;
Athirady Tamil News

இஸ்ரோ 100 | என்விஎஸ்-02 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்

0

ஸ்ரீஹரிகோட்டா: என்விஎஸ்-02 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது இஸ்ரோவின் 100-வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்-15. இன்று காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 19-வது நிமிடத்தில் செயற்கைக்கோளை புவியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

அமெரிக்காவுக்கு ‘ஜிபிஎஸ்’ போல, நம்நாட்டில் தரை, கடல் மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ (ஐஆர்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

இதற்காக ஐஆர்என்எஸ்எஸ் வரிசையில் 2013 முதல் 2018-ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் 8 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதன்மூலம் இந்தியாவுக்கு பிரத்யேக வழிகாட்டியாக நாவிக் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்த நாவிக் மூலம்தான் நமது நாட்டின் கண்காணிப்பு பணிகள் இப்போது சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன.

இதையடுத்து ஐஆர்என்எஸ்எஸ் திட்டத்தில் தற்போதைய காலத்துக்கேற்ப மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த இஸ்ரோ திட்டமிட்டது. அந்தவகையில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஜி-க்கு மாற்றாக என்விஎஸ்-01 செயற்கைக்கோள் 2023 மே 29-ல் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து தற்போது ஐஆர்என்எஸ்எஸ் 1இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ்-02 செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

.இந்த செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப்-15 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகேட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை (ஜன.29) 6.23 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

பேரிடர் காலத்தில் துல்லிய தகவல்கள்: என்விஎஸ் செயற்கைக்கோள் 2,250 கிலோ எடை உடையது. இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5, மற்றும் எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான அணு கடிகாரம் உட்பட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. செயற்கைக் கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வெளி போக்குவரத்தை இது கண்காணிக்கும். மேலும், பேரிடர் காலங்களில் துல்லிய தகவல்களைத் தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.