;
Athirady Tamil News

சமத்துவ விண்வெளியில் சர்வதேச அரசியல்!

0

இந்திய வம்சாவளியும், அமெரிக்கக் கடற்படைப் போர் விமானியுமான வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் சர்வ தேச விண்வெளி நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு இருக்கிறார் என்பதே ஊடகவெளியின் முதன்மைப் பேசுபொருள். இதன் பின்னணியில் சில செய்திகளை இங்கு சிந்திக்க வேண்டியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்புவதில் நாசா தனியார்மயத்தை ஊக்குவித்தது. அது ஒரு “புரட்சிகரமான’ அணுகுமுறை என்று கூறப்பட்டது. தனியார் நிறுவனங்கள் விண்கலன்களைச் சொந்தமாக வைத்து இயக்கும்; நாசா அதில் ஒரு வாடிக்கையாளராக மட்டுமே செயல்பட்டு, தேவைக்கேற்ப விண்கலன்களை வாங்கும். 2014 – ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியில் விண்வெளி வீரர்களை அனுப்பும் திறன் வாய்ந்த தனியார் நிறுவனங்களைக் கண்டறியும் குழுவில் விண்வெளி வீரர்களான பாப் பெஹன்கென், எரிக் போ, டக் ஹர்லி, சுனிதா வில்லியம்ஸ் ஆகியோரை நியமித்தது, அமெரிக்க நாசா நிறுவனம்.

2010 -ஆம் ஆண்டில், மார்க் நப்பி என்பவர் துணைத் தலைவராக இருந்து வழி நடத்திய போயிங் நிறுவனமும், அமெரிக்கத் தொழிலதிபரான எலான் மஸ்க் உருவாக்கிய ஸ்பேஸ்எக்ஸும் நாசாவின் வணிகக் குழு திட்டப் போட்டியில் பங்கெடுத்தன.

நாசா நியமித்த விண்வெளிக் குழு வீரர்களே “போயிங்’, “ஸ்பேஸ்எக்ஸ்’ ஆகிய இரண்டிலும் பொறியாளர்களுக்கு ஆலோசகர்களாகவும் பணியாற்றினர். என்றாலும், இந்த இரு நிறுவனங்களின் பொறியாளர்களுக்கும் விண்வெளிக் குழு வீரர்களுக்கும் இடையில் பணி உறவுகளின்போது உரசல் ஏற்பட்டதை சக உறுப்பினரான ஹர்லி விவரித்தார். ஒரு குறிப்பிட்ட சோதனையின்போது ஏற்பட்ட உந்து எரிபொருள் கசிவு குறித்து போயிங் குழு விண்வெளி வீரர்களுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டதாம். இறுதியில், ஹர்லியும் பெஹன்கெனும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துக்கு இடம் மாறிச் சென்று விட்டார்கள்.

செப்டம்பர் 2014 -இல், ஸ்டார்லைனரின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு, திட்டத்தின் முழு நிதியும் முதலிலேயே வழங்கப்பட வேண்டும் என்று நாசாவை வற்புறுத்தியது போயிங். நாசாவின் மனித விண்வெளிப் பயண ஆய்வுத் தலைவரான வில்லியம் எச்.கெர்ஸ்டென்மேயர், தனி நிறுவனத்துக்கு முழு மூல ஒப்பந்தத்தையும் வழங்குவதில் தயக்கம் காட்டினார். ஒரு நிறுவனத்தை, அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து ஆராய்ந்து பாராமல் சர்வரோக நிவாரணி மாதிரி, நெருக்கமான தனியாருக்கு ஒப்படைத்தால், அது அதிபர்களின் “தன்வழி’ என்றுதான் பார்க்கப்படும் என்று நம்பினார் கெர்ஸ்டென்மேயர். இது நாசாவுக்கே நிதி அபாயத்தை ஏற்படுத்தும் என்பதை யார் அதிபரிடம் கூறி முறையிட முடியும்?

அமெரிக்காவிலும் அரங்கேறிய குறுக்கீடுகள், அறிவியல், தொழில்நுட்பத்தைப் பாதித்தது. முதலில் 2017 -இல் செயல்படத் திட்டமிடப்பட்டிருந்த ஸ்டார்லைனர், மேலாண்மை மற்றும் பொறியியல் சிக்கல்களால் பலமுறை தாமதமானது. ஜூன் 2018 -இல் நடந்த ஒரு சோதனையின்போது உந்துவிசை அமைப்பில் ஏற்பட்ட வடிவமைப்புக் குறைபாட்டின் காரணமாக, நச்சு மோனோ மீத்தைல் ஹைட்ராசின் உந்து பொருள் கலனில் கசிவு வெளியிடப்பட்டது. இதன் விளைவாக வெடித்துக் கிளம்பிய ஒரு தீப்பந்து உபகரணத்தைச் சேதப்படுத்தியது. உந்துவிசை அமைப்பின் துணை ஒப்பந்ததாரரான “ஏரோஜெட் ராக்கெட்’ உடனான பகைமையால் இந்தச் சம்பவம் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

அதனால் வடிவமைப்பு மாற்றங்களுக்கு போயிங் அவருக்குப் பணம் செலுத்த மறுத்துவிட்டது. இந்தச் சம்பவம் குறித்து, நாசாவுக்குத் தெரிவித்தபோதிலும், போயிங் இந்த சம்பவத்தை அமைதியாக வைத்திருக்க முயன்றது. திட்டத்தில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்களிடமிருந்து கூட தகவல்களை நாசா மறைத்தது என்பதுதான் அன்றைய உண்மை.

டிசம்பர் 2019 – இல் நடந்த முதல் ஆளில்லா விண்சுற்றுகலன் சோதனை முழு வெற்றி பெறவில்லை. பல தோல்விகளையும் சவால்களையும் கடந்து, மே 22, 2022 அன்று, ஆளற்ற ஸ்டார்லைனர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சென்று இணைந்தது.

மே 25, 2022 அன்று, விண்வெளியில் இருந்து திரும்பி வரும் வழியில் வளிமண்டலத்தில் நுழையும் தருணத்தில் அதன் நெறிப்பாட்டு அமைப்புகளில் ஒன்று, புவி இட இருப்பினைக் காட்டும் செயற்கைக்கோளுடனான தொடர்பை இழந்தது. அது பெரிய குறைபாடாகக் கருதப்படவில்லை.

ஜூன் 5, 2024 அன்று சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் போயிங் ஸ்டார்லைனர் விண்கலனில் முதலாவது பரிசோதனைப் பயணமான கிளம்பி, பூமியிலிருந்து ஏறத்தாழ 420 கிலோ மீட்டர்கள் உயரத்தில் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையம் சென்று அடைந்தனர். ஆனால், ஸ்டார்லைனர் விண்கலனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் திட்டமிட்டபடி எட்டு நாள்களில் பூமிக்குத் திரும்பி வர இயலாமல் போனது. அதில் இடம் பெற்ற 28 சிறு உந்துபொறிக்குள் ஒவ்வொன்றிலும் ஹைடிரசின் திரவ எரிபொருளை உள்செலுத்தும் கலனுக்குள் அழுத்தம் ஊட்டுவதற்காக ஹீலியம் நிரப்பப்பட்டு இருக்கும். அவற்றில் 5 பொறிகலன்களில் கசிவு ஏற்பட்டது. அந்த விண்கலனில் வீரர்களைப் பூமிக்குத் அழைத்து வருவது மிகவும் ஆபத்தானது என்று நாசா முடிவு செய்தது.

2024 செப்டம்பர் மாதம் “ஸ்பேஸ்எக்ஸின்’ டிராகன் விண்கலனில் விண்வெளி நிலையம் சென்று சேர்ந்த நாசாவின் நிக் ஹேக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இருவரும், ஏற்கெனவே அங்கு ஆய்வுப்பணியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ், வில்மோர், டான் பெட்டிட், அலெக்ஸி ஓவ்சினின், இவான் வாக்னர் ஆகியோருடன் 6 மாதகாலம் தங்கி ஆய்வுகள் மேற்கொள்ள நேர்ந்தது.

ஒரு வழியாக, 16.03.2025 அன்று நாசாவின் ஆன் மெக்லைன், நிக்கோல் அயர்ஸ் ஆகியோருடன், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் டகுயா ஒனிஷி, ரோஸ்கோஸ்மோஸ் எனும் ரஷிய விண்வெளி நிறுவனத்தின் கிரில் பெஸ்கோவ் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையம் வந்தடைந்தனர்.

பல நாட்டு வீரர்களும் கூடி வாழ்ந்த அரியதோர் “சமத்துவபுர’மான சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, அண்மையில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் மார்ச் 19, 2025 அதிகாலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அட்லாண்டிக் பெருங்கடலில் வந்து இறங்கியது, “ஸ்பேஸ்எக்ஸ் டிராகன்’ விண்கலன். அவர்களைச் சுமந்து சென்ற “பயனற்ற’ போயிங் ஸ்டர்லைனர் இன்னமும் விண்வெளி நிலையத்தில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இத்தனைக்கும் மத்தியில், “ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனரான எலான் மஸ்க் “ஃபாக்ஸ் நியூஸý’க்கு அளித்த பேட்டியில், தமது “ஸ்பேஸ்எக்ஸ்’ விண்கலனில் இரண்டு விண்வெளி வீரர்களை மீண்டும் அழைத்து வர, முன்னாள் ஜனாதிபதியிடம் அன்றைக்கே தெரிவித்ததாகவும், ஆனால், அது அரசியல் காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது என்றும் கூறி, ஓர் அரசியல் சர்ச்சையைக் கிளப்பினார்.

ஏற்கெனவே, 2023 -ஆம் ஆண்டில் இரண்டு ஏவுகலன்களைச் செலுத்தும் பணிகளின்போது, உரிம விதிமுறைகளை மீறியதாக, அவரது “ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனத்துக்கு ஏறத்தாழ 6.33 லட்சம் டாலர் (ஐந்தரை கோடி ரூபாய்) அளவுக்கு அபராதம் விதித்தது அமெரிக்கக் கூட்டு வான்வெளிப் போக்குவரத்து நிர்வாகமான “ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்டரேஷன்’.

இந்தோனேசியாவில் பின்தங்கிய பகுதிகளுக்கு இணைய சேவை வழங்குவதற்கான “சாட்ரியா-1′ செயற்கைக்கோள் செலுத்தும் பணியின்போது அங்கீகரிக்கப்படாத ஏவுதளக் கட்டுப்பாட்டு அறையை “ஸ்பேஸ்எக்ஸ்’ பயன்படுத்தியதாம்.

சமீபத்தில், இன்னொரு புது விவாதத்தைக் கொளுத்திப் போட்டு இருக்கிறார் எலான் மஸ்க். “ஸ்டாலின், மாவோ மற்றும் ஹிட்லர் ஆகியோர் லட்சக்கணக்கான மக்களைக் கொல்லவில்லை. அவர்களின் பொதுத்துறை ஊழியர்கள்தான் அதைச் செய்தார்கள்’ என்கிறது அவருடைய “எக்ஸ்’ சுட்டுரைப் பக்கம்.

எது எப்படியோ, 12 ஆண்டுகளுக்கு முன்னால் 2013-இல் அவர் ஓர் வெள்ளை அறிக்கையில் “ஹைப்பர்லூப்’ என்னும் குறையொலி வேகப் போக்குவரத்து (மணிக்கு 1000 கிலோ மீட்டர்) வாகன நுட்பம் குறித்து முன்மொழிந்து இருந்தார். அது இன்றைக்கு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களால் பரவலாக்கப்பட்டு வருகிறது.

நாசா என்பது அமெரிக்க தேசிய காற்று, விண்வெளி நிர்வாகம், ரஷியாவின் “ரோஸ்கோஸ்மோஸ்’ கூட்டு விண்வெளி அமைப்பு, ஐரோப்பிய விண்வெளி முகமை 18 உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பு, சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகம், ஜப்பானிய விண்வெளி ஆய்வு முகமை “ஜாக்ஸô’ என விண்வெளி ஆய்வுகள் உலக நாடுகளில் தனி நிர்வாக அமைப்பு சார்ந்தே இயங்கி வருகின்றன.

நம் நாட்டில் விண்வெளித்துறை தனித்துவமான ஓர் இந்திய அரசு நிறுவனம். அதனால் விண்கலன் செலுத்தும் செலவுகளும் பிற நாடுகளைக் காட்டிலும் குறைவு. ஒரு கிலோ பயன்சுமையை 250-500 கிலோ மீட்டர் தாழ்புவி வட்டப்பாதையில் பறக்கவிடுவதற்கு அமெரிக்காவின் அட்லஸ் சென்டார் ஏவுகலனில் ரூ.25 லட்சம் செலவாகும். ரஷியாவில் இருந்து அனுப்ப ரூ.12 லட்சம் ; ஐரோப்பிய ஏரியான் ஏவுகலன் என்றால் ரூ.16 லட்சம்; ஜப்பானைப் பொருத்தமட்டில் ரூ.9 லட்சம்; சீன ஏவுகலனுக்கு ரூ.8 லட்சம்; இந்தியாவின் எல்.வி.எம்.மார்க்-3 என்னும் கனரக ஏவுகலனில் ஒரு கிலோ பயன்சுமையை அனுப்ப ரூ.7 லட்சம் போதும். ஆனால், இதையே தனியார் நிறுவனங்களின் தொகுப்பில் செயல்படும் அமெரிக்காவிடம் ஒப்படைத்தாலோ 3-5 மடங்கு அதிகமாகும். இந்தியச் செயற்கைக்கோள் வழி பெறப்படும் தகவல் தொடர்புச் செலவுகளும் உள்நாட்டில் குறைந்தது 5-10 மடங்கேனும் அதிகரிக்கும்.

தனியார் நிறுவனங்களின் விண்கலன்களின் மூலம் பரிமாறப்படும் தகவல்தொடர்புகளுக்கு அதிகப் பணம் செலுத்த வேண்டிய தேவை உருவாகும். இன்றைய காலத்தில் மனிதர்கள் உணவில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். கைப்பேசி, இணைய வசதிகளைப் பயன்படுத்தாமல் இருக்க முடியாதநிலை உருவாகியிருக்கிறது. அப்படியானால் என்ன நிகழும்? கைபேசிக் கட்டணம் கைமீறிப் போய்விடும்!

கட்டுரையாளர்:

இஸ்ரோ விஞ்ஞானி (ஒய்வு).

You might also like

Leave A Reply

Your email address will not be published.