தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய இலச்சினைக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்!
தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் உள்ள தன்வந்திரி படத்தை நீக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையம் அதன் புதிய இலச்சினையை வெளியிட்டது. அதில் தன்வந்திரி என்ற கடவுளின் உருவம் இணைக்கப்பட்டிருந்ததும், இந்தியா என்ற பெயர் பாரத் என்று மாற்றப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதையடுத்து பல்வேறு தரப்பிலிருந்தும் அதற்கு எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, “தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் தன்வந்திரி எனப்படும் கடவுளின் உருவப்படம் திணிக்கப்பட்டிருப்பதும், இந்தியா என்ற பெயருக்கு மாற்றாக பாரத் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
மருத்துவம் என்பது உயிர் காக்கும் தொழில். உயிரியலும், தொழில்நுட்பமும் தான் மருத்துவத்திற்கான அடிப்படை. மருத்துவத்திற்கு மனித நேயம் கூடுதல் தகுதி ஆகும். ஆனால், இவற்றில் எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாத தன்வந்திரி கடவுளின் படத்தை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் சேர்ப்பது எந்த வகையில் நியாயம்?
கற்பனைக் கடவுளை மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் திணிப்பது மிகவும் பிற்போக்கானது. கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதை மதித்து இலச்சினையில் இருந்து தன்வந்திரி படம் நீக்கப்படுவது தான் முறையாகும்.
மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஹிப்போகிரட்டிக் உறுதிமொழிக்கு மாற்றாக மகரிஷி சரகர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ளலாம் என்று கடந்த ஆண்டு மருத்துவ ஆணையம் பரிந்துரைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது தன்வந்திரி படத்தை திணித்து அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மருத்துவத்துறையை வலுப்படுத்த மருத்துவக் கல்வி ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக, புராணங்களின் அடிப்படையில் சர்ச்சைகளை திணிக்க முயலக்கூடாது. தேவையின்றி ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் இலச்சினையில் உள்ள தன்வந்திரி படத்தை நீக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.