;
Athirady Tamil News

கடந்த கால நினைவுகளால் என்ன பயன்?

0

கேணல் ஆர். ஹரிஹரன்

நான் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ரய்பூர் நகரில் மையம் கொண்ட ஐ.ஐ.எம் என்று அழைக்கப்படும் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களுக்கு தகவல்களை எப்படி மதிப்பீடு (assessment) செய்வது என்பது பற்றி சில வகுப்புகளை எடுத்து வந்தேன். அதற்காக, சென்னையில் இருந்து மும்பாய் வழியாக விமானப் பயணம் அடிக்கடி மேற்கொள்வேன்.

ஒரு முறை அவ்வாறு பயணித்த போது மும்பாய் விமான நிலையத்தில் ஏறத்தாழ ஐந்து மணி நேரம் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரை உறக்கத்தில் நான் உட்கார்ந்திருந்த போது, எனது மனக்குதிரை கடந்த காலத்தை நோக்கி பயணித்தது.

நான் கடந்த காலத்தை எவ்வாறு கழித்தேன் என்று ஆழ்ந்து சிந்தித்தேன். அதில் சில அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வந்தன. முதல் ஐந்தாண்டுகள் பெற்றோர், முக்கியமாக அம்மாவின் கட்டளையில் கழித்தேன். ஐந்தில் இருந்து பத்து வரை என்னுடைய உடன் பிறந்தோர் ஆளுமையின் தாக்கம் அதிகமாக இருந்தது. பத்து முதல் இருபது வரை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாக்கம் அதிகமாயிற்று. இருபதில் இருந்து 60 வயது வரை நான் வேலை பார்த்த காலத்தில் எனக்கு சம்பளம் அளித்த நிறுவனங்களின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து வேலை செய்வதில் கழிந்தது.

அறுபது ஆண்டுகளில், நான் தூக்கத்தில் கழித்திருந்த 18 ஆண்டுகள் போக, 18 மாதங்கள் மற்றவர்களைக் காண மற்றும் ரயில், விமான நிலையங்களில் காத்திருப்பதில் கழித்திருக்கிறேன் என்று தெரிந்து என் மனம் நொந்தது.. கூட்டிக் கழித்து பார்த்ததில், எனது 60 ஆண்டு வாழ்க்கையில் எனக்காகவே நான் கழித்த காலம் 12 ஆண்டுகள் மாத்திரமே. அதை பின் நோக்கிய போது, குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவினர்களுடன் கழித்த இன்பமான நாட்கள் நினைவுக்கு வந்தன. இந்த கடந்த கால மனப் பயணம் எனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான் வாழ்க்கையில் தவற விட்ட எனக்கு பிடித்த காரியங்கள் மட்டுமே இனி செய்வது என்று முடிவு எடுத்தேன். சென்னை மேலாண்மை கழகத்தில் நான் வகித்த இயக்குனர் பதவியை இராஜினாமா செய்தேன். அதன் பிறகு ஆங்கிலத்திலும் தமிழிலும் பாதுகாப்பு துறை மற்றும் தெற்காசிய நாடுகள் சார்ந்த என் கருத்துக்களை எழுத ஆரம்பித்தேன். தற்போது ஏறக்குறைய எனது ஆயிரம் கட்டுரைகளும் நேர்காணல்களும் பதிவாகி உள்ளன. ஆங்கிலத்தில் 14 புத்தகங்களில் எனது கட்டுரைகள் பதிவு பெற்றுள்ளன.

ஆனால் இந்த கட்டுரை எனது சாகசங்களை பற்றியது அல்ல. அதற்கு மாறாக, ஆங்கிலத்தில் Nostalgia என்று கூறப்படும் நமது கடந்த கால நினைவுகள் மற்றும் உணர்வுகள் நமது வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை பற்றியதாகும். நான் இந்த தலைப்பில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை படித்த பின் ஓரளவு ஏற்பட்ட தெளிவை வாசகர்களுடன் பங்கு பெறவே இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

மீண்டும் மீண்டும் தோன்றும் நமது கடந்த கால நினைவுகள் நம் நீண்ட கால நட்பையும் உறவுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன? இந்த கேள்வியை “அறிவாற்றல் மற்றும் மன எதிர்வினை” (Cognition and Emotion) என்ற இதழில் பதிவாகி உள்ள ஒரு கட்டுரை ஆய்வு செய்கின்றது. அதன்படி, கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கும் நபர்கள் அதிக நண்பர்களைக் கொண்டுள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

மேலும் காலப்போக்கில் அவர்கள் தங்கள் பழைய நட்புகளை புதுப்பிக்க கடந்த கால நினைவுகள் உந்துதலாக இருக்கலாம் என்றும் கூறுகிறது. அந்த ஆய்வை மேற்கொண்ட கியோட்டோ பல்கலைக்கழக ஆய்வு ஆசிரியரும் உளவியல் பட்டதாரி மாணவருமான குவான்-ஜு ஹுவாங் அளித்த ஒரு செய்தி குறிப்பு, கடந்த காலத்தை பற்றி சிந்திப்போர் அவர்கள் வயதாகும்போது கூட அவர்களின் நட்புகளை நீடிக்க வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகிறது.

ஹுவாங்கின் கூற்றுப்படி, நீண்ட கால நட்புகள் நமது ஒட்டுமொத்த நல் வாழ்வை மேம்படுத்துகின்றன. அவை மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகின்றன. அந்த நட்பைப் பேணுவதில் கடந்த கால நினைவுகள் ஒரு பங்கைக் கொண்டிருந்தால், அதைவிடச் சிறந்ததாகும்.

நண்பர்களைக் கொண்டவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் தங்கள் வாழ்க்கையில் அதிக திருப்தியுடனும் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. அவர்கள் நீண்ட காலம் வாழவும் வாய்ப்புகள் அதிகம். நமக்கு வயதாகும்போது கடந்த கால நட்புகள் மங்கி விடுகின்றன. காலப்போக்கில் நம் நட்பை தக்க வைத்துக் கொள்ள எது நமக்கு உதவுகின்றது என்பதைப் புரிந்துகொள்ள, ஹுவாங்கும் அவரின் சகாவான நியூயோர்க் மாநில பல்கலைக்கழக பட்டதாரி மாணவர் யா-ஹுய் சாங் சேர்ந்து சுமார் 1,500 நபர்களிடயே ஒரு ஆய்வு நடத்தினர். அதன்படி, கடந்த காலத்தைப் பற்றி சிந்திக்கும் போக்கு அதிகம் உள்ள மக்களிடையே அவர்களின் நட்பை பராமரிக்கவும், நீண்ட காலத்திற்கு தக்க வைக்கும் திறன் அதிகமாக காணப்பட்டது.

எல் ஐ எஸ் எஸ் (Longitudinal Internet Studies for Social Sciences) எனப்படும் சமூக அறிவியலுக்கான நீண்டகால இணைய ஆய்வுகள் கணக்கெடுப்பின் பதில்களில் ஹுவாங் மற்றும் சாங் தாங்கள் கண்டறிந்த முடிவுகளுக்கான கூடுதல் ஆதரவைக் கண்டறிந்தனர், அதன்படி, கடந்த கால நினைவுகளை கொண்ட பங்கேற்பாளர்கள் ஏழு ஆண்டுகளில் தங்கள் வலுவான சமூக உறவுகளை, மற்றவர்களை விட அதிகம் பராமரித்து வந்ததைக் காட்டியது.

நெதர்லாந்தில் பங்கேற்பாளர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட இந்த பதில்கள், அவர்கள் வயதாகும்போது அதிகம் கடந்த காலத்தை நினைவுகளை கொண்டவர்களாக மாறினர் என்று காட்டுகிறது. ஹுவாங் மற்றும் சாங்கின் ஆய்வுகள், கடந்த கால உணர்வுகள் எல்லா வயதினரிடமும், வெவ்வேறு அளவுகளில் காணப்படுவதாகக் கூறுகின்றன . “நடுத்தர வயதுடையவர்களை விட இளைஞர்கள் கடந்த கால உணர்வுகளை காட்டுவதற்கு சான்றுகள் உள்ளன. ஆனால், அதே நேரத்தில் வயதானவர்கள் வியக்கத்தக்க முறையில் அதிக அளவில் உணர்வுகளை காட்டுகிறார்கள் என்று ஹுவாங் தனது செய்திக்குறிப்பில் கூறினார்.

எந்த சூழ்நிலையிலும், வயது எதுவாக இருந்தாலும், நமது கடந்த கால உணர்வுகள் ஒரே சமூக விளைவுகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே அதிக நண்பர்கள் அந்த நட்பை பராமரிக்க அதிக உந்துதல் அளிப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.