சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் புங்குடுதீவு மாணவர்களைக் கௌரவித்த கலாநிதி சஞ்சி லிங்கம் குடும்பம்.. (படங்கள் வீடியோ)
சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் புங்குடுதீவு மாணவர்களைக் கௌரவித்த கலாநிதி சஞ்சி லிங்கம் குடும்பம்.. (படங்கள் வீடியோ)
சமூக உதவி மற்றும் கல்விக்கு உதவுதலில் தன்னார்வம் கொண்ட புங்குடுதீவு இறுப்பிட்டியில் பிறந்து சுவிஸில் வதியும் திருமதி. பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்களின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது மகனும், சுவிஸ் ஒன்றிய உபதலைவருமான “கலாநிதி” திரு.சஞ்சீ லிங்கம் குடும்பத்தின் முழுமையான நிதிப் பங்களிப்பில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” ஏற்பாட்டில் “புங்குடுதீவு மாணவர்களுக்கான கௌரவிப்பு”..நிகழ்வு இன்றையதினம் (10.12.2023) பலத்த மழைக்கு மத்தியில் புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
முதலில் பிரதம அதிதியான புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், இலங்கை ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான திரு. இளங்கோவன் அவர்களை நிகழ்வின் தலைவரான புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் அதிபருமான சமாதான நீதவான் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் அவர்கள் மாலையிட்டு வரவேற்க, விருந்தினர்களால் மங்கள விளக்கேற்றப்பட்டு தேவார வணக்கத்துடன் ஆரம்பமாகியது.
இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவியின் வரவேற்பு நடனம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், இறுப்பிட்டி சனசமூக நிலைய செயலாளர் திரு.பிள்ளைநாயகம் சதீஷ் அவர்கள் தொகுத்து வழங்கி வரவேற்புரையாற்றினார். அவரது வரவேற்புரையின் போது “விழாவுக்கு வந்த விருந்தினர்களையும், மாணவச் செல்வங்களையும், பொதுமக்களையும் வரவேற்றதுடன், புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் அதன் உபதலைவர் சஞ்சி லிங்கம் அவர்களின் தாயாரின் எழுபதாவது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கிய முழுமையான நிதிப் பங்களிப்பில் சிற்றுண்டிகள், மதிய உணவு, மத்திய கல்லூரி நடனமாணவிகளுக்கான நடன உடுப்புக்கான செலவு, கல்வி சாதாரணதர, மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு நடைபெறுகிறது.
திரு.சஞ்சி லிங்கம் அவர்களின் தாயார் சமூக செயற்பாடு மற்றும் கல்விக்கு உதவுவதில் ஈடுபாடு கொண்டவர். ஆகவே அவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை இந்த மண் மக்களின் சார்பில் வாழ்த்துவதுடன் அனைவரையும் வரவேற்கிறோம், அத்துடன் கௌரவிக்கப்படும் இம்மாணவ செல்வங்கள் தொடர்ந்தும் கல்வியில் முன்னேறி புங்குடுதீவுக்கும், புங்குடுதீவு மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டுமெனவும்” தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தலைமையுரையாற்றிய புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், முன்னாள் அதிபருமான சமாதான நீதவான் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் உரையாற்றும் போது, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெறுவது சிறப்பானது. இதுக்கான முழு ஏற்பாட்டையும் செய்து தற்போது வரை நேரடியாகக் கவனித்துக் கொண்டிருக்கும், சுவிஸ் ஒன்றியத் தலைவர் ரஞ்சன் தம்பி கேட்டவுடன் இதனை சுவிஸ் ஒன்றிய உபதலைவர் தம்பி சஞ்சி லிங்கம் அவரது தாயாரின் பிறந்ததினத்தை முன்னிட்டு சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் இந்நிகழ்வை நடத்துவது வரவேற்கக் கூடியதே.
சுவிஸ் ஒன்றிய உபதலைவர் தம்பி சஞ்சி லிங்கம் ஊருக்காகவும், ஊர் மக்களுக்காகவும் பல்வேறு உதவிகளை செய்பவர் மட்டுமல்ல, அண்மையில்தான் சுவிஸ் நாட்டில் தொழில்கல்வியில் கலாநிதி பட்டம் பெற்றவர், அவரைப் போன்று இங்குள்ள மாணவச் செல்வங்களும் அடுத்து உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக் கழகம் சென்று கலாநிதிகளாக வர வேண்டுமென வாழ்த்துகிறேன். இதேவேளை திருமதி பூமலர் பஞ்சரத்னலிங்கம் அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்,
அத்துடன் சுவிஸ் ஒன்றியமானது, சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களிடம் ஊருக்காகவும், மக்களுக்காகவும் எந்தவொரு வேண்டுகோள் விட்டாலும் சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் முழுமனதுடன் ஏற்பதுடன், அதனை சுவிஸ் ஒன்றியம் ஊடாக செய்ய முன்வருவார்கள், சுவிஸ் ஒன்றியமும் ஒன்றியம் சார்ப்பில் செய்தாலும் அதுக்கான நிதியுதவி தந்தவர்கள் பெயர்களை பகிரங்கத்தில் அறிவித்து அவர்களையும் பெருமைப்படுத்துவது நல்லதொரு விடயம், இன்றும் சுவிஸ் ஒன்றிய உபதலைவர் தம்பி சஞ்சி லிங்கம் இதனை செய்வது வரவேற்கக் கூடியதே”.. என்றார்.
அடுத்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய புங்குடுதீவு மண்ணின் மைந்தரும், இலங்கை ஜனாதிபதியின் மேலதிக செயலாளருமான திரு. இளங்கோவன் அவர்கள் இம்மாணவ செல்வங்கள் தொடர்ந்தும் கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்தும் அதேவேளை சுவிஸ் ஒன்றியம் முன்னெடுத்த மாணவர்கள் கௌரவிப்புக்கான இந்நிகழ்வில் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் கலந்து கொள்ளாமல் விட்டது மிகவும் கவலையளிக்கிறது. பெற்றோர்கள் தான் பிள்ளைகளின் கல்விக்கு ஊன்றுகோல், அதனைப் புரிந்து அவர்கள் செயற்பட வேண்டும்.
இதேளை இந்நிகழ்வில் கலந்து கொள்ள சுவிஸ் ஒன்றிய தலைவர் ரஞ்சன் அவர்கள் வேண்டுகோள் விட்டதும், முழுமனதுடன் நான் ஏற்றுக் கொண்டேன், ஏனெனில் புலம்பெயர் புங்குடுதீவு மக்களும் அவர்களுக்கான அமைப்புக்களும் ஊருக்கும், ஊர் மக்களுக்காகவும் முன்னின்று செயற்படுபவர்கள் என்பதை நானறிவேன், இதனைப் புரிந்து இங்குள்ள மக்களும் செயற்பட வேண்டும்”
சுவிஸ் ஒன்றியமானது ரஞ்சன் அவர்களின் தலைமையில் பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றியதை அறிவோம், புங்குடுதீவில் அடையாளமான சிறப்புமிகு பெருக்குமரம், பன்னிரெண்டு வட்டாரங்களுக்குமான பொதுக்கிணறுகள், பொதுமயானங்கள், கேணிகள், பாடசாலைகளுக்கனா உதவிகள், மாணவர்களுக்கான ஊக்குவிப்புக்கள் என்று பல்வேறு விடயங்கள் நடைபெற்றுள்ளது, இதனை இங்குள்ள மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினாலே அது புலம்பெயர் மக்களுக்கு நாம் காட்டும் நன்றிக்கடன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட, திரு.K.விநோதன் (அதிபர், மத்திய கல்லூரி புங்குடுதீவு), திரு.க.கமலவேந்தன் (அதிபர், ஸ்ரீ கணேஷா மகாவித்தியாலயம் புங்குடுதீவு), திரு.வி.பாலகுமார் (ஆசிரியர், ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயம் புங்குடுதீவு), திரு.ஆசீர் தேவதாஸ் டேவிட்ஸன்
(ஆசிரியர், ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம் புங்குடுதீவு), ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
அவர்களின் உரையின் போது, “இந்நிகழ்வை சிறப்பாக செய்யும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்துக்கும், இதுக்கான நிதிப்பங்களிப்பு வழங்கிய சுவிஸ் ஒன்றிய உபதலைவர் சஞ்சி லிங்கத்துக்கு நன்றி தெரிவித்த அதேவேளை மாணவர்களாகிய நீங்கள் கல்வியால் மென்மேலும் உயர தொடர்ந்து செயல்பட வேண்டுமெனவும், புங்குடுதீவு அனைத்துப் பாடசாலைகளின் பழைய மாணவர்களும் புலம்பெயர் புங்குடுதீவு மக்களும் புங்குடுதீவில் உள்ள மாணவச் செல்வங்களின் கல்வி வளர்ச்சிக்கு என்றும் உதவத் தயாராகவே உள்ளனர், ஆயினும் இங்குள்ள பெரும்பாலான பெற்றோரோ அதனைப் புரிந்து கொள்ளாமல் பாடசாலைகளின் வளர்ச்சிக்கு உதவுவதில்லை, இதுபோன்ற செயல்பாடுகள் உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கே பாதிப்பாக அமையும் அதுக்கு உதாரணமாக இன்றைய நிகழ்வில் பெரும்பாலான பெற்றோர் கலந்து கொள்ளாததே கவலையளிக்கிறது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான பெறுபேறுகளை எடுக்க அதிபர், ஆசிரியர்கள் நாம் முயற்சிப்போம், அதுக்கு பெற்றோரும் பிள்ளைகளை ஊக்குவித்து உதவ வேண்டும், உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையுமென நம்புவோம்” என்றார்கள்.
இதனைத் தொடர்ந்து புங்குடுதீவில் உள்ள மத்திய கல்லூரி , ஸ்ரீகணேஷ மகா வித்தியாலயம், ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம், ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலயம், ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் ஆகிய ஐந்து பாடசாலைகளில் 2022 நடைபெற்ற கல்விப்பொது சாதாரண தரப்பரீட்சையில் பங்குபற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த ஸ்ரீகணேஷ மகா வித்தியாலயம் மாணவனையும் கௌரவித்து “புங்குடுதீவு மண்ணிற்கும் கல்விச் சமூகத்திற்கும் பெருமைதேடித்தந்த மாணவச்செல்வங்களை மதிப்பளித்து” இன்றையதினம் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் கௌரவிக்கப்பட்டனர்.
இதைவிட தேசிய நடனப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாமிடம் பெற்று புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கும், புங்குடுதீவுக்கும் பெருமை சேர்த்த நடனப் போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கான நடனஆடைகளுக்கான பணமும் அப்பாடசாலை அதிபரின் எழுத்துமூலக் கோரிக்கையை ஏற்று, அம்மேடையில் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் விருந்தினர்களாக திரு. இலட்சுமணன் இளங்கோவன் (செயலாளர், ஜனாதிபதி செயலகம்), திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் J.P (ஓய்வுநிலை அதிபர் புங்குடுதீவு), திரு.கு.சந்திரா (ஓய்வுநிலை கிராம அலுவலகர் புங்குடுதீவு), திரு.K.விநோதன் (அதிபர், மத்திய கல்லூரி புங்குடுதீவு), திரு.க.கமலவேந்தன் (அதிபர், ஸ்ரீ கணேஷா மகாவித்தியாலயம் புங்குடுதீவு), திரு.வி.பாலகுமார் (ஆசிரியர், ஸ்ரீ சித்திவிநாயகர் வித்தியாலயம் புங்குடுதீவு), திரு.ஆசீர் தேவதாஸ் டேவிட்ஸன் (ஆசிரியர், ஸ்ரீ கமலாம்பிகை வித்தியாலயம் புங்குடுதீவு), திரு.பிள்ளைநாயகம் சதீஷ் (செயலாளர், இறுப்பிட்டி சனசமூக நிலையம்), திரு.கருணாகரன் குணாளன் (சூழகம்), திரு.K.குயிலன் (செண்பகம், தீவகம்), திரு.N.அழகேசன் (ஒருங்கிணைப்பாளர், அனைத்து விளையாட்டுக் கழகம் புங்குடுதீவு) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கான முழுமையான நிதிப் பங்களிப்பை திரு.சன்ஜி லிங்கம் குடும்பத்தினர் வழங்கி இருந்தனர். சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் உபதலைவரும், அண்மையில் தொழிற்கல்வியில் சுவிஸில் கலாநிதி பட்டம் பெற்றவருமான திரு. சன்ஜி லிங்கம், இறுப்பிட்டியில் பிறந்து சுவிஸில் வதியும் தனது தாயாரின் எழுபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு இதனை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி.
-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிட்ஷர்லாந்து-
சுவிஸ் ஒன்றியத்தின் சார்பில் புங்குடுதீவு மாணவர்களைக் கௌரவித்த கலாநிதி சஞ்சி லிங்கம் குடும்பம்.. (வீடியோ)