;
Athirady Tamil News

அதிகளவில் நிராகரிக்கப்படும் வேட்பு மனுக்கள்

0

மொஹமட் பாதுஷா

இலங்கையில் தேர்தல்கள் இடம்பெறுகின்ற போது கணிசமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதையும், அரச ஊழியர்களின் தபால் மூல வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதையும், மக்களால் அளிக்கப்படுகின்ற இலட்சக்கணக்கான வாக்குகள் செல்லுபடியற்றதாக ஆகிவிடுவதையும் தொடர்ச்சியாக கண்டு வருகின்றோம்.

இந்த நிராகரிப்புகள், சம்பந்தப்பட்ட தரப்பினரை ஜனநாயக செயன்முறையான குறிப்பிட்ட தேர்தலில் செல்வாக்குச் செலுத்த முடியாதவர்களாக ஆக்கி விடுகின்றது. படிப்பறிவும் எழுத்தறியும் உயர்ந்த மட்டத்தில் உள்ள மக்கள் வாழ்கின்ற நாடொன்றில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை சர்வ சாதாரணமாகக் கடந்து போகக் கூடிய விடயமல்ல.

அந்த வகையில், 2025 மே 6ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்வதன் பிரதான கட்டம் முடிவுக்கு வந்து விட்டது. அங்கீகரிக்கப்பட்ட பெரிய, சிறிய அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, ஏகப்பட்ட சுயேச்சை குழுக்களும் திடீரென உருவாகி., இத் தேர்தலில் களமிறங்கியுள்ளன.
ஆனால், வடக்கு, கிழக்கு, கொழும்பு உட்பட நாட்டின் எல்லா தேர்தல் மாவட்டங்களிலும் கணிசமான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 400 இற்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு அதிக எண்ணிக்கையில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை ஒரு பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக, ‘சிறிய காரணங்களுக்காக’ இவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் இதற்குப் பின்னால் வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் இருக்குமா என்றும் சம்பந்தப்பட்ட கட்சிகள் சொல்லுமளவுக்கு நிலைமைகள் சென்றுள்ளதை காண முடிகின்றது.

குறிப்பாக, வட மாகாணம் மற்றும் அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டம் போன்ற இடங்களில் தாக்கல் செய்யப்பட்ட சில வேட்புமனுக்கள் 18-35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் பிறப்புச் சான்றிதழ் பிரதிகள் தொடர்பான காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட கட்சிகள் கூறியுள்ளன.
இவ்வாறு சிறிய காரணங்களுக்காக தங்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து பல தமிழ், முஸ்லிம் கட்சிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளன. அதனடிப்படையில் தமது பக்கத்தில் நியாயமுள்ளது எனக் கருதும் கட்சிகள் இவ்வாரம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு முஸ்தீபுகளைச் செய்து வருகின்றன.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணையாளர், வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளும் குழுவினால் அவை நிராகரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதாவது, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் சட்ட விதிகள், சுற்று நிருபங்களுக்கு அமைவாகவே மனுக்களை நிராகரித்துள்ளதாக அவர் மறைமுகமாகக் கூறியுள்ளார்.

ஆனால், கட்சிகளின் வேட்புமனுக்களும் தேர்தலின் போது, மக்கள் அளிக்கப்படுகின்ற வாக்குகளும் அதிகளவில் நிராகரிக்கப்படுகின்ற போக்கில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய கூட்டுப் பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 667 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இவற்றுள் தபால்மூலம் வாக்களித்த அரச ஊழியர்களின் வாக்குகளும் அடங்குகின்றன. 93 சதவீதம் எழுத்தறிவு கொண்ட நாடு என நாம் மார்தட்டிக் கொள்கின்ற சூழலில் இலட்சக்கணக்கான வாக்குகள் நிராகரிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

இதற்குப் பிரதான காரணம், வாக்களிப்பு தொடர்பாக எல்லா மட்டங்களிலும் உள்ள பொது மக்களுக்கு போதுமான விளக்கம் இல்லாமை ஆகும். முன்னைய காலங்களில் படிப்பறிவு வீதம், ஊடகங்கள் குறைவாக இருந்தாலும், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை மக்கள் உன்னிப்பாகக் கவனிக்கின்ற தன்மை இருந்தது.

தேர்தல்கள் திணைக்களம் மட்டுமன்றி, வேட்பாளர்களும் மக்களுக்கு வாக்களிப்பது பற்றி அறிவூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆனால், நவீன ஊடகங்களும் அதனால் ஏகப்பட்ட கவனச் சிதறல்களும் ஏற்பட்டுள்ள இக் காலகட்டத்தில் போதுமானளவுக்கு மக்கள் தெளிவுபடுத்தப்படுவதில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

இந்தக் காரணத்தினாலும், நீளமான வாக்குச் சீட்டு, பொறுப்பற்ற வாக்களிப்பு போன்ற இன்னபிற காரணங்காலும் இலட்சக்கணக்கான வாக்குக்குள் நிராகரிக்கப்படுகின்றன. இதனை மாற்றியமைக்க வேண்டுயம். குறிப்பாக அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் செல்லுபடியாகும் தன்மையுடன் வாக்களிப்பது அவசியம்.

மறுபுறத்தில், கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதற்குப் பல காரணங்களைக் கூறலாம். தேர்தல்கள் திணைக்களம் வழங்குகின்ற அறிவுறுத்தல்களை முறையாக வாசித்து விளங்கிக் கொள்ளாமை இத்தேர்தல் முக்கியமானதாகும். கட்சிகளில் இவ்விடயத்தில் அனுபவ அறிவுள்ளவர்கள் குறைந்து போவதும் காரணமாகின்றது.

அரசியல் கட்சிகள் தமக்கு இவ்விடயத்தில் அனுபவம் உள்ளதுதானே என்ற அசட்டுத் துணிச்சலில் சில அறிவுறுத்தல்களைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை அல்லது கூர்ந்து நோக்குவதில்லை என்றே கூறலாம். கடைசிக் கட்டத்தில் வெளியிடப்படுகின்ற சுற்று நிருபங்கள், கட்சிகள், சுயேச்சை குழுக்களைச் சென்றடையாமல் விடுவதும் உண்டு.

இன்னும் ஒரு முக்கிய காரணமும் இருக்கின்றது. அதாவது, கட்சிகள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் கடைசித் தருணம் வரைக்கும் குறிப்பிட்ட பிரதேசத்தின், மாவட்டத்தின் வேட்பாளர்கள் யாரென்ற இறுதி முடிவை எடுக்காமல் இருப்பதுண்டு.

வெட்டுக்குத்துக்கள், இழுபறிகள் எல்லாம் முடிவுக்கு வந்து, வேட்பு மனுத்தாக்கல் செய்யும் தினம் விடிகாலையில்தான் வேட்பாளர்களின் பெயர், விபரங்கள் இற்றைப்படுத்தப்படும் பட்சத்தில், அவசர அவசரமாகப் படிவங்கள் நிரப்பப்படுகின்றன. அப்போது உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இணைக்கப்படுவதில்லை.

எது எவ்வாறிருப்பினும், நீண்டகாலம் அரசியல் அனுபவம் கொண்ட தமிழ், முஸ்லிம் கட்சிகள் வேட்பு மனுக்களை சரிவர பூரணப்படுத்தி உரிய முறைப்படி சமர்ப்பிக்கத் தவறுவது ஏற்றுக் கொள்ள முடியாத விடயமாகும்.
ஏனென்றால், ஒரு கட்சியின் வேட்புமனு நிராகரிக்கப்படும் போது, அக்கட்சி சார்ந்த வாக்காளர்களின் முடிவிலும் அது தாக்கம் செலுத்துகின்றது என்பதை மறந்து விடக் கூடாது. எனவே, இதற்குத் தீர்வு காண வேண்டும்.

ஒரு கட்சி என்றால், தேர்தல் விதிமுறைகளைத் திருப்திப்படுத்தும் வகையில் சமர்ப்பித்தேயாக வேண்டும். முறைப்படி ஆவணங்களைக் கூட சமர்ப்பிக்க முடியாத கட்சி ஒன்று எப்படி மற்ற விடயங்களைக் கன கச்சிதமாகக் கையாளப் போகின்றது?

ஆனால், மறுபுறத்தில், இரகசியமான அல்லது பகிரங்கமாக அறிவிக்கப்படாத விதிமுறைகள் அடிப்படையாகக் கொண்டு வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அல்லது இப்போது பல சிறுபான்மைக் கட்சிகள் அபிப்ராயப்படுவது போல, இதற்குப் பின்னால் சில கட்சிகளை மழுங்கடிக்கும் உள்நோக்கங்கள் ஏதுமிருப்பின், அக்கட்சிகள் நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.