பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கம்!!
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ், பொதுமக்களின் வாழ்க்கை முறைமை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை 04 மணிமுதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக கொவிட் ஒழிப்பு தொடர்பான செயலணி குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 06 மாதக் காலமாக அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு இன்றுடன் நீக்கப்படுகின்றது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் நாளை (01) தொடக்கம் இந்த போக்குவரத்து சேவைகளை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், பொது இடங்கள், விற்பனை நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும் போது தடுப்பூசி அட்டையினை கட்டாயப்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டு மக்கள் தொகையில் 70 சதவீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.