;
Athirady Tamil News

தமிழர்களுக்கான தீர்வுக்கு அழுத்தமளிக்க வேண்டும் ; இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மோடியிடம் தமிழ்த் தலைவர்கள் பகிரங்க கோரிக்கை

0

ஆர்.ராம்

இலங்கையில் புரையோடிப்போயிருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை காண்பதற்கும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை விஜயத்தின் போது அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கைக்கு எதிர்வரும் ஏப்ரல் நான்காம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருகைதரவுள்ள நிலையில் தமிழ்த் தலைவர்கள் விடுத்துள்ள பகிரங்கக் கோரிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தலைவர்கள் வெளிப்படுத்தியுள்ள விடயங்கள் வருமாறு,

இலங்கைத் தமிழரசுக்கட்சின் பதில் தலைவரும் வடமாகாண சபையின் தவிசாளருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவிக்கையில்,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியினர் அவரை சந்திக்க வாய்ப்பு இருக்கின்றது.

அந்த சந்திப்பிலே முக்கியமாக இப்போதிருக்கக்கூடிய எங்களுடைய மாகாண சபை முறைமை தொடர்பாக அதில் இருக்கும் அதிகாரங்கள் படிப்படியாக பறிக்கப்பட்டுவருவது தொடர்பாகவும் அதனுடன் இணைந்த பல விடயங்கள் தொடர்பாகவும் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம்.

அதேவேளை தமிழ் மக்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய ரீதியான தீர்வுக்கான முன்மொழிவை பிரதமர் மோடி தற்போதைய அரசாங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை மோடிக்கு தெரிவிப்போம் என்றார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கையில்,

இந்தியப் பிரதமர் நான்காவது தடவையாக இலங்கைக்கு வருகை தருவதை வரவேற்கின்றோம். அவருடைய தலைமைத்துவத்தில் நவீன இந்தியா வேகமான முன்னேற்றத்தினைக் கண்டுவருகின்றது. அவ்விதமான தலைவர் இலங்கைக்கு வருகின்றபோது, தற்போதும் புறக்கணிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைப்பதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுகின்றது.

வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் பல்வேறு நலத்திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகின்றது. அச்செயற்றிட்டங்கள் தொடரப்பட வேண்டும்.

அதுமட்டுமன்றி மிக முக்கியமாக இருநாட்டு மீனவர்களுக்கு இடையில் நீடிக்கும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

விசேடமாக, வடக்கு கடற்பரப்பில் இழுவைப்படகுகளில் அத்துமீறல்கள் நடைபெற்று மீன்வளங்கள் சூறையாடப்படுகின்றன. இந்த விடயம் சம்பந்தமாக நான் முதலமைச்சராக இருந்த தருணத்திலும் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடியிருந்தேன்.

அதற்கான பரிந்துரைகளையும் நாங்கள் முன்வைத்திருந்தோம். குறிப்பாக, இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் வடக்கின் எதிர்கால கடல்வளங்களை அழித்துவருகின்றன.

ஆகவே, இந்தப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு இழுவைப்படகுகளின் பயன்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.

அதற்கு மாற்றாக நீண்டகாலம் தங்கியிருந்து மீன்பிடித்தல், மரபு ரீதியான மீன்பிடியை ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகள் ஊடக இருநாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்து நிரந்தர தீர்வினை காண முடியும். அதற்கான செயற்பாடுகளை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,

இந்தியா, இலங்கையின் அண்மையில் இருக்கின்றதொரு நாடாகும். பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தியா இலங்கைக்கு உதவிகளைச் செய்திருக்கின்றது. அண்மையில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டபோது கூட இந்தியா முதலாவது நாடாக உதவிகளை வழங்கியது.

அந்த வகையில் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தபோது பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அவை எதுவுமே தற்போது வரையில் நடைமுறைப்பத்தப்படவில்லை. அதனை பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும்.

இம்முறை விஜயத்தின்போது, திருணோமலைக்கும், அநுராதபுரத்துக்கும் பிரதமர் மோடி செல்லப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தேசிய பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். அதற்குரிய நடவடிக்களை அரசாங்கம் முன்னெடுப்பதற்கான அழுத்தங்களை பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமன்றி, மக்களின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் வகையில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பதோடு 13ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்குவதற்கான உறுதிப்பாட்டையும் பிரதமர் மோடி இம்முறை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.