சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக வெளியேற்றம்? (படங்கள்)
சாதிக் கொடுமை?: வெளிநாட்டில் இருந்து சென்றோரை, யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து அடாத்தாக வெளியேற்றம்? (படங்கள்)
சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமாக சென்றிருந்த அச்சுவேலியைச் சேர்ந்தவர்களான இரு குடும்பத்தினர், யாழ். அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் சாமி தரிசனத்துக்காக சென்ற நிலைமையில் அங்கிருந்த ஆலய தர்மகர்த்தா திரு.தேவன் என்பவரால் அவர்கள் அடாத்தாக வெளியேற்றப்பட்டமை மிகுந்த விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து “அதிரடி” இணையத்துக்கு தெரிய வருவது யாதெனில் “அச்சுவேலி தேவன் எனும் இவர் சாதி வெறி பிடித்தவர், தன்னைத்தானே தர்மகர்த்தா எனக் கூறி வெளிநாட்டில் இருந்து ஆலயத்தை வழிபட சென்ற எமது ஊர் மக்களை வெளியேற சொல்லி, கதவை அடைத்த சம்பவம் கண்டனத்துக்க்ருரியது, நாம் வெளிநாடு சென்று பலவருடங்கள் ஆகின்றது, எமது பரம்பரைத் தொழிலை அடிப்படையாக வைத்து வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த, சாதி என்றாலே என்னவென்று தெரியாத பிள்ளைகளையும் இப்படி சாதி நோக்கில் வெளியேற்றி பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் கருவறையை சாத்தி, பின்னர் எம்மை வெளியேற சொல்லி வாசல் கதவையும் சாத்த முற்பட்டமை தவறானது” என்கிறார்கள்.
இதனை அனைத்து ஊர் மக்களும் கண்டித்த வண்ணம் உள்ளார்கள் என்பதுடன் மனித உரிமைகள் ஆணையத்துக்கும் புகார் அளித்துள்ளதாகத் தெரிய வருகின்றது. இதுபோன்ற சம்பவங்கள் இங்கு மட்டுமல்ல இலங்கையின் வடகிழக்கு பகுதியெங்கும் குறிப்பாக யாழ். மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து சென்று கோயில்களை புனரமைத்து ஆடம்பரமாக விழாக்களை செய்து விட்டு வெளிநாடு வந்தவுடன் அங்குள்ள இவர்களின் உறவுகள் ஆதிக்கம் செலுத்துவது ஒருபக்கம் என்றால், மறுபக்கம் கேட்பாரின்றி ஆலயங்கள் காணப்படுவதுடன் இவர்களால் ஒதுக்கப்படும் மக்களே சுவாமியைத் தூக்கிக் காவ வேண்டிய சூழ்நிலையை சுட்டிக்காட்டியும் பலரும் விமர்சிக்கின்றார்கள்.
தவிர இதுபோன்ற சம்பவங்கள் இலங்கையின் வடகிழக்கு பகுதியில் மட்டுமல்ல அனைத்து வெளிநாடுகளிலும் உள்ள இலங்கைத் தமிழர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருவதாகப் பலரும் அங்கலாய்க்கின்றனர். ஆயினும் வெளிநாடுகளில் நேரடியாக சாதி குறித்துத் தெரிவிக்காமல், “பிரதேசத்தின் (ஊர்களின்)” பெயரால் வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான கோயில்களில் பிரிவினைகளும், நிர்வாகக் குளறுபடிகளும், பண மோசடிகளும் நடைபெறுவதாகப் பலரும் மனம் குமுறி அங்கலாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
-“அதிரடி” இணையத்துக்காக, அன்புடன் யாழகத்தான்-