IMFஇன் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு?

(நிவேதா அரிச்சந்திரன்)
இலங்கை கடந்த 5 வருடங்களில் இழந்த வருமானத்தில் தற்போது 40 சதவீதத்தை மீளப்பெற்றுக்கொண்டுள்ளமையானது நல்ல சமிஞ்சையாக காணப்படுவதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகுறைப்புகள் அல்லது வரி நீக்கம் மற்றும் நிவாரணங்கள் உட்பட மாற்றுவாழ்வாதாரத் திட்டங்களை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
வருமான அதிகரிப்புக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் கொடுக்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளதாக திருப்தி வெளியிட்டுள்ள சர்வதேச நாணயநிதியம் முக்கியமான சில விடயங்களை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி செயற்றிட்டம் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் ஊடாக நான்காம் கட்ட கடனுதவியாக 334 மில்லியன் டொலர் கடன் இலங்கைக்கு கிடைக்கவுள்ளது.
இது தொடர்பில் வொஷிங்டனிலுள்ள சர்வதேச நாணய நிதிய தலைமையகத்தில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைக்கான செயற்றிட்ட தலைவர் பீற்றர் ப்ரூயர், பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா மற்றும் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்த்தா டெஸ்க்பாயே வோலட் மைக்கல் ஆகியோர் கலந்துகொண்டு இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதன்படி கடந்தகால பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை குறிப்பிடத்தக்களவு மீட்சியடைந்திருக்கும் நிலையில் தற்போது வரி வருமானத்தை அதிகரிப்பதிலும் இலக்கிடப்பட்ட சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்களை மேம்படுத்துவதிலும் பொதுநிதியை திறம்பட முகாமை செய்யக்கூடிய வகையில் செலவீனங்களை ஒழுங்குப்படுத்துவதிலும் விசேட கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை மின்கட்டணத்தை பொறுத்தமட்டில் செலவீனத்தை ஈடு செய்யக்கூடியவாறான கட்டண நிர்ணய முறைமையை பின்பற்றுவது அவசியம் என இலங்கைக்கான செயற்றிட்ட தலைவர் பீற்றர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்கட்டண குறைப்பின்போது இம்முறைமை பின்பற்றப்படவில்லை என கரிசனை வெளியிட்டுள்ளார். அதுமாத்திரமின்றி எதிர்வரும் காலங்களில் மீண்டும் மின்கட்டணத்தை நிர்ணயிக்கும்போது அது செலவீனத்தை ஈடுசெய்யக்கூடிய விதத்தில் அமைய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி செயற்றிட்டத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதாகவும் திருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையின் கையிருப்பு தொடர்பிலும் சாதமான எண்ணப்பாட்டை சர்வதேச நாணயநிதியத்தின் மேற்படி குழு வெளிப்படுத்தியுள்ளது. அதாவது கடந்த 2022இல் இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக இருந்தது. அக்காலப்பகுதியில் இலங்கையின் சகல விடயங்களிலும் வரிசை யுகம் காணப்பட்டதுடன் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட தீவிர நெருக்கடியின் விளைவாக இலங்கை அதன் பொருளாதார தொழிற்பாடுகள் மூலமான வருமானத்தில் 10 சதவீதத்தை இழக்க நேரிட்டது.
நிலைமை இவ்வாறிருக்க கடந்த 2023ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து தற்போது வரை இலங்கை கடந்த 5 வருட காலங்களில் இழந்த வருமானத்தில் 40 சதவீதத்தை மீளப்பெற்றுக்கொண்டுள்ளதுடன் இலங்கையின் அண்மைய பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக அமைந்திருப்பதே இந்த மீட்சிக்கு சான்று என பீற்றர் ப்ரூயர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் காலங்களில் இலங்கையின் பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்து வறுமை மட்டம் வீழ்ச்சியடையும் எனவும் முதலீடுகளுக்கான வாய்ப்புகள் அதிகரித்து மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் வீதம் குறைவடையும் என தெரிவித்துள்ளார்.
ஆமை வேகத்தில் முன்னெடுக்கப்படும் சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்கள்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு கடந்த காலங்களில் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கைக்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை வழங்கியிருந்தது. குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொதிகள், பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவுத்திட்டம் மற்றும் அஸ்வெசும நிவாரணம் போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றில் பொதுமக்கள் மத்தியில் ஆறுதல் தரக்கூடிய நிவாரணமாக உலக வங்கியின் அஸ்வெசும திட்டம் அமைந்திருந்தது. என்றாலும் இந்த நிவாரணத்துக்குரிய முதற்கட்டத்துக்கான பயனாளர் தெரிவில் நலன்புரி நன்மைகள் சபை கையாண்ட பொறிமுறையில் காணப்பட்ட நடைமுறை சிக்கல்களால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மக்கள் இதற்குள் முழுமையாக உள்வாங்கப்படவில்லை என்பது ஆய்வுகளில் வெளியானது. குறிப்பாக அதிகூடிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்திருந்த பெருந்தோட்டத்துறை மக்கள் இதற்குள் உள்வாங்கப்படாமை மிகப்பெரிய விமர்சனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இது இவ்வாறிருக்க 2024ஆம் ஆண்டு மக்களுக்கான நிவாரணங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இதுவரை முழுமையாக பயன்படுத்தப்படாமலுள்ளது. இதனை நிறைவு செய்வதாக அரசாங்கத்தின் தரப்பிலிருந்து பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். அதற்கமைய 22.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை நிவாரணங்கள் ஊடாக மக்களுக்கு விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற தேர்தல்கள் அதனோடிணைந்த ஆட்சி மாற்றம் என்பன காரணமாக அமைந்ததை சுட்டிக்காட்டியாக வேண்டும். அதற்கமைவாக தற்போது நாடளாவிய ரீதியில் நலன்புரி நன்மைகள் சபையின் இரண்டாம் கட்ட அஸ்வெசும நிவாரணக்கொடுப்பனவுக்குரிய பயனாளர்கள் தெரிவு இடம்பெற்று வருகிறது. என்றாலும் இதுபோன்ற நிவாரணங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களை எந்தளவு தூரம் ஆசுவாசப்படுத்தும் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே அமைந்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட செயற்றிட்டத்தின் மூன்றாம் கட்ட மீளாய்வை தொடர்ந்து சமூக பாதுகாப்பு செயற்றிட்டங்களை மேம்படுத்துவதில் இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்படியாயின் இந்த நிவாரணங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய அதேவேளை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கான ஏற்பாடுகள் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திட்டங்களை முன்வைக்க வேண்டியது அவசியம்.
அதற்கு அடுத்தபடியாக வரி வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்ப 2025ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள முக்கிய வரிகளில் மாற்றங்களை ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. அந்தவகையில் தனிநபர் வருமான வரி, VAT வரி, மதிப்பிட்டப்பட்ட செலுத்தத்தக்க வருமான வரிக் கூற்று என்பனவற்றை குறிப்பிடலாம். வரி மறுசீரமைப்பில் வருமான வரி விதிப்பு மற்றும் கலால் வரியை அதிகரிப்பது, இறக்குமதி வரியை சில பிரிவுகளில் குறைத்து உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பது,வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீட்டு பாதுகாப்பு சட்டங்களை உருவாக்குதல் என்பனவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள 15 வீத சேவை ஏற்றுமதி வரி மக்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சேவைகளை வழங்கி அண்ணிய செலாவணியை பெற்றுக்கொடுக்கும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கான வரியாக இது அமைந்துள்ளது. அப்படியாயின் மொத்த வருமானத்தில் இதனை செலுத்த வேண்டுமா அல்லது செலவுகள் போக எஞ்சியதில் இதனை செலுத்த வேண்டுமா என்ற தெளிவின்மை காணப்படுகின்றது. இதற்கிடையில் டிஜிட்டல் வலைத்தளங்களில் வருமானங்களை உழைப்போருக்கும் இதில் பங்குண்டா என்பது தொடர்பிலும் ஒரு குழப்பம் காணப்படுகின்றது.
நிலைமை இவ்வாறிருக்க சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியவாறு வரி வருமானங்களை அதிகரிக்கும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்குமாயின் நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் வலுப்பெற்றிருந்தது. அதற்கு செவிசாய்க்கும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சேவை ஏற்றுமதி வரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரை பாதிக்காத வகையில் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு இதைத்தவிர வேறு பொறிமுறை இல்லை என்பதை அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அப்படியாயின் இந்த வரி விதிப்பு தொடர்பான தெளிவுப்படுத்தலை அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது. அதேநேரம் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் அரச வருமானத்தை 15.1 வீதமாக அதிகரிப்பதாக பாதீட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை சர்வதேச நாணயநிதியத்தின் மதிப்பீட்டுக்குழுவும் ஆதரித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டமானது முழுமையாக சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அப்படியாயின் அரசாங்கத்தின் வருமான அதிகரிப்பு செயற்பாடுகளுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை நடுத்தர வர்க்க மக்களது வாழ்வாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் கொடுக்க வேண்டியது அவசியம்.
வருமான அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் நடுத்தர மற்றும் கீழ் தட்டு மக்களை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதே பொருளாதார நிபுணர்களுடைய கோரிக்கையாகவுள்ளது.
குறிப்பாக அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகுறைப்புகள் அல்லது வரி நீக்கம் மற்றும் நிவாரணங்கள் உட்பட மாற்றுவாழ்வாதார திட்டங்கள் போன்றவற்றை அரசாங்கம் துரித கதியில் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.