ராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம்
ராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம்
வாசகர்களே!
இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு நடத்தியது? என்பதை உணர்த்தும் வகையில் சில சம்பவங்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றினை இவ்வாறு விபரிக்கிறார்.
….. எமது ராணுவத்தைச் சேர்ந்த சிலரின் நடத்தைகளால் நாம் மிகவும் இக்கட்டான, வெட்கப்படும் நிலையில் இருந்தோம்.
பொதுவாகவே தமிழ் மக்கள் தமது ஆபரணங்களைத் தத்தமது வீடுகளில்தான் வைத்திருப்பார்கள்.
ராணுவம் கிராமங்களில் சுற்றி வழைப்புகளை நடத்தும்போது சில ராணுவத்தினர் அந்த நகைகளைக் கொள்ளை அடித்துள்ளனர்.
இவை குறித்து பிரதம ராணுவ அதிகாரிகள் அவற்றை முக்கிய பிரச்சனைகளாகக் கருதி தமது கவனத்தில் எடுத்து அத்தகைய சுற்றி வழைப்பிற்குப் பொறுப்பான இளம் ராணுவ அதிகாரிகள் மேல் கடுமையான தண்டனைகளை வழங்கினர்.
இவ்வாறான செயல்கள் காரணமாக இன்று வரை அந்த மக்கள் எம்மை வெறுக்கின்றனர். இதனையிட்டு மிகவும் வெட்கப்படுகிறேன்.
இத்தகைய அவமரியாதை தரும் செயற்பாடுகளை ராணுவத்திலிருந்து அகற்றும் நோக்குடன் இவ்வாறானவர்களை கடவுள் நிச்சயம் தண்டிப்பார் எனக் கூறி அவர்கள் கடவுள் தண்டனைக்குப் பயந்து நடக்கும் அளவிற்கு மாற்றினோம்.
ஏனெனில் தமிழர்களைப் போலவே இவர்களில் பலரும் கடவுளுக்குப் பயந்தவர்கள்.
நாம் ராணுவத்தினரை நோக்கித் தமிழ் மக்கள் மிகுந்த கடவுள் பக்தர்கள். யாராவது நகைகளை அல்லது வேறு எதையும் திருடினால் அது கடவுள் தண்டனைக்குரிய குற்றம்.
இவ்வாறு ராணுவத்திற்குப் பொருத்தமில்லாத சில தந்திரங்களை நாம் பயன்படுத்தியதால் அவ்வாறான வெட்கப்படும் செயல்கள் படிப்படியாக குறைந்தன.
எமது சுற்றி வழைப்பின் போது சந்தேகத்தின் பேரில் பெரும் தொகையான இளைஞர்களை விசாரணைக்காக எடுத்துச் செல்வோம்.
இதனால் அவர்களது பெற்றோரும், உறவினர்களும் பெரும் தொகையில் ராணுவ முகாம் முன்னிலையில் பெரும் சத்தமிட்டு அழுவார்கள்.
பலர் கடவுளை நோக்கி எம்மைச் சபிப்பார்கள். தாய் மற்றும் சகோதரிகள் சுவரோடு தமது தலைகளை மோதுவதும், நிலத்திலிருந்து மண்ணெடுத்து திட்டுவதும் அவ்வாறான தருணங்களில் அவர்கள் தலைவிரி கோலமாக துன்பம், கவலை தோய்ந்த முகங்களுமாக நெஞ்சில் அடித்தபடி கதறுவார்கள்.
இவை எமது நெஞ்சங்களை மிகவும் ஆழமாக தொட்டிருந்தன. அவர்களை விசாரணைக்காக மட்டுமே வைத்திருக்கிறோம் என நாம் அமைதிப்படுத்திய போதிலும் அவர்கள் அழுகையையோ, திட்டுவதையோ நிறுத்துவதில்லை.
இவை என்னை மிகவும் ஆழமாகப் பாதித்திருந்தன. அவர்களைச் சாந்தப்படுத்த அவர்களுக்கு அண்மையில் அணுகும் போது எனது சீருடையை, கைகளை இழுத்தபடி திட்டித் திட்டி அழுவார்கள்.
இச் சம்பவங்களின்போது எனது சக அதிகாரிகள் எவ்வித இரக்கமும் இல்லாமல் இறுகிய முகத்தோடு இருப்பர். ஆனால் நான் காட்டிய இரக்கம் காரணமாக பல மூதாட்டிகளினதும், தாய்மாரினதும் திட்டுதல்கள் என்னை நோக்கியதாகவே இருந்தன.
இவ்வாறான நிகழ்வுகள் பார்ப்பவரின் இதயங்களைப் பிழிவதாகவே அமைந்திருக்கும். இவைகளே தமிழ் மக்கள் மத்தியில் ஆழமான வெறுப்பினைத் தோற்றுவித்திருந்தன.
நாம் எமது தேசக் கடமையைச் செய்வதாக, தாய் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பதற்காக மனம் நிறைந்த நோக்கங்களோடு செயற்பட்ட போதிலும் அவர்களின் பாதுகாப்பிற்காகவே அவற்றைச் செய்த போதிலும் எம்மை நோக்கி, எமது நாட்டு மக்களே திட்டுவது மிகவும் கவலை தருவதாகும்.
இத்தகைய சம்பவங்களின் சாட்சியாகவுள்ள இளைஞர்கள் பாதி வெறுப்படைந்தும், மீதி துன்பத்தில் நிறைந்திருப்பதும் நியாயமானதே. இவைகளே சம காலத்தில் அரசின் மீதும், ராணுவத்தின் மீதும் வெறுப்பினை ஏற்படுத்தி பயங்கரவாத இயக்கங்களில் அந்த இளைஞர்களை இணைய வைத்தது.
அரசாங்கம் ராணுவத்திற்குப் போதுமான உணவுகளை வழங்கியது. ஆயினும் சில ராணுவத்தினர் அவற்றுடன் மேலதிகமாக மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி அல்லது கோழி தேவை எனக் கருதி அப் பிரதேசத்திலுள்ள வறுமையில் வாழும் தமிழ் மக்கள் மத்தியிலிருந்த கால்நடைகளையும் பயன்படுத்தினார்கள்.
பொதுவாகவே இந்துக்கள் பசுக்களைக் கொல்வதில்லை. ஆனால் ராணுவத்திலிருந்த சகல பட்டாலியன்களிலும் சிறு பிரிவினர் பசுக்களைக் கொன்று புசிக்கத் தயாராக இருந்தனர்.
அதிர்ஸ்டவசமாகவோ அல்லது துர் அதிர்ஸ்டவசமாகவோ அவ்வாறு பசுக்கனைக் கொன்று புசித்த பலர் போரில் மடிந்துள்ளார்கள்.
இவ்வாறான சம்பவம் அடிக்கடி இடம்பெற்றதால் அவை கடவுளின் தண்டனை என நாம் கதைகளைப் பரப்பியதால் காலப் போக்கில் பசுக்களும் தப்பி மாட்டிறைச்சி உண்ணுவதும் முடிவுக்கு வந்தது. அது மட்டுமல்ல ராணுவத்திற்கு அரசினால் பங்கீட்டு அடிப்படையில் வழங்கப்படும் மாட்டிறைச்சியும் நின்று போனது. ஆனாலும் ஆடுகளும், கோழிகளும் துர்அதிர்ஸ்டசாலிகளே. இத்தகைய செயல்களும் ராணுவத்தின் மீதான வெறுப்புகளை அதிகரிக்க உதவின.
யாழ். நோக்கிய புகையிரத இறுதிப் பயணம்
மக்களுக்கான பாதுகாப்பை வழங்குவதே ராணுவத்தின் நோக்கமாகும். அந்த வகையில் கொழும்பிலிருந்து யாழ். நோக்கிச் செல்லும் கடுகதிப் புகையிரதச் சேவையான ‘யாழ்தேவி’ இற்கு பாதுகாப்பு வழங்குவது எனது தலைமையிலான ராணுவத்திற்கே அதிக தடவை கிடைத்தது.
1984 இல் தமிழருக்குப் பெரும் ஆதரவை வழங்கிய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இப் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
அந்த நாளன்று ‘யாழ்தேவி’ பாதுகாப்பு பொறுப்புகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதால் ஒரு தொகுதி ராணுவத்தினருடன் அப் பொறுப்புகளை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் பொறுப்பெடுத்தேன்.
அப்போது அப் புகையிரதத்தில் பிரதமர் இந்திராகாந்தியின் மரணச் சடங்கில் கலந்து கொள்ளும் நோக்கில் கொழும்பு செல்ல அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான அமிர்தலிங்கம் அவர்களும் அங்கு வந்திருந்தார்.
ராணுவத்தினரை அடிக்கடி கோபமூட்டும் அவர் அந்த ராணுவத்தின் பாதுகாப்பில் பயணம் செய்வது குறித்து சற்று ஆச்சரியமடைந்தேன்.
ராணுவத்தினர் அவருடன் எவ்வாறு நடந்து கொள்ளக்கூடும் என உணர்ந்து அவருக்கு மேலதிக பாதகாப்பு வழங்கத் தீர்மானித்தேன். அவரது பயணத்தின் போது அவருக்கு ஏதாவது நடந்தால் அல்லது உயிராபத்து நேரிட்டால் அப் பொறுப்பு எனக்கே உரியது என உணர்ந்தேன்.
அதன் காரணமாக எனது நம்பிக்கைக்குரிய ராணுவத்தினர் சிலரை அவருக்கு அண்மையில் யாரும் செல்லாதவாறு பாதுகாக்கும்படி உத்தரவிட்டேன்.
இவ் ஏற்பாடுகளையிட்டு எம்மைக் கௌரவிப்பதற்குப் பதிலாக அவரது பயண முடிவு வரை ஏசுவதும், திட்டுவதுமாக இருந்தார். இத்தனை எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், அவரது பயணம் சிக்கலில்லாமல் முடிவுற உறுதிசெய்தோம்.
இருப்பினும் மறுநாள் நான் ராணுவ தலைமையகத்திற்குச் சென்ற போது எமக்கு எதிரான புகார்களே அங்கு தெரிவிக்கப்பட்டிருந்தன. அதிர்ஸ்டவசமாக அவரின் போக்குக் குறித்து உயர் அதிகாரிகள் நன்கு அறிந்திருந்தமையால் நிலமை சீரடைந்தது. நாம் எவ்வளவு சிரத்தையுடன் கடமைகளைச் செய்தாலும் எம்மீது கல்லெறி விழுவதையிட்டு கவலை அடைந்தோம்.
அவ் வேளையில் ராணுவத்தின் துணைப்படையாக விசேட அதிரடிப்படை(ளுவுகு) தோற்றிவிக்கப்பட்டது. அப் பிரிவு மிகவும் சிறியது. அதனைப் பொலீஸ் கமான்டோக்கள் என தற்போது அழைக்கின்றனர்.
இப் பிரிவினர் யாழ்ப்பாணத்தில் கடமை புரிய அனுப்பப்பட்டிருந்தனர். பொதுவாகவே ராணுவம் பொலீசாருடன் அதிக தொடர்புகளை வைத்திருப்பதில்லை.
ஆனால் இப் பிரிவினர் ராணுவத்துடன் நெருக்கமாக இருந்தனர். இவர்கள் சாமான்ய பொலீஸ் அதிகாரிகளை விட தனித்துவமானவர்கள். இப் பிரிவு முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன அவர்களின் புதல்வரான ரவி ஜெயவர்த்தன அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
1984 ம் ஆண்டு செப்டெம்பர் 1ம் திகதி இக் கமான்டோ பிரிவினரை வடமராட்சியிலுள்ள வல்வெட்டித்துறைக்கும், பருத்தித்துறைக்கும் இடையிலுள்ள திக்கம் என்னும் இடத்தில் நிலக் கண்ணி வெடி மூலம் தாக்கினர்.
அதன் காரணமாக 4 கமான்டோக்கள் மரணமாகி பலர் காயமடைந்தனர். இச் சம்பவம் கமான்டோக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.
இவ் எதிர்பாராத சம்பவத்தால் நிலைகுலைந்த அவர்களை மீண்டும் உறுதி நிலைக்கு எடுத்து வர மிகவும் உழைக்க வேண்டியிருந்தது. இன்று அப் பிரிவினரே விசேட அதிரடிப்படையாக பொலீஸ் பிரிவில் தனித்துவமாகவும் உள்ளனர்.
‘யாழ்தேவி’ புகையிரதம் சாமான்ய பொது பயணிகளுக்கு மட்டுமல்ல, ராணுவத்திற்கும் முக்கியமாகப் பயன்பட்டது. ராணுவத்தினரும் தமது பாதுகாப்புக் கருதி பொதுமக்களுடன் பயணித்தனர்.
இதன் காரணமாக அப் புகையிரதமும் புலிகளின் முக்கிய இலக்காக மாறியது. பொதுமக்கள் அதிக அளவில் மரணிக்கும் ஆபத்து உண்டு என்பதை அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. எனவே மிகவும் சரியாக இலக்கு வைத்து கிளிநொச்சிக்கும், கொக்காவிலுக்கும் இடையிலுள்ள முறிகண்டியில் வைத்துத் தாக்கினர்.
இத் தருணத்தில் புகையிரத பாதுகாப்பு பொறுப்புகளை எம்மிடமிருந்து 1வது பட்டாலியன் பிரிவனர் யாழ். புகையிரத ஸ்தானத்தில் பொறுப்பெடுத்தனர்.
புகையிரதம் தாக்கப்படலாம் என்ற உளவுச் செய்தி கிடைத்த போதிலும் அதனைத் தடுக்க மேலதிக ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாமல் வழமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அனுப்பினர்.
1985ம் ஆண்டு ஜனவரி 19ம் திகதி மிகவும் தெளிவாக இலக்கு வைத்து ‘யாழ்தேவி’ யைத் தாக்கினார்கள். இதுவே வவுனியாவிற்கும், யாழ்ப்பாணத்திற்குமான இறுதிப் புகையிரதச் சேவையாக அமைந்தது.
வடக்கிற்கும், தெற்கிற்குமான இழந்த சேவை 30 ஆண்டுகளின் பின்னர் 2014ம் ஆண்டு அக்டோபர் 13ம் திகதி மீண்டும் ஆரம்பமானது. இக் கால இடைவெளியில் இப் பகுதி மக்கள் போக்குவரத்திற்காக அனுபவித்த இடர்கள் சொல்லி மாளாது.
‘யாழ்தேவி’ தாக்கப்படுவதற்கு முன்னதாக சாமான்ய பயணிகள் அன்று அதில் அதிகளவு பயணிக்கவில்லை. மக்கள் எற்கெனவே நன்கு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
சாமான்ய மக்கள் அன்றைய தினம் பயணிக்கவில்லை என ராணுவ உயர் மட்டத்தினருக்குத் தெரிந்திருந்தது. இந்தச் சமிக்ஞையை கவனத்தில் கொண்டு தாக்குதல் நடக்கலாம் என எதிர்பார்த்து சேவையை நிறுத்தியிருக்க வேண்டும். அவ்வாறான முடிவை உயர் மட்டம் ஏன் எடுக்கவில்லை? என்பது இன்னமும் புதிராகவே உள்ளது.
தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தொகுப்பு : வி. சிவலிங்கம்