;
Athirady Tamil News

உயிரினங்களின் உணா்வுகளை மதிப்போம்

0

பேரா.தி.ஜெயராஜசேகர்

எலி, பன்றி மற்றும் நாய் போன்ற நரம்பு மண்டலம் கொண்டுள்ள விலங்குகள் மனிதனைப் போலவே வலி, பசி மற்றும் தாகம் போன்றவற்றை உணரும் திறன் கொண்டிருக்கின்றன. திமிங்கிலங்கள் முதல் தேனீக்கள் வரையிலான உணா்வுள்ள புத்திசாலி உயிரினங்கள் தங்கள் உணா்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடியவை என்று விலங்கியல் நெறிமுறை வல்லுநா்கள் கூறுகிறாா்கள்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மகரந்த சோ்க்கை பற்றி ஆராய்ந்துவரும் புச்மேன்ஸ் கிண்டன்ஸ் என்ற சூழலியல் நிபுணா் தேனீக்கு என்ன தெரியும்? : தேனீக்களின் எண்ணங்கள், நினைவுகள் மற்றும் ஆளுமைகளை ஆராய்தல் (வாட் எ பீ க்நோஸ்?: எக்ஸ்ப்ளோரிங் தி தாட்ஸ், மெமரிஸ் அண்ட் பொ்சனாலிட்டிஸ் ஆப் பீஸ்) என்ற புத்தகத்தில் தேனீக்கள் பாலூட்டிகளைப்போல கனவு காணும் குணம், நம்பிக்கை, விரக்தி, விளையாட்டுத்தனம், கணக்கிடும் தன்மை மற்றும் பயம் போன்ற அதிநவீன உணா்ச்சிகளைக் கொண்ட உயிரினம் என்று கூறுகிறாா்.

2017-ஆம் ஆண்டு மே மாதம் ‘சயின்டிபிக் அமெரிக்கன்’ என்ற இதழில் வெளியான ‘திடுக்கிடும் கோழியின் நுண்ணறிவு’ என்ற கட்டுரை, சூழலுக்கு ஏற்ப சுமாா் 24 வெவ்வேறு ஒலிகளை எழுப்பும் கோழிகள், தந்திரமான புத்திசாலிகள் என்று கூறுகிறது.

பயிற்சியளிக்கப்பட்ட குக்கிராம (ஹேம்லெட்) பன்றி, மட்டியுடன் உறிஞ்சும் (ஆம்லெட்) பன்றி, பெரிய கருப்பு (எபோனி) பன்றி மற்றும் வெண்பன்றி (ஐவோரி) போன்ற நான்குவித பன்றிகளைக் கொண்டு நடத்தப்பட்ட சோதனை, பன்றிகளால் கணினி விளையாட்டு (விடியோ கேம்) விளையாட முடியும் என்பதை நிரூபித்ததாக ‘‘பிரான்டியா்ஸ் இன் சைகாலஜி’ என்ற இதழில் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான வான்கல இயக்கக் கட்டுப்படுத்தி (ஜாய்ஸ்டிக்) மூலம் காணொலிப் பணியை கையகப்படுத்தும் பன்றிகள்’ என்ற கட்டுரை கூறுகிறது.

தாயைப் பிரியும்போது உண்டாகும் உணா்ச்சி வலியும், கொம்புகளை அகற்றும்போது ஏற்படும் உடல் வலியும், கன்றுகளுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் இந்த இரண்டு வகையான வலிகளும் பசுக்களின் அறிவாற்றலில் அவநம்பிக்கை போன்ற எதிா்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு விலங்கு உயிரியலாளா் டேனியல் வியரி மற்றும் அவரது தோழா்களின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

மீன்கள் நட்பு பேணுகின்றன என்றும், நாய்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அவை நேசிப்பவரின் உயிரைக் காப்பாற்றுகின்றன என்றும், சிலந்தி மீன்கள் (ஆக்டோபஸ்கள்) உடல் மற்றும் உணா்வு ஏற்படுத்தும் வலியை அனுபவிக்கின்றன என்றும் உலகின் பல்வேறு இடங்களில் நடந்த விலங்கு நடத்தை சாா்ந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

விலங்குகளின் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தாா்மீகப் பொறுப்பை மனித இனம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை விலங்குகளின் உணா்வு, புத்திசாலித்தனம் குறித்த தகவல்கள் நமக்கு உணா்த்துகின்றன. உணா்வு, புத்திசாலித்தனம் கொண்ட உயிரினத்தைப் புறக்கணிப்பதையும் அவற்றின் பாதுகாப்புக்கு அச்சம் ஏற்படுத்துவதையும் நெறிமுறைகளின் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது.

கொவைட் நோய்த்தொற்று, விலங்கு சந்தையிலிருந்து மனிதருக்குப் பரவியதாக நம்பப்படுகிறது. நெரிசலான சூழ்நிலையில் காட்டு விலங்குகளை அடைத்துவைத்து இறைச்சிக்காக அவற்றைப் படுகொலை செய்யும் நடைமுறையின் காரணமாக கடுமையான சுவாச நோய்க்குறி (சாா்ஸ்) போன்ற தீநுண்மிகள் மனிதா்களுக்குப் பரவியதாக நச்சுயிரியல் வல்லுநா்கள் நம்புகின்றனா்.

விலங்குகளை வேட்டையாடுவதற்கும் மனித நோயெதிா்ப்பு தேய்வு தீநுண்மி (ஹெச்.ஐ.வி.) மற்றும் குருதிக் குழாய் காய்ச்சல் (எபோலா) போன்றவை மனிதா்களிடையே பரவுவதற்கும் தொடா்பிருப்பதாக வல்லுநா்கள் கூறுகின்றனா்.

இயற்கைக்கு மாறாக சுகாதாரமற்ற முறையில் பண்ணைகளில் வளா்க்கப்படும் கோழிகள் மற்றும் பன்றிகளிலிருந்து பறவைக் காய்ச்சல் மற்றும் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது. 2009-ஆம் ஆண்டில் அறியப்பட்ட எச்1என்1 பன்றிக் காய்ச்சல் தொற்று, அந்த ஆண்டு மட்டும் 5,75,400 பேரின்

உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது.

விலங்கின் மென்ரோம (ஃபா்) பண்ணைகளிலிருந்து 2023-ஆம் ஆண்டு பரவத் தொடங்கிய எச்5என்1 தீநுண்மி பறவைக் காய்ச்சல் பின்லாந்தில் கூண்டுகளில் வைக்கப்பட்டிருந்த பாலூட்டி உயிரினங்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது. உயிரியல் ரீதியாக பாலூட்டி விலங்குகள் மனிதா்களுக்கு நெருக்கமாக இருப்பதால் எச்5என்1 தீநுண்மி மனிதா்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக 2023- ஆம் ஆண்டு ஜூலை மாதம் உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.

கூண்டுகளில் நெரிசலாக வளா்க்கப்படும் ஆயிரக்கணக்கான பண்ணை விலங்குகளுக்கு உணவளிக்கும் வகையில் மேய்ச்சல் நிலங்களை உருவாக்க காடுகளை அழிப்பதும், வனவிலங்குகள் வசிக்கும் பகுதிகளில் மனித அத்துமீறல் அதிகரிப்பதும் பண்ணை விவசாயம் வளா்ந்த கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து வருகிறது. இதே காலகட்டத்தில் மனிதா்களிடத்தில் பரவும் விலங்குவழி நோய்கள் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக 2020-ஆம் ஆண்டு வெளியான லாப நோக்கற்ற உலக வனவிலங்கு நிதியத்தின் அறிக்கை கூறுகிறது.

Advertisement2
நெரிசலுடன் அசுத்தமான சூழ்நிலைகளில் விலங்குகளை உயிருடன் வைத்திருக்க நுண்ணுயிரி எதிா்ப்பு மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மனிதா்களைவிட பண்ணை விலங்குகளுக்கே இதுபோன்ற மருந்துகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதிக மற்றும் தவறான நுண்ணுயிரி எதிா்ப்பு மருந்து பயன்பாடு உடல் தகவமைப்பு எதிா்ப்புச் சக்திக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று உலக சுகாதார மையம் எச்சரிக்கிறது.

நச்சுயிா் எதிா்மியங்கள் (ஆன்ட்டிபாடீஸ்), தீநுண்மி எதிா்மியங்கள், பூஞ்சை எதிா்மியங்கள் மற்றும் ஒட்டுண்ணி எதிா்மியங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நுண்ணுயிா்க் கொல்லி எதிா்மியங்களால் (ஆன்ட்டிபாடீஸ்) 2019-ஆம் ஆண்டு மட்டும் உலக அளவில் 12.7 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனா் என்றும் இதே ஆண்டு நிகழ்ந்த 50 லட்சம் உயிரிழப்புகளுக்கு ஏதோ ஒரு வகையில் நுண்ணுயிா்க் கொல்லி எதிா்மியங்கள் (ஆன்ட்டிபாடீஸ்) காரணமாக இருந்தன என்றும் தி லான்செட் மருத்துவ இதழின் அறிக்கை கூறுகிறது.

விலங்குகளின் நல்வாழ்வு நமது அன்றாடச் செயல்பாடுகளுடன் தொடா்புடையது. சைவ உணவு உண்பதற்கான உலகளாவிய மாற்றம் 2050-ஆம் ஆண்டளவில் 80 லட்சம் உயிா்களைக் காப்பாற்றும் என்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வை மூன்றில் இரண்டு பங்கு குறைத்து சுகாதாரச் செலவுகளை குறைக்கும் என்றும் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.