ஜி20 மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் கலந்துரையாடிய மோடி..!!
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் இன்று தொடங்கியது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டின் இடையே உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி அதிபர் எர்டோகன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலுடன் கலந்துரையாடிய மோடி
மாநாட்டின் முதல் நிகழ்வாக, உலகளாவிய பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அமர்வு நடைபெற்றது. இதில், உலக பொருளாதாரம் மற்றும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து சுகாதார மீட்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
2020ம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டபிறகு நேரடியாக நடைபெறும் முதல் ஜி-20 உச்சிமாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.