ஜப்பான் பொதுத்தேர்தல்- மெஜாரிட்டியுடன் ஆட்சியை தக்கவைக்கிறது ஆளும் கூட்டணி…!!
ஜப்பானில் ஆளுங்கட்சியான தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவரும் பிரதமருமான யோஷிஹைட் சுகா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் பதவி விலகினார். இதனையடுத்து இம்மாத துவக்கத்தில் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். அதன்பின்னர் சில நாட்களில் பாராளுமன்றத்தின் கீழவையை கலைத்த அவர், புதிய தேர்தலை அறிவித்தார். அதன்படி இன்று பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
பாராளுமன்றத்தின் 465 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், புமியோ கிஷிடா தலைமையில் தாராளவாத ஜனநாயகக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சி கொமீட்டோவும் மெஜாரிட்டி பெற்று தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மூலம் இது தெரியவந்துள்ளது.
இம்முறை தாராளவாத ஜனநாயக் கட்சி மற்றும் அதன் கூட்டணி இணைந்து பெரும்பான்மையைப் பெற்றாலும், சில தொகுதிகளை இழக்க நேரிடலாம் எனவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மெஜாரிட்டிக்கு 233 இடங்கள் தேவை என்ற நிலையில், இந்த கூட்டணி 239 முதல் 288 இடங்கள் வரை கைப்பற்றலாம் என என்.எச்.கே. கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
தாராளவாத ஜனநாயகக் கட்சி மட்டும் 212 முதல் 253 இடங்களைக் கைப்பற்றும் என்றும், கொமீட்டோ 27 முதல் 35 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த தேர்தலில் தாராளவாத ஜனநாயக் கட்சி கூட்டணி 305 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.