;
Athirady Tamil News

எமது இறக்குமதி வரி விதிப்பை மீட்டுப் பார்க்க வைக்கும் ட்ரம்பின் வரி விதிப்பு

0

ச.சேகர்

சில மாதங்களாக பரவலாக எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் சர்வதேச இறக்குமதி வரி விதிப்பு பற்றி, கடந்த வாரம் அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததை தொடர்ந்து, உலகம் முழுவதும் பல தளம்பல்களை அவதானிக்க முடிந்திருந்தது.

உலக பொருளாதார வல்லரசாக அறியப்படும் அமெரிக்கா, உலக நாடுகளுடன் வணிகங்களை மேற்கொண்டு வரும் நிலையில், தொடர் சங்கிலி முறை அடிப்படையில் உலகின் சகல நாடுகளும் பெருமளவில் இந்த வரி விதிப்பின் தாக்கத்தை எதிர்நோக்கியுள்ளன.

அமெரிக்காவின் பிரதான எதிரியாக கருதப்படும் சீனா, இந்த வரி விதிப்புக்கு எதிராக, தாமும் அமெரிக்க பொருட்கள் இறக்குமதிக்கு வரி விதிப்பை அதிகரிக்கவுள்ளதாக பதிலடி கொடுக்கும் வகையில் அறிவித்துள்ளது.

இந்த வரிசையில் எமது நாட்டுக்கு என்ன நடந்தது என்பதை பார்த்தால், அமெரிக்கா இலங்கைக்கு 44சதவீதம் வரி விதிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை மேற்கொள்கையில், அமெரிக்க அதிபர், இலங்கையினால் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு பற்றி ஏளனமாக குறிப்பிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை 88 சதவீத வரிவிதிப்பை கொண்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவு இறக்குமதி வரி விதித்துள்ள நாடுகள் வரிசையில் இலங்கை உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளது.

இலங்கையின் சர்வதேச விவகாரங்களில் அவதானம் செலுத்தியவர்கள் ஓரளவு உறக்க நிலையில், அல்லது இலங்கைக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்று துளியளவிலும் சிந்தித்துக்கூட பார்க்காத நிலையில் இருந்திருப்பார்கள் போலும். ஏனெனில், அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகிய கடந்த வியாழக் கிழமை காலைப் பொழுதில், நாட்டின் வணிகத் துறை அமைச்சர் முதலில் ஊடகங்களுக்கு வெளியிட்ட தகவலில், இலங்கைக்கு இதனால் பெருமளவில் பாதிப்பு ஏற்படாது என்பதைப் போன்றதொரு கருத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களில் ஒருவராக தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் அமைச்சர் ஒருவர் குறிப்பிடுகையில், இந்த வரிவிதிப்பு இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இது பற்றி அமெரிக்காவுடன் கலந்துரையாட நாம் தயாராக இருக்கிறோம். அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது தற்போது அறவிடப்படும் 88 சதவீத வரியை நீக்குவது அல்லது அதனை ஒற்றை இலக்க பெறுமதி வரை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் ஆராய தயாராக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அரசாங்கமும் இந்த வரி விதிப்பால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஆராய நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தது.

உண்மையில் இந்த வரி விதிப்பினால் இலங்கையின் நிலை என்ன? என்ன நடக்கப்போகிறது? அமெரிக்காவுக்கு இலங்கையிலிருந்து அதிகளவில் என்ன ஏற்றுமதி செய்யப்படுகிறது? இவ்வாறான கேள்விகளுக்கான பதில்களை பார்க்கும் போது,

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 20 – 25 சதவீதமானவை அமெரிக்காவுக்கு செல்கின்றன. அதில் ஆடை உற்பத்திகள் முதலிடம் பெறுகின்றன. குறிப்பாக, பெண்களுக்கான உள்ளாடைகள் மற்றும் விளையாட்டுகள், உடற்பயிற்சிகளின் போது அணியும் ஆடைகள் இதில் அதிகம் அடங்கியுள்ளன. அதனைத் தொடர்ந்து, வாகன டயர் வகைகள் போன்ற இறப்பர் உற்பத்திகள், கருவா போன்ற வாசனைத்திரவியங்கள் மற்றும் சில விவசாய உற்பத்திகள் ஏற்றுமதியாகின்றன.

அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பண்டங்களின் பெறுமதி சுமார் 300 – 400 மில்லியன் டொலர்களாக அமைந்திருந்த போதிலும், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்களின் பெறுமதி 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளன.

இந்த வரி விதிப்பின் காரணமாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பண்டங்களின் விலைகள் பெருமளவு அதிகரிக்கும். இதனால் அமெரிக்கர்களின் இறக்குமதி நுகர்வு குறைவடையும். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பண்டங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களாக அமைந்திருப்பதன் காரணமாக, அவற்றை நுகர்வதை அந்நாட்டு மக்கள் குறைக்கலாம். இதனால் அமெரிக்காவுக்கான இலங்கையின் ஏற்றுமதி வீழ்ச்சியடையும். ஆடைகள் ஏற்றுமதியில் இலங்கைக்கு போட்டியாளராக திகழும் பங்களாதேஷை எடுத்துக்கொண்டால், அந்நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியின் அளவு இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ளதை விட குறைவானதாக அமைந்துள்ளது. அதுபோன்று, இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விதிப்பனவும் குறைவானதாக அமைந்துள்ளது. இந்நிலையில், ஆடை இறக்குமதியில் இலங்கையின் தயாரிப்புகள் மீதான விலை பெருமளவு அதிகரிப்பதன் காரணமாக, பங்களாதேஷ், இந்தியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நுகரும் தன்மை அங்கு அதிகரிக்கும். இதனால் இலங்கையின் ஏற்றுமதி குறைவடையும்.

இதனால், இலங்கையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உற்பத்தியில் ஈடுபடும் ஆடைத் தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும் ஓடர்கள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படலாம். அதனால், உள்நாட்டில் ஆடைத் தொழிற்துறையில் பணியாற்றுவோருக்கு வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை ஏற்படலாம்.

இலங்கை ஏற்கனவே பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, அதிலிருந்து மீண்ட வண்ணமுள்ளது. அந்நியச் செலாவணி இருப்பு, வரத்து என்பது இலங்கைக்கு கண்டிப்பான தேவையாக அமைந்துள்ளது. ஆடை உற்பத்தி தொழிற்துறை என்பது, இலங்கைக்கு அந்நியச் செலாவணியை தேடித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. அதில் சுமார் 20 முதல் 25 சதவீதம் பாதிப்படையும் என்பது, நாட்டின் பொருளாதாரத்தில் உணரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, அமெரிக்க டொலரின் பெறுமதி தற்போது பேணப்படும் சராசரி 300 ரூபாய் எனும் பெறுமதியிலிருந்து அதிகரிக்கக்கூடிய நிலை எழும். இதனால் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கூட உள்நாட்டில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். இன்னும் எளிமையாக குறிப்பிடுவதானால், இலங்கை வருமானமாக பெறும் 5 அமெரிக்க டொலர்களில் 1 அமெரிக்க டொலர் அமெரிக்காவிலிருந்தே இலங்கைக்கு வருகிறது.

இவ்வாறான சூழலில், எமது இறக்குமதி வரி முறைமை தொடர்பில், பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தினால் மீண்டும் கவனம் செலுத்தக்கூடிய ஒரு சிறந்த காலப்பகுதி எழுந்துள்ளது. அமெரிக்காவுடன் வரி விதிப்பு பற்றி பேச முன்வந்துள்ள இந்த அரசாங்கம், தற்போது அமுலிலுள்ள இலங்கைக்கான ஒட்டு மொத்த இறக்குமதி வரி முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும். அரசாங்கத்தின் கடந்த கால தேர்தல் வாக்குறுதியிலும் புதிய இறக்குமதி வரிக்கொள்கை அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளதை நாம் இப்போது மீண்டும் நினைவூட்ட விரும்புகிறோம்.

இறக்குமதி வரி குறைக்கப்படுவதுடன், அவை எளிமைப்படுத்தப்பட வேண்டும். சுங்க வரிக்கு மேலதிகமாக அறவிடப்படும் CESS, PAL போன்ற இதர வரிகள் அகற்றப்பட்டாலே, இறக்குமதி வரி குறைந்துவிடும். விதிக்கப்படும் இறக்குமதி வரி உறுதியான பெறுமதிகளாக, இலகுவாக பின்பற்றக்கூடியதாக இருத்தல் வேண்டும். சாதாரணமாக, இறக்குமதிகளில் ஈடுபடுவோருக்கு இலங்கையின் இறக்குமதி வரி விதிப்பு எந்தளவு சிக்கல்கள் நிறைந்தது என்பது நன்கு தெரியும். இதனூடாக உள்நாட்டில் சுங்க வரித் திணைக்களத்தில் நடைபெறும் மோசடிகள், ஊழல்களையும் தவிர்த்துக் கொள்ளலாம். அந்த உறுதியான தீர்மானத்தை இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையின் இறக்குமதி வரி நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தை பாதிக்கிறது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பதால், தரமான தயாரிப்புகளை தமது தேவைகளில் பயன்படுத்தும் உரிமை மக்களுக்கு மறுக்கப்படுவதுடன், தெரிவுகளும் குறைந்து, விலையில் குறைந்த, தரத்திலும் குறைந்த தயாரிப்புகளுக்கு மக்கள் நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில், இறக்குமதி வரியினூடாக, அரசாங்கத்துக்கு வருமானம் கிடைக்கிறது, அதனை குறைப்பதால் அல்லது நீக்குவதால், அரசின் வருமானம் குறையும் என பிரதிவாதங்கள் எழுந்தாலும், மக்களின் வாழ்க்கைத் தரம் அதிகரிக்கும் போது, மக்கள் மீது நேரடியாக வரி அறவிட்டு, இழந்த தொகையை சீர் செய்து கொள்ளலாம்.

நாட்டின் ஏற்றுமதிக்காக அமெரிக்கா தவிர்த்து மாற்று நாடுகளை உடனடியாக நாட வேண்டிய தேவை இலங்கைக்கு நிலவுகிறது. இதனை அரசாங்கத்தினால் நேரடியாக மேற்கொள்ள முடியாவிடினும், அதற்கான உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்கலாம். எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதி தாம் விதித்துள்ள இந்த வரியை மீள்பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் குறிப்பிட்டுள்ளமை ஒருவிதமான நேர்த்தியான சமிக்ஞையை வழங்கியிருந்தாலும், அமெரிக்காவுடன் இலங்கை பேச்சு வார்த்தைக்கு செல்லும் முன்னர், அமெரிக்க பொருட்களுக்கு இலங்கை விதித்துள்ள வரியை நீக்கி அல்லது அதில் கணிசமான குறைப்பை மேற்கொண்டு, அந்த தகவலுடன் பேச்சு வார்த்தைக்கு சென்றால், சாதகமான பெறுபேற்றை பெறக்கூடியதாக இருக்கும் என்பது எமது அவதானிப்பாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.