல் மகத்துவங்களுக்கு எதிரானது. எனக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி கருத்துக் கூறும் துணிச்சல் என்பது அறிவியலின் வீழ்ச்சி.
பெரும்பாலான சமூக வலைத்தளங்கள் குறிப்பாக யுடியூப்கள் பொதுப் புத்தியை கவரும் பொருட்டு காணொளிகளை வெளியிடுகின்றன. அதனால் பொது புத்தியின் பலவீனம் எதுவென்று கண்டு அதனைச் சுரண்டி காசு உழைக்கின்றன. ஒரு சமூகத்துக்கு நல்லதையும் உன்னதமானதையும் எடுத்துக்காட்டி அந்த சமூகத்தின் உளவியல் கூர்ப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியதுதான் ஊடகப் பணியாகும். மாறாக அந்த சமூகத்தின் பலவீனம் எதுவோ அல்லது அந்த சமூகத்தை எங்கே இலகுவாகச் சுரண்டலாமோ அதை விற்பது என்பது சமூகக் கூர்புக்கு எதிரானது. மனித குலத்துக்கு எதிரானது.
குறிப்பாக ஈழத் தமிழர்களைப் பொருத்தவரை 2009க்கு பின்னரான கூட்டு உளவியல் என்பது அதிகம் கொந்தளிப்பானது. இனப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காத; பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காத; தலைமைத்துவ வெற்றிடம்; புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதிக்கம்.. போன்ற பல காரணிகளும் கடந்த 15 ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கூட்டு உளவியலைத் தீர்மானிக்கின்றன. இக்கூட்டு உளவியலைத் தீர்க்கதரிசனமாகக் கையாளவல்ல தலைமைகள் கடந்த 15 ஆண்டுகளாக மேலுயரவில்லை. கூட்டுக் காயங்களிலும் கூட்டு மனவடுக்களிலும் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்துக்கு, கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல அரசியலை, விழுமியங்களை முன்வைத்துத் தலைமை தாங்கவில்லை பொருத்தமான தலைவர்கள் இல்லாத வெற்றிடத்தில், சமூக வலைத்தளங்களால் திறந்து விட்டிருக்கும் கட்டுப்பாடற்ற,கட்டற்ற சூழலானது வெறுப்பவர்களுக்கும் மந்தர்களுக்கும் கயவர்களுக்கும் பொய்யர்களுக்கும் அதிகம் வாய்ப்பானதாக மாறி வருகிறது.
பொதுவாக ஒரு சமூகத்தின் பொதுப் புத்தியானது சீரியஸானதாக அறிவுபூர்வமானதாக விஞ்ஞானபூர்வமானதாக இருப்பது குறைவு. சீரியஸானதுக்கும் ஜனரஞ்சகத்துக்கும் இடையிலான இடைவெளி என்பது எல்லாச் சமூகங்களிலும் காணப்படுவது. ஆனால் ஈழத் தமிழ் சமூகத்தில் அந்த இடைவெளி ஆழமானது.யூரியுப்பர்களின் காலத்தில் அந்த இடைவெளி மேலும் ஆழமாகிக் கொண்டே போகிறது. சீரியஸான, அறிவுபூர்வமான சமூக விலைத்தலங்களையும் காணொளித்தளங்களையும் பார்ப்பவர்களின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்.சீரியஸ் இல்லாத,மந்தமான, உணர்ச்சிகரமான, விஞ்ஞான பூர்வமற்ற, பொழுதுபோக்கான,எல்லாவற்றையும் காசாக்க முற்படும் யூரியுப்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரம்.சில சமயங்களில் அந்தத் தொகை மில்லியன் கணக்கானது.
இவ்வாறு அறிவுபூர்வமானதுக்கும் மந்தமானதுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்லுமோர் சமூகப் பொருளாதார அரசியல் சூழலில், அண்மை வாரங்களாக யூடியூபர்களின் மோசடிகள் தொடர்பாகவும் குற்றச்செயல்கள் தொடர்பாகவும் அதிகம் செய்திகள் வெளி வருகின்றன.
ஒருபுறம் நிதிப்பலம் மிக்க புலம்பெயர்ந்த சமூகம். அது தாயகத்தை நோக்கி பிரிவேக்கத்தோடு உதவுவதற்குக் காத்திருக்கின்றது. இன்னொரு புறம் தாயகத்தில் உதவிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள். இந்த இரண்டு தரப்பையும் அதாவது தேவையையும் வளங்களையும் இணைப்பவர்கள் யார் என்று பார்த்தால், ஒன்றில் தனி நபர்கள் அல்லது அரசு சார்பற்ற நிறுவனங்கள் அல்லது சில தொண்டு நிறுவனங்கள் போன்றவைதான். இதில் தனி நபர்களாக இருப்பவர்களில் ஒரு பகுதியினர் அரசியல்வாதிகள்,அரசியல் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் ஒரு பிரிவினர் தான் கண்ணீரையும் வறுமையையும் காணொளியாக்கிக் காசாக்குகிறார்கள்.
இதில் ஒரு சிறு தொகையினர்,ஒருகை கொடுப்பது மறு கைக்குத் தெரியாமல் தொண்டு செய்கிறார்கள்.அதை அவர்கள் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் அவர்கள் மிகச் சிறிய தொகையினர். யாருக்கெல்லாம் பிரபல்யம் வேண்டுமோ, யாரெல்லாம் பிரபல்யத்தைக் காசாக்க விரும்புகின்றார்களோ, அவர்கள்தான் இப்பொழுது குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருக்கிறார்கள்.
இது ஒரு உலகப் பொதுவான ஒரு போக்குத்தான்.ஆனால் ஈழத் தமிழ் அரசியற் சூழலில் இதன் விளைவுகள் குறிப்பிடத்தக்க அளவுக்குப் பாரதூரமானவை. 2009க்குப் பின்னரான ஈழத் தமிழர்களின் சமூகப் பொருளாதார அரசியல் உளவியல் எனப்படுவது கொந்தளிப்பானது. தலைமைத்துவம் இல்லாதது. இந்த வெற்றிடத்துக்குள் யூடியூபர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.நேரலையில் தோன்றி ஒரு மருத்துவர் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிவிட்டார்.
எனவே இந்த விடயத்தில் 2009க்குப் பின்னரான தமிழ்க் கூட்டு உளவியலை வெற்றிகரமாகக் கையாளவில்லை, ஒரு கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல, அரசியலை முன்னெடுக்க விரும்பும் தரப்புகள் ஒரு பண்பாட்டு மறுமலர்ச்சிக்குத் தலைமைதாங்கத் தயாராக இருக்கவேண்டும்.புத்திசாலிகளும் அறிவுபூர்வமாகச் சிந்திப்பவர்களும் துறை சார்ந்த ஞானம் உடையவர்களும் அரசியலில் மேலோங்கும் பொழுது, மந்தர்கள் பின்வாங்கி விடுவார்கள்.இல்லையென்றால் மந்தர்களே எல்லா இடங்களிலும் மேலெழுவார்கள்.