;
Athirady Tamil News

நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?

0

ரொபட் அன்டனி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரலாற்று ரீதியாகக் காணப்படுகிற அரசியல், பொருளாதார, சமூக, கலாசார பிணைப்புகளின் அடிப்படையில் இந்தியப் பிரதமரின் இந்திய விஜயம் வரலாற்று முக்கியத்துவமிக்கதாக அமைகிறது.

இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார, பிரதமர் ஹரிணி, வெளிவிவகார அமைச்சர் விஜத்த ஹேரத் உள்ளிட்ட அரச தரப்பினரை சந்தித்து பேச்சுநடத்தவிருக்கிறார். அதேபோன்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மலையகக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் இந்தியப் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

அந்த வகையிலேயே பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் வரலாற்று ரீதியாக முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது. கடந்த டிசெம்பர் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர். இதன்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்தியப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பின் பிரகாரமே இந்தியப் பிரதமர் மோடி ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.

இந்தியப் பிரதமர் இலங்கைக்கான விஜயத்தின் போது சம்பூருக்கும் அநுராதபுரத்துக்கும் விஜயம் செய்யவுள்ளார். சம்பூரில் அமைக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்திட்டத்தை நரேந்திர மோடி ஆரம்பித்து வைக்கவிருக்கிறார். அதேபோன்று அநுராதபுரம் மஹாபோதிக்கும் இந்தியப் பிரதமர் விஜயம் செய்யவிருக்கிறார். அத்துடன் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இந்த விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிக நீண்ட காலமாக மிக நெருக்கமான பரந்துபட்ட உறவுகள் நீடிக்கின்றன. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் கடந்த காலங்களில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கூட இலங்கை மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா இருந்து வருகிறது.

மேலும் பிராந்தியத்தின் மிக பலமான நாடாக உருவெடுத்து வருகின்ற இந்தியாவுடனான இலங்கையின் பொருளாதார வர்த்தக ரீதியான தொடர்புகள் முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுகின்றன.

அண்மைய காலமாக இந்தியாவின் மிக அபாரமான பொருளாதார வளர்ச்சியானது உலக மட்டத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. எனவே, அந்த பொருளாதார வளர்ச்சியில் இலங்கையும் பயன்பெற வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியப் பிரதமரின் இந்திய விஜயம் இடம்பெறவுள்ளது.

அதுவும் தற்போது இலங்கையில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது. எனவே, ஒரு காலத்தில் ஜே.வி.பி.யானது இந்திய எதிர்ப்புக்கட்சியாகவே பார்க்கப்பட்டது. எனினும் தற்போது நிலைமைகள் மாறியுள்ளன. இந்தியாவுடனான உறவுகள் மிக முக்கியமானவை என்று ஜே.வி.பி. தற்போது கூறி வருகின்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயமானது மிக முக்கியத்துவமிக்கதாகக் காணப்படுகிறது. இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான மிக நெருக்கமான உறவை மேலும் பலப்படுத்துவதாக அமையும்.

இந்தியாவுடனான உறவு இலங்கைக்கு மிக முக்கியமானது. எனவே, இந்திய பிரதமரின் விஜயம் விசேடமானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம் எந்தளவு தூரம் விஜயத்தை முக்கியத்துவமிக்கதாக பார்க்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இலங்கை மிக நீண்டகாலமாகவே பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவை தொடர்பாகவும் இதன்போது ஆராயப்படும். குறிப்பாக வலுசக்தி துறையில் இந்தியாவின் முதலீடுகள் தொடர்பில் இதன்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடி திருகோணமலைக்கும் விஜயம் செய்து எண்ணெய்க் குதங்களை பார்வையிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று பிரதமர் மோடி வடக்கு, கிழக்கு மற்றும் மலையக கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். அதாவது, வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியா தொடர்ந்து முக்கியமான பாத்திரத்தை வகித்து வருகிறது.

தமிழ் பேசும் மக்கள் கெளரவமாகவும் மரியாதையாகவும் வாழ்வதற்கான சூழல் அதிகாரப் பகிர்வுடன் கூடிய வகையில் உருவாக்கப்படும் என இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வடக்கு, கிழக்கு அரசியல் பிரதிநிதிகளுடனான பேச்சுக்களின் போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம், 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோன்று மலையக கட்சிகளுடனான சந்திப்பின் போது மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படும். மலையக மக்களின் வீட்டுத் திட்டம், கல்வி, சுகாதார நிலைமைகள் தொடர்பாகவும் விசேட திட்டம் தொடர்பில் பேசப்படும்.

இந்திய பிரதமர் விஜயத்தின் போது வழமையாக இந்த விடயங்கள் பரந்துபட்ட ரீதியில் ஆராயப்படுவதுண்டு. அந்த வகையில் இம்முறையும் இந்த விடயங்கள் தொடர்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினை தொடர்பாகவும் முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

அண்மைய காலமாக இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கைதுகளும் அதிகரித்துள்ளன. எனவே, இது தொடர்பாகவும் இந்திய பிரதமரின் விஜயத்தின் போது விரிவாக ஆராயப்படவுள்ளது.

இந்தியா, இலங்கைக்கு இக்கட்டான கட்டங்களில் பாரிய உதவிகளை செய்து வந்திருக்கிறது. குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்திருந்த போது, 3.8 பில்லியன் டொலர் கடன் உதவியை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. அந்த 3.8 பில்லியன் டொலர் கடன் உதவியூடாகவே கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை மக்கள் மூச்சு விடக்கூடிய சூழல் ஏற்பட்டது. இந்தியாவின் உதவி கிடைத்திருக்காவிடின் இலங்கையின் பொருளாதார நெருக்கடி நடந்ததை விட மிக மோசமான நிலைமைக்கு சென்றிருக்கும்.

அதுமட்டுமன்றி இலங்கை நாணய நிதியத்தை நாடி விரிவாக்கப்பட்ட நிதிவசதி ஒப்பந்தத்தை செய்து கொள்வதற்கும் இந்தியா உதவியது. இலங்கைக்கு முதலாவதாக சர்வதேச நிதியியல் உத்தரவாதத்தை இந்தியாவே வழங்கியது.

அதுமட்டுமன்றி சுனாமி பேரலை அனர்த்தத்தின் போதும் இலங்கைக்கு முதலாவதாக இந்தியா உதவியது. மேலும் யுத்தம் முடிந்ததன் பின்னர் வடக்கு, கிழக்கு மீள்கட்டுமாண செயற்பாடுகளையும் இந்தியா கனிசமாக பங்களிப்பு செய்தது.

மலையகத்திலும் வீட்டுத் திட்டங்களை மேற்கொள்வதற்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை செய்து வந்தது. 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கும் இந்தியா உதவியது. அந்த வகையில் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிக முக்கியத்துவமாக இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் நரேந்திர மோடியின் இலங்கை விஜயமானது பல்வேறு மட்டங்களிலும் முக்கியத்துவமிக்கதாக காணப்படுகிறது.

எனினும், இரண்டு நாடுகளும் பல்வேறு சிக்கல் மிக்க விடயங்களில் அடுத்தகட்டமாக எவ்வாறு பயணிக்கப் போகிறது என்பது முக்கியமாகும். அதன் சமிக்ஞைகள் இந்த விஜயத்தின் போது வெளிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.