;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழ்க் கனடியர் கரி ஆனந்தசங்கரியை நீதியமைச்சராக நியமித்த புதிய பிரதமர் மார்க் கார்னி

0

டி.பி.எஸ். ஜெயராஜ்

கனடாவின் லிபரல் கட்சியின் புதிய தலைவரான மார்க் கார்னி அந்நாட்டின் 24 வது பிரதமராக 2025 மார்ச் 14 ஆம் திகதி பதவியேற்றார்.

1965 மார்ச் 16 ஆம் திகதி பிறந்த பிரபல்யமான பொருளாதார நிபுணர் கனடா வங்கியின் எடடாவது ஆளுநராக ஐந்து வருடங்களும் ( 2008 – 2013) இங்கிலாந்து வங்கியின் 120 வது ஆளுநராக ஏழு வருடங்களும் ( 2013 – 2020) பணியாற்றினார்.

அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் 1988 ஆம் ஆண்டில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்ற அவர் 1995 ஆம் ஆண்டில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப்பட்டத்தைப் பெற்றார்.

ஜஸ்ரின் ட்ரூடோ பதவிவிலகியதை அடுத்து பிரதமராக நியமிக்கப்பட்ட மார்க் கார்னி 24 பேரைக் கொண்ட அமைச்சரவையை நியமித்தார். அவர்களில் 13 பேர் ஆண்கள், 11 பேர் பெண்கள்.ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்த மையக் குழுவினரை தொடர்ந்தும் வைத்திருக்கும் கார்னி 18 பேரை நீக்கினார்.கார்னியும் அவரது முதலாவது அமைச்சரவையும் மார்ச் 14 ஆம் திகதி ஒட்டாவாவில் றிடியூ மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்றுக்கொண்ட புதிய அமைச்சர்களில் இலங்கையின் முதுபெரும் தமிழ் அரசியல் தலைவரான தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் மகன் கரி ஆனந்தசங்கரியும் ஒருவர். அவர் நீதியமைச்சராகவும் கனடாவின் சட்டமா அதிபராகவும் பழங்குடியினர் உறவுகள் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கனடாவின் நீதியமைச்சர் – சட்டமா அதிபர் பதவியில் இருப்பவர் அமைச்சரவையில் இரட்டைப் பாத்திரத்தைக் கொண்டிருக்கிறார். நீதியமைச்சர் என்ற வகையில் அவர் நீதி திணைக்களத்துக்கான முடியாட்சிப் பொறுப்பைக் கொண்டவராகவும் சட்டமா அதிபர் என்ற வகையில் முடியாட்சியின் சார்பில் வழக்குத் தொடுப்பவராகவும் கனடா அரசாங்கத்தின் பிரதம சட்ட ஆலோசகராகவும் பணியாற்றுவார். மதிப்புமிக்க இந்த இரட்டைப் பாத்திர அமைச்சர் பதவியை முன்னர் வகித்தவர்களில் பலர் பின்னர் பிரதமராகவும் வந்தனர். டேவிட் தோம்சன், பியரி ட்ரூடோ, ஜோன் ரேர்ணர், கிம் காம்பல் மற்றும் கிரேசியன் ஆகியோர் அவர்களில் சிலர்.

முன்னதாக ஜஸ்ரின் ட்ரூடோவின் அமைச்சரவையில் கரி ஆனந்தசங்கரி பழங்குடியினர் உறவுகள் மற்றும் வடக்கு விவகார அமைச்சராக இருந்தவர். வடக்கு விவகார அமைச்சு கனடாவின் வடபிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்துக்கு பொறுப்பானதாகும்.2023 ஆம் ஆண்டில் ஜஸ்ரின் ட்ரூடோவினால் முதன்முதலாக அமைச்சராக நியமிக்கப்பட்டபோது கரி ஆனந்தசங்கரி கனடாவின் அமைச்சரவையில் முதலாவது இலங்கைத் தமிழ் உறுப்பினர் என்ற பெருமையைத் தனதாக்கி வரலாறு படைத்தார்.

1983 ஆம் ஆண்டில் ஒரு பத்து வயது அகதியாக கனடாவுக்கு வந்த கரி இன்று அந்த நாட்டின் அமைச்சரவையில் ஒரு உயர்மட்ட அமைச்சர். இது ஒரு குடியேற்றவாசியின் முதன்மைவாய்ந்த வெற்றிக் கதையாகும். தனது வேர்களைப் பற்றி பிரக்ஞை கொண்டவராகவும் இலங்கையில் உள்ள தனது மக்களின் துன்பங்களைப் பற்றி அக்கறை கொண்டவராகவும் இருப்பது கரியை பொறுத்தவரை மிகவும் பாராட்டத்தக்க ஒரு குணாதிசயமாகும். அவர் வெளிப்படையான தமிழ்த் தேசியவாத உணர்வுகளைக் கொண்ட ஒரு தமிழ்க் கனடியன். கடந்த காலத்தில் அவரைப் பற்றி நான் எழுதியிருக்கிறேன். இத்தகைய பின்புலத்தில் இன்றைய கட்டுரை எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் கரி ஆனந்தசங்கரி மீது கவனத்தைக் குவிக்கிறது.

வீரசிங்கம் ஆனந்தசங்கரி

கரி ஆனந்தசங்கரி முன்னாள் கிளிநொச்சி தொகுதி, யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தற்போதைய செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் இளைய புதல்வராவார். இந்த முதுபெரும் தமிழ் அரசியல் தலைவருக்கு முதல் மனைவி மூலமாக ஒரு மகனும் இரு மகள்மாரும் இருக்கிறார்கள். அந்த மனைவியின் மரணத்துக்கு பிறகு சங்கரி, யோகம் என்று பரவலாக அறியப்பட்ட ( கரியின் தாயாரான ) சற்குணவதியை திருமணம் செய்தார்.

கரிக்கு ஆரம்பத்தில் சத்தியசங்கரி என்று பெயர் சூட்டப்பட்டது. பின்னர் அவர் அதை ( Sathiyasangary – Gary ) கெரி என்று சுருக்கிக் கொண்டார். கரியின் தந்தையாருக்கும் அவரது ஆண் சகோதரங்கள் சகலருக்கும் மதிப்புமிக்க ஒரு பாடசாலை அதிபரான அவர்களின் தந்தையார் வீரசிங்கம் சங்கரி என்று முடியும் பெயர்களையே சூட்டினார். வீரசிங்கம் மாஸ்டரின் மகன்களும் அந்த நடைமுறையைப் பின்பற்றினர். அவர்கள் தங்களது மகன்களுக்கும் சங்கரி என்றே பெயர்களை வைத்தனர். அதனால் கரிக்கு சத்தியசங்கரி என்றும் கனடாவில் வாழும் அவரது மூத்த சகோதரருக்கு ஜெயசங்கரி என்றும் பெயர் வைக்கப்பட்டது. அதே போனறே ஆனந்தசங்கரியின் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கு சங்கரி என்று முடியும் பெயர்களே வைக்கப்பட்டன.

கரி 1972 அக்டோபர் 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். அவர் தனது ஆரம்பக்கல்வியை அச்சுவேலியில் பெற்றார். கரியின் ஏடு துவக்கத்தை அவரது தந்தைவழி பாட்டனாரான வீரசிங்கமே நடத்தி வைத்தார். ஆனால், கரியின் பெற்றோருக்கு இடையில் வேறுபாடு ஏற்பட்டு இறுதியில் அவர்கள் 1980 ஆம் ஆண்டில் பிரிந்து விட்டனர். கரியையும் கூட்டிக்கொண்டு தாயார் அயர்லாந்துக்கு குடி பெயர்ந்தார். அவருக்கு அந்த நாட்டில் உறவினர்கள் இருந்தார்கள்.

தாயும் மகனும் 1983 ஜூலையில் இலங்கைக்கு திரும்புவதற்கு திட்டமிட்டனர். கறுப்பு ஜூலை இனவன்செயல் அவர்களின் வாழ்க்கையை திடீரென்று பெரியளவில் மாற்றிவிட்டது. இளம் கரியின் முதல் அரசியல் அனுபவம் அவரது பத்து வயதில் கிடைத்தது. தாயாருடனும் ஏனைய இலங்கை தமிழர்கள் மற்றும் அனுதாபிகளுடன் சேர்ந்து கரி அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். 1983 ஜூலையில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவன்செயல்களைக் கண்டித்து கரி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் பதாதைகளும் ஏந்தினார்.

கறுப்பு ஜூலை இலங்கைக்கு திருப்புவதற்கான அவர்களின் திட்டத்தை சிதறடித்துவிட்டது. எதிர்காலத்தைப் பற்றிய ஏக்கம் அவர்களைப் வாட்டியது. தனக்கும் மகனுக்கும் கனடாவில் தஞ்சம் கோருவதற்கு திருமதி ஆனந்தசங்கரி தீர்மானித்து 1983 ஆகஸ்ட் 31 ஆம் திகதி அவர்கள் அந்த நாட்டை வந்தடைந்தார்கள்.

கனடாவில் புதிய வாழ்க்கை

கனடாவில் புதிய வாழ்வொன்றை தேடிக்கொள்வது அவர்களுக்கு பெரிய போராட்டமாக இருந்தது. தனது மகனை வளர்த்துப் படிப்பிப்பதற்கு ‘ தனியான தாயாக ‘ யோகம் கஷ்டப்பட்டு உழைத்தார்.கரியாக மாறிக்கொண்ட சத்தியசங்கரி மிகுந்த ஊக்கத்துடன் படித்தார். மேல்நிலைப் பாடசாலையில் கல்வியை முடித்துக் கொண்டு அவர் கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கால்ரன் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்தார். அங்கு அவர் 1996 ஆம் ஆண்டில் அரசியல் விஞ்ஞானத்தில் பி.ஏ.(சிறப்பு ) பட்டத்தைப் பெற்றார். ரொறண்டோவுக்கு திரும்பிய கரி பதிவுசெய்யப்பட்ட மனைவணிக முகவராக தகுதி பெற்றுக்கொண்டு மனைவணிகத்தில் ( Real estate business ) ஈடுபட்டார்.

சிறிது காலத்துக்கு பிறகு கரி யோர்க் பல்கலைக்கழகத்தின் சட்டபீடமான ரொறண்டோ ஒஸ்கூட் ஹோல் சட்டக் கல்லூரியில் சேர்ந்து கொண்டார். எல்.எல்.பி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு அவர் 2006 ஆம் ஆண்டில் சட்டத்தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். 2005 ஆம் ஆண்டில் கரி ஒஸ்கூட் ஹோல் சட்டக்கல்லூரியின் ‘ வன் ரு வோச் ‘ தங்கத்திறப்பு விருதை ( One to Watch ‘ Gold Key Award ) பெற்றார்.

மனை வணிகத் தொழிலில் இருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட கரி ஒன்ராறியோவின் ஸ்கார்பரோவில் ‘ கரி ஆனந்தசங்கரி அன்ட் அசோசியேட்ஸ் ‘ என்று சொந்த சட்ட நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நிறுவனம் வர்த்தகம், மனைவணிக சட்ட விவகாரங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் ஆகியவற்றில் சிறப்பு வாய்ந்ததாக விளங்கியது. மனித உரிமைகளுக்காக ஆர்வத்துடன் குரல் கொடுக்கும் கரி ஐக்கிய நாடுகளில் கனடாவின் சட்டத்தரணிகள் உரிமைகள் கண்காணிப்பகத்தை ( Lawyers’ Rights Watch Canada) கிரமமாகப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.உள்ளூர் இளைஞர்களுக்கான பலம்பொருந்திய ஒரு சட்டத்தரணியாகவும் சேவைசெய்த அவர் கலாவி நிறுவனங்களில் இருந்து தவறான முறையில் வெளியேற்றப்படுகின்ற அல்லது இடைநிறுத்தப்படுகின்ற மாணவர்களின் பிரச்சினைகளில் தலையீடு செய்து வழக்காடினார். கரிக்கு தெற்காசிய சட்டத்தரணிகள் சங்கத்தின இளம் சட்டத்தரணிக்கான விருது ( South Asian Bar Associatiion’s Young Practitioner Award ) கிடைத்தது.

சட்டத்துறைக்கு புறம்பாக, கரி சமூக நலன்புரி நடவடிக்கைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.கனடிய தமிழ் இளைஞர்கள் அபிவிருத்தி நிலையம், கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் தலைவராக பதவி வகித்த அவர் கனடிய தமிழ் காங்கிரஸின் ஆலோசகராவும் இருந்தார். இளைஞர் சவால் நிதியத்தின் ( Youth Challenge Fund ) பணிப்பாளர்கள் சபை உறுப்பினராக, ரொறண்டோ பொலிஸ் பிரதம அதிகாரியின் ஆலோசனைச் சபை உறுப்பினராகவும் கரி இருந்தார்.

சமூக சேவையிலும் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதிலும் கரியின் அர்ப்பணிப்பைக் கௌரவித்து இரண்டாவது எலிசபெத் மகாராணியின் பொன்விழா, வைரவிழா பதக்கங்கள் வழங்கப்பட்டன. வேறு பல முக்கியமான விருதுகளும் அவரைத் தேடிவந்தன.

ஸ்கார்பரோ – றூஜ் பார்க்

தனது மாணவ நாட்களில் இருந்து அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த கரி கனடாவின் லிபரல் கட்சியில் இணைந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட ஸ்கார்பரோ – றூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடுவதற்கு கட்சியின் நியமனத்தை அவர் கோரினார். ஸ்கார்பரோவின் கிழக்குப்பகுதியில் இருக்கும் இந்த தொகுதியின் சனத்தொகையில் சுமார் 15 சதவீதமானவர்கள் தமிழ்பேசும் மக்கள். 2015 பாராளுமன்ற தேர்தலில் ஸ்கார்பரோ – றூஜ் பார்க்கிற்கான லிபரல் கட்சியின் வேட்பாளராக கரி போட்டியிட்டார். 29, 913 ( 60.24 சதவீதம் ) வாக்குகளைப் பெற்று அவர் வெற்றியடைந்தார். மீண்டும் 2019 தேர்தலில் அதே தொகுதியில் 31, 360 ( 62.2 சதவீதம் ) வாக்குகளைப் பெற்று அவர் வெற்றிபெற்றார். 2021 தேர்தலில் மூன்றாவது தடவையாகவும் போட்டியிட்டு 28,102 ( 62.8 சதவீதம் ) வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார்.

ஸ்கார்பரோ – றூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்ட மூன்று தடவைகளும் 60 சதவீதமான வாக்குகளைப் பெற்றது கரியின் வெற்றியின் முக்கியத்துவமாகும். மேலும், அந்த கொகுதி வாக்காளர்களில் 85 சதவீதமானவர்கள் தமிழர்கள் அல்லாதவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. தமிழர்களிடம் மாத்திரமல்ல, சகல இனத்தவர்களிடமிருந்தும் கரி ஆதரவைப் பெற்றார் என்பது வெளிப்படையானது. மூன்று தேர்தல்களிலும் கரியை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளரையே அதிதீவிர தமிழ்த் தேசியவாதிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோர் ஆதரித்தார்கள் என்பது ஒரு விசித்திரமாகும்.

அமைச்சரவை அமைச்சர்

கரி ஆனந்தசங்கரியை அன்றைய கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தனது அமைச்சரவையில் பழங்குடியினர் உறவுகள் அமைச்சராக 2023 ஜூலை 26 ஆம் திகதி நியமித்தார். அந்த பொறுப்பில் இருந்து கொண்டு கரி நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் வரலாற்று அநீதிகளுக்கு பரிகாரம் காணவும் பழங்குடியினரின் நில உரிமைகளை மேம்படுத்தவும பாடுபட்டார். கனடாவின் வரலாற்றில் அமைச்சரவையின் ஒரு உறுப்பினராக வந்த முதலாவது இலங்கை தமிழர் அவரேயாவார்.ஜஸ்ரின ட்ரூடோவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சவை மாற்றத்தின்போது புதிதாக சேர்ககப்பட்ட ஏழு அமைச்சர்களில் கரி ஒருவர். அமைச்சராக பதவியேற்கும்போது அவர் தமிழ் மறையாம் திருக்குறள் மீது கைவைத்து சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கனடாவின் பாராளுமன்றத்துக்கு தெரிவான முதல் இலங்கை தமிழர் கரி அல்ல. அந்த பெருமையும் புகழும் இலங்கையில் பிறந்த ராதிகா சிற்சபேசனையே சாரும். அவர் 2011 ஆண்டில் ஸகார்பரோ -்றூஜ் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2023 ஆம் ஆண்டில் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக கரி வெவ்வேறு காலப்பகுதிகளில் மூன்று வெவ்வேறு அமைச்சர்களுக்கு பாராளுமன்ற செயலாளராக பணியாற்றினார். அவர் நீதியமைச்சரராகவும் சட்டமா அதிபராகவும் இருந்தவருக்கும் பிறகு பழங்குடியினர் உறவுகள் அமைச்சருக்கும் அடுத்து கனடிய மரபுரிமை மற்றும் பல்கலாசார அமைச்சருக்கும் பாராளுமன்ற ஙெயலாளராக இருந்தார்.

ஹரிணி சிவலிங்கம்

கரி ஆனந்தசங்கரி ஒரு சட்டத்தரணியான ஹரிணி சிவலிங்கத்தை திருமணம் செய்து கொண்டார். அவர் கனடாவில் தமிழீழ சங்கத்தின் முன்னாள் தலைவரான என். சிவலிங்கத்தின் மகளாவார். தம்பதியருக்கு பைரவி, சஹானா என்ற இரு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் கர்நாடக மற்றும் இந்துஸ்தானி சாஸ்திரிய சங்கீதத்தின் இரு இராகங்களைக் குறிக்கும்.

கரியும் ஹரிணியும் கனடாவில் இலங்கை தமிழர்களின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கையில் வாழும் தங்களது தமிழ்ச் சமூகத்தின் துன்பங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். இருவரும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உறுதியாகக் குரல்கொடுப்பவர்கள்.

லிபரல் கட்சியின் ஒரு வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதற்கு நியமனத்தை நாடியபோது கரி ஆனந்தசங்கரி தனனைப் பற்றியும் தனது இலட்சியத்தைப் பற்றியும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை பொதுவில் தமிழ்க் கனடியர்களையும் குறிப்பாக ஸ்கார்பரோ — றூஜ் பார்க் வாக்காளர்களையும் நோக்கியதாக இருந்தது.அவரது அரசியல் கோட்பாட்டையும் குறிக்கோள்களையும் அறிக்கை விளக்கியது. அதிலிருந்து சில பகுதிகள் வருமாறு ;

கரியின் அரசியல் கோட்பாடு

” கடந்த சில வாரங்கள் மிகவும் நெருக்கடியானவையாக இருந்தன.பாராளுமன்ற தேர்தலில் ஸ்கார்பரோ –்றூஜ் பார்க் தொகுதியில் போட்டியிடுவதற்காக லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை கோரும் எனது நோக்கத்தை கடந்த அக்டோபரில் அறிவித்தபோது அதை அடைவது சுலபமானதாக இருக்கப்போவதில்லை என்பதை தெரிந்திருந்தேன். மூன்று, ஐந்து வயது பிள்ளைகளைக் கொண்ட இளம் குடும்பம் எனக்கு இருக்கிறது ; ஆனால், இந்த நாட்டின் அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற எனது ஆர்வம் என்னை பொதுவாழ்வில் பிரவேசிக்க உந்தித் தள்ளியது. கனடாவில் பல சமூகப் பிரச்சினைகளால் கடுமையாக பாடுபட்டுக் கொண்டிருந்த அதேவேளை எனது தீர்க்கமான பிணைப்பு தமிழ்ச் சமூகத்துடனானதாகவே இருக்கும் என்பதையும் தெரிந்திருந்தேன். எதிர்காலத்துக்கான எனது நோக்கை விளக்குவதற்காக தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு நான் இந்த குறிப்பை எழுதுகிறேன்.

” நான் முற்றுமுழுதாக ஒரு தமிழ்த் தேசியவாதி. அதை நான் சொல்ல வேண்டியதில்லை. அவ்வாறு வாழ்ந்திருக்கிறேன். எனது பத்து வயதில் இருந்தே நான் தமிழர்களின் உரிமைகளுக்காக நான் பாடுபட்டிருக்கிறேன். ஆர்ப்பாட்டங்களில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தேன்.1980 களில் ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை தாங்கியிருக்கிறேன். எமது சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் ஏனைய கனடியர்களுக்கு விளக்குவதற்காக நூற்றுக்கணக்கான கூட்டங்களை நான் இங்கும் வெளிநாடுகளிலும் ஏற்பாடு செய்திருக்கிறேன். நான் வளர்ந்த பிறகு கனடாவில் தமிழர்களுடன் தொடர்புடைய முக்கியமான ஒவ்வொரு பிரச்சினைக்காகவும் குரல் கொடுத்து வந்திருக்கிறேன். பயங்கரவாதிகள் என்று எங்களை அழைத்ததால் ஏற்பட்ட பிரச்சினைகள், கோஷ்டி வன்செயல்கள், ஊடகங்களில் எம்மைப் பற்றிய எதிர்மறையான பிரசாரங்கள், வேலைத்தலங்களில் எதிர்நோக்க வேண்டியிருந்த சவால்கள், அகதிப் பிரச்சினைகள், ஆர்ப்பாட்டங்கள், இலங்கையில் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்று பெருவாரியான நெருக்கடிகளை நாம் எதிர்நோக்க வேண்டியிருந்தது.

” இலங்கைத்தீவில் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களுக்கு புதியதொரு அரசியல் கட்டமைப்பு தேவை என்று உறுதியாக நம்புகிறேன். வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களினாலேயே அந்த கட்டமைப்பு தீர்மானம் செய்யப்பட வேண்டும். சமஷ்டிக் கட்டமைப்பு, ஒரு கூட்டமைவுக் கட்டமைப்பு (Confederate structure ) அல்லது சுதந்திரமான தனியரசு என்று பல தெரிவுகளை உள்ளடக்கியதாக அந்த கட்டமைப்பு அமையலாம்.

” அதற்கான செயற்திட்டம் ஒருபோதுமே மீண்டும் வன்முறையாக மாறிவிடக்கூடாது என்பதிலும் நான் உறுதியான நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறேன். ஒரு ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்குள்ளேயே அந்த தீர்வு காணப்படவேண்டும். இந்த குறிக்கோள்களை அடைவதற்காக எனது நெருங்கிய நண்பரகள், குடும்ப உறுப்பினர்கள் பலர் தங்களது உயிர்களைத் தியாகம் செய்தார்கள். எனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் உட்பட தமிழ்த் தேசத்துக்காக போராடி உயிர்துறந்தவர்களை கௌரவித்து நினைவு கூருவதற்கான நிகழ்வுகளில் கிரமமாக நான் பங்கேற்றிருக்கிறேன். அவர்களைக் கௌரவிப்பதற்காக நாம் எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு ஏனைய வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.

” 2009 ஆம் ஆண்டில், தமிழர்கள் என்பதற்காக மாத்திரம் எமது உறவுகள் மரணடைந்துகொண்டிருந்தபோது உலகம் பூராவுமுள்ள தமிழர்கள் பெரும் கூட்டு வேதனையுடன் அழிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.கட்டவிழ்ந்துகொண்டிருந்த இனப்படுகொலையை முழு உலகமும் அலட்சியத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததையும் நாம் கண்டோம்.விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் முடங்கிப்போன மூன்று இலட்சம் தமிழர்களின் கதி என்ன? இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பதில் என்ன? தமிழர்களுக்கு என்ன நேரும்? அவர்களும் நாங்களும் எவ்வாறு நீதியைப் பெறுவது?

” பல வாரங்களாக இதைப் பற்றி சிந்தித்த பிறகு எனது மனைவி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்த கடிதம் எனது வாழ்க்கையின் போக்கையே மாற்றியது. அதன் விளைவாக, 2009 மாரச் 9 ஆம் திகதி நாம் ஜெனீவாவிற்கு சென்றோம். உலகின் பல பாகங்களிலும் இருப்து தமிழர்களை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைத்தோம் எமது பிரச்சினையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவி பிள்ளைக்கு விளக்கிக் கூறினோம். ஐந்து வருடங்களாக நான் கிரமமாக ஜெனீவாவுக்கு சென்று வந்தேன். சில சந்தர்ப்பங்களில் ஹரிணியுடனும் எங்களது கைக்குழந்தையுடனும் அங்கு சென்றோம். வேறு எங்கேயும் விட ஜெனீவாவில் கூடுதலான எமது ஆற்றல்களை பயன்படுத்தினால் பயனுறுதியுடைய காரியங்களைச் செய்யமுடியும். ஆம் , நாம் போராட்டங்களை நடத்த முடியும். அவ்வாறு செய்தோம். எயது வலைத்தளங்களில் எழுதமுடியும். ஒவ்வொரு கட்டத்திலும் ஆயிரக்கணக்கான தமிழர்களை எம்மால் திரட்டக்கூடியதாக இருந்தது. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நம்பினோம். ஆயிரக்கணக்கான டொலர்களை செலவுசெய்து மகாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கு எம்மால் முடிந்தது.வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்த முடிந்தது. தமிழச் சமூகத்தின் மத்தியிலும் தமிழ்ச் சமூகத்துக்கும் எம்மால் பேசக்கூடியதாக இருந்தது. நாம் மேலும் கூடுதலாக செய்திருக்க வேண்டும். ஆனால் நாம் செய்வில்லை.

“பதிலாக, சர்வதேச பொறுப்புக்கூறல் விவகாரம் மீது கவனத்தைச் செலுத்தினோம். இடையறாது அவ்வாறு செய்தோம். ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எந்தவொரு தனி நபரும் உரிமை கோரமுடியாது. நான் சம்பந்தப்படாவிட்டாலும் கூட அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்று சிலர் கூறியிருக்கிறார்கள். அவர்கள் கூறுவது சரியாக இருக்கக்கூடும். ஆனால், நாம் முப்பதுக்கு மேற்பட்ட தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்றோம். சரியானது என்று நாம் நம்பிய பாதையில் தொடர்ந்து முயற்சிகளை முன்னெடுத்தோம். அதாவது போர்க் குற்றங்களுக்கும் மனதகுலத்துக்கு எதிரான குற்றச் செயல்களுக்கும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கும் பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் என்பதே எமது குறக்கோளாக இருந்தது.

” இனப்படுகொலை பிரச்சினையில் என்னைப் பற்றி தவறாக பிரசாரம் செய்யப்பட்டது. ஒவ்வொரு மூச்சுக்கும் இனப்படுகொலை என்ற சொல்லை நான் கூறிக் கொணடிருக்கவில்லை என்பது உண்மையே. அந்தச் சொல்லை நான் தந்திரோபாய அடிப்படையில் பயன்படுத்தியிருக்கிறேன். ஆனால், தற்போதைய விசாரணையில் இனப்படுகொலை தொடர்பான விசாரணையும் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்பது உண்மை நிலையை தானாகவே உணர்த்தும். அது தற்செயலாக நடந்தது அல்ல. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்று நான் எழுதியும் பேசியும் இருந்தேன். சட்டரீதியான ஒரு கோணத்தில் இருந்து இனப்படுகொலையை நிரூபிப்பதில் உள்ள சவால்களை நான் விளக்கிக் கூறியும் இருக்கிறேன். இருந்தாலும், நிரூபிப்பதற்கு நாம் முயற்சிக்கக்கூடாது என்று அது அர்த்தப்படாது. இனப்படுகொலை இடம்பெற்றதை நான் நிராகரித்ததாக கூறிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒன்றை நான் கூறுகிறேன். அதாவது உங்களுக்கு பொய் கூறப்பட்டிருக்கிறது. அல்லது நீங்கள் பொய்கூறிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக முக்கியமான ஒரு பிரச்சினையை துஷ்பிரயோகம் செய்கிறீர்கள்.

” மற்றவர்களிடம் இருந்து மதிப்பைப் பெறுகின்ற, சமூஙத்துக்கும் இந்த நாட்டுக்கும் பெருமளவில் பங்களிப்பைச் செய்கின்ற, கனடாவிலும் இலங்கையின் வடக்கு, கிழக்கிலும் வாழ்கின்றவர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்காக குரல் கொடுக்கின்ற துடிப்பானதும் பலம்பொருந்தியதுமான சமுதாயத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். விடயங்களை அறிந்த, தெளிவாகப் பேசக்கூடிய, வலிமையான தலைவர்களை நாம் எதிர்பார்க்க வேண்டும், உருவாக்க வேண்டும்.

” நாம் அகிம்சைப் பாதையைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.எம்மைப் போன்றே போராடுகின்ற ஏனையவர்களுக்கு எமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். பால் வேறுபாடு, இனவாதம், சாதிப்பாகுபாடு, வர்க்கபேதம், வெளிநாட்டவர் மீதான பீதி போன்ற அநீதிகளை நாம் சவாலுக்கு உட்படுத்த வேண்டும். ஓரமாக நின்ற பார்க்கின்றவர்களாக இலாலாமல் முடிவுகள் எடுக்கப்படுகின்ற இடத்தில் இருப்பவர்களாக எம்மை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம்.தமிழர் என்பதற்காக ஒருவரை மேம்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும். ஆனால், அவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தால் ஆதரவளிக்க வேண்டும்.

” கனடாவின் ஒரு அங்கமாக இருக்கின்ற அதேவேளை தமிழ்க் கனடியர்களாக பெருமையுடன் எம்மால் உரிமை கோரமுடியும் என்று நம்புகிறவர்களே ஸ்கார்பரோ – றோஜ் பார்க் தொகுதியில் லிபரல் கட்சியின் நியமனத்தைக் கோரும் என்னுடன் தயவுசெய்து இணைந்து கொள்ளுங்கள். எமது சமூகத்துக்கும் எமது நாட்டுக்குமான ஒரு புதிய நோக்கை கட்டியெழுப்புவோம்”

பற்றுறுதியுடனான பிரசாரம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை ஆகியவற்றுக்கு பொறுப்புக்கூற வைக்கப்படவேண்டும் எனபதற்காக கரி ஆனந்தசங்கரி முன்னெடுத்த பிரசாரங்களும் நடவடிக்கைகளும் 2022 மே மாதத்தில் கனடாவில் ஓரளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறது போல தோன்றியது. மே 18 ஆம் திகதியை ” தமிழர் இனப்படுகொலை நினைவுநாளாக ” அனுஷ்டிப்பதற்கான பிரேரணை ஒன்றை கனடிய பாராளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியது. உலகில் அவ்வாறு முதலில் செய்தது கனடிய பாராளுமன்றமேயாகும். கனடிய அரசாஙாகமும் எதிர்க்கட்சியும் சேர்ந்து ஏகமனதாக அந்தப் பிரேரணையை நிறைவேற்றியது கவனிக்கத்தக்கது. அவ்வாறு ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு தீவிரமான பிரசாரங்கள் அவசியம்.அத்தகைய பிரசாரங்களில் முக்கியமானவராக கரி ஆனந்தசங்கரி விளக்கினார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை

” இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதை இந்த சபை ஏற்றுக்கொள்கிறது. மே 18 ஆம் திகதியை ஒவ்வொரு வருடமும் தமிழர் இனப்படுகாலை தினமாக அனுஷ்டிப்பதற்கு சபை அங்கீகாரம் அளிக்கிறது” என்று தமிழர் இனப்படுகாலை தினம் தொடர்பான பிரேரணையில் கூறப்பட்டிருந்தது. அந்த பிரேரணையை கொண்டுவந்த கரி ஆனந்தசங்கரி ” மே 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை தினமாக அங்கீகரிப்பதற்கான பிரேரணை கனடிய பாராளுமன்றத்தில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. உலகிலேயே முதன்முதலாக அவ்வாறு செய்த முதல் பாராளுமன்றமாக கனடிய பாராளுமன்றம் இன்றைய முக்கியமான தினத்தில் விளங்குகிறது” என்று ருவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

கரி ஆனந்தசங்கரி வெளியிட்ட ஊடக அறிக்கை ஒன்றில் பின்வருமாறு கூறினார் ;

” தமிழ்ச் சமூகத்தின் பல உறுப்பினர்களும் போரில் உயிர்தப்பியவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொண்ட நியாயாதிக்கங்களும் பல வருடங்களாக பாடுபட்டதன் விளைவாக இறுதியில் கனடா பாராளுமன்றம் மே 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக அங்கீகரித்திருக்கிறது.”

இனப்படுகொலை நினைவுதினம்

அந்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிநைவேற்றப்பட்ட பிறகு செய்தியாளர்கள் மகாநாடொன்றில் உரையாற்றிய கரி ஆனந்தசங்கரி, ” கனடாவில் உள்ள தமிழர்களுக்கு மாத்திரமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும். பாராளுமன்றத்தில் கருத்தொருமிப்புடன் கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணை இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொள்வதுடன் மே 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவுதினமாக அங்கீகரிக்கிறது. இது உலகில் முதற்தடவையாக வழங்கப்பட்ட அங்கீகாரமாகும்.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.