சீனாவின் கரிம உர இறக்குமதியில் பணமோசடி: மகிந்த அமரவீர குற்றச்சாட்டு
கடந்த 2022 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து தரம் குறைந்த கரிம உரத்துக்காக 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குனருக்கு வழங்கியமை தொடர்பில் மோசடி இடம்பெற்றுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
முதற்கட்ட விசாரணைகளின் படி, அரச அதிகாரிகள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தரம் குறைந்த கையிருப்பு
நாடாளுமன்றத்தின் இன்றைய (08) அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய வாய்மூலக்கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த மோசடியில் அரசியல்வாதிகள் எவருக்கும் தொடர்பில்லை என ஆரம்ப அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளதாகவும், இது குறித்த ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையத்தை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த கையிருப்பு திருப்பி அனுப்பப்பட்ட போதிலும் விநியோக நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டுள்ளமையை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.