;
Athirady Tamil News

இலங்கை – இந்திய கூட்டாண்மையின் புதிய பகுதிகளை ஆராய பிரதமர் மோடியின் விஜயம் வாய்ப்பை வழங்கும் – இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா

0

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வழங்கிய செவ்வி

(நமது அரசியல் நிருபர்)

ஒத்துழைப்பின் தற்போதைய பகுதிகளை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும், நமது பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையின் புதிய பகுதிகளை ஆராயவும் இந்த விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் விரிவான கூட்டறிக்கையை இது முன்னெடுத்துச் செல்லும் என்று இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான உத்தியோக பூர்வ விஜயம் குறித்து இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு :

கேள்வி – இந்திய பிரதமர் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இந்த விஜயத்தின் நோக்கம் குறித்து நீங்கள் எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் தொடர்ச்சியாக இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் அமைகிறது. ஜனாதிபதி திசாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதையும், புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கையால் அழைக்கப்பட்ட முதல் வெளிநாட்டுத் தலைவர் இந்தியப் பிரதமர் என்பதையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். இதுவே நமது இரு நாடுகளுக்கும் இடையிலான பங்குடைமையின் சிறப்பானதும் தனித்துவமானதுமான தன்மையை சான்று பகர்கின்றது.

பிரதமரின் வருகையானது நமது தொடர்ச்சியான உயர் மட்ட ஈடுபாட்டின் ஒரு பகுதியாகும். மிகவும் நெருங்கிய அயல் நாடுகளுக்கு இடையில் மாத்திரமே இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் பிரதமர் இலங்கைக்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயம் இதுவாகும். ஒத்துழைப்பின் தற்போதைய பகுதிகளை மேம்படுத்தவும் ஒருங்கிணைக்கவும், நமது பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டாண்மையின் புதிய பகுதிகளை ஆராயவும் இந்த விஜயம் ஒரு வாய்ப்பை வழங்கும். ஜனாதிபதி திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட மிகவும் விரிவான கூட்டறிக்கையை இது முன்னெடுத்துச் செல்லும். முதலீடுகள் மற்றும் இணைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் ஆகிய துறைகளில் முக்கியமான பெறுபேறுகளை நாம் காண வாய்ப்புள்ளது. இது ஒரு முக்கியமான மைல்கல்லாக இருப்பதோடு நமது ஈடுபாட்டை எப்போதும் உயர்ந்த மட்டத்திற்கு இட்டுச்செல்லும்.

கேள்வி – இரு அயல் நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஈடுபாடு மற்றும் உறவுகளின் நிலையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

இலங்கையுடனான எங்கள் உறவுகள் இதற்கு முன்பு இவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. அவை பகிரப்பட்ட பாதுகாப்பின் அடித்தளத்தில் கட்டமைக்கப்பட வேண்டிய செழுமை மற்றும் அபிவிருத்திக்கான எங்கள் பகிரப்பட்ட அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்டவை. நமது உறவுகள் புதிய மற்றும் பரந்த அளவிலான பகுதிகளாக வளர்ந்து பன்முகப்படுத்தப்படுகின்றன: முதலாவது, உட்கட்டமைப்பு மற்றும் தொடர்புகள் ; இரண்டாவது, ஆழமான பொருளாதார ஈடுபாடு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு; மூன்றாவது, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துதல்; நான்காவது, கலாசார மற்றும் கல்வி ஒத்துழைப்பு; இறுதியாக, சுற்றுலா மற்றும் இருநாட்டு மக்கள் இடையிலான தொடர்புகள். எமது அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் மஹாசாகர் (பிராந்தியங்கள் முழுவதும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றம்) அணுகுமுறையின் முக்கிய ஸ்தானத்தில் இலங்கை உள்ளது.

இந்த காரணத்திற்காகவே, எந்தச் சந்தர்ப்பதிலும் வேறெந்த நாடுகளுக்கு வழங்கியிராத வகையில் மிகப்பெரியதும் நிபந்தனையற்றதுமான 4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியது. தற்போது ஐந்தாவது இடத்திலும் வெகு விரைவில் மூன்றாவது இடத்திலும் இருக்கும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் இலங்கை இணைந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2015 ஆம் ஆண்டில் 2.1 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2025 ஆம் ஆண்டில் 4.3 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, வேகமாக வளர்ந்து வரும் பாரிய பொருளாதாரமாக மாறியுள்ளது.

கேள்வி – இந்த உறவை உயர்மட்டங்களுக்கு கொண்டு செல்ல, உங்களை பொறுத்தவரை இரு தரப்பினரும் எவ்வாறான விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து, எவற்றை நோக்கி செயல்பட வேண்டும் ?

இந்திய – இலங்கை கூட்டாண்மையானது இரு தரப்பினருக்கும் உறுதியான நன்மைகளை வழங்குவதை உறுதி செய்வதற்காக, எப்போதும் செயல்பட்டு வருவதுடன், தொடர்ந்தும் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும். இந்தியாவில் நமக்கு சிறந்த பெறுபேற்றை அடைய பயன்பட்ட சிறந்த நடைமுறைகள் மற்றும் பரிமாற்றத் திறன்களான டிஜிட்டல் மயமாக்கல் முதல் வளர்ந்து வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மனித வளம் மற்றும் திறன் மேம்பாடு முதலானவற்றை எமது நெருங்கிய அயல் நாடான இலங்கையுடன் பகிர்ந்து கொள்வது இந்தியாவின் முயற்சியாகும். இந்தியா-இலங்கை உறவை முன்னோக்கி வரையறுக்கும் ஒத்துழைப்புத் துறைகள் நமது இரு பொருளாதாரங்களும் ஒன்றாக வளரவும் எதிர்காலத்திற்குத் எம்மை தயார்செய்யவும் உதவும். மீள்-உலகமயமாக்கல் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் மீள்தன்மை கொண்ட விநியோகச் சங்கிலிகளுக்கான கேள்விகள் காணப்படும் உலகில், இருதரப்பு பொருளாதார இணைப்புகளை மேம்படுத்த நமது கூட்டாண்மைகளில் உள்ள நிரப்புத்தன்மைகளை முழுமையாக பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கேள்வி – குறிப்பாக, எமது இருதரப்பு வர்த்தகம் அதிகரித்துவருவதுடன் இவ்விடயமானது உலகத்தினால் கூர்ந்து அவதானிக்கப்படும் ஒன்றாக உள்ள சூழலில் இது போன்ற பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன?

இலங்கையின் பாரிய வர்த்தகப் பங்காளராகவும், முதலீட்டுக்கான முன்னணி மூலாதாரமாகவும் சுற்றுலாத்துறை வருமானத்துக்கான பாரிய மூலமாகவும் இந்தியா உள்ளது. நம்மிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று உள்ளதுடன், குறித்த உடன்படிக்கையானது 2000 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. இந்தக் காலப்பகுதியில் 10 மடங்கு வரையிலான அதிகரிப்பை மாத்திரம் கொண்டிருந்த இந்தியாவின் ஏற்றுமதிக்கு எதிராக இலங்கையின் ஏற்றுமதியானது 22 மடங்குகளால் அதிகரித்திருந்தது, அந்த அடிப்படையில் நோக்கும்போது இலங்கைக்கு சிறந்த இலாபத்தினை தேடும் நோக்கத்தினை அந்த உடன்படிக்கை பூர்த்திசெய்துள்ளது. எவ்வாறான நோக்கத்துக்காக அந்த உடன்படிக்கை அமுலாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தினை குறித்த உடன்படிக்கையானது நிவர்த்தி செய்துள்ளது. இலங்கை வர்த்தக திணைக்களத்தின் தரவுகளின் அடிப்படையில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் 65 வீதமானவை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சலுகைகள் மூலமாக கிடைக்கப்பெறும் அதேவேளை 5 வீததுக்கும் குறைவான இந்திய ஏற்றுமதிக்கே அவ்வாறான சலுகைகள் மூலமாக ஆதரவளிக்கப்படுகின்றது. உண்மையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக செயற்பாடுகளை மாத்திரம் கணக்கில் கொள்ளும்போது இந்தியாவைக்காட்டிலும் அதிக வர்த்தகத்தினை இலங்கை பதிவு செய்திருப்பதாக அண்மைய செல்நெறிகள் குறித்து நிற்கின்றன.

இருந்த போதிலும் நேர்மையான வர்த்தக செயற்பாடுகளுக்கான தடைகளை நீக்குதல், வரி அல்லாத தடைகளை நீக்குதல் மற்றும் இலகுவான முறையில் பாரிய வர்த்தக செயற்பாடுகளுக்கு வழிவகுத்தல் ஆகியவை குறித்த நோக்குடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்கின்றோம். இந்த காரணத்திற்காக 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுக்களை தொடர்வதற்கு நாம் தீர்மானித்திருந்தோம். இந்த பேச்சுக்களை முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு செல்ல இலங்கை தரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை நாம் காத்திருக்கின்றோம்.

கேள்வி – இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வது தொடர்பாக இந்திய முதலீட்டாளர்களின் மனோநிலையினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இந்தியாவிலிருந்து மேலும் முதலீடுகளைப் பெற்றுக் கொள்வதற்கு இலங்கை எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்?

இந்திய தனியார் துறையினர் மூலமான நேரடி வெளிநாட்டு முதலீடுகள் உட்பட சகல முதலீட்டு திட்டங்களும் அதிக முதலீடு சார்ந்த திட்டங்களாக மாற்றமடைய வேண்டுமென்ற இலக்குடன் இலங்கையை நோக்கிய எமது முயற்சிகள் காணப்படுகின்றன. நமது சக்தி மற்றும் உட்கட்டமைப்பு துறை திட்டங்கள் அனைத்தும் முதலீட்டை முதன்மையாகக் கொண்ட திட்டங்களாக காணப்படும் அதேவேளை கடன் குவிப்பு என்ற அடிப்படையில் வரி செலுத்துபவர்கள் மீது மேலதிக சுமையை அவ்வாறான திட்டங்கள் முன்மொழியவில்லை. நாம் ஏற்கனவே இலங்கையில் ஒரு முன்னணி வெளிநாட்டு முதலீடு முதலீட்டாளர்களாக உள்ளோம். அத்துடன் எதிர்வரும் ஆண்டுகளில் இந்த செல்நெறியானது கணிசமான அளவில் வளர்ச்சி அடையும் என்பது எனது கருத்தாகும். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையம், ITC ஹோட்டல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் இதற்கான சமீபத்திய உதாரணங்களாகும்.

கடந்த காலங்களில் கூட பெட்ரோலிய பொருட்களின் சில்லறை விற்பனை, சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் அபிவிருத்தி, உற்பத்தி துறை, சொத்து விற்பனை, தொலைத்தொடர்பு, வங்கி மற்றும் நிதியியல் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் நாம் முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு முதலாவதாக முதலீட்டினை மேற்கொண்ட வெளிநாட்டு முதலீட்டாளர்களாக இந்தியாவின் CEAT நிறுவனம் உள்ளது. இலங்கையில் உள்ள மிச்சலின் ஆலைகள் இரண்டினை பெற்றுக் கொள்வதற்காக 225 மில்லியன் அமெரிக்க டொலரினை CEAT முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சி நிலைபேறானதாக அமைய வேண்டுமானால் உண்மையில் ஒரு முக்கியமான காரணியாக காணப்படும் இலங்கையின் ஏற்றுமதியினை விஸ்தரிப்பதற்கு உதவக்கூடிய வகையில் புதிய உற்பத்தி வழிவகைகளை உருவாக்கும் நோக்குடன் நாம் மேலும் பல வாய்ப்புகளை ஆராய முயல்கின்றோம்.

அதுமட்டுமல்ல வர்த்தக நிகழ்வுகள் மற்றும் தீவிரமான ஈடுபாடுகள் ஆகியவற்றின் ஊடாகவும் நாம் முதலீட்டினை மேம்படுத்துகின்றோம். இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் இந்திய தொழில்கள் கூட்டமைப்பு (CII) பாரிய வர்த்தக தூதுக்குழு ஒன்றை அனுப்புமென நாம் எதிர்பார்க்கின்றோம். 2024 டிசம்பரில் ஜனாதிபதி திசாநாயக்கா அவர்கள் இந்தியாவிற்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது பல்வேறு துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி இந்தியாவின் சகல பகுதிகளையும் சேர்ந்த புகழ்பெற்ற கைத்தொழில்துறை தலைவர்கள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு நாம் வழி சமைத்திருந்தோம். அதுமட்டுமல்ல இந்திய மற்றும் இலங்கை ஆரம்பநிலை நிறுவனங்களிடையில் சிறந்த தொடர்புகள் பேணப்படுவதனையும் நாம் ஊக்குவிக்கின்றோம். விநியோகச் சங்கிலி வலையமைப்பின் பல்வகைப்படுத்தலில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற தொடர் முயற்சிகளின் அங்கமாக இந்தியாவை நோக்கி நகரும் உலகளாவிய நிறுவனங்களின் முதலீட்டினை ஈர்ப்பதற்காக இந்தியாவுடனான வலுவான வர்த்தக மற்றும் வியாபர தொடர்புகளையும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கிட்டியதூர அமைவிடத்தையும் சில முயற்சிகள் மூலமாக இலங்கை இலகுவாக பயன்படுத்தமுடியும். இருந்தபோதிலும் முதலீட்டுக்காக எளிதில் பயன்படுத்தக் கூடியதும், வரவேற்கத்தக்கதும், சூழலுக்கு உகந்ததுமான கட்டமைப்பினை இலங்கை உறுதிசெய்யவேண்டியதும் முக்கியமானதாகும். அத்துடன் சட்ட மற்றும் ஒழுங்குபடுத்தல் ஸ்திரத்தன்மை, மற்றும் முதலீட்டாளர்களை நோக்கிய நேர்மையான அணுகுமுறை ஆகியவையும் மிகவும் முக்கியமானவையாகும். அத்துடன் வெளிப்படைத்தன்மையும் சமமான முக்கியத்துவத்தினைக் கொண்டுள்ளது.

கேன்வி – 2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது இரு தரப்பினரும் நமது பாதுகாப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது என்பதனை ஏற்றுக் கொண்டிருந்தனர். இவ்விடயத்தில் எவ்வாறான முன்னேற்றங்களை நாம் எதிர்பார்க்க முடியும்?

2024 டிசம்பரில் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் போது, இரு தரப்பினரும் இந்து சமுத்திரத்தின் பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தியதுடன், பிராந்திய கடல் பாதுகாப்பினை வலுவாக்குவதற்கு ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கும் இணக்கம் ஏற்பட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக இருதரப்பு ரீதியாகவும் கொழும்பு பாதுகாப்பு குழுமம், BIMSTEC மற்றும் IORA போன்ற ஏற்கனவே உள்ள பிராந்திய கட்டமைப்புகள் ஊடாகவும் நாம் செயற்பட்டு வருகின்றோம். அது மட்டுமல்ல இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் பிரிவினருக்கு தேவையான முக்கிய பயிற்சி திட்டங்களும் எம்மால் முன்னெடுக்கப்படுகின்றன. அதுபோல எமது இரு கடற்படையினர் இடையிலான SLINEX, இரு இராணுவத்தினருக்கும் இடையிலான மித்ரசக்தி கூட்டுப் பயிற்சிகள் மற்றும் மாலைதீவுடன் இணைந்து மேற்கொள்ளப்படும் நமது முத்தரப்பு கடலோர காவல்படை பயிற்சி தோஸ்டி ஆகியவை பாதுகாப்புத் துறையில் நமது ஒத்துழைப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும். வருடாந்தம் நடைபெறும் பாதுகாப்பு துறை சார்ந்த பேச்சுகள் நமது பகிரப்பட்ட பாதுகாப்பு இலக்குகளை முன்னேற்றுவதற்கான ஒரு சிரேஷ்ட மட்டத்திலான களத்தினை வழங்குகின்றது. அது மட்டுமல்லாமல் பாதுகாப்பு ரீதியான கட்டமைப்புகளின் அடிப்படையில் கடல் கண்காணிப்புக்கான டோனியர் விமானம் மற்றும் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட கடல் மீட்பு மற்றும் ஒன்றிணைப்பு மையம் போன்ற முன்னெடுப்புகள் இலங்கையின் ஆளுமையினை மேம்படுத்துவதற்கு நாம் நேரடியான ஆதரவை வழங்குகின்ற சந்தர்ப்பங்களாகும். போதைப் பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தல் மற்றும் கடல் பாதுகாப்பு குறித்த மரபு ரீதியான மற்றும் மரபுசாரா சவால்களை முறியடித்தல் ஆகியவற்றில் எமது பாதுகாப்பு மற்றும் பாதுகாவல் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் கூட்டு நடவடிக்கைகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபடுகிறோம். அதேபோல நீர்நிலையியல் துறை சார்ந்த தளங்களில் நமது ஒத்துழைப்பினை மேலும் விஸ்தரிப்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவ்வாறான சூழலில் ஒட்டுமொத்தமாக நோக்கும் போது நமது பாதுகாப்பு நலன்கள் மிகவும் நெருக்கமாக பின்னிப் பிணைந்துள்ளமை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சுதந்திரமானதும், வெளிப்படையானதும், பாதுகாப்பானதுமான இந்து சமுத்திர பிராந்தியத்தினை உறுதிப்படுத்துவதற்காக நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றோம். இலங்கையின் கடல் மார்க்கமான மிகவும் நெருங்கிய அயல் நாடாக இந்தியா உள்ளமையால் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு எந்தவகையிலும் தீங்கு விளைவிக்கும் வகையில் தனது ஆட்புல எல்லையினை எந்த வகையிலும் பயன்படுத்த இலங்கை அனுமதிக்க போவதில்லை என்பதனை ஜனாதிபதி திசாநாயக்கா அவர்கள் வெளிப்படையாக கூறியுள்ளார்.

கேள்வி – பிர­த­மரின் இலங்கை வரு­கை­யின்­ போது பலவளர்ச்சித் திட்­டங்­கள் தொடங்கி வைக்­கப்­படும் என்று அறிகிறோம். இலங்­கை­யு­ட­னான இந்­தி­யாவின் வளர்ச்சி, ஒத்­து­ழைப்பு எந்தெந்த முக்­கியதுறை­களில் கவனம் செலுத்தும்? திட்டத் தெரி­வு­களின் அடிப்­படைஎன்ன?

அபி­வி­ருத்தி கூட்­டாண்­மையைப் பொறுத்­த­வரை, அது எமது உறவின் வலு­வான தூணாக அமை­கி­றது என்று ஒருவர் கூறலாம். உள்­நாட்டில் போன்றே இலங்­கைக்­கான எங்கள் அபி­வி­ருத்தி உத­வி­களும் மக்­களை மைய­மாகக் கொண்­ட­தாகும். மக்­க­ளுக்கு கிடைக்கும் நன்­மைகள் மட்­டுமே எங்கள் முயற்­சி­களின் வெற்­றிக்­கான ஒரே அள­வு­கோ­லாக அமைந்­துள்­ளது.

இலங்­கையின் ரயில்வே மேம்­பாடு, காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தை நவீ­ன ­ம­ய­மாக்­குதல், வறிய மக்­க­ளுக்­கான வீடுகள், பாட­சா­லைகள் மற்றும் மருத்­து­வ­ம­னை­களை நிர்­மா­ணித்தல், மதத்தலங்­களில் சூரிய மின்­ம­ய­மாக்கல் திட்டம், யாழ்ப்­பா­ணத்தின் அரு­கி­லுள்ள தீவு­களில் கலப்பு புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தித்திட்­டங்கள், இலங்­கையில் முத­லா­வ து வெப்ப கட்­டுப்­பாட்டு விவ­சாய களஞ்­சிய வச­தியை உரு­வாக்­குதல், விவ­சாயம், கால்­ நடை வளர்ப்பு மற்றும் மீன்­வளத்துறை­களை ஆத­ரித்தல் ஆகி­யவை தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அபி­வி­ருத்தி திட்­டங்­களில் அடங்கும்.

நாங்கள் பெருந்­தோட்ட சமூ­கங்­க­ளுக்கும் கிழக்கு மாகா­ணத்­துக்கும் விரி­வான வளர்ச்சி உதவித்திட்­டங்­களை வழங்­கு­கிறோம், இது பல்­வேறு துறை­களில் மக்­களை மைய­மாகக்கொண்ட திட்­டங்­களை உள்­ள­டக்­கி­ய­தாகும். இன்று, இலங்­கையிலுள்ள 25 மாவட்­டங்­க­ளிலும் எமது திட்­டங்­களை செயற்­ப­டுத்­து­கிறோம்.

இது­வரை, இலங்­கைக்கு 7 பில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான மொத்தநிதி உத­வியை நாங்கள் வழங்­கி­யுள்ளோம். இதில் சுமார் 800 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் மானிய உத­வியும், பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது வழங்­கப்­பட்ட அவ­சர உத­வி­களும் அடங்­கு­கின்­றன. சமீ­பத்­திய ஆண்­டு­களில் இலங்கை அனு­ப­வித்த பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு வழி­வ­குத்த கடன்கள் சார்ந்த திட்­டங்­க­ளை ­விட மானி­யங்கள் மற்றும் முத­லீ­டு­களில் அதி­க­ளவில் தங்கியி­ருக்கவேண்டும் என்­ப­தையும் நாங்கள் வலி­யு­றுத்தி வரு­கிறோம்.

அந்­த­ வ­கையில் இந்தக்கார­ணத்­துக்­கா­கவே இலங்கைபொரு­ளா­தாரமீட்­சிக்­கான முயற்­சி­க­ளுக்கு உத­வும்­வ­கையில், கடந்த 6 மாதங்­களில் 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கும் அதி­க­மான கடன்­களை நன்கொடையாக மாற்­றி­யுள்ளோம்.

கேள்வி – இந்­தி­ய – இ­லங்கை கூட்­டாண்மை பற்றிபேசும்­போது புராதன கா­லத்­தி­லி­ருந்தே இருந்­து­ வரும் மக்கள் – மக்கள் தொடர்­பு­களே உற­வு­களின் அடித்­தளம் என்று அடிக்­கடி கூறப்­ப­டு­வ­துண்டு. ஆனால் கொவிட் தொற்­றுக்குப் பின்னர் மக்­க­ளி­டை­யே­யான தொடர்­பு­களில் இடை­வெ­ளி ஏற்பட்டுள்ளதாக நீங்கள் நினைக்­கி­றீர்­களா? மக்­களை நெருக்­கமாகக்கொண்­டு ­வர எவ்வாறான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன?

எமது மக்­கள் -­ மக்கள் தொடர்­புகள் ஆயி­ரக்­க­ணக்­கான ஆண்­டு­க­ளாக இருந்­து ­வ­ரு­கின்­றன என்­பதை நான் முழு­மை­யாக ஒப்­புக்­கொள்­கிறேன். மகா­வம்­ச­மாக இருந்­தாலும் சரி, இரா­மா­ய­ண­மாக இருந்­தாலும் சரி, நாம் ஒரு­வ­ருக்­கொ­ருவர் காவி­யங்கள், புரா­ணக்­க­தைகள் மற்றும் நாட்­டுப்­புறக்கதை­களின் ஒரு பகு­தி­யாக இருக்­கிறோம். சினிமா மற்றும் கிரிக்கெட் மீதான எங்கள் தொடர்­புகள் எங்கள் மர­ப­ணுவின் ஒரு பகு­தி­யாகும். இது எங்கள் இரு­த­ரப்பு கூட்­டாண்­மையின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்­ச­மாக இருக்­கலாம். மக்­க­ளி­டையே ஒரு­வ­ருக்­கொ­ருவர் பரஸ்­பர நல்­லெண்ணம் இன்று முன்­னெப்­போதும் இல்­லாத அளவில் காணப்­ப­டு­கி­றது என்­பதை அண்­மைய ஆய்­வுகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன.

இந்த தொடர்­பு­களை மேலும் மேம்­ப­டுத்­து­வ­தற்­காக நாங்கள் பலநட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கிறோம். 2017 ஆம் ஆண்டு இலங்­கையில் நடந்த சர்­வ­தேச வெசாக் விழாவில் எமது பிர­தமர் பங்­கேற்­ற­மை­யா­னது ஒரு முக்­கிய சிறப்­பம்­ச­மாக அமைந்­தது. இது எமது மக்­க­ளி­டையே உள்ள பழங்­கால கலாச்­சார தொடர்பை நினை­வூட்­டி­யது. கடந்த வருடம் இந்­தி­யா­வுக்கு வெளியே முதன்­ மு­றை­யாக கொழும்பில் நடை­பெற்ற சர்­வ­தேச கீதை மகோற்சவத்துக்குகிடைத்த உற்­சா­க­மானவர­வேற்பு மற்­றொரு உதா­ர­ண­மாகும்.

பாளி மொழிக்கு இந்­தி­யாவில் ஒரு செம்மொழி அந்­தஸ்தை வழங்­கு­வ­தற்­கான எங்கள் முடிவை எமது பிர­தமர் அறி­வித்­த­போது வர­வேற்ற முதல்நாடு இலங்­கை­யாகும். எமது பெளத்த பாரம்­ப­ரி­யத்தை கொண்­டா­டவும், அதன் மதிப்­புகள் மற்றும் ஞானத்தை உலகம் முழு­வதும் ஊக்­கு­விக்­கவும் முன்­ன­ணியில் இருக்கவிரும்­பு­கிறோம் என்­பதே இதன் அடிப்­படை செய்­தி­யா­க­வி­ருந்­தது.

மிக அண்­மையில் அமர் சித்­திரக் கதைபுத்­த­கங்­களை சிங்­க­ளத்தில் மொழி­பெ­யர்த்­துள்ளோம். இவை ஜாதகக்கதை­களை அடிப்­ப­டை­யாகக்கொண்ட குழந்­தை­க­ளுக்­கான ஒழுக்கக்கதை­க­ளாகும். அவை அற­நெறி பாட­சா­லை­க­ளுக்கு விநி­யோ­கிக்­கப்­பட்­டன.

அண்­மையில் பாளி இலக்­கண புத்­த­க­மான நாம­ மா­லாவை இல­வ­ச­மாக மறு­ப­திப்பு செய்­வ­தற்கு நாங்கள் உதவி வழங்­கினோம். மேலும் கலை, இசை மற்றும் நடனப் பரி­மாற்ற திட்­டங்­க­ளுக்கும் நாங்கள் ஒத்­துழைப்பு வழங்­கு­கிறோம்.

சுற்­றுலா மேம்­பாட்டு முயற்­சி­க­ளுக்கு எங்கள் மக்­கள்––மக்கள் தொடர்பு எவ்­வ­ளவு பொருத்­த­மா­னது என்­பதே இங்கு சுவா­ரஷ்­ய­மான அம்­ச­மாகும். பெளத்தமத அம்­சங்கள், இரா­மா­யண வழித்­தடம் என்­பன எமது இரு நாட்டு மக்­களால் சமாந்­தர­மாக போற்­றப்­ப­டு­கின்­றன. இலங்­கையின் ஒப்­பற்ற இயற்கை அழகை ரசிப்­ப­தற்­காகமட்டும் இந்­தி­யர்கள் இலங்­கைக்கு பய­ணிக்­க­வில்லை. மாறாக அதன் வர­லாற்றுச் சிறப்­பு­மிக்க இடங்­க­ளாலும் ஈர்க்­கப்­ப­டு­கி­றார்கள். மேலும் பலருக்கு இது ஒரு புனிதயாத்­தி­ரை­யா­கவும் கூட அமை­கின்­றது.

கல்வி மற்றும் சிந்­த­னை­யாளர் கூட்­டாண்­மை­க­ளிலும் நாங்கள் இப்­போது அதிககவனம் செலுத்தி வரு­கிறோம். இருதரப்­பிலும் கொள்கை, செல்­வாக்கு செலுத்­து­ப­வர்­களின் கூட்­டாண்­மையில் முத­லீடுசெய்ய பிற தரப்பினருடனான உரை­யா­டல்­களை முன்­னெ­டுக்­கிறோம். இரு­நாட்டு ஊடகத்துறைகளுக்கு இடை­யே­யான சகோதரத்துவ தொடர்­பு­களை அதி­க­ரிப்­ப­தற்கு எங்­க­ளிடம் ஒரு ஊடக நட்­பு­றவுசங்கம் இருக்­கி­றது. கருத்­தியல்­களை உரு­வாக்­கு­ப­வர்­களைத் தவிர, இளை­ஞர்­க­ளி­டை­யே­யானதொடர்­பு­களை ஆழப்­ப­டுத்­து­வ­தையும், கல்விப்பரி­மாற்­றங்­களை ஊக்­கு­விப்­ப­தையும் நாங்கள் அவ­தா­னிக்­கிறோம்.

இந்­திய அர­சாங்­கத்தால் இலங்கைக்கு அதிகளவான, (கிட்டத்தட்ட 800) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுகின்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசு நிதி உதவி வழங்கும் திட்டத்தின்கீழான (200 இடங்கள்) உதவியை நாங்கள் சமீபத்தில் அறிவித்தோம். மேலும் இந்திய நிறுவனங்களில் இலங்கையர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளையும் விரிவுபடுத்துகிறோம்.

எளிமையாகச் சொல்வதென்றால் கொவிட் காரணமாக பெளதீக ரீதியான இடைவெளி இருந்தபோதிலும், நம் இதயங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை உருவாக்கமுடியாது. இது எங்களை நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. நாம் ஒருவரையொருவர் சார்ந்திருக்கின்றமை மற்றும் ஒருங்கிணைந்த மீள்தன்மை ஆகியவற்றின் வலிமையை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.