;
Athirady Tamil News

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 35 வது வீரமக்கள் தின” -2024- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 35 வது வீரமக்கள் தின” -2024- நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வானது இன்று சனிக்கிழமை சுவிஸ் கேர்ளபிங்கென் ஐசென் கம்மெர் எனும் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புளொட் சுவிஸ் மூத்த உறுப்பினரும், நிர்வாகப் பொறுப்பாளருமான தோழர் லெனின் எனும் செல்வபாலன் அவர்களினதும், அவரது குடும்பத்தினதும் முழுமையான ஏற்பாட்டில் புளொட் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சுவிஸ் பொறுப்பாளர் தோழர். சுவிஸ்ரஞ்சன் அவர்கள் ஆரம்பித்து வைத்து தலைமை தாங்கி தொகுத்து வழங்கினார்.

நிகழ்வில் “மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழக ஸ்தாபகர்களில் ஒருவரும், மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன் அவர்களையும், அவரது வழிகாட்டலில் தம்முயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகளையும் மற்றும் அனைத்து இயக்கப் போராளிகளையும், பொதுமக்களையும்  நினைவுகூர்ந்து வருடாவருடம் நடாத்தப்படும் வீரமக்கள் தின நிகழ்வானது வழமை போல் இவ்வருடமும் புளொட் சர்வதேச அமைப்புக்கள் சார்பாக சுவிஸ் அமைப்பின் சார்பில் இன்றையதினம் இங்கு நினைவு கூறப்படுகிறது, அத்துடன் நாம் வழமை போல் பிரமாண்டமாக நடத்தாவிடிலும், சில சூழ்நிலைகளால் அவசர அறிவித்தலாக அறிவித்த போதிலும், பொதுமக்கள் தாமாக முன்வந்து கலந்து கொண்டது மிகவும் சிறப்பு* என்பதைக் கூறி தோழர் ரஞ்சன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இதன் முதல்நிகழ்வாக “ஆகுதியாகிய அனைவருக்குமான” தீபச்சுடரேற்றல், ஈகைச்சுடரேற்றல் நிகழ்வு நடைபெற்றது. தீபச்சுடர்களை முன்னாள் புளொட் உறுப்பினர் பி.எல்.ஓ தோழர்.விக்கி அவர்கள் முதலில் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து புளொட் சுவிஸ் உப நிர்வாகப் பொறுப்பாளர் தோழர்.ரமணன், புளொட் சுவிஸ் தோழர் பேர்ண் தயா, திரு.ஈழதர்சன் செல்வபாலன் ஆகியோர் தொடர்ந்து ஏற்றி வைத்தனர். தொடர்ந்து கலந்து கொண்டோரினால் நினைவுத்தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

அடுத்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து வீரமக்களும் ஆத்மா சாந்தியடைய வேண்டி ஒருநிமிட அமைதி வணக்கம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து மலரஞ்சலி நிகழ்வை தோழர்கள் ஆரம்பித்து வைக்க கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் நடத்தினர்.

தொடர்ந்து இன்றைய சுவிஸ் வீரமக்கள் தின நினைவேந்தல் நிகழ்வுக்காக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் புளொட் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் அனுப்பி வைத்த நினைவுரை வாசிக்கப்பட்டது.

அதேபோல் இன்றைய சுவிஸ் வீரமக்கள் தின நினைவேந்தலுக்காக புளொட் அமைப்பின் நோர்வேக் கிளை பொறுப்பாளர் தோழர். நோர்வேராஜா நோர்வேக் கிளை சார்பில் அனுப்பி வைத்த நினைவுரையும்,
புளொட் அமைப்பின் பிரான்ஸ் கிளை நிர்வாகப் பொறுப்பாளர் தோழர் தயாளன் பிரான்ஸ் கிளை சார்பில் அனுப்பி வைத்த நினைவுரையும்,
புளொட் அமைப்பின் பிரித்தானியாக் கிளை பொறுப்பாளர் தோழர்.நேதாஜி எனும் பிரேம்சங்கர் பிரித்தானியாக் கிளை சார்பில் அனுப்பி வைத்த நினைவஞ்சலிக் கவிதை புளொட் சுவிஸ் உப நிர்வாகப் பொறுப்பாளர் தோழர்.ரமணனால் வாசிக்கப்பட்டது.

இதனையடுத்து அனைவரையும் வரவேற்று தலைமையுரையையும், நன்றியுரையையும் சுவிஸ் பொறுப்பாளரான புளொட் ஆரம்பகால உறுப்பினர் தோழர்.ரஞ்சன் நிகழ்த்தினார். அதன்போது *நாம் வழமையாகவே வருடாவருடம் பல நிகழ்வுகளை நடத்தி பிரமாண்டமாக வீரமக்கள் தின நிகழ்வை செய்வது வழமை, ஆயினும் இம்முறை சந்தர்ப்ப சூழ்நிலைகள், உடல்நிலைகள் போன்ற பல்வேறு காரணங்களினால் இதனை இம்முறை செய்வதா? இல்லையா? எனப் பலவாறு சிந்தித்து இருந்தோம், ஆயினும் தலைமையை சேர்ந்தவர்களின் அறிவுரைக்கு ஏற்ப, வீரமக்கள் தின நினைவேந்தலை நடாத்த இறுதியாகத் தீர்மானித்து அறிவித்து இருந்தோம், ஆயினும் நாம் எதிர்பாராத வகையில் இறுதி நேரத்தில் அறிவித்தும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தது மகிழ்வைத் தரும் அதேவேளையில் இதுக்கான முழுஎற்பாடடையும் முன்னின்று செய்த தோழர்.செல்வபாலன் மற்றும் அவரது குடும்பத்துக்கும் நன்றி*

அதேபோல் *மட்டக்களப்பு மாவட்ட வீரமக்கள் தின நிகழ்வுக்காக அனைத்து ஏற்பாடுகளுக்கு உதவிகள் புரிந்த ஜெர்மனி தோழர். சூட்டி எனும் யூட், பிரான்ஸ் தோழர்.தயாளன், சுவிஸ் தோழர்களான செல்வபாலன், ரமணன், அன்ரன், பேர்ண் தயா, சுவிஸ்ரஞ்சன் ஆகியோருக்கும் நன்றி. அதேவேளை கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் நிகழ்வின் கீழ் மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாகக் கேட்டவுடன் இன்றைய வீரமக்கள் தின நிகழ்வில் புத்தம்புதிய துவிச்சக்கர வண்டியினை வழங்குவதுக்கு நிதி உதவியளித்த சுவிஸ் தோழர் தேவண்ணர் எனும் செல்லத்துரை தவராஜா அவர்களுக்கும் வீரமக்கள் தின நிகழ்வில் புத்தம்புதிய துவிச்சக்கர வண்டியினை தனது மகனான திரு.ஈழதர்சனின் பிறந்தநாளை முன்னிட்டு வழங்குவதுக்கு நிதி உதவியளித்த சுவிஸ் தோழர் லெனின் எனும் சிவகுரு செல்வபாலன் அவர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றி.

அதேபோல் வவுனியா நகரில் புளொட் செயலதிபர் தோழர். உமா மகேஸ்வரன் அவர்களின் திரு உருவச்சிலையை நிறுவுவதுக்கான பெருமளவு நிதி உதவியை கனடா தோழர்.குணபாலன், அமெரிக்கா தோழர்.கோபி, பிரான்ஸ் தோழர்.தயாளன் ஆகியோரும், தம்மால் முடிந்த நிதி உதவிகளை சுவிஸ் தோழர்களான செல்வபாலன், தேவண்ணர், ரமணன், அன்ரன், சுவிஸ்ரஞ்சன் ஆகியோரும் வழங்கி உள்ளனர் என்பதையும், அவர்களுக்கான மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்* எனவும் தெரிவித்தார்..

இதன்பின்னர் அனைவருடனுமான கலந்துரையாடலுடன் வீரமக்கள் தின நினைவேந்தல் நிகழ்வு முடிவுக்கு வந்ததுடன், தோழர் செல்வபாலனின் இல்லத்தில் அனைவரும் வரவழைக்கப்பட்டு மதியஉணவு வழங்கப்பட்டது.

அதேவேளை தனது இறுதிமூச்சு வரை கழகத்துக்காகவே வாழ்ந்து, கழக சொத்துக்களை கழகத்துக்கே அர்ப்பணிக்க முன்வந்த அமரத்துவமடைந்த தோழர்.ஆர்.ஆர் அவர்களின் நினைவாக வாழைக்கன்று ஒன்றினை தோழர்.செல்வபாலனின் வாசல் ஸ்தலத்தில் புளொட் சுவிஸ் பொறுப்பாளர் தோழர் ரஞ்சனுடன் இணைந்து தோழர்.ரமணனும் நாட்டி வைத்தது சிறப்பம்சமாகும்.

இதேவேளை காலையிலேயே வருகிறோம் என அறிவித்து இருந்த போதிலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக காலதாமதாக வந்த போதிலும், நிகழ்வில் கலந்து சிறப்பித்த புளொட் சுவிஸ் மூத்த உறுப்பினர்களான குமாரண்ணர் எனும் தோழர் இரட்ணகுமார், மனோ எனும் தோழர்.விஜயமனோகரன் ஆகியோர் தோழர்.ஆர்.ஆர் அவர்களின் நினைவாக நாட்டப்பட்ட வாழைக்கன்று முன்னால் நின்று தமது அஞ்சலியை செலுத்தியதுடன், புளொட் சுவிஸ் மூத்த உறுப்பினரான குமாரண்ணர் எனும் தோழர் இரட்ணகுமார், இன்றைய வீரமக்கள் தினம் சார்ந்து நினைவுரையாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பாக நடைபெற்ற, “புளொட் சுவிஸ்ன் 35 வது வீரமக்கள் தின” -2024- நிகழ்வு.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.