புங்குடுதீவு கள்ளியாறு; தீவக மக்களின் நன்னீர் பிரச்சினைக்காக எடுக்கவுள்ள நடவடிக்கை..
புங்குடுதீவு கள்ளியாறு; தீவக மக்களின் நன்னீர் பிரச்சினைக்காக எடுக்கவுள்ள நடவடிக்கை..
புங்குடுதீவு கள்ளியாறு அபிவிருத்தி திட்டம்
புங்குடுதீவின் அபிவிருத்தியை பெரு நோக்காகக் கொண்டு செய்ய வேண்டிய திட்டங்களில் ஒன்றாக, பாரிய அபிவிருத்தி திட்டங்களில் முதன்மை வகிப்பது கள்ளியாறு நன்னீராக்கும் திட்டம் என்றால் மிகையாகாது. இத்திட்டத்தை செயற்படுத்த வெளிநாட்டில் உள்ள பல்வேறு புங்குடுதீவு சார் சங்கங்கள், ஒன்றியங்கள், அமைப்புகள் மற்றும் நலன்விரும்பிகள் குறைந்தது இரண்டு தசாப்த காலங்களாக முனைப்பும் முயற்சியும் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் மற்றும் அரச திணைக்களங்கள், வேலணை பிரதேச சபை அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இப்பாரிய திட்டத்தை இரண்டு,மூன்று வருடங்களில் பூர்த்தி செய்யலாம் என மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம் ஆகிய நானும் இதற்கான ஆரம்ப முயற்சியை மேற்கொள்ள விரும்பி உள்ளேன்.
அதற்காக புங்குடுதீவின் அபிவிருத்தியை நேசிக்கும் உங்கள் எல்லோருக்கும் முன்பாக ஒரு ஆரம்ப நிலை அபிப்பிராயங்களை வேண்டி நிற்கிறேன். இந்த அபிப்பிராயங்களை வேண்டி எமது புங்குடுதீவு கல்விமான்கள், அமைப்புகளின் முன் சமர்ப்பிக்கின்றேன்.
இந்தப்பாரிய கள்ளியாறு திட்டத்திற்கு அண்ணளவாக ஐந்து முதல் ஆறு கோடி இலங்கை ரூபாய்கள் வரை செலவாகுமென பலரது மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இம்முயற்சியை எடுப்பதற்கு இதுவரை பத்திற்கும் மேற்பட்டவர்கள் குறைந்தது தலா பத்தாயிரம் கனடிய டொலர்களை அன்பளிப்பு செய்ய உறுதி தெரிவித்துள்ளனர். இவர்களில் பங்களிப்பில் என்னளவில் பூரண நம்பிக்கை உண்டு.
இத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஐம்பது வீத உறுதி கிடைக்கப் பெற்றால், எமது மண்ணின் அபிவிருத்தியில் பெருமளவு அக்கறை கொண்ட பேராசிரியர் குகபாலன் கார்த்திகேசு அவர்கள் இலங்கை வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் பூர்வாங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சம்மதம் தெரிவித்துள்ளார். பேராசிரியருக்கு புங்குடுதீவு மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்மாபெரும் திட்டத்தினை செய்யலாம் என நீங்கள் எல்லோரும் உறுதி (Commitment) தந்தால் எனது பணியை இத்துடன் நிறைவேற்றிக் கொண்டு, மேற்கொண்டு இப்பணியை முன்வந்து பொறுப்பேற்கும் வெளிநாட்டு சங்கங்கள், ஒன்றியங்கள் இடம் கையளிப்பேன். அத்துடன் என்னால் செய்யக்கூடிய பொறுப்புகளை நூறு வீதம் வழங்குவேன் என்பதை இத்தால் உறுதி செய்கிறேன்.
கள்ளியாறு அபிவிருத்தி சம்பந்தமாக ஏதாவது கருத்துக்கள், குறைநிறைகள் தெரிவிக்க விரும்பினால் என்னுடைய தொலைபேசி 416-844-0565, WhatsApp அல்லது [email protected] மூலம் தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டம் நிறைவேற வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு நன்றி கூறி அமைகின்றேன்.
இப்படிக்கு,
புங்குடுதீவு அபிவிருத்தியில் ஆர்வமுள்ள,
மாகோ சின்னத்தம்பி கனகலிங்கம்