ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிரான போராட்டத்தை கடுமையாக ஒடுக்கும் சூடான் ராணுவம் -இதுவரை 11 பேர் பலி…!!!
சூடானில் ராணுவத்தினர் கடந்த 25-ம் தேதி ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். ஆட்சி கவிழ்ப்புக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கையும் ராணுவத்தினர் சிறைபிடித்துள்ளனர். ராணுவ தளபதியான ஜெனரல் ஃபடக் அல்-பர்ஹன் ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
இந்த நடவடிக்கைகளால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். தலைநகர் கர்த்தூம் மற்றும் பிற நகரங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டவண்ணம் உள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் அப்துல்லா ஹம்டோக்கை உடனடியாக மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
போராட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள் மீது ராணுவத்தினர் கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல்கள் ஏற்படுகின்றன.
இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டதாக சூடான் டாக்டர்கள் கமிட்டி தெரிவித்துள்ளது. இதன்மூலம், போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
புதிய ராணுவ ஆட்சியாளர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், அமைதியான போராட்டங்களை அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை தொடர்ந்து எச்சரித்தபோதிலும் சூடான் ராணுவம் நடவடிக்கையை நிறுத்தவில்லை.
ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் சூடானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.