சொந்தக்காலில் நிற்கும் முயற்சி?

ரொபட் அன்டனி
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று குழுவானது அண்மையில் இலங்கைக்கான 4 ஆவது தவணைப்பணத்தை பெற்றுக் கொடுப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியது. அதன்படி இலங்கைக்கு கிட்டத்தட்ட 330 மில்லியன் டொலர்கள் கிடைக்கின்றன. இந்த தவணைப் பணத்துடன் மொத்தமாக இதுவரை இலங்கை 4 தவணைப் பணங்களை பெற்றுள்ளதுடன் அது கிட்டத்தட்ட 1.4 பில்லியன் டொலர்களாகும்.
சர்வதேச நாணய நிதியமும் இலங்கையும் விரிவாக்கப்பட்ட நிதிவசதி ஒப்பந்தத்தை கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் செய்து கொண்டன. அதனடிப்படையில் இலங்கை 48 மாதங்களில் 8 தவணைப் பணங்களில் 2.9 பில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடாகியது.
முதலாவது தவணைப் பணம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி கிடைத்தது. அடுத்த தவணைப் பணத்தை பெறுவதற்கு முன்னதாக ஒவ்வொரு முறையும் மீளாய்வுகளை செய்ய வேண்டும். அதன்படி கடந்த நவம்பர் மாதம் 3ஆவது மீளாய்வு நடவடிக்கைகளை இலங்கையில் நாணய நிதியம் மேற்கொண்டது. அந்த 3ஆவது மீளாய்வுக்கு நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அங்கீகாரம் அளித்த நிலையிலேயே தற்போது 4ஆவது தவணைப் பணம் கிடைக்கவிருக்கிறது.
இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணத்தில் இந்த 4ஆவது தவணைப் பணம் இலங்கைக்கு கிடைக்கும் என்பதானது மிக முக்கியமானதொரு கட்டமாக கருதப்படுகிறது.
மேலும் கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் நிகழ்நிலை ஊடாக தொடர்புகொண்டு கலந்துரையாடல் நடத்தியிருந்தார்.
இதன்போது இரண்டு தரப்பினரும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக உரையாடியிருந்தனர். இந்த சந்திப்பின் போது இலங்கை மேற்கொள்ளும் முக்கிய மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு தெரிவித்ததுடன் இலங்கையின் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அறிவித்திருந்தார்.
மீண்டுவரும் செயற்பாடு
இலங்கை 2022ஆம் ஆண்டு எதிர்கொண்ட மிகப் பாரிய பொருளாதார நெருக்கடியின் பின்னர் 2023ஆம் ஆண்டு நாணய நிதியத்துடன் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஒப்பந்தத்தை செய்து கொண்டது.
2022ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட டொலர் மற்றும் பொருளாதார நெருக்கடி எந்தளவு தூரம் மோசமான விளைவுகளை நாட்டில் ஏற்படுத்தியது என்பதை புதிதாக கூறுவதற்கில்லை. மக்கள் மிகப் பெரிய நெருக்கடிகளை இந்த காலத்தில் எதிர்கொண்டனர். நாட்டின் சகல துறைகளும் பாதிக்கப்பட்டன.
டொலர் பற்றாக்குறை காரணமாக இறக்குமதிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயு, மருந்து பொருட்கள், அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதிக்கான மூலப் பொருட்கள் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கான சூழல் ஏற்பட்டது. மக்கள் எரிபொருட்களை பெற்றுக் கொள்வதற்காக கிலோ மீற்றர் கணக்கில், நாற்கணக்கில் வரிசைகளில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
எரிபொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்தன. அதுமட்டுமன்றி எரிவாயு உள்ளிட்ட சகல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்தன. ஒருபுறம் விலை அதிகரிப்பு, மறுபுறம் தட்டுப்பாடு, வரிசை என மக்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர். எரிபொருள் இறக்குமதி குறைவடைந்தமையினால் மின்சார உற்பத்தியும் வீழ்ச்சியடைந்தது. இதனால் 10 மணித்தியாலங்களுக்கும் மேல் மின்வெட்டு அமுலாகியது. மின்வெட்டினால் பொதுவாக மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதுடன் தொழிற்துறையும் ஸ்தம்பிதமடையும் நிலை ஏற்பட்டது.
மக்களினால் வருமானங்களை பெற முடியவில்லை. கஷ்டங்களுக்கு மத்தியில் பெற்ற வருமானத்தைக் கொண்டு கொள்வனவு செய்ய முடியவில்லை. உணவுகளை சமைப்பதற்கு முடியவில்லையென 2022ஆம் ஆண்டு மக்கள் எதிர்கொண்ட பொருளாதார சவால்கள் வார்த்தைகளினால் விபரிக்க முடியாத தன்மையைக் கொண்டிருந்தனர்.
அதேபோன்று மக்களின் வாழ்க்கைச் செலவு பல மடங்கு அதிகரித்தது. பணவீக்கம் 80 வீதத்தை தாண்டியது, உணவு பணவீக்கம் 90 வீதத்தை தாண்டியது. இதனால் மக்களினால் தமது பொருளாதார தேவைகளை நிறைவேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் வறுமை நிலையும் உயர்வடைந்தது. 14 வீதமாகக் காணப்பட்ட வறுமை வீதமானது 26 வீதமாக உயர்வடைந்தது.
உலக வங்கி மற்றும் உள்நாட்டு பல்வேறு பொருளாதார அமைப்புகள் இது தொடர்பான புள்ளி விபரங்களை அவ்வப்போது வெளியிட்டன. வறுமை அதிகரித்ததன் காரணமாக நடுத்தர வருமானம் பெறுகின்ற குடும்பங்களில் போஷாக்கு பிரச்சினை ஏற்பட்டது. குடும்ப உறுப்பினர்களுக்கு போஷாக்கான உணவை பெற்றுக் கொடுப்பதில் குடும்பங்கள் சவால்களை எதிர்கொண்டன. குடும்பங்களினால் பொருளாதார தேவைகளை நிறைவேற்ற முடியவில்லை. தமது பொருளாதார தேவைகளை நிறைவேற்றுவதற்காக சொத்துக்களை அடகு வைத்தனர். விற்பனை செய்தனர்.
மேலும் வங்கி வட்டி வீதங்கள் அதிகரித்தன. இதனால் மக்கள் கடன் பெறும் நிலைமை குறைவடைந்தது. தனியார் கடன்கள் குறைவடைந்ததனால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் பாதிக்கப்பட்டன. இதன்காரணமாக வேலைவாய்ப்புக்கள் குறைவடைந்தன. மக்களின் வருமானம் வீழ்ச்சியடைந்தது. மறுபுறம் இலங்கையினால் சர்வதேச கடன்களை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இலங்கை வெளிநாட்டுக் கடன்களை மீள செலுத்த முடியாத வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இவ்வாறு 2022ஆம் ஆண்டு சுதந்திர வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு பாரிய பொருளாதார நெருக்கடிகள் இவ்வாறு ஏற்பட்டன. இந்த நெருக்கடினகள் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பாக ஏற்கனவே ஆராயப்பட்டு விட்டது. எப்படியிருப்பினும் தற்போது எவ்வாறு இலங்கை இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிறது என்பதே முக்கியமாகும்.
நாணய நிதியத்தின் பரிந்துரைகள்
2023ஆம் ஆண்டு நாணய நிதியம் இலங்கையுடன் விரிவாக்கப்பட்ட நிதிவசதி ஒப்பந்தத்துடன் கைச்சாத்திட்டபோது நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளையும் பரிந்துரைகளையும் இலங்கைக்கு முன்வைத்தது. அதாவது, ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், பட்ஜட் பற்றாக்குறையை குறைத்தல், அரச வருமானத்தை அதிகரித்தல், இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தல், ரூபாவின் பெறுமதியை சந்தை தீர்மானிப்பதற்கு இடமளித்தல், வட்டி வீதங்களைக் குறைத்தல், பண வீக்கத்தை ஸ்திரப்படுத்துதல், அரச வருமானத்தை அதிகரித்தல், செலவுகளை முகாதை்துவம் செய்தல், கடன் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுதல், கடன் ஸ்திரத்தன்மையை பேணுதல், அரச கொள்முதல் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை பேணுதல் உள்ளிட்ட பல பரிந்துரைகளும் நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டன.
நாணய நிதியத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் இலங்கை கடந்த 2 வருட காலத்தில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. பணவீக்கம் ஒற்றை இலக்கத்துக்கு குறைவடைந்தது, வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டன, அரச வருமானம் அதிகரித்தது, கடன் மறுசீரமைப்புக்கள் செய்யப்பட்டன, ரூபாவின் பெறுமதி ஸ்திரமடையும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு பல்வேறு சாதகமான முன்னேற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இதனடிப்படையிலேயே இலங்கையின் இந்த பொருளாதார நிலைமை தொடர்பாக நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் தற்போது நான்காவது தவணைப் பணத்தையும் பெற்றுக் கொடுக்க அனுமதி வழங்கியுள்ளது.
அடுத்தக்கட்ட பொருளாதார நகர்வுகள்
எனவே, அடுத்தகட்டமாக இலங்கை எவ்வாறு பொருளாதார நகர்வுகளை முன்னெடுக்கப் போகிறது என்பது மிக முக்கியமாக இருக்கிறது. குறிப்பாக நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பாக இலங்கைக்கு பாரியதொரு சவால் காணப்படுகிறது. உதாரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பாரியதொரு நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதனை மறுசீரமைக்க வேண்டியது நாணய நிதியத்தின் நிபந்தனையாகும்.
ஆனால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை தனியார்மயப்படுத்த மாட்டோம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அப்படியானால் அதனை இலாபமடையும் நிறுவனமாக எவ்வாறு மாற்றியமைப்பது என்பது ஒரு முக்கியமான விடயமாக இருக்கிறது. நாணய நிதியத்தை பொறுத்தவரையில் நட்டமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை, மாறாக அவை திறைசேரிக்கு சுமையின்றி செயற்பட வேண்டும் என்பதே நாணய நிதியத்தின் பரிந்துரையாகக் காணப்படுகிறது.
இலங்கை கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதிய அரசாங்கமும் அந்த செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறது. அதேநேரம் பொருளாதார மறுசீரமைப்புகளும் புதிய திட்டங்களும் புதிய நீண்டகால அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் அவசியமாகின்றன.
வறுமையை குறைப்பதற்கு பொருளாதார வலுவூட்டல் திட்டங்கள் அவசியமாகின்றன. நாட்டில் தற்போது கிட்டத்தட்ட 60 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்றனர். எனவே, தற்போதைய இந்த பொருளாதார மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களின் கீழ் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற அல்லது வறுமைக்கோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ள மக்களை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கு வலுவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதேபோன்று சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதும் இன்றியமையாதது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சிகள் வலுவூட்டப்படுவதன் மூலமாக நாட்டில் தொழில்வாய்ப்புக்களை அதிகரித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். அதற்கு வட்டி வீதங்கள் மேலும் குறைவடைய வேண்டும். அதுமட்டுமன்றி ஏற்றுமதி, சுற்றுலாத்துறை, வெளிநாடுகளில் பணிபுரிவோர் ஆகிய துறைகளுடாக டொலர் உள்வருகையை அதிகரித்துக் கொள்வதும் கட்டாயமாகவுள்ளது.
எப்படியிருப்பினும் மற்றுமொரு பொருளாதார நெருக்கடி நாட்டில் ஏற்படாதவாறு மறுசீரமைப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் நாணய நிதியத்துடனான பயணமும் மிக முக்கியமானது. ஆனால், நாணய நிதியத்தை மட்டும் நம்பிக்கொண்டிருக்காமல் இலங்கை விரைவில் சொந்தக்காலில் நிற்பதற்கான பொருளாதார திட்டங்கள் வகுக்கப்படுவதிலேயே மீட்சியும் நீடிப்பும் தங்கியிருக்கின்றன.