ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் தலிபான்கள் துப்பாக்கி சூடு- 3 பேர் பலி…!!
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அங்கு தலிபான்கள் தங்களது முந்தைய அரசில் இருந்த கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர்.
பெண்கள் வேலைக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இதுபோன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். அதில் திருமண விழா உள்ளிட்ட எங்கும் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்பது ஒன்றாகும்.
இந்த நிலையில் ஒரு திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதால் அங்கு தலிபான்கள் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். நங்கர்ஹர் மாகாணம் சம்ஷ்பூர்மர் கிராமத்தில் நடந்த திருமண விழாவில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த தலிபான்கள் இசை நிகழ்ச்சியை நிறுத்தும்படி கூறி துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் திருமணத்தில் பங்கேற்றவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இதற்கிடையே தலிபான் அரசின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, ‘திருமண விழாவில் துப்பாக்கிசூடு நடத்தியவர்களில் இரண்டு பேரை கைது செய்துள்ளோம். ஒருவரை தேடி வருகிறோம். அவர்கள் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்’ என்றார்.