அல் ஜசீராவிடமிருந்து உள்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்

எம்.எஸ். எம். அயூப்
டோஹாவில் இருந்து இயங்கும் அல் ஜசீரா தொலைக்காட்சியின் மெஹ்தி ஹசனின் ‘ஹெட் ரு ஹெட் ‘ நிகழ்ச்சியில் நேர்காணலின் தன்மை எத்தகையது என்பதை அறிந்திருந்தும் கூட, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதற்காக அதில் கலந்து கொள்வதற்கு இணங்கினார்? அவருக்கு அது பெரிய அனர்த்தமாகப் போய்விட்டது.
காலம் கடந்துவிட்டது என்ற போதிலும், இரு காரணங்களுக்காக இந்த கேள்வியை நாம் கிளப்புகிறோம். முதலாவதாக, நேர்காணல் செயாயப்படுபவர் யார் என்பதைப் பற்றி எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் தங்குதடையின்றி அட்டகாசமான முறையில் கேள்விகளால் துளைக்கும் பாணியிலான அந்த நிகழ்ச்சி விக்கிரமசிங்கவுக்கு ஆகாதது என்று தோன்றியது. இரண்டாவதாக, அவர் முறைப்பதற்கு பல விடயங்களைக் கொண்ட இலங்கை அரசியல்வாதிகளில் ஒருவர் என்பது நேர்காணலின் மூலம் தெளிவாகத் தெரிந்தது.
விக்கிரமசிங்கவுக்கு விரோதமானவர்களாக தோன்றிய சபையோர் முன்னிலையில் சில வாரங்களுக்கு முன்னர் லண்டனில் நடத்தப்பட்ட நேர்காணல் மாரச் 6 ஆம் திகதி ஔிபரப்பாகியது. அதற்கு பிறகு சில சேதங்களை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாடொன்றை கூட்டவேண்டிய அளவுக்கு முன்னாள் ஜனாதிபதிக்கு அது பெரும் பாதகமாக அமைந்துவிட்டது. தன்னுடனான நேர்காணலை முழுமையாக ஔிபரப்பாமல், “நல்ல பகுதிகளில் சிலவற்றை” நீக்கிவிட்டு வகுத்துத் தொகுத்து அல் ஜசீரா ஔிபரப்பியிருக்கிறது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஹசனின் அட்டகாசமான நேர்காணல் பாணி மற்றும் பகைமை உணர்வைக் கொண்டதாகத் தோன்றிய சபையோரைக் கொண்ட சூழல் காரணமாக மாத்திரமல்ல, தொடுக்கப்பட்ட முககியமான கேள்விகளில் சிலவற்றுக்கு வெறாறிகரமாக முகம் கொடுப்பதில் விக்கிரமசிங்கவுக்கு இருந்த இயலாமை காரணமாகவும் நேர்காணல் அவருக்கு ஒரு அனர்த்தமாகப் போய்விட்டது. மிரட்டப்ட முடியாதவராக தோன்றிய நேர்காணல் செய்தவரை ஆத்திரமூட்டியதன் மூலமாக நிலைவரத்தை விக்கிரமசிங்க மேலும் மோசமானதாக்கி விட்டார் என்று தோன்றியது.
ஊடகவியலாளர்களுடன் மோதுவது விக்கிரமசிங்கவுக்கு ஒன்றும் புதியதல்ல. முக்கியமான அல்லது சிக்கலான கேள்விகள் கேட்கப்படுகின்ற பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் ஊடகவியலாளரை அவமதிக்க அல்லது அசௌகரியத்துக்கு உள்ளாக்க அவர் முயற்சிப்பார். 2023 அக்டோபர் 2 ஆம் திகதி ஜேர்மனியின் சர்வதேச தொலைக்காட்சி சேவையின் ( டி.டபிள்யூ) ஊடகவியலாளர் மார்ட்டின் காக்கிற்கு பேர்லினில் வைத்து வழங்கிய நேர்காணலில் விக்கிரமசிங்கவிடம் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட தகவல்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட யோசனைகள் பற்றி கேள்வி தொடுக்கப்பட்டபோது அவர் ஆத்திரடைந்து தனது நாட்டைப் பற்றி நினைவுபடுத்தினார். ” எதற்காக இலங்கையர்களிடமும் ஆசியர்களிடமும் இவ்வாறு கேட்கிறீர்கள்? நாங்கள் இரண்டாம் தரமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? இந்த வகையான மேற்கத்தைய மனோபாவத்தை விட்டவிடுங்கள். நீங்கள் அபத்தமாக பேசுகிறீரகள்” என்று விக்கிரமசிங்க ஆவேசமாகக் கூறினார்.
வாக்குவாதத்திற்குள் ” மேற்குலகை” இழுப்பதற்கு அன்றைய ஜனாதிபதியை தூண்டியது எது என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.மேற்குலகுடனோ அல்லது ஆசியாவுடனோ எந்த தொடர்புமில்லாதது. அந்த பின்புலத்தில் ஜப்பானிய பத்திரிகையாளர் ஒருவர் கூட அதே கேள்வியை விக்கிரமசிங்கவை நோக்கி கேட்டிருப்பார். ஆனால், அந்த நேர்காணலில் இறுதிக்கட்டங்களில் அவர் கேள்விக்க வலுவான தர்க்க ரீதியான பதிலை அவர் வழங்கினார்.
அதே போன்றே, இலங்கையில் ஒரு நேர்காணலின் போது ஒரு பெண் ஊடகவியலாளர் விக்கிரமசிங்கவிடம் ” நீங்கள் உள்நாட்டு கலாசாரத்தை பெருளவுக்கு விரும்புகிற ஒருவர் அல்ல என்ற குற்றச்சாட்டுகள் குறித்து என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். உடனே திருப்பி விக்கிரமசிங்க” உங்களுக்கு மானவம்ம அரசனைத் தெரியுமா? ” என்று பதில் கேள்வி தொடுத்தார். திகைத்துப்போன அந்த ஊடகவியலாளர் தனது கேள்விக்கும் மானவம்ம பற்றிய தனது அறிவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று விக்கிரமசிங்கவிடம் கேட்கவில்லை.
நேர்காணல் செய்யப்படுபவர்கள் தங்களது பதில்களை நீடித்துக்கொண்டு போவதற்கு மெஹ்தி ஹசன் அனுமதிப்பதில்லை என்பதை எவரும் மறுதலிக்கமாட்டார்கள். அவரின் இந்த சுபாவம் சில சந்தர்ப்பங்களில் நேர்காணல் செய்யப்படுபவர்கள் முழுமையான பதிலை வழங்குவதை தடுக்கிறது. விக்கிரமசிங்கவுடனான நேர்காணலில் நாம் இதைக் காணக்கூடியதாக இருந்தது. அதே போன்றே நேர்காணல் செய்யப்படபவர்கள் தந்திரமானவர்களாக இருந்தால் கேள்விகளில் இருந்து கவனத்தை திருப்புவதற்கு அவர்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளையும் அது தடுக்கிறது.
இத்தகைய நேர்காணல்களின்போது ஓய்வுபெற்றவர்களாக இருந்தாலென்ன அல்லது பதவியில் இருப்பவர்களாக இருந்தாலென்ன அரச தலைவர்களுக்கும் கூட உயர்ந்தமதிப்புக்குரிய இடம் கொடுக்கப்படுவதில்லை. ஒரு சந்தர்ப்பத்திலேனும் ஹசன் முன்னாள் ஜனாதிபதியை விங்கிரமசிங்க என்று பெயர் சொல்லி அழைத்ததை தவிர வேறு விதமாக அழைக்கவில்லை. ஏளனத்துக்கு பதில் ஏளனமாகவே இருந்தது. 75 வயதான விக்கிரமசிங்க ” நீங்கள் பிறப்பதற்கு முன்னரே நான் அரசியலில் ஈடுபடத் தொடங்கிவிட்டேன்” என்று ஹசனைப் பார்த்துக் கூறியபோது சபையோரின் பலத்த சிரிப்புக்கு மத்தியில் அவர் ” அதுவே பிரச்சினையின் ஒரு பகுதி என்று சிலர் சொல்லக்கூடும்” என்று பதிலளித்தார்.
பட்டலந்தவில் சித்திரவதை முகாம் இருந்ததையும் படடலந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டதைப் போன்று அந்த முகாமில் தனது ஈடுபாட்டையும் விக்கிரமசிங்க ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் உண்மையில் எதிர்பார்க்க வேண்டுமா? அது பற்றி கேட்கப்பட்டபோது தொடக்கத்தில் இருந்தே அவர் நுணுக்கமாக ஆனால், சிறுபிள்ளைத்தனமாக அதை தவிர்ப்பதற்கு முயற்சித்தார்.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் சிங்கள, ஆங்கில மென்பிரதிகள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் ஆயிரக்கணககானவர்கள் மத்தியில் பகிரப்பட்டிருக்கும் நிலையில் ” அறிக்கை எங்கே ? ” என்று விக்கிரமசிங்க முதலில் கேட்டார்.மெஹ்தி ஹசன் வசம் அறிக்கையின் பிரதி ஒன்று இல்லை என்ற நம்பிக்கையில் அந்த அறிக்கையில் இருந்து மேற்கோள் காட்டுமாறும் முன்னாள் ஜனிதிபதி அவரைக் கேட்டார். இலங்கையில் முன்னர் பி.பி.சி. யின் செய்தியாளராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் அறிக்கையின் பிரதி ஒன்றைக் காட்டியபோது, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் மாத்திரமே அதன் உள்ளடக்கங்கள் செல்லுபடியாகக் கூடியது என்பது போன்று அது சபையில் சமர்ப்பிக்கக்கப்படவில்லை என்று விக்கிரமசிங்க கூறினார்.
அவர் பாராளுமன்றத்தில் 134 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவானார். அவர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தொடர்ந்தும் அவரை ஆதரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நேர்காணலின்போது ராஜபக்சாக்கள் தன்னை ஆதரித்ததை மறுப்பதற்கு முயற்சித்ததை காணக்கூடியதாக இருந்தது. விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியில் இருந்தவரை அவரது சட்டமூலங்கள் மற்றும் பிரேரணைகள் சகலவற்றையும் பாராளுமன்றத்தில் ராஜபக்சாக்கள் ஆதரித்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.பட்டலந்த சித்திரவதை முகாமில் விக்கிரமசிங்கவின் ஈடுபாட்டையும் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் அவரை ராஜபக்ச்க்கள் ஆதரித்ததையும் நிரூபிப்பதற்கு ஹசன் தவறியிருக்கலாம். ஆனால், அந்த விவகாரங்கள் குறித்து விக்கிரமசிங்க கூறியதை எவரும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்.
பெரும்பாலும் இலங்கையின் சகல தலைவர்களுமே மறைப்பதற்கு பல விடயங்களைக் கொண்டிருப்பவர்கள் என்பதால் தங்களைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையில் எந்தவொரு தலைவரும் அத்தகைய நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றக்கூடாது என்பதே அல் ஜசீராவுடனான விக்கிரமசிங்கவின் நேர்காணலில் இருந்து நாம் தெரிந்து கொள்ளக்கூடிய முக்கியமான விடயமாகும். லசந்த விக்கிரமசிங்க, கீத் நொயர் மற்றும் தாஜுதீன் ஆகியோருக்கு நடந்தது என்ன என்பதை பற்றி மகிந்த ராஜபக்சவினால் அத்தகைய சபையோரை நம்பவைக்க முடியுமா? அல்லது பரணகம ஆணைக்குழு காணாமல் போனோர் என்று பட்டியலிட்ட 19,000 பேருக்கும் நடந்தவை குறித்து நம்பவைக்க முடியுமா? அல்லது மனித உரிமைகள் விவகாரத்தை விசாரணை செய்வதற்கு பல ஆணைக்குழுக்களை நியமித்த காரணத்தையும் அவற்றின் அறிக்கைகளுக்கு என்ன நடந்தது என்பதையும் மகிந்தவினால் கூறமுடியுமா? இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மைத்திரிபால சிறிசேன அத்தகைய ஒரு நேர்காணலில் கலந்துகொள்வதாக இருந்தால் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு முன்னதாக பாதுகாப்புச் சபையின் கூட்டங்களில் இருந்து தனது பிரதமரை விலக்கிவைத்ததை எவ்வாறு அவரால் நியாயப்படுத்த முடியும்? குண்டுத் தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை என்று ஜனாதிபதி என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் எவ்வாறு அவரால் சபையோரை நம்பவைக்கமுடியும்? இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் மூலமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதிமொழிகளை வழங்கிய பிறகு பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவதில் இருந்து பின்வாங்கியது ஏன் என்று அவரால் கூறமுடியுமா?
உள்நாட்டுப்போரின் இறுதி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்த ஆயிரக்கணக்கானவர்கள் எங்கே என்று கோட்டாபய ராஜமக்சவிடம் ஒரு செய்தியாளர்கள் மகாநாட்டில் கேட்கப்பட்டது. அதற்கு இராணுவத் தளபதியிடம் கேளுங்கள் என்பதே அவரின் பதிலாக இருந்தது. ‘ஹெட் ரு ஹெட் ‘ நேர்காணல் ஒன்றில் அவரால் அவ்வாறு பதிலளிக்க முடியுமா? குறைந்தளவுக்கு கேள்விகளால் துளைக்கப்படக்கூடிய தலைவர் அநுரா குமார திசாநாயக்காவாகவே இருக்கக்கூடும்.
இத்தகைய விவகாரங்கள் குறித்து உள்நாட்டுப் ஊடகவியலாளர்களினால் கேட்கப்படும்போது இந்த தலைவர்கள் வெற்று வீம்புபேசி சமாளித்து ஏமாறலாம். பாதுகாப்பு உட்பட பல மட்டுப்பாடுகள் உள்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு இருக்கிறது. ஆனால் , நாட்டின் எல்லைகளுக்கு வெளியே வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் அவ்வாறு நடந்துகொள்ள முடியாது.