புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களுக்கு வவுனியாவில் சிலை?!! (படங்கள்)
புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களுக்கு வவுனியாவில் சிலை?!! (படங்கள்)
மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர்நாயகம் “தோழர் நாபா” எனும் தோழர் பத்மநாபா ஆகியோருக்கு வவுனியா மத்திய பகுதியில் சிலைகள் அமைக்கப்பட உள்ளன.
வவுனியா நகர மத்தியில் தந்தை.செல்வாவின் சிலைக்கு அருகாமையில் இரண்டு கட்சி தலைவர்களுக்கு சிலை வைப்பதற்கான கட்டுமான பணிகள் இடம்பெற்று வருகின்றது.
இரவோடு இரவாக அமைக்கப்பட்ட குறித்த கட்டுமானப்பணி தொடர்பில் வவுனியா நகரசபை தலைவரிடம் ஊடகம் ஒன்று கேட்டபோது, ஈ பி ஆர் எல் எப் கட்சியின் தலைவர் பத்மநாபா மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் உமாமகேஸ்வரனுக்கு சிலை வைப்பதற்காக குறித்த இடத்தில் கட்டுமானமொன்று அமைக்கப்படுவதாக தெரிவித்ததுடன் அதற்கான அனுமதி வட மாகாண ஆளுனரிடம் பெறப்பட்டதாகவும் தெரிவித்தார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதேவேளை குறித்த ஊடகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கியஸ்தர் சிவசக்தி ஆனந்தனிடம் கேட்டபோது, “பத்மநாபாவின் சிலை குறித்த இடத்தில் வைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்ததுடன் அதற்கான நகரசபை அனுமதி 5 மாதங்களுக்கு முன்பே பெறப்பட்டதாகவும் வட மாகாண ஆளுனர் உள்ளுராட்சி மன்ற அனுமதி மாத்திரம் போதுமானது என தெரிவித்ததாகவும் கூறினார்.
இதேவேளை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலொ) தலைவர் சிறீசபாரத்தினம் அவர்கட்கு சிலை இல்லையா என வினாவியபோது ரெலோ சார்பாக யாரும் கோரிக்கை முன்வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக “அதிரடி” இணையம், புளொட் மத்தியகுழு உறுப்பினரும், புளொட் முக்கியஸ்தர்களில் ஒருவரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான திரு.சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டட போது, “வவுனியா நகரசபையில் ஐந்து மாதங்களுக்கு முன்னரே தமிழ், சிங்களக் கட்சிகளின் உறுப்பினர்களிடம் உங்கள் கட்சிகள் சார்பாக உங்கள் தலைவர்களின் சிலையை, வவுனியா நகர பகுதியில் வைக்கும் எண்ணம் உண்டாயின் விண்ணப்பிக்கலாமெனக் கோரப்பட்ட போது, நான் புளொட் சார்பாகவும், அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களும் விண்ணப்பித்து இருந்தோம். இதுக்குரிய அனுமதி வாதப்பிரதிவாதங்களின் பின்னர் வழங்கப்பட்ட்து, பின்னர் அரசின் அனுமதிக்காக வடமாகாண ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதுவரை ஆளுநரின் அனுமதி கிடைக்கப் பெற்றதாக தெரிய வரவில்லை, அனுமதி கிடைத்ததும் புளொட் செயலதிபரின் சிலை நிறுவப்படும்” என்றார்.
இதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் சார்பாக நேற்றிரவே தோழர்.பத்மநாபாவின் சிலை அமைக்கும் பணி ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.