சுவிஸ் பேர்ண் லங்கினவு பிள்ளையார் ஆலயத்தில், என்ன குழப்பம்? திருவிழா நடைபெறுமா? (படங்களுடன்)
சுவிஸ் பேர்ண் லங்கினவு பிள்ளையார் ஆலயத்தில் என்ன குழப்பம்? திருவிழா நடைபெறுமா? (படங்களுடன்)
சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் லங்கினவு (Langnau) எனும் பிரதேசத்தில் அண்மைக்காலமாக “நிர்வாக முரண்பாடு, ஆலயக் குருக்களின் பிரச்சினை, இவ்வாரம் ஆரம்பமாகவுள்ள ஆலய திருவிழா” போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக பல்வேறுவிதமான செய்திகள் சமூகவலைத் தளங்கள் மூலமும், “அதிரடி” இணையத்துக்கு பிரத்தியேகமாகவும் வந்து உள்ளன.
“ஆலய யாப்பு விதிகளின்படி நிர்வாகத்தை சேர்ந்த சிலர் நடப்பது இல்லை எனவும், சர்வாதிகார போக்கில் நடப்பதாகவும், இது ஆலய வளர்ச்சிக்கு உதவாது எனவும், ஆலயத்துக்கு வருவோர் மனமகிழ்வுடன் நிம்மதியுடன் செல்ல வேண்டுமெனவும் நோக்கில் உருவாக்கிய ஆலயத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பது தவறு” எனவும் குறிப்பிட்டு மேற்படி ஆலய உருவாக்கத்தில் ஒருவராக இருந்த “தவமண்ணர்” எனும் திரு.தில்லையம்பலம் தர்மகுலசிங்கம் என்பவர் வெளியிட்டு உள்ள அறிக்கையை கீழே இணைத்து உள்ளோம்.
இதேவேளை இவ்வாரம் (01.07.2022) ஆரம்பமாகவுள்ள மேற்படி ஆலயத் திருவிழாவுக்கு முன்னர் ஆலயத்தின் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பது எனும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை (24.06.2022) திரு.தவமண்ணர் என்பவர் உட்பட சிலர் மேற்படி ஆலயத்தில் அன்றைய பூசை முடிந்த பின்னர் காத்திருந்த போதிலும் ஆலய நிர்வாக சபையை சேர்ந்த எவரும் கலந்து கொள்ளாததினால் எந்தவொரு முடிவும் எட்டப்பட வில்லையெனத் தெரிய வருகிறது. அத்துடன் ஆலய நிர்வாக சபையின் உபசெயலாளர் பதவி விலகி உள்ளதாகவும், பொருளாளர், உபபொருளாளர் ஆகியோரும் பதவி விலக உள்ளதாகவும் பரவலாகக் கதை உள்ளது.
இதேவேளை மேற்படி ஆலய திருவிழா உபயகாரர்களில் பெரும்பானமையானோர் நேற்றுமாலை ஆலய சுற்றாடலில் ஒன்றுகூடி “அதிர்ச்ச்சிகரமான முடிவுகளை” எடுத்து அதனை சமூகவலைத் தளங்கள் மூலம் பகிரங்கப்படுத்தி உள்ளதாகவும் தெரிய வருகிறது.
§§ இவ்வாரம் நடைபெறவுள்ள ஆலய திருவிழா உபயகாரர் பெரும்பான்மையாளோர் ஒன்றுகூடி எடுத்த முடிவு.. §§
அதாவது “இன்றுமாலை (26.06.2022) மேற்படி ஆலயத்தின் வருடாந்த உற்சவ உபயகாரர் ஒன்றுகூடியதாகவும், நிர்வாகசபை சார்பாக யாருமே வரவில்லை எனவும், நிர்வாகத்தினர் எவ்வித பதிலும் தரவில்லை எனவும், கலந்து கொண்ட அனைவரும் கருத்துக்களைப் பரிமாறியதாகவும், நிர்வாகத்தின் சார்பில் யாருமே வராததால் கோயிலுக்குள் செல்லாமல் வேறுவழியின்றி கோயில் வெளிவீதியில் இந்த ஒன்றுகூடலை நடத்த வேண்டி ஏற்பட்டதாகவும்,
மூன்றாம் திருவிழா உபயகாரர் திரு இராமலிங்கம் கணேசலிங்கம், ஆறாம் திருவிழா உபயகாரர் திரு. சிவானந்தன் (மனோ) ஆகிய இரண்டு உபயகாரர்கள் நேரில் கலந்து கொள்ளவில்லை எனவும், ஏனைய எட்டுநாள் உபாயகர்களும் கலந்து கொண்டனர் எனவும், ஆயினும் ஆறாம் திருவிழா உபயகாரர் திரு. சிவானந்தன் (மனோ) “தொலைபேசி மூலம்” தொடர்பு கொண்டு, உபயகாரர்கள் எடுத்த முடிவுகளை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தார் எனவும்” குறிப்பிட்டு உள்ளனர்.
§§ மேற்படிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?? §§
இன்றைய வருடாந்த அலங்கார உற்சவ உபயகாரர்களின் ஒன்றுகூடலில் பலவிதமான கருத்துப் பரிமாற்றலின் பின் கலந்து கொண்ட உபயகாரகளால் எடுக்கப்பட்ட முடிவுகள்..
1 ) இவ்வருட அலங்கார உற்சவத்தினை (திருவிழாவை) அலங்கார உற்சவம் இல்லாமல், எம்பெருமானுக்கு அபிஷேகத்துடன் கூடிய சாதாரண பூசையை செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
2 ) இவ்வருடம் அலங்கார உற்சவம் இல்லாமல், சாதாரண பூசையாக செய்வதால், அடுத்தவருடம் உற்சவத்துக்கு முன், அதற்கான பிராயசித்த அபிஷேகம் செய்து,சிறப்பாக அலங்கார உற்சவத்தினை செய்வதுக்கும் அனைத்து உபயகாரர்களும் ஏற்றுக் கொண்டோம்.
§§ காரணம் §§
1 ) நிர்வாகத்தினர் உபயகாரர்களுடன் ஒழுங்கான தொடர்பைப் பேணவில்லை.
2 ) உபயகாரர்களுக்கு எந்தவிதமான அறிவித்தாலும் (குருக்கள் சம்பந்தமாக) தகவலும் நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை.
3 ) நாங்கள பலமுறை நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்டும், தொடர்பினை ஏற்படுத்த முடியவில்லை.
4 ) இன்றைய ஒன்றுகூடலிலும் “நிர்வாக சபையினருக்கு” அறிவித்தும், நிர்வாக சபையினர் யாரும் சமூகமளிக்கவில்லை..
திருவிழா என்பது அனைவரும் சந்தோஷமாகவும், திருப்தியாகவும் செய்யும் பெருவிழா. இவ்வாறு செய்வதும் இப்போது எமது ஆலயத்தில் சூழ்நிலை இல்லை,
ஆலயத்தில் நடைபெறும் நிகழ்வுகளை “நிர்வாகத்தினர்” அடியார்களுக்கோ, அங்கத்தினருக்கோ அறிவிப்பது இல்லை..,
ஆகவே மனவேதனையுடன் அனைவரும் ஒருமனதாக இந்த முடிவினை உபயகாரகள் எடுத்துள்ளோம். எனவும் மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
§§ ஆலய நிர்வாகசபைத் தலைவர் திரு.நீதிராஜாவின் கருத்து.. §§
இதேவேளை மேற்படி சம்பவங்கள் குறித்து “லங்கினவு பிள்ளையார் கோயிலின்” நிர்வாக சபையின் தற்போதைய தலைவரான திரு.நீதிராஜா அவர்களிடம், “அதிரடி” இணையம் இதுகுறித்துக் கேட்ட போது, இவற்றுக்கு பதிலளித்த அவர்..
“நிர்வாக ரீதியாக எந்தவொரு குழப்பமோ, பிரச்சினையோ இல்லையெனவும், ஆலயத் திருவிழாவுக்கு உரிய பிரசுரம் (நோட்டீஸ்) இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் எனவும், சிலர் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமெனும் நோக்கில் செயல்படுவதுக்கு நிர்வாகம் எதுவும் செய்ய முடியாது எனவும்,
நிர்வாகத்தில் இருந்து எவரும் விலகியதாக தனக்கு எந்தவொரு கடிதமும் (எழுத்துமூலம்) கிடைக்கவில்லை எனவும்,
ஆலயக் குருக்கள் தாமாகவே பொறுப்பில் இருந்து விலகுவதாக எழுத்து மூலம் தந்ததினால், நாம் இன்னுமொருவரை ஆலயக் குருவாக நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும்,
ஆலயத் திருவிழா குறிப்பிட்டபடி சிறப்பாக நடைபெறும் எனவும், இதுகுறித்து உபயகாரகள் அனைவருடனும் ஏற்கனவே கலந்துரையாடி விட்டோம் எனவும்,
திருவிழாவின் ஆயத்த வேலைகள் சிறப்பாக நடைபெறுகிறது எனவும்” தெரிவித்தார்.
§§§§§ மேற்படி செய்தி குறித்து ஒத்தகருத்து அன்றில் மாறுபட்ட விடயங்கள், கருத்துக்கள், செய்திகள் இருப்பின் ஆதாரத்துடன் “அதிரடி” இணையத்தின் மின்னஞசலுக்கு ([email protected]) அனுப்பி வைக்கும் பட்ஷத்தில் அதனையும் பிரசுரிப்போம். நன்றி.. §§§§§§
“அதிரடி” இணையத்துக்காக.. “உண்மைவிளம்பி”