2 நாட்கள் அரசு முறை பயணமாக குவைத் நாட்டிற்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!
பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று குவைத் புறப்பட்டுச் சென்றார். அங்கு, பயான் அரண்மனையில் அவரை தங்கவைத்து மரியாதை அளிக்கப்பட உள்ளது. குவைத்தின் மன்னர் எமிர், ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபாவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அங்கு செல்கிறார்.
குறிப்பாக, இந்த பயணத்தின் போது, இருநாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள இந்தியா தொழிலாளர்கள் தங்கி உள்ள முகாமிற்கு சென்று பார்வையிடும் பிரதமர் மோடி, அவர்களிடம் உரையாற்ற உள்ளார்.
இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “இன்றும், நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுமார், 43 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் குவைத் செல்வது இதுவே முதல்முறை என்பதால், அந்த பெருமையை மோடி பெற்றுள்ளார். மேலும், பிரதமர் மோடியின் இந்த குவைத் பயணம் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடைசியாக 43 ஆண்டுகளுக்கு முன்பு 1981 ஆம் ஆண்டு குவைத் சென்றார். இதனால், பிரதமர் மோடியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.